Friday, January 21, 2011

காகிதப் பூக்கள்

என் நெருங்கிய தோழி ஜோதிக்கு ஃபோன் செய்தேன். "ஜோதி, நீ காலேஜ்ல‌ ஃபர்ஸ்ட் செமஸ்டர்ல என்ன மார்க் வாங்கி இருந்தே தெரியுமா?" என்று கேட்டேன். "என்னடி திடீர்னு, இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கும்?" என்றாள். நான் உடனே. "மேஜர்ல 90%, கெமிஸ்ட்ரில 86, இங்க்லிஷ்ல 78" என்று அடுக்கவும் அரண்டு போனாள். "ஹேய் எப்பிட்ரி என்னோட மார்க்லிஸ்ட் உன் கையில கெடைச்சுது?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.

ஆச்சரியம் ஒன்றுமில்லை; கடிதங்கள்!

வீடு மாறும் போது மறக்காமல் அலமாரியின் மேல் தட்டில் மூட்டைகட்டிப் போட்ட கடிதங்கள் + க்ரீட்டிங் கார்டு கத்தைகளைக் கவனமாக‌ எடுத்தேன்.
நான் கல்லூரியில் இருந்த போது எனக்கு வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வந்த கடிதங்கள் மட்டுமல்ல, அக்கா திருமணமான புதிதில் எழுதிய கடிதங்களும், ஏன் நான் வீட்டுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட அதில் இருக்கும்.

ஆறு மாதத்துக்கொரு முறை இதில் எதையாவது எடுத்துப் படித்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. பழைய காகிதத்தின் வாசனையினூடே நமக்காக நேரம் செலவழித்து, தங்கள் கைப்பட எழுத்தைக் கொட்டி அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தையும் நுகர முடியும்.
நிகழ்கால இறுக்கங்கள் சட்டென்று தளர்ந்து போய் மனம் மலர்வதை உள்ளபடியே உணர முடியும்.

நாமே மறந்து போன பல சுவாரசியமான‌ விஷயங்களை எப்போதோ எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. இன்று கல்லூரியில் படிக்கும் என் அக்கா மகளின் மழலைப் பேச்சுக்களைப் பதிந்து வைக்க அப்போது ப்லாக் இருக்கவில்லை. அக்காவின் கடிதங்கள் அந்த அழகான நாட்களை நினைவுகூரச் செய்கின்றன.

கல்லூரியில் மதிய உணவுக்காக விடுதிக்கு வரும் போது அந்த "லெட்டர்ஸ் காட்" நிறைய அன்றைக்கான கடிதங்கள், (கார்டுகள், இன்லேன்ட் லெட்டர்கள், தடித்த போஸ்டல் என்வெலப்கள், வாழ்த்து அட்டைகள்) நிறைந்து கிடக்கும். அதில் நம் பெயர் போட்ட ஒன்று கண்ணில் பட்டு விட்டால் போதும் உற்சாகம் பீறிடும்.

இன்று? பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பவர்களிடம் கூட பத்து பைசாவில் தொலை பேசும் வசதி இருக்கிறது. எஸ்.எம்.எஸ், இமெயில் என்று உடனடியாகத் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. அவ்வளவு ஏன் மனதில் நினைத்ததை சட்சட்டென்று உலகில் எவருடனும் பகிர்ந்து கொள்ளும் பஸ், ட்விட்டர், ப்லாக்...

ஆனால், என் தோழிக்குக் கிடைத்தது போன்ற‌ இன்ப அதிர்ச்சியை இனி யாரும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

கடிதம் எழுதும் கவின்மிகு பழக்கத்தை ஏன் காலம் கரையச் செய்ய வேண்டும்?

சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.
இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்? பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத‌மொரு முறையாவது; அல்லது வாழ்த்து அனுப்புங்க‌ள்.

ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ளாகத் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?

Partially மீள் பதிவு!

11 comments:

Ram said...

சொன்னா எங்கங்க கேட்குறாங்க.. எனக்கு லெட்டர் எழுத ரொம்ப பிடிக்கும்.. அம்மா, அப்பா வீட்ல என் கூட தான் இருக்காங்க.. சரி ஊர்ல இருக்குற பய புள்ளைகளுக்கு லெட்டர் போட்டா இனிமே லெட்டர் போட்ட ஊருக்கு வந்து அடிப்பன் எதுவா இருந்தாலும் போன், மெயில்ல சொல்லுங்குறாங்க.. என்ன பண்றது..??? சொல்லி புரியவைங்கன்னு சொல்லகூடாது.. அது தேறாது...

ராகவன் said...

அன்பு தீபா,

நல்ல பதிவு... பாரா... கடிதங்கள் பற்றி சில பதிவுகள் எழுதினார். எனக்கு இன்னும் நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த முதல் மிட் டேர்மில் வாங்கிய மார்க் ஞாபகம் இருக்கு... நன்றல்லது அன்றே மறப்பது நமக்கு வாய்க்கிறது இல்லை என்னைக்கும்.

கடிதங்கள்... அடேயப்பா... பொக்கிஷம் படத்தில் இது போல கடிதப் பரிமாற்றங்களைப் பார்த்துவிட்டு... சேரன் பட்டைய கிளப்பப்போறாருன்னு போய் பார்த்தா கடிதங்கள் பற்றிய ஒரு நினைவூட்டலை தவிர அந்தப் படம் வேறு எதுவும் செய்யவில்லை. நான் கல்லூரி படிக்கும் போது ரொம்ப பாப்புலர் இது போல கடிதங்கள் எழுதுவதில்... என் கையெழுத்து தமிழ் அழகாய் இருப்பதாய் யாரோ புரளியைக் கிளப்ப அதன் காரணமாய் எழுதி எழுதி பெருக்கிய நட்பும் அனேகம்...

அதுவும் கோடை விடுமுறைக்காலங்கள் எனக்கு கடிதம் எழுத வாய்த்த வசந்தகாலங்கள்... காத்திருப்பது கடிதம் எழுதுவதற்குத் தான்... என் பெயரில்... கடிதம் வெறும் ராகவன், மதுரை - 11 என்று போட்டுகூட வந்திருக்கு... என் தோழி ஒருத்தி எனக்கு அறுபத்தி நாலு பக்கங்கள் கடிதம் எழுதியிருக்கிறாள். இத்தனைக்கும் அவளை சந்தித்து இரண்டு மணி நேரங்களுக்கு மேல் பேசி... விட்டு மிச்சமிருந்த கதைகள் கடிதங்களில்...

ஒரு நாளைக்கு ரெண்டு கடிதமாவது இருக்கவேண்டும் என்ற வெறியில் சேர்த்த நண்பர்கள் நிறைய... ஆனால் நான் எதையும் சேமித்து வைக்கவில்லை... உங்களைப் போல... அழகான பதிவு... நிறைய எழுதலாம். தீபா...

அன்புடன்
ராகவன்

எல் கே said...

லெட்டர் மட்டும் இருந்த காலத்தில் கூட எங்கப்பா எழுத மாட்டார்

அமுதா said...

டெலிபோன் வர்றதுக்கு முன்னாடி பக்கம் பக்கமா கடிதம் எழுதுவோம். இப்ப வாழ்த்து அட்டை கூட இல்லை... குறுஞ்செய்திகள். ஹ்ம்... என் பொண்ணுங்களை மதுரையில் இருக்கும் தோழிக்கு கடிதம் எழுத சொன்ன பொழுது, அழகா எழுதினாங்க... கடிதம் எழுதும் சுகம் தனி...

Unknown said...

உங்கள் மதிப்புக்குரிய தந்தை உங்களுக்கு எழுதிய கடிதம் சிறந்ததாக இருந்தால் பகிர்த்து கொள்ளுங்களேன். ஆவலாக இருக்கு.

kamal said...

நல்ல பதிவு தீபா.... இன்றும் மலேசியாவில் இருந்து அம்மாவிற்கு கடிதம் எழுதுகிறேன்.... அம்மாவின் வற்புறுத்தலின் படி புதிதாக ப்ளாக் தொடங்கி எழுதுகிறேன்.... படித்து உங்கள் கருத்தை கூறினால் மகிழ்வேன்... திருத்தி கொள்வேன்....
http://sadakamal.blogspot.com/

Chitra said...

ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ளாகத் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?.......பொக்கிஷ சிந்தனை.

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க பழைய ஜாபகங்கள் வருகிறது தீபா

ஜெயந்த் கிருஷ்ணா said...

பொக்கிசங்களை பற்றி ஒரு போக்கிசப்பதிவு..

Unknown said...

கடிதங்கள் நாம் தொலைத்த பக்கங்கள்

'பரிவை' சே.குமார் said...

அழகான பதிவு.