Sunday, August 28, 2011

'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.

கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

யார் செத்தால் என்ன‌, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாக‌ம் முட்டாள்த‌னமாக‌த் தெரிவ‌தில் விய‌ப்பென்ன‌?

என்ன‌ ஆயிற்று ந‌ம‌க்கு? கூட்டம் கூட்ட‌மாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு ச‌க‌ஜம்', தூக்குக்க‌யிற்றில் நிர‌ப‌ராதிக‌ள் தொங்கினால், 'அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜம்', விவ‌சாயிக‌ள் ப‌சிக் கொடுமையினால் த‌ற்கொலை செய்து கொண்டால், 'ஏழைக‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜம்', த‌லித் பெண்க‌ளை ஊரே சேர்ந்து க‌ற்ப‌ழித்துக் கொன்றால், 'சாதிக்கல‌வ‌ர‌த்தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்'.
தான் உயிராக‌ நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக‌ ஒரு போராளி உயிர் துற‌ந்தால் அது முட்டாள் த‌ன‌ம்! என்று 'ஜ‌‌ஸ்ட் லைக் த‌ட்' க‌ட‌ந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக்‌ கோமாளி ந‌டிக‌ன் ஒருவ‌ன் உட‌ல்நிலை பாதிக்க‌ப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று க‌ண்ணிர் சிந்தி ஊர்வ‌ல‌ம்
போக‌த் த‌யாராக‌ இருக்கிறோம். உட‌ம்பு நோகாம‌ல் வீட்டுக்கு முன் மெழுகுவ‌ர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புர‌ட்சி செய்து விட்ட‌தாய்ப் பெருமை கொள்கிறோம்.

செங்கொடி மூளைச் ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருப்பார், வ‌றுமை/கடன் தொல்லை தாங்க‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கும். முத்துக் குமாரின் ம‌ர‌ண‌த்தையும் கொச்சைப் ப‌டுத்தியவ‌ர்க‌ள் தானே நாம்?

சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்ட‌த்தில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே வ‌ருத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளையும் கேலிசெய்து இழிவு ப‌டுத்துவது வெகுகால‌மாக‌ ந‌ட‌ப்ப‌து தான். இவ்வாறாக‌த் த‌ன‌து உண‌ர்ச்சிக‌ளை ம‌ர‌த்துப் போன‌ நிலையில் வைத்திருப்ப‌து மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் ச‌மூக‌த்துக்கும் அத‌ன் ஊட‌க‌ங்க‌ளுக்கும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து.

இப்பேர்ப்ப‌ட்ட‌வ‌ர்களையும் தங்கள் மரணத்தினால் த‌ட்டி எழுப்ப‌ முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் ச‌கோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட ‌நீ முட்டாள் அல்ல; நிச்ச‌ய‌மாய் அல்ல‌.

செங்கொடிக‌ள் தீக்கிரையானாலும் ம‌டிந்து ம‌க்கிப் போவ‌தில்லை.

12 comments:

அருணன் பாரதி said...

செங்கொடிகள் மரித்தாலும், மறைந்து போவதில்லை, அவர்களின் போர்க்குணமும், தியாக தீபமும். மலர் கருகிவிட்டது.. ! போராளியின் விதையாயிற்று.. ! வீரர்கள் என்றுமே மடிவதில்லை, மறக்கப்படுவதில்லை,வி தைக்கப் படுகிறார்கள்..! சின்னஞ்சிறு மலர் அது..! எப்படி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க துணிவு வந்தது. சாந்தன், பேரறிவாளன்,முருகனுக்கு உயிர்த்தியாகம் செய்ய வந்த தியாகத்தீ கொளுந்து விட்டு எரிந்து செங்கொடி மேல் தாவியதோ..!

Anonymous said...

உள்ளக்குமுறலை,உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்..

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

மிகச் சிறப்பாய் எழுதியுள்ளீர்கள். இந்த நெருக்கடியான சூழலில் இந்த வேலையற்ற வீணர்களின் கையாலத்தனமான பேச்சு நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நதி said...

இப்படியொரு முடிவை நோக்கித் தள்ளப்படுவதற்கு, செங்கொடி இந்தச் சமூகத்தின் மீதும், அரசுகள் மீதும் எத்தகைய அவநம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும்... அவள் தீக்குளித்ததில் எனக்கு ஒப்புதல் இல்லை தீபா. ஆனால், இந்தச் சுயநலப் பிசாசுகள் சொல்வதுபோல அவள் முட்டாளும் இல்லைத்தான். உணர்வும் அறிவும் கூடிய பெண் வாழ்ந்திருக்கலாம்... வருத்தமாக இருக்கிறது. என்னவொரு தீர்க்கமான, நேர்மை துலங்கும் விழிகள்...

Deepa said...

நிச்சயமாக எனக்கும் ஒப்புதல் இல்லை தமிழ். அதை நான் சிலாகிக்கவும் இல்லை.

சிலர் (நான் தினமும் நேரில் சந்திக்கும் சிலர்) கொஞ்சமும் ஈரமற்று அவளது முடிவினை ஏளனம் செய்வதையும், போராட்டங்களை இழிவுபடுத்திப் பேசுவதையும் தாங்கமுடியாமல் தான் அந்தப் பதிவினை எழுதினேன். //உணர்வும் அறிவும் கூடிய பெண் வாழ்ந்திருக்கலாம்... வருத்தமாக இருக்கிறது. என்னவொரு தீர்க்கமான, நேர்மை துலங்கும் விழிகள்...// ம்ம். :-(

pahirvom said...

"தமிழர் உள்ளங்களில் பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடி"

செங்கொடியின் தற்கொடை ஈடு இணைஅற்றது. பல வருடங்களாக கிடப்பிலேயே இருந்த விடயத்தை ..சில மாதங்களாக பலரும் சிந்திக்கத் தவறிய விடயத்தை.. தமிழர் மனதில் உணர்வில் தீயிட்டுக் காட்டியிருக்கிறார் செங்கொடி...

தமிழ்வாணன் said...

செங்கொடியின் முடிவிற்கு அரசு மற்றும் படித்த முட்டாள் தமிழர்கள் தான் பொறு பேர்கவேண்டும்.
ஏழை மற்றும் தாழ்ந்த தொழில் செய்யும் தமிழர்களை முட்டாள்கள் என்றும் அழுக்கர்கள் என்றும் ஒதுக்கி தள்ளும் நாகரீக தமிழர்களின் வாயை மூட வேறு வழிதெரியாமல் இந்த முடிவெடுத்து விட்டார்.தற்கொலை செய்து கொண்டாலும் அவரது மரணம் வீர மரணம்.

'பரிவை' சே.குமார் said...

செங்கொடியின் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.
மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.

ponraj said...

உண்ர்ச்சி மிக்க எழுத்து!!!
அருமையான பதிவு!!!
பலமுறை வாசித்தேன்!!!
மூன்று உயிர்களை காபாற்ற ஒரு உயிர் பிரிந்தது!!!
மனம் கசந்து அழுதது!!!
குற்றவாளிகளுக்கு இரண்டு முறை தண்டனை எதற்கு?(20 ஆண்டுகள் போதாதா?)
5 லட்சம் பேரை கொன்று குவித்தவர்களுக்கும்,அதற்கு உதவி செய்தவர்களுக்கும் என்ன தண்டனை???

காமராஜ் said...

தோழர் செங்கொடியின் மரணம் வலையில் மட்டுமே அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகிறது. வெளி ஊடகங்களுக்குத்தான் ஹசாரே இருக்கிறாரே.அவரது முடிவு ஏற்புடையதல்ல எனினும். நெஞ்சுறுதியும் தியாகமனப்பான்மையும் வரலாறாகும்.

கவி அழகன் said...

உண்மை


உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா

நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே

nallathorveenai said...

ஹாய் தீபா ,மிக நல்ல பதிவு.நான் நினைத்ததை சொல்லி இருந்தீர்கள் .உங்கள் தந்தையின் கோபத்தை உங்கள் எழுத்துகளில் காண்கிறேன் .எதையும் ஜஸ்ட் லைக் தட் என்று எடுத்து கொள்வதே நம் இயல்பாக மாறிவிட்டது.உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக படிக்கிறேன். மிக நன்றாக உள்ளது.என்னை பற்றிபிறகு எழுதுகிறேன். நன்றி