Friday, June 10, 2011

எம்.எஃப்.ஹுஸைன்


இந்தப் பெயர் முதலில் தெரியவந்தது 1995 இல் ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தித் திரைப்படம் வெளிவந்தபோது தான். குமுதமோ விகடனோ நினைவில்லை, அதில் இந்த எண்பது வயது ஓவியர் மாதுரியின் தீவிர ரசிகராக அந்தப் படத்தை நாற்பது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார் என்றும், கூட்டம் கூட்டமாக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு தியேட்டர்களில் அந்தப் படத்தைக் கண்டு மகிழ்கிறார் என்றும் எழுதி இருந்தார்கள். கூடவே அந்தப் படத்தில் மாதுரி வரும் காட்சிகளை அவர் வரைந்திருந்த ஓவியங்களையும் வெளியிட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

ஹூம்...அப்ப‌டி ஒரு கோமாளியாக‌ ம‌ட்டும் அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ரை இந்நாடு ம‌தித்திருக்கும். விள‌ம்ப‌ர‌ப்பிரிய‌ராக‌ ம‌ட்டுமே அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ருக்குப் பேரும் புக‌ழும் கிடைத்திருக்கும்.

அர‌சிய‌லில் சேர்ந்து கோடிக் க‌ணக்காய் ஊழ‌ல் செய்திருந்தால் கூட‌ திஹார் ஜெயிலில் ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளுட‌ன் கூடிய‌ சொகுசு அறை கிடைத்திருக்கும்.

த‌லித் பெண்க‌ளைக் கிராம‌த்தோடு சென்று க‌ற்ப‌ழித்துக் கொன்றிருந்தால் கூட‌ நீதிம‌ன்ற‌ம் ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ மேலும் கீழும் யோசித்திருக்கும்.

அவ்வளவு ஏன், குஜராத்தைப் பிணக்காடாக்கிய‌ 'நரவேட்டை'மோடியைக் க‌ட‌வுளாக உருவகித்து வ‌ரைந்திருந்தால் (நிர்வாண‌மாகவே‌) அவரைக் கொண்டாடி ர‌த‌யாத்திரை எடுத்திருப்பார்க‌ளே?

ஆனால் எய்ட்ஸே அண்டாத‌ இப்புனித‌ தேச‌த்தில், பச்சிளம் பெண் குழ‌ந்தைகளுக்குக் கூடப் ப‌ரிபூர‌ண‌ பாதுகாப்பு சுத‌ந்திர‌மும் இருக்கும் இப்புண்ணிய‌ பூமியில் கோயில் சிற்ப‌ங்க‌ளில் காணாத‌ நிர்வாண‌த்தை, நீல‌ப்ப‌ட‌ங்க‌ளில் இல்லாத‌ ஆபாச‌த்தை வ‌ரைந்துவிட்டாரே!
உருவ‌ம‌ற்ற, உயிர‌ற்ற, க‌ற்ப‌னைப் பாத்திரத்தை (ஆம், க‌ட‌வுள் தான்) நிர்வாண‌மாக 'அவர்' வ‌ரைய‌லாமா? அவ‌ர் 'வேறு' அல்ல‌வா? 100 வயதை எட்டப் போகும் ஒரு க‌‌லைஞ‌னுக்குச் சொந்த‌ம‌ண்ணில் உயிர்விட‌க்கூட‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து வேத‌னைய‌ளிக்கிற‌து.

காவிக் க‌றைப‌டிந்த‌ கோர‌ப்ப‌ற்க‌ளின் நிழ‌ல் க‌விந்து கிட‌க்கிற‌து இம்ம‌ண்ணின் மீது.

ஆழ்ந்த‌ அஞ்ச‌லிக‌ள்.

4 comments:

khaleel said...

amazing. very nicely written.this is the first time i am visiting your blog and i find it quite interesting.

ponraj said...

good;)-

கெக்கே பிக்குணி said...

தோழி,
உங்கள் பதிவுகளோடு பொதுவாக ஒப்புபவள் நான். இந்தப் பதிவில் முழுமை இல்லாதது போலிருக்கு.

இவற்றையும் உங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் (கட்டற்ற இணையத்தில் இன்னும் விவரங்கள் காணலாம்).

1. ஹுஸைன் பிறப்பால்/வளர்ப்பால் ஒரு முஸ்லிம். தம் குடும்பப் பெண்கள், அன்னை தெரசா, காந்தி மற்றோரை உடை உடுத்தி வரைந்தாலும், இந்து தெய்வங்கள் மட்டுமே நிர்வாணமாக; குறிப்பாக வெவ்வேறு தெய்வங்கள் கலவி மற்றும் பிற நிலைகளில். ஒரு முறை கூட தம் மதத்தின் சின்னங்களைக் நிர்வாணப் படங்களாக வரைந்ததில்லை. கருத்துச் சுதந்திரத்தை நஸ்லிமா தஸ் ரீன் காட்டியிருக்கிறார். நபிகள் மகளை ஹிஜாபோடு வரைந்த ஹூஸைன் செய்தது அது இல்லை. சில படங்கள் இங்கே
2. இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பது என்பது அவரே எடுத்த முடிவு. இங்கே அவரை இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்; இங்கே வந்து இருங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். இந்திய கோர்ட் வழக்குக்கு அவர் பதிலளிக்க விரும்பாமல் சென்று விட்டார்.
3. உடை அணிந்த வரலாற்றுத் தலைவர்களின் மத்தியில் ஹிட்லரை அவர் நிர்வாணமாக வரைந்திருக்கிறார் - ஏன் என்பதற்கு அவர் பதில்: ”ஹிட்லரை அவமானப்படுத்த நிர்வாணமாக வரைந்தேன்”. தம் குடும்பப் பெண்கள்/தம் மதச் சின்னங்கள்/தம் இறைத்தூதர் யாரையுமே அவர் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தவில்லை. ஒரு முஸ்லிம்/ஓர் இந்து என்று இருக்கும் படங்களில் இந்து நிர்வாணமாக இருக்கிறார்.
4. ஒரு விளம்பரத்துக்கு ஹுஸைன் வரைந்த “அன்னை இந்தியா” படத்தில் இந்திய வரைபடத்தில் ஒரு பெண் நிர்வாணமாக உடலின் பாகங்களில் இந்தியாவின் மாநிலப் பெயர்கள். மது, மாது என்று பெண்ணை போகப் பொருளாகச் சொல்பவரைப் பார்த்து நீங்கள் குமுறியதை (ரொம்ப லேட்டாக)ப் பார்த்துப் பெருமைப் பட்டேன்....

அவர் ஓர் இந்துவாக இருந்திருந்தாலோ, மதச் சார்பற்று எல்லா மதங்களையும் ஒரே அளவுகோலில் நிறுத்தியிருந்தாலோ பிரச்னையில்லை.

என் கருத்து: ஓர் எண்ண-நேர்மை இல்லாத ஓவிய-வியாபாரி என்று அவரை விட்டு விட்டிருக்கலாம். நீங்கள் சொல்வது போல் அவ்வளவு உயரத்தில் ஏற்றி வியாபாரியிடம் நேர்மை எதிர்பார்க்கணுமா என்ன? அவர் முஸ்லிமாக இருந்தாரா இல்லையா என்பது பற்றியல்ல கேள்வி. வளர்ப்பால் முஸ்லிமாக வளர்ந்தவர், இன்னும் சிறப்பாக எல்லா மதச் சின்னங்களையும் ஒரே ஒழுங்கில் வரைந்திருக்கலாம்.

இதில் நான் அறியாமல் விட்ட செய்திகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

Deepa said...

மிக்க நன்றி தோழி. நீங்கள் சொல்வது போல் அவர் ஓர் ஓவிய வியாபாரியாகவே இருக்கலாம். விளம்பரப் பித்தர் என்பதும் அறிந்ததே.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் அவர் அரசுக்குப் பயந்து வெளிநாட்டில் இருக்கவில்லை. கொடும் குற்றவாளிகள் கூடப் பயந்து ஓடும் அளவு நம நாட்டுச்சட்டங்களும் அரசும் கடுமையாக இருப்பதில்லை. அவர் சொந்த நாட்டில் வசிக்கத் தடையாக இருப்பது ஹிந்துத்வா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தான். அவர்களை அடக்க இந்த அரசு என்ன செய்திருக்கிறது? என்பது தான்.