Thursday, October 21, 2010

XX, XY and A,B,C,D... தொட‌ர்ப‌திவு

முல்லை இங்கே அழைத்த‌த‌ன் பேரில் தொட‌ர்கிறேன். உருப்ப‌டியான‌ ஒரு விஷ‌ய‌த்தை யோசிக்க‌ வைத்த‌த‌ற்கும் (உருப்ப‌டியா யோசிச்சேனா தெரிய‌ல‌!) எழுத‌ வைத்த‌தற்கும் முல்லைக்கு ந‌ன்றிக‌ள்.

பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் எனக்கு இரண்டு கருத்தே கிடையாது. மேலும், 'அது சரி தான். அதற்காக அவர்கள் வீட்டுக் கடமைகளை மறுத்துவிடக் கூடாது. வீட்டிலிருந்தபடியே காளான் வளர்க்கலாம், ஊறுகாய் போடலாம், கன்ஸல்டிங் செய்யலாம். நாளெல்லாம் வீட்டை மறந்து வேலையில் இருந்தால் வீடும் குழந்தைகளும் என்னவாகும்?' என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.

பெண்களின் வாழ்க்கையைத் திருமணம் என்ற சூதாட்டத்தை நம்பிப் பலியாக்குவதைத் தடுக்கும் ஒரே வழி அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்க வைப்பது தான். அது எப்ப‌டி என்ப‌து அவ‌ர்க‌ள் விருப்ப‌த்துக்கேற்ற‌ விஷ‌ய‌ம். அதில் த‌லையிட்டு 'நீ இது தான் செய்ய‌ணும் செய்ய‌க் கூடாதுன்னு' சொல்வ‌‌தெல்லாம் அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌ம். அப்ப‌டிப் பேசுவ‌தாக‌ இருந்தால் யாரும் பி.டி. உஷாவைப் ப‌ற்றியும் சுனிதா வில்லிய‌ம்ஸைப் ப‌ற்றியும் வாய் திற‌க்க‌க் கூடாது!

ஆனால் பெண்கள் வேலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மற்ற எல்லா அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் நீக்கிவிட்டாலும் குழந்தைப் பேறும் வளர்ப்பும் பெரும் சவாலாக நிற்பதை மறுக்க முடியாது. இது ஏதோ பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட handicap போல் பார்ப்பது தான் இத‌ற்குக் காரணம்.

எதுடா சாக்கு, கொஞ்சம் முளைத்த சிறகை வெட்டலாம் என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வரும் பெண்களை மீண்டும் கொண்டு போய்ப் பொந்துகளில் அடைக்கத் தான் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயமாகப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

த‌ன் குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றி ஒரு தாய்க்கு இல்லாத‌ அக்க‌றை யாருக்கு இருக்க‌ முடியும்? பத்து மாதம் படாத பாடு பட்டுச் சுமந்து தரும் பொக்கிஷத்துக்குத் தங்க‌ள் இனிஷியலை மட்டும் பந்தாவாக வைத்துக் கொள்ளும் ஆண்கள் இனியாவது அதற்கு முழுத் தகுதியுடையவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்க‌ளேன்!
யோசித்துப் பாருங்கள், வீட்டுக்கு வருமானம் ஈட்டுவதில் பெண்களும் பங்கெடுக்கத் தொடங்கிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை எத்தனை ஆண்கள் மனமுவந்து வீட்டுப் பொறுப்பில் ப‌ங்கெடுக்க‌த் தொட‌ங்கி இருக்கிறார்க‌ள்?

உங்களுக்கு மிக முக்கியமான குழந்தைச் செல்வத்தை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுவது பெண்கள் தான். அதற்காக அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டுமா அல்லது அதையே காரணம் காட்டி அவர்கள் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமா?

("அவளை யாரு வேலைக்குப் போகச் சொல்றா? அதுக்கு அவ‌சியமே இல்ல‌. திமிரெடுத்துப் போனா, கஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌து தான்." என்று சொல்ப‌வ‌ர்களுக்கு என்ன‌ சொல்வ‌து என்று சத்தியமாக‌ என‌க்குத் தெரிய‌வில்லை. நல்ல ப‌தில் தெரிந்த‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ளேன்! :D )

வேலைக்குச் செல்வ‌தில் உள்ள‌ சுத‌ந்திர‌த்தையும் த‌ன்ம‌திப்பையும் உண‌ர்ந்த‌ பெண்கள், அதில் திரும‌ண‌த்துக்குப் பிற‌கு அதிருப்தி அடைகிறார்கள், வீட்டிலிருக்கும் பெண்க‌ளைப் பார்த்து ஏங்குகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய‌க் கார‌ண‌ம் அதிக‌ப்ப‌டியான‌ பொறுப்புகளை வீட்டிலும் சும‌க்க‌ வேண்டி வ‌ருவதும், கொஞ்சமும் ஒத்துழைப்பு அளிக்காத (ஆணாதிக்க) குடும்பச் சூழலும் தானே ஒழிய வேறெதுவும் இல்லை.

குழ‌ந்தை பிற‌ந்து சில‌ கால‌ம் வ‌ரை தாயின் அதிக‌ப‌ட்ச‌க் க‌வ‌ன‌ம் அத‌ற்குத் தேவைப்ப‌டுவ‌து உண்மை தான். ஆனால் பிற‌கு தாய் த‌ந்தை இருவ‌ருமே குழ‌ந்தை ந‌ல‌னில் ப‌ங்கெடுக்க‌ வேண்டும். இந்த‌ ம‌ன‌ப்பான்மை மாறாத‌வ‌ரை மணமுறிவுகள் அதிகரிப்பதும் குடும்ப அமைதி குலைவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும். எச்ச‌ரிக்கை! இந்தப் போக்கால் பாதிக்க‌ப்ப‌ட‌ப் போவ‌து பெண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌.

நம் குழந்தைகள் நலன் என்பது வீட்டுக்குள் பெண் என்பவள் மட்டுமே சம்பந்தப்பட்ட‌ தனிப்பட்ட விஷயம் அல்ல‌; அது ஒரு சமூகம் சார்ந்த நலனாகப் பார்க்கும் காலம் வந்தாலொழிய பெண் சுதந்திரம் அடைய அவளது தாய்மை உணர்வே தடையாக இருக்கும் (பரிதாப) நிலை தொடர‌த்தான் செய்யும்.

உதாரணமாக, பெண்களுக்கு சரிசமமான வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குக்ம் ஐடி கம்பென்கிகளையும், ஐடி பார்க்குகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் சதுர அடிப்பரப்பில் புட் கோர்ட்டுகள், ஜிம்கள், பார்லர்கள், காஃபி ஷாப்புகள் என்று வசதிகள் நிறைந்திருக்கும் (வீட்டுக்கே போக வேண்டாம். இளைப்பாறி விட்டு வந்து வேலையைத் தொடருங்கள்!!) எத்தனை பார்க்குகளில் குழந்தைகள் காப்பகங்கள் இருக்கின்றன? இந்த நடைமுறை வசதி ஏற்பட்டால் குழந்தைகளைக் காட்டிப் பெண்களின் வேலைக்கும் சுதந்திரத்துக்கும் தடை போட முடியாது. அப்பாவும் அம்மாவும் முறை வைத்து அலுவலகத்துக்குப் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு செல்லலாம்!

ஆனால் புகை பிடிக்க‌க் கூட‌த் த‌னிக் கூட‌ங்க‌ள் அமைக்கும் க‌ரிச‌ன‌ம் காப்ப‌க‌ங்க‌ள் அமைக்க‌ ஏன் இருப்ப‌தில்லை? There is no human face in this industrialization. It's all just a facade. (ஓகே ஓகே!. என‌க்குத் தெரியாத‌ ஏரியாவுக்குள்ள‌ நான் ரொம்ப‌ப் போக‌ல‌.)

ஆக, இது சமூகப் பிரச்னையாக இல்லாமல் தனிப்பட்ட பிரச்னையாகவே பார்க்கப்படுவதால் அவரவர் மனதிற்கேற்ற முடிவுகளைத் தான் எடுக்க வேண்டி வருகிறது.
இங்கு முல்லை சொன்ன‌தை மீண்டும் நினைவு கூர்கிறேன். //வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.// நிச்சயமாக.
ஆகவே இன்றைய இரண்டுங்கெட்டான் சூழலில் சிக்கித் தவிக்கும் சராசரிப் பெண் என்ற முறையில் நிறைய காம்ப்ரமைஸ் செய்தாலும், முடிந்தவரை க‌ல‌க‌ம் செய்து போராடி என‌க்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வருவதே என்னாலான புரட்சி!

இத‌ற்கு மேல் என‌க்கு இதைப் ப‌ற்றித் தெளிவாக‌ எதுவும் சொல்ல‌த் தெரிய‌வில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இடுகைக‌ளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்.

15 comments:

Gayathri said...

நல்லா இருக்கு

எஸ்.கே said...

மிக மிக சிறப்பான கட்டுரை!

புதிய மனிதா. said...

nice...

பனித்துளி சங்கர் said...

////////ஆனால் புகை பிடிக்க‌க் கூட‌த் த‌னிக் கூட‌ங்க‌ள் அமைக்கும் க‌ரிச‌ன‌ம் காப்ப‌க‌ங்க‌ள் அமைக்க‌ ஏன் இருப்ப‌தில்லை? There is no human face in this industrialization. It's all just a facade. (ஓகே ஓகே!. என‌க்குத் தெரியாத‌ ஏரியாவுக்குள்ள‌ நான் ரொம்ப‌ப் போக‌ல‌.)///////////


சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்

கையேடு said...

இது குறித்து பணிபுரியும் பெற்றோர்களே தத்தம் கம்பெனிகளில் ஒன்று கூடி விண்ணப்பிக்கலாமே. கம்பெனியில் வேலை நேரத்தினை கணக்கிட ஸ்வைப் கார்ட் வைப்பது போல அலுவலகத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளே ஒருவர் செலவு செய்யும் நேரத்தையும் வரையறுக்கலாமே.

குழந்தையின் வயதுக்கேற்ப ஒரு நாளில் அவர்களுடன் செலவு செய்யும் நேரத்தையும் வரையறுத்துக்கொள்ளலாம்.

குழந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டு நாள் முழுவதும் வேலையில் ஊன்றாமல் இருப்பதைவிட குறைந்த நேரத்தில் வேலையில் கவனத்துடன் இருந்தால் லாபம்தானே நிறுவனத்திற்கு.

'பரிவை' சே.குமார் said...

சிறப்பான கட்டுரை!

அன்புடன் அருணா said...

/முடிந்தவரை க‌ல‌க‌ம் செய்து போராடி என‌க்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வருவதே என்னாலான புரட்சி!/
Sooooo sweet!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பல சிந்திக்க வேண்டிய விசயங்கள்...

Gokul Rajesh said...

//'நீ இது தான் செய்ய‌ணும் செய்ய‌க் கூடாதுன்னு' சொல்வ‌‌தெல்லாம் அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌ம்//

perfect


//பிற‌கு தாய் த‌ந்தை இருவ‌ருமே குழ‌ந்தை ந‌ல‌னில் ப‌ங்கெடுக்க‌ வேண்டும்.//

கண்டிப்பாக


//ஆனால் புகை பிடிக்க‌க் கூட‌த் த‌னிக் கூட‌ங்க‌ள் அமைக்கும் க‌ரிச‌ன‌ம் காப்ப‌க‌ங்க‌ள் அமைக்க‌ ஏன் இருப்ப‌தில்லை?//

எங்கள் company-இல் காப்பகம் இருக்கிறதே...



//வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.//

ஆஹா... எனக்கும் இந்த சுதந்திரம் கிடைத்தால்... முதல்ல என் manager-ஐ ரெண்டுல ஒன்னு பாத்திருவேன்... :)

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

Unknown said...

பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு இன்றியமையாதது. அதும் தானும் ஒரு மனிதக் குலத்தில் சரிநிகர் சமானமாக நிற்க உதவும். சிலர்க்கு வெளியில் போய் வேலை செய்யாமலே கிடைக்கும். என் அம்மா வெளியில் வேலை செய்தது கிடையாது. அப்பா அம்மாவிற்குள் உள்ள மிகப் பெரும் ஒற்றுமை சம்பளத்திற்குள் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பது. மாத budget போட்டு அம்மா கையில் தான் பணம் கம் administration . அப்பா மற்றும் பிள்ளைகள் எல்லாம் அம்மாவிடம் கேட்டுப் பெறுவது தான். பிள்ளைகள் திருமணம் ஆகி சென்று விட்டாலும், இன்றும் கூட அம்மா கையில் தான் அப்பாவின் வாழ்க்கை. 55 வருட வாழ்கையை இப்பிடியே ஒட்டி வருகிறார்கள். கணவன் மனைவிக்குள் ஒரு அந்யோனியம், ஒற்றுமை இருந்தால் மற்றவை எல்லாம் தானே வரும்.

Madumitha said...

தலைப்பே நிறைய விஷயங்களை
சொல்கிறது. ஆண்களுக்கு புகைக்க வசதி செய்து கொடுப்பது நேரத்தை மிச்சப் படுத்தத்தான்.அதேகாரணம் தான் அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம்
வைக்காததற்கும். குழந்தைகள்
அருகில் இருந்தால் பெண்கள் அங்கு
சென்று விடுவார்கள் என்றே இன்னமும் எல்லா நிர்வாகமும் தவறான நம்பிக்கையில் மறுக்கின்றன.

அமுதா said...

நல்லா எழுதி இருக்கீங்க தீபா.

/*ஆனால் புகை பிடிக்க‌க் கூட‌த் த‌னிக் கூட‌ங்க‌ள் அமைக்கும் க‌ரிச‌ன‌ம் காப்ப‌க‌ங்க‌ள் அமைக்க‌ ஏன் இருப்ப‌தில்லை? */
நல்ல கேள்வி. யாராவது யோசித்தால் நல்லது.

காமராஜ் said...

நல்ல கருத்துக்கள் தீபா.

சில ஆணித்தரமான முன்மொழிதல்களை வைத்துவிட்டு.இவ்வளவுதான் எனக்குத்தெரியும் என்று சொல்லுவது தன்னடக்கமா?.
சின்னதா சொல்லப்பட்டாலும் பெரிய்ய விவாதத்துக்கான ஏரியாவில் நிற்கிறீகள் தோழரே.

எங்கெங்கெல்லாம் சமத்துவத்துக்கான கோரிக்கை எழுகிறதோ அங்கெல்லாம் மரபு,கலாச்சாரம் என்கிற சொல் மறுரூபம் எடுக்கும்.இந்த விஷயத்தில் மருத்துவர் ஷாலினியின் கட்டுரைகள் கூடுதல் புரிதலைக்கொண்டுவரும்.இன்னொன்று சமைப்பது,குழந்தைபேனுவது,துவைப்பதெல்லாம் கீழ்மைத்தொழிலாக கற்பிதப்படுத்தப்பட்டிருக்கிறது.மிகப்பெரிய விடுதிகளில் ஷெப்பாக இருக்கும் ஒருவர் மனைவி கையால் தோசை சாப்பிடுவது சுகம் என்கிறார்.உங்க வீடு மதுரையா சிதம்பரமா என்று கிண்டலடிப்பவர்களைப் பார்த்தால் வாந்தி வரும்.புராணங்கள் என்ன அர்த்தங்கள் சொல்லுதோ தெரியவில்லை.ஆனால் இது போலக்கருத்துக்களை வலிமையாக பாய்ச்சி விடுகின்றன.

ஒன்று சொல்லுவேன் ஒரு ஏக்கர் நிலத்தில் பாதி சமப்படுத்தி பாதியைப்பள்ளமாக விடுவது முழுச்சமமல்ல. அதற்கு இன்னும் அதிக தூரம் கடக்கவேண்டும்.

Jagannathan said...

அருமை! மிக அருமை!!

பெண் சுதந்திரம் பற்றிய நிறைய கருத்துக்கள் இந்த கட்டுரையில் இருப்பதால் இதை படித்தபோது எனக்கு சில சந்தேகங்கள் எழுந்ததை இங்கே பதிவு செய்ய எண்ணுகிறேன்.

பெண் சுதந்திரம் என்பதை, ஆண்களை அடிமை படுத்துவது அல்லது ஒதுக்கி விடுவது என்ற அர்த்ததில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் இந்தக் கேள்விகளுக்கு விடை கான்பது அவசியமாகிறது.

....பெண்களின் வாழ்க்கையைத் திருமணம் என்ற சூதாட்டத்தை நம்பிப் பலியாக்குவதைத் தடுக்கும் ஒரே வழி அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்க வைப்பது தான்....

திருமணம் என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்லுகிரீர்களா?

...ஆண்கள் இனியாவது அதற்கு முழுத் தகுதியுடையவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்க‌ளேன்!...

எப்படி ஆவது? வீட்டு வேளைகளில் பங்கேற்று கொள்வதுதான் தகுதி என்கிறீர்களா?

...வேலைக்குச் செல்வ‌தில் உள்ள‌ சுத‌ந்திர‌த்தையும் த‌ன்ம‌திப்பையும் உண‌ர்ந்த‌ பெண்கள், அதில் திரும‌ண‌த்துக்குப் பிற‌கு அதிருப்தி அடைகிறார்கள்,...

அதனால் பெண்களே, நீங்கள் திருமணமே செய்து கொள்ளாதீர்கள். எங்கிறீர்களா?

...குழ‌ந்தை பிற‌ந்து சில‌ கால‌ம் வ‌ரை தாயின் அதிக‌ப‌ட்ச‌க் க‌வ‌ன‌ம் அத‌ற்குத் தேவைப்ப‌டுவ‌து உண்மை தான்....

என்னங்க சாதரணமா சொல்லிட்டீங்க? குழைந்தைகளின் முதல் மூன்று வருடங்களில் தாயின் அரவனைப்பு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா? அது கிடைக்காத குழைந்தைகள் தானே பின்னாளில் சமூக பிரச்சனைகளாகவும் விரோதிகளாகவும் அகிறார்கள்.

...பெண் சுதந்திரம் அடைய அவளது தாய்மை உணர்வே தடையாக இருக்கும் (பரிதாப) நிலை தொடர‌த்தான் செய்யும்....

தாய்மை உணர்வு பரிதாப நிலையா? ஆண்களுக்கும் இந்த உணர்வு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால் எந்த ஒரு ஆணும் இதை பரிதாப நிலையாக நினைத்ததாக தெரியவில்லையே. சுதந்திரம் என்பது என்ன என்பதை அறியாமல், பெண்களின் உன்னதமான அடையாளங்களை இழக்க நினைக்கிறீர்களா?

...//வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.// நிச்சயமாக....

கண்டிப்பாக. ஆனால் இதில் பெண்களுக்கு உள்ள சுதந்திரம் ஆண்களுக்கு இல்லை என்பதுதான் உன்மை.