Monday, August 1, 2011

நேஹாவுடனான அவர்களின் நேரம்

நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"

அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.

என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.

"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."

"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.

இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.

இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?

உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?

மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.

8 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

Anonymous said...

அன்பிற்கும் ஏங்காத மனம் தான் உண்டோ?!

சாந்தி மாரியப்பன் said...

பாலைவனத்தில் ஒரு சோலையா, நேஹாவின் வருகை அவங்களுக்கு தெரிஞ்சுருக்குது.

ponraj said...

அருமையான பதிவு!!!
குழந்தையும் (தெய்வமும்) ஒன்று!!

ROYAL SALUTE TO NEHA!!!

SHAILA IN PIPE LINE...

SHAILA WILL OVERTAKE NEHA IN FUTURE.

'பரிவை' சே.குமார் said...

குழந்தையும் தெய்வமும் ஒன்று!

அருமை.

ஹுஸைனம்மா said...

எல்லா வேலைகளிலும் இப்படி ஒரு ‘பிரேக்’ தேவைதான். சில சமயம், வீட்டிலும்கூட!!

Lashmi Bai said...

தங்களின் இப்பதிவை மிகவும் ரசிச்சுப் படித்தேன்.

மிக அருமை.

eniasang said...

உங்களுக்கு நேஹா மட்டும் மகள் இல்லை தாய்மை நிரம்பிய மனது பெண்ணே..........