அது கிராமமெல்லாம் இல்லை. சென்னை நகரம் தான். ஆனால்...
"அனு, அனு, அனூஊஊ"
"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."
"அனு, அனு, அனூஊஊ!"
"ஏ..தோ வரேன்பா இரு"
"சீக்கிரம் வா விளையாடலாம்!"
ஓடி வந்த அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த கம்பி வேலியின் பெரிய ஓட்டை வழியே நுழைந்து இந்தப்பக்கம் வந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)
"கேக் பண்ணி விளையாடலாமா?"
"ஓ!"
"சரி போய் ஒரு சர்ட்டை எடுத்துட்டு வா!"
"சட்டையா அது எதுக்கு?, ம்...சரி" வேகமாக உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு பழைய சட்டையைக் கொண்டு வருகிறாள்.
"அய்யோ! சர்ட்டை, சர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."
"ஓ! கொட்டாங்குச்சியா? அப்படிச் சொல்ல வேண்டியது தானே?"
ஒரு வழியாகக் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் களிமண்ணில் தண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு விதவிதமாய்க் கேக்குகள். பின்பு அதில் கனகாம்பரம், நந்தியாவட்டைப் பூ கொண்டு அலங்காரங்கள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வராந்தா பூரா களிமண் திட்டாக அழுக்கு. அவர்கள் உடைகளிலும் தான்.
சமையல் பண்ணலாமா? களிமண் சாதம், கூழாங்கல் பிரியாணி, பச்சை இலை காய்கறிகள், செங்கல் பொடி அரைத்துக் குழம்பு. இந்தச் செங்கல்பொடியை மட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிகம் அரைக்கிறார்கள் என்று போட்டி வேறு.
எங்கிருந்தோ வந்து விடுவார்கள் தம்பி வானரங்கள். "நாங்க சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜமாகவே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்கள். இதற்கு அப்படி ஒரு சிரிப்பு, துரத்திக் கொண்டு அடிக்க ஓடுவது...
அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.
கிணற்றடியில் அடிமுதல் கிளைகள் பரப்பி நின்ற கொய்யா மரம். அனு நிஜமாகவே நன்றாக மரமேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அமர்ந்து கொண்டு ஏதாவது விளையாட்டு.
பாண்டிக் கட்டம் போட்டு நொண்டியடித்து விளையாடுவது. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவரவர் அதிர்ஷ்டச் சில்லு கொண்டு தான் விளையாடுவது.
குல்மோஹர் பூக்களின் மொட்டுக்களை உரித்து அந்த இதழ்களை ஐந்து விரல்களிலும் நகம் போல் ஒட்டிக் கொள்வது... (சரியாக ஐந்து இதழ்கள் தான் இருக்கும் அதில்) ஆஹா!
தென்னங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வண்டி, பம்பரம், செய்வது அதையே ஸ்ட்ராவாக வைத்து இளநீர் விற்பது...
இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்?
ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க எப்படி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆரம்பித்துச் சொல்லிக் கொடுப்பது அந்தப் புதியவருக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ படும்!
கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, எனக்கு ரொம்பப் பிடித்த விளையாட்டு!)
உட்கார்ந்து விளையாடுவதென்றால் கருங்கல் பொறுக்கி, சிமென்டுத் தரையில் ஓரத்தையெல்லாம் தேய்த்து மழமழவென்றாக்கி, அஞ்சு கல் விளையாடுவது...
குச்சிகளைப் பொறுக்கிக் கலைத்துப் போட்டு அசையாமல் எடுப்பது.
இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் தயங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று கதைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்! :-)
ஆச்சு, பொழுதாகி விட்டது. குளிக்க வேண்டும். கிணற்றடிக்குப் போய்க் கயிற்று வாளியைத் தொப்பென்று கிணற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற சத்தத்துடன் வாளி நிரம்புகிறது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கயிற்றை இழுப்பதற்குள் உள்ளங்கை சிவந்து வலிக்கிறது. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா!
குழந்தைகளின் பாதங்களிலும் கைநகங்களில் உறைந்து போன களிமண் கரைந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரியன் விடைபெறுகிறது.
இன்று...
இருந்த கொஞ்சம் கல்லும் மண்ணும் கான்க்ரீட் கலவையில் சேரப் போய்விட்டன. மரங்கள் எல்லாம் ஃப்ளாட்டுகள் கட்ட வழிவிட்டு பூமிக்குள் பதுங்கி மக்கிவிட்டன. கூடுகட்டக் குச்சிகளில்லாமல் குருவிகளே காணாமல் போய்விட்டன.
அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழந்தைகள் டிஸ்கவரி சானலில் "அணிலையும் குல்மோஹர் பூவையும் கண்டு "இது என்னம்மா?" என்று அதிசயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(பி.கு: அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)
7 comments:
டைட்டிலே டிஃப்ரண்ட்.. ம் ம்
அது சரி..
>ஆணாதிக்கத் திமிரைத் தனிமைப்படுத்துவோம்!
ஏன் இந்த கொலை வெறி? ஹா ஹா
அருமையான பதிவு.. கொஞ்சநேரம் அந்த நினைவுகள்ல உலாத்த முடிந்தது. நீங்க சொன்ன பெரும்பாலான விளையாட்டு கண்ணு முன்னாடியே நிக்குது. பெயர் மட்டும் வேறவேற... இன்னைக்கும் ஊருக்குள்ள போறப்ப நினைக்கறதுண்டு.. இந்த இடத்துல நாம இந்த விளையாட்டு விளையாண்டமேன்னு.. கொட்டாங்கச்சில மணல நிரப்பி அப்படியே தரையிலக் கவுத்து இட்லின்னு சொல்லும் சில்வண்டுத்தனங்கள் இப்போது தேடினாலும் கிடைக்காது... அக்கா மொவ மூணரை வயசு ஆகுது. என்னதான் தலைகீழ நின்னு குட்டிக்கரணம் போட்டாலும் அவள வெளிய விடமாட்றா அக்கா.. ஈரத்துல கால்பட்டா சளிப்புடிச்சிடும், மண்ணுல வெளையாடுனா கால்ல அரிப்பு, அலர்ஜி... எத்தனக்காரணம்... முதல்ல ஹமாம் சோப்பு வாங்கச்சொல்லணும்.. :-))
நூணாக்காயில் சப்பரம் செய்து.. குருத்தோலையில் பீப்பி செய்து.. இன்ன பிற சந்தோஷங்கள் அட்லீஸ்ட் முன் தலைமுறைவரைக்குமாவது வந்து விட்டது..
என்ன ஒரு இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை..
தீபா, மிக அருமையான பதிவு இது. குழந்தைகளின் சின்ன சின்ன சந்தோஷங்களை அடைய விடாமல் சிறைப்படுத்தி வைக்கிறோமோ என நானும் பலமுறை நினைத்திருக்கிறேன். இதைப் போல எத்தனை விளையாட்டுகள்...
இப்போதைய குழந்தைகளின் உலகம் வேறு விதமாகி விட்டது
Shaila, What a look???
Simply Superb!!!!
நன்றி யாதவன்!
நன்றி சி.பி.செந்தில்குமார்!
நன்றி பாலாசி!
//முதல்ல ஹமாம் சோப்பு வாங்கச்சொல்லணும்.. :-))//
:-))
நன்றி ரிஷபன்!
//என்ன ஒரு இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை..// :-( உண்மை.
நன்றி அம்பிகா அக்கா!
நீங்கள் விளையாடிய விளையாட்டுகளைப் பகிருங்களேன்!
Thank you Ponraj!
:-) Howz your little master Sam?
Very intererting web site- venkat . Visit www.hellovenki.blogspot.com
Post a Comment