Friday, September 17, 2010

குழந்தைகள்

அம்மா, அப்பா, அத்தை யாரும் வீட்டிலில்லை. எல்லாரும் அந்தப் பழுப்புக் குதிரை ஓட்டுவாரே அந்த வயதான மாமா வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கிரிஷா, சோனியா, ஆன்னா, அல்யோஷா, மற்றும் சமையற்காரரின் மகன் ஆந்திரே எல்லாரும் சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து லோட்டோ (பிங்கோ) விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வழக்கமாகத் தூங்கப் போகும் நேரம் தாண்டி விட்டது; இருந்தாலும் ஒருவரும் தூங்கச் செல்லவில்லை. எப்படித் தூங்குவது? பெரியவர்கள் திரும்பி வந்ததும், 'அந்த வீட்டுக் குழந்தை எப்படி இருந்தது? என்ன உடை அணிந்திருந்தது? விருந்தில் என்னென்ன சாப்பிட்டார்கள்?' என்றெல்லாம் கேட்டுத் துளைக்க வேண்டாமா?

மேஜை மீது லோட்டோ சீட்டுக‌ளும், துண்டுக் காகிதங்களும், கடலைத் தோல்களும் இறைந்து கிடக்கின்றன. மேலே ஒரு விளக்கு தொங்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் முன்னும் இரண்டு சீட்டுக‌ளும், எண்களை மறைத்துக் கொள்ள சிறு கண்ணாடித் துண்டுக‌ளும் இருக்கின்றன. மேஜையின் நடுவே ஒரு சிறு தட்டில் ஐந்து கோப்பெக்குகள்* கிடக்கின்றன.

குழந்தைகள் காசு வைத்து விளையாடுகிறார்கள். ஒரு கோபெக் தான் பணயம். ஆனால் நிபந்தனை என்னவென்றால் யாராவது அழுகுணி ஆட்டம் ஆடினால் உடனே விரட்டியடிக்கப் படுவார்கள். கூடத்தில் குழந்தைகளைத் தவிர வேறு யாருமில்லை. சமையலறையில் ச‌மைய‌ற்கார‌ரும் அவ‌ர‌து உத‌வியாள‌ரும் இருக்கிறார்கள். முன்னறையில் குழந்தைகளின் பெரிய அண்ணன் வாஸ்யா, பத்தாவது படிக்கிறவன், சோஃபாவில் சோம்பிக் கொண்டு படுத்திருக்கிறான்.

குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷாவின் முகத்தில் தான் அதீத ஆர்வம் கொப்பளிக்கிறது. அவனுக்கு ஒன்பது வயதாகிறது. மண்டை தெரியுமளவு வெட்டப்பட்ட க்ராப் தலையும், குண்டுக் கன்னங்களும் தடித்த உதடுகளும் கொண்ட அவன் நான்காவது படிக்கிறான். அனைவரையும் விட அறிவாளியாகவும் அவன் கருதப்பட்டான். அவன் விளையாடுவது முழுக்க முழுக்கக் காசுக்காக‌த் தான். அந்தத் தட்டில் மட்டும் ஐந்து கோப்பெக்குகள் இல்லாவிட்டால் எப்போதோ உறங்கச் சென்றிருப்பான்.

அவனது பழுப்பு நிறக் கண்கள் பொறாமையோடு மற்றவர் கைகளிலிருக்கும் சீட்டுக்களைப் பின்தொடர்கின்றன. வேறு யாராவது ஜெயித்து விடுவார்களோ என்ற பயமும், குழப்பமும் அவனை விளையாட்டில் ஒழுங்காகக் கவனம் செலுத்த விடாமல் த‌டுக்கிற‌து. முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல் அமைதியற்று நெளிந்து கொண்டிருக்கிறான் அவன். ஒரு விளையாட்டில் வென்று விட்டால் பேராசையுடன் கோப்பெக்குக்ளைக் கைப்பற்றிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.

அவனது எட்டு வயதுத் தங்கை ஆன்னா, கூர்மையான நாடியும் அறிவுததும்பும் கண்களும் உடையவள் ‍‍ அவனைப் போலவே முகம் வெளிறி இருக்கிறாள். அவளுக்குக் காசு முக்கியமில்லை. ஆனால் விளையாட்டில் தோற்று விடக் கூடாது என்பதே அவள் கவலையாக இருக்கிற‌து.

ஆறுவயது சோனியா, சுருண்ட தலைமுடியும், விலையுயர்ந்த பொம்மைகளில் காணப்படுவது போல் சிவந்த கன்னங்களையும் கொண்ட ஆறுவயதுச் சிறுமி, லோட்டோ விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் முழுமையான குதூகலம் நிறைந்திருக்கிற‌து. யார் வென்றாலும் அவள் சிரித்துக் கொண்டே கைதட்டிப் பாராட்டுகிறாள்.

சிறிய உருவமான அல்யோஷாவோ வெறித்த கண்களுடன் சீட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பேராசையும் இல்லை, வீறாப்புமில்லை. தூங்கப் போகுமாறு யாரும் அவனை விரட்டிவிடாதவரை அவனுக்குச் சரிதான். உணச்சிகளை எளிதில் காட்டாத சிறுவன் அவன்; ஆனால் மனதளவில் கொஞ்சம் துஷ்ட‌ன் தான். விளையாடும் போதை விட குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலோ, திட்டிக் கொண்டாலோ அவனுக்கு அலாதியான உற்சாகம் ஏற்படுகிற‌து. மற்றவர்கள் அவன் காசுக‌ளைத் திருடிக் கொண்டுவிடுவார்கள் என்பதற்காகவே அவன் அங்கேயே இருக்கிறான்.

சமையற்காரரின் மகனான அந்திரே, கரிய நிறமும் மெல்லிய உருவமுமான அவன் எளிய பருத்திச் சட்டையும் கழுத்தில் தாமிரத்திலான சிலுவையும் அணிந்திருந்தான். அவனுக்குக் காசிலோ வெற்றியிலோ ஆர்வமில்லை. அவன் அந்த விளையாட்டில் இருக்கும் சிக்கலான கணிதத்தில் லயித்திருக்கிறான். உலகத்தில் எத்தனை எண்கள், கணிதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிக்கலில்லாமல் அறிந்து கொள்வதெப்படி என்று ஏதேதோ சிந்தித்தபடி இருக்கிறான்.

சோனியாவையும் அல்யோஷாவையும் தவிர‌ எல்லாரும் எண்களைக் கத்துகிறார்கள். உற்சாகத்தைக் கூட்டுவதற்காக அவர்கள் எண்களுக்குப் புனைப்பெயர்களும் சூட்டி உள்ளனர். எடுத்துக்காட்டாக, பதினொன்று என்ற எண்ணுக்கு "இரு குச்சிகள்", ஏழுக்கு "துடுப்பு" - இப்படியாக‌ விளையாட்டு குதூகலமாக நடந்து கொண்டிருக்கிற‌து.

அந்திரே தனக்கு வந்த ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிடுவதைக் கவனிக்கிறாள் ஆன்னா. மற்றொரு சமயமானால் அவனுக்கு அதைச் சுட்டிக் காண்பித்திருப்பாள். ஆனால் அவளது கௌரவம் ஒரு கோப்பெக்காக அதோ தட்டில் கிடக்கிறது. அதனால் ஒரு வெற்றிப்புன்னகையுடன் அமைதியாக இருந்து விடுகிறாள்.

"இருபத்து மூன்று", "ஒன்பது" - கிரிஷா கத்திக் கொண்டிருக்கிறான்.
"ஏய், ஒரு வண்டு, வண்டு..." திடீரென்று சோனியா கூச்சலிடுகிறாள். மேஜை மீது ஒரு பொன்வண்டு ஊர்ந்து கொண்டிருக்கிற‌து.

"அதை அடிச்சுடாதீங்க பாவம். அதுக்குக் குழந்தைங்க இருக்கலாம்." தனது ஆழ்ந்த குரலில் சொல்கிறான் அல்யோஷா.

சோனியா உடனே ஆச்சரியத்துடன் அந்த வண்டைப் பார்க்கிறாள். 'இதுவே இவ்ளோ சின்னதா இருக்கே, இதோட குழந்தைங்க எவ்ளொ குட்டியா இருக்கும்?'

"நாற்பத்து மூணு" பொறுமையிழந்து கத்துகிறான் கிரிஷா. ஏற்கெனவே நாலு விளையாட்டில் ஆன்னா ஜெயித்து விட்டாள் என்று அவனுக்கு எரிச்சல்.
அப்போது சோனியா கள்ளத்தனமாகச் சிரித்தவாறே சொல்கிறாள். "நான் ஜெயிச்சுட்டேன்!" - எல்லாரும் வாட்டமடைகின்றனர்.

"இரு இரு, சரிபார்க்கணும். நீ நிஜமாவே ஜெயிச்சிருக்கியான்னு."
சோனியாவின் சீட்டுகளைக் கவனமாகப் பொறுமையுடன் சரிபார்க்கிறான் கிரிஷா. அனைவரின் ஏமாற்றத்துக்கும் ஏதுவாக அவள் அழுகுணி ஆடியிருக்கவில்லை. சரியாகவே ஜெயித்திருக்கிறாள். இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிறது.

தன‌க்குள் பேசிக் கொள்வது போல் ஆன்னா சொல்கிறாள். "நேத்திக்கு ஸ்கூல்ல ஃபிலிப் ஒண்ணு செஞ்சான். அவன் கண் இமையைத் திருப்பி விட்டுக்கிட்டான். அப்படியே பேய் மாதிரி இருந்தான்."

"நான் கூடப் பாத்தேன். எங்க க்ளாஸ்லே ஒரு பையான் அவன் காதை மட்டும் ஆட்டிக் காட்டுவான்." "எட்டு!"
அந்திரே கிரிஷாவைப் பார்க்கிறான். "அது நான் கூடச் செய்வேனே"
"எங்கே ஆட்டிக் காட்டு பார்க்கலாம்!"
அந்திரே உடனே தன் கண்கள், உதடுகள் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறான். அவன் காதும் ஆடுவதாகப் பாவித்துக் கொள்கிறான். எல்லாரும் சிரிக்கின்றனர்.

"அந்த ஃபிலிப் ரொம்ப மோசமானவன். அன்னிக்குத் திடீர்னு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டான். நான் வெறும் ஷிம்மீஸ் தான் போட்டிருந்தேன். எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு தெரியுமா." என்று பெரியமனுஷி போல் பொருமுகிறாள் சோனியா.

"கேம்!" கத்திக் கொண்டே காசுத்தட்டைக் கைப்பற்றுகிறான் கிரிஷா. "நான் ஜெயிச்சுட்டேன். வேணும்னா சரிபாத்துக்கங்க."

அந்திரேவின் முகம் வாடுகிறது. "அப்படின்னா இனிமே நான் விளையாட முடியாது."
"ஏனோ?"
"ஏன்னா, ஏன்னா, என் கிட்ட இனிமே காசில்லை."
"காசில்லன்னா ஆட முடியாது" - கிரிஷா.
அந்திரே மீண்டும் ஒருமுறை தன் பாக்கெட்டுகளில் கைவிட்டுத் துழாவுகிறான். சில ரொட்டித் துகள்களும், பென்சில் துண்டுகளும் தவிர எதுவும் அகப்படாமல் போகவே உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கண்கள் நிறைந்து எக்கணமும் அழுதுவிடுவான் போலிருக்கிற‌து.

அவனை அப்படிக் காணச் சகிக்காத சோனியா சட்டென்று கூவுகிறாள். "நான் உனக்காகக் காசு போடறேன். ஆனா நீ ஜெயிச்சப்பறம் ஞாபகமா திருப்பித் தந்துடணும் என்ன?" மீண்டும் காசு வைத்து ஆட்டம் தொடங்குகிறது.

திடீரென்று, "எங்கேயோ மணியடிக்கிறாங்க" என்கிறாள் ஆன்னா.
எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் சன்னலை நோக்குகிறார்கள். "சும்மா, உன்னோட பிரமை"
"இந்நேரத்துல கல்லறையில தான் மணியடிப்பாங்க" - அந்திரே.
"அங்கே எதுக்கு மணியடிக்கிறாங்க?"
"திருடங்க சர்ச்சுக்குக்ள்ள நுழைஞ்சிடாம இருக்கத் தான்."
"திருடங்க எதுக்குச் சர்ச்சுக்குள்ள வருவாங்க?" கேட்கிறாள் சோனியா.
"எல்லாருக்கும் தெரியும் எதுக்குன்னு. காவல்காரனை அடிச்சுப் போடத் தான்."
ஒரு நிமிடம் அனைவரும் பயந்து போய் அமைதியாகின்றனர். பின்னர் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விளையாட்டைத் தொடர்கின்றனர். இம்முறை அந்திரே ஜெயித்து விடுகிறான்.

"அவன் அழுகுணி ஆட்டம் ஆடிருக்கான்" என்கிறான் அல்யோஷா.
"பொய். நான் ஏமாத்தவே இல்ல." ஆத்திரம் தாங்க முடியாமல் அல்யோஷாவை ஓங்கித் தலையில் அடிக்கிறான் அந்திரே. பதிலுக்கு அல்யோஷா அந்திரே கன்னத்தில் அறைகிறான். இருவரும் அடித்துக் கொண்டு புரள்கின்றனர். இதையெல்லாம் தாங்க முடியாத சோனியா அழத் தொடங்குகிறாள். சிறிது நேரம் கூடமே களேபரமாகிறது. அதனால் ஆட்டம் முடிந்து விட்டதென்று எண்ணிவிட வேண்டாம். இதோ ஐந்தே நிமிடங்களில்குழந்தைகள் சிரித்துக் கொண்டு முன்போல் ஒற்றுமையாக விளையாடத் தொடங்கிவிட்டார்களே! கன்னங்களில் அழுத நீர்க்கோடு கூடக் காயவில்லை. ஆனால் அவர்கள் சிரிப்புக்க்குப் பஞ்சம் வந்து விடவில்லை. அல்யோஷாவுக்குப் பரமதிருப்தி. ஒரு சண்டை போட்டாகிவிட்டது!

பெரியவன் வாஸ்யா தூக்கக்கலக்கத்துடன் அங்கே வருகிறான்.
கிரிஷாவின் பாக்கெட்டில் சில்லறைகள் குலுங்குவது கேட்கிறது. "அநியாயம் அக்கிரமம்! சின்னப் பசங்களைப் போய் எப்படிக் காசு வெச்சு விளையாட விடுறாங்க? நல்லா வளக்கறாங்கப்பா."

ஆனால் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்து அவனுக்கும் ஆசை வருகிறது. "நானும் ஆட வரேன் அடுத்த ஆட்டத்துக்கு."
"ஒரு கோப்பெக்கைக் கீழ வை!"
"இதோ," என்று தன் பாக்கெட்டுகளில் கை விடுகிறான். "என் கிட்டே ஒரு கோப்பெக் இல்ல. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்."
"இல்ல இல்ல, ஒரு கோப்பெக் தான் வைக்கணும்."
"முட்டாள்களா! ஒரு ரூபிள் ஒரு கோப்பெக்கை விட எவ்வளவோ பெரிசு." பெரியவன் விளக்க முற்படுகிறான். "யாராவது ஜெயிச்சீங்கன்னா எனக்குச் சில்லறை கொடுங்க."
"வேணாம், நீ போயிடு."

வேறு வழியில்லாமல் வாஸ்யா எழுந்து சமையலறைக்குச் செல்கிறான்; வேலையாட்களிடம் சில்லறை வாங்கி வர. அவர்களிடமும் இல்லை.

திரும்பி வந்து கிரிஷாவிடம் சொல்கிறான். "நீ எனக்கு ஒரு ரூபிளுக்குப் பத்து கோப்பெக் தா, போதும். என்ன சரியா? பத்தே கோபெக்."
கிரிஷா அவனைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்; இதில் ஏதாவது சூதிருக்குமோ என்று.
"முடியாது" என்று தன் பாக்கெட்டுக்குளை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்.
வாஸ்யா பொறுமையிழந்து அவர்களைக் கண்டபடி திட்டுகிறான். "முட்டாள்களா! பைத்தியங்களா!"
"நான் உனக்கு ஒரு கோப்பெக் வைக்கிறேன் வாஸ்யா" மீண்டும் சோனியா தன முன்வருகிறாள். அவன் அமர்ந்து விளையாட ஆரம்பிக்கிறான்.

"ஏய் இருங்க. என்னோட ஒரு காசைக் காணோம்." திடீரென்று கலவரத்துடன் கத்துகிறான் கிரிஷா. மேஜை மேலிருந்த விளக்கை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொள்கிறான் கிரிஷா. அவன் அண்ணன் அதைப் பிடுங்கித் திரும்ப இருந்த இடத்தில் வைக்கிறான். அனைவரும் மேஜை மேலே கீழே என்று தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு வழியாகக் காசு கிடைக்கிறது. திரும்பவும் விளையாடலாம் என்று அமர்கிறார்கள்.

"சோனியா தூங்கிட்டா" அறிவிக்கிறான் அல்யோஷா.
தன் சுருள்தலைமுடிகொண்ட தலையைக் கைக்கடியில் வைத்து, இனிமையானதொரு ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள் சோனியா. அனைவரும் கோப்பெக்கைத் தேடத்தொடங்கும் போதே அவள் தூங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.

"வா, வந்து அம்மா படுக்கையில படுத்துத் தூங்கு." அவளை எழுப்பி அழைக்கிறாள் ஆன்னா. சற்று நேரத்திலெல்லாம் அம்மாவின் படுக்கை வினோதமாகக் காட்சியளிக்கிறது. சோனியா நன்றாகத் தூங்குகிறாள்; அவளருகே அல்யோஷா குறட்டை விட்டபடி; இவர்கள் காலருகே தலை வைத்து கிரிஷாவும் ஆன்னாவும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரியின் மகனான அந்திரேவும் அவர்களருகிலேயே தூங்குகிறான். இவரகளுக்குச் சற்றுத் தொலைவில் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன அந்தக் காசுகள். அடுத்த விளையாட்டு தொடங்கும் வ‌ரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை.
குட் நைட்!

* ருஷ்ய‌ நாண‌ய‌ங்க‌ள். 1 ரூபிள் என்ப‌து 100 கோப்பெக்குக‌ளுக்குச் ச‌ம‌ம்.
ஒரு கோப்பெக் என்ப‌து ஒரு பைசாவுக்குச் ச‌ம‌மாக‌க் கொள்ள‌லாம்.

7 comments:

மாதவராஜ் said...

தீபா!
அற்புதமான சிறுகதை தீபா! கனவுபோல் எல்லாம் கூடவே வருகிறார்கள். இந்த செக்காவ் எப்பேர்ப்பட்ட குழந்தையாக இருந்திருகிறார்!

நன்றாக மொழியாக்கம் செய்திருக்கிறாய்.

திரும்பவும் படிக்கப் போகிறேன்.

Chitra said...

அடுத்த விளையாட்டு தொடங்கும் வ‌ரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை.

..... ரொம்ப பிடிச்சு இருக்குது!

அம்பிகா said...

குழந்தைகளின் இயல்பை வெளிப்படுத்தும் அழகான சிறுகதை. சுவராஸ்யமான மொழிநடை. பகிர்வுக்கு நன்றி தீபா.

Sriakila said...

அருமையான தமிழாக்கம்!

குழந்தைகள் விளையாடுவதைப் படிக்க,படிக்க நாமும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வருவதை தடுக்க முடியவில்லை.

//சோனியா நன்றாகத் தூங்குகிறாள்; அவளருகே அல்யோஷா குறட்டை விட்டபடி; இவர்கள் காலருகே தலை வைத்து கிரிஷாவும் ஆன்னாவும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரியின் மகனான அந்திரேவும் அவர்களருகிலேயே தூங்குகிறான். இவரகளுக்குச் சற்றுத் தொலைவில் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன அந்தக் காசுகள். அடுத்த விளையாட்டு தொடங்கும் வ‌ரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை//

குழந்தைகள் வைத்து விளையாடியக் காசுகள் அவர்கள் அனுபவிக்கிற குதூகலத்திற்கு ஈடாகுமா? அந்தக் குதூகலத்தில் நானும் லயித்துப்போனேன்..அழகானக் கதை. ரசித்துப் படித்தேன்.

Gokul Rajesh said...

Nice story.

Vijiskitchencreations said...

நல்ல சிறுகதை. நன்றாக இருக்கு.

www.vijisvegkitchen.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான சிறுகதை.