Thursday, September 2, 2010

ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்

முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண். என் மகள் நேஹாவைப் பார்த்த‌தும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் 'அக்கா அக்கா' என்று அவளுடன் விளையாட‌த் துவ‌ங்கி விட்டாள்.

நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "ஆன்டி, உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."

சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.
அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.

ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ப‌த்து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி?

நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?

பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.

அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் ஆயாசமடைந்து நேஹாவே ‌ச‌ம‌த்தாக‌ என் ம‌டியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!

அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது, டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.

உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.

பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?

உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.

அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?

இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:
அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த‌ இடுகையினைப் பாருங்க‌ள். முர‌ட்டுத்த‌ன‌ம் மிகுந்த‌ ஒரு சிறுவ‌னை ஒரு ப‌ள்ளியில் எப்ப‌டி மாற்றி இருக்கிறார்க‌ள் என்று.

ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?

Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று. அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.

போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய‌ வியாபார உல‌க‌த்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்ட‌தோ?

Labels: , , ,

19 Comments:

At September 2, 2010 at 5:18 AM , Blogger அன்புடன் அருணா said...

அறிவுரைகள் அடிக்கடி செல்லாக்காசாகித்தான் போய்விடுகிறது தீபா!

 
At September 2, 2010 at 6:04 AM , Blogger Chitra said...

Are you sure that, that child did not have any other problem? If she didn't, the advice from the "Little women" suits perfectly.

 
At September 2, 2010 at 6:07 AM , Blogger Chitra said...

You have nice posts. (Followed)

Best wishes!

 
At September 2, 2010 at 7:12 AM , Blogger மாதவராஜ் said...

மிக முக்கியமான, நுட்பமான விஷயம் குறித்து இந்தப் பதிவு பேசியிருக்கிறது என நினைக்கிறேன்.

இன்றைய குழந்தைகளிடம், இதுபோன்ற அசாதாரண அல்லது அதீத வெளிப்பாடுகள் தென்படத்தான் செய்கின்றன. மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது அல்லது தன்னை மையமாக்கியே சூழல் இருக்க வேண்டும் என்னும் உந்துதலோடு நடவடிக்கைகளில் ஈடுபடுவது இருக்கின்றன.

வாசிப்பைக் காட்டிலும், அதிகப்படியாக காட்சிகளின் வழியாக புலன்கள் அறியப்பெறுவதால் இப்படியும் இருக்ககூடுமோ எனத் தோன்றுகிறது. யோசிக்கவும், உரையாடவும் நிறைய இருக்கிறது.

 
At September 2, 2010 at 7:19 AM , Blogger Sethu said...

"உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?"

To an extent, looks like so.

We need to leave the kids as they are (except when they go beyond limit and go nasty), and it helps them to grow strong, confident and smart. From your narration, I don't see anything wrong with the kid(mentally), but looks little hyper and outspoken. May be the only child of the family, where the attention is given all the time.

One thing for sure is people will always find fault with other kids, than their own. Our own kids may not do certain things, but if the other kid does the same, we may feel strange, and find fault with them.

This is from my own experience.

 
At September 2, 2010 at 12:06 PM , Blogger Gokul Rajesh said...

அறிவுரை நன்றாக இருந்தது. அந்த வயது சிறுமிக்கு இந்த அறிவுரை தேவை என்று தோன்றவில்லை. சில சமயம் சமூகத்திற்கு முக்கியத்துவம் குடுக்கும் அளவுக்கு குழந்தைகளின் இயல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் தோன்றுகிறது.

 
At September 2, 2010 at 9:17 PM , Blogger Deepa said...

நன்றி அருணா!
உண்மை தான் :)

Thank you Chitra!
No, I don't think she has any kind of serious problem. Just that Some (no, most!) of her actions seemed extraordinary to me.

நன்றி அங்கிள்!
ஆம், சில குழந்தைகளிடம் நாடகத்தன்மை அதிகரித்து வருவதற்கு Visual mediaமுக்கியக் காரணம்.

Sethu,
Thanks for reassuring me by saying there was nothing wrong with that child. I too believe that once she grows out of this hyperactivity, she'll be a very bright child.

//One thing for sure is people will always find fault with other kids, than their own. Our own kids may not do certain things, but if the other kid does the same, we may feel strange, and find fault with them.// ABSOLUTELY AGREE! :)

கோகுல்!

அச‌த்துகிறீர்க‌ள்! மிகப்பெரிய விஷயத்தை ரொம்பவும் எளிமையாகச் சொல்லி விட்டீர்கள். கண்டிப்பாக நினைவு வைத்துக் கொள்ளவேண்டியது.

Btw, you should seriously start writing. Expecting more from you, after this brilliant statement of yours.

 
At September 2, 2010 at 10:08 PM , Blogger வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல பதிவு...
little women மேட்டர் ப்பர்.........

 
At September 3, 2010 at 1:40 AM , Blogger Denzil said...

பெண் குழந்தைகளை மிகவும் நேசிப்பவன் நான். எனது நெருங்கிய சொந்தத்தில் ஒரு பெண் குழந்தையை எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. எனக்கு இது குறித்து ஒரு குற்ற உணர்வும், ஏன் இப்படி என்ற ஒரு கேள்வியும் எப்போதும் இருந்தது. இப்போது தெளிவாகி இருக்கிறது, தவறு என்னிடத்தில் இல்லை என்று. உணர்ந்தது ஒன்றுதான் என்றாலும் எழுத்து மூலம் அதை convey செய்ய உங்களால் முடிந்திருக்கின்றது.

like minded people & views காண்பதில் ஒரு சந்தோஷம்!

 
At September 3, 2010 at 2:19 AM , Blogger Deepa said...

நன்றி Denzil!

எனக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கவில்லை என்ற எங்கே சொன்னேன்? அந்தக் குழந்தையின் செய்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தது என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

 
At September 3, 2010 at 4:11 AM , Blogger Denzil said...

Exactly! பிடிக்காமலிருந்தது குழந்தையின் செய்கைகள்தான்! குழந்தையையல்ல! இதுதான் இத்தனை நாள் confusion!

 
At September 3, 2010 at 1:08 PM , Blogger சே.குமார் said...

மிக முக்கியமான, நுட்பமான விஷயம் குறித்து இந்தப் பதிவு பேசியிருக்கிறது என நினைக்கிறேன்.

நல்ல பதிவு...

 
At September 4, 2010 at 8:55 AM , Blogger ஜெய்லானி said...

இப்போது எந்த டீவி ,மீடியாவை எடுத்தாலும் பாடலாம் ,ஆடலாம் இப்பிடி ஓவராக இருப்பதும் முக்கிய காரணம் , அவங்க அம்மாவும் ஒரு டீவி.....ஆக இருக்கலாம் .அதானால இது அவங்களுக்கு பெரிய விஷயமா தெரியலன்னு வேனா சொல்லலாம். அடவைஸ் முதல்ல அவங்க அம்மாகிட்டதான் சொல்லனும் :-))

 
At September 6, 2010 at 2:45 AM , Blogger கையேடு said...

//அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன//

அங்க இருந்ததே நீங்களும் ஒரு ஆயாவும்தானேங்க.. :)

பத்துவயதுக் குழந்தையிடம் குழந்தைமையின் சுவடுகள் இருப்பது ஒன்னும் பெரிய தவறில்லைங்க. டாக்டரிடம் மரியாதையுடந்தானே நடந்து கொண்டிருக்கிறாள் சிறுமி.

ஒருவேளை அந்த "இரகசியம்" வெளிப்பட்டிருந்தால், ப்பூ இதுதான் இரகசியமா என்று கூட உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

பெரியவங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பெரிய விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு, என்ற குட்டி இளவரசனின் அங்களாய்ப்பு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. :)

தன்னடக்கம் என்பதே தன்னகங்காரத்தின் மற்றுமொரு வடிவம் என்று வெகு சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஃபேஸ்புக் சுவற்றில் பார்க்க முடிந்தது.

I too beleive modesty in true sense is very uncommon. mostly it is pretentious modesty. தன்னடக்கம் போற்றுதலுக்குரியது என்பதால், அதுவும் போற்றுதலைப் பெறுவதற்கான வழிமுறையாகிப்போய்விட்டது.

 
At September 7, 2010 at 11:40 PM , Blogger d said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

 
At September 9, 2010 at 8:09 AM , Blogger செல்வநாயகி said...

good post deepa.

 
At September 18, 2010 at 8:10 AM , Blogger tamil said...

உங்கள் பதிவுகள் நன்று

 
At August 17, 2011 at 6:29 AM , Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லதொரு உளவியல் பதிவு.

 
At August 17, 2011 at 6:31 AM , Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

அன்புடையீர்!
எனது வலையில் இன்று 400வது இடுகை

இயன்றவரை தமிழில்

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home