Wednesday, September 8, 2010

எரின் ப்ரோக்கோவிச்


எனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் படங்களில் முதன்மையானது.
ஜூலியா ராபர்ட்ஸ், ஆல்பர்ட் ஃபின்னியின் பிரமாதமான நடிப்பு, கூர்மையான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை என்று பல அம்சங்கள் இருந்தாலும் முக்கிய அம்சம் கதை. ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

நிஜ வாழ்வில் எரின் ப்ரோகோவிச் என்ற பெண்மணி (மூன்று குழந்தைகளுக்குத் தாய், விவாகரத்தானவர்) ஒரு மிகப்பெரிய நிறுவனத்திடம்சட்டரீதியாகப் போராடி ஒரு கிராமத்தில் 634 குடும்ப‌ங்க‌ளுக்கு நீதி வாங்கித் தந்தார் என்பது தான் கதை.

பசிபிக் காஸ் அன்ட் எலக்ட்ரிக் கம்பெனி என்ற கார்ப்பொரெட் நிறுவனம் அமெரிக்காவில் ஹின்க்லி என்ற சிறு நகரத்தில் தன் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. அதன் பின் ப‌ல‌ ஆண்டுக‌ள் தொடர்ச்சியாக‌ அந்தப் பகுதி மக்களுக்குப் பல்வேறுவிதமான நோய்கள், கொடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மூன்று குழந்தைகளுடன் வேலையின்றித் தனியொரு தாயாகப் போராடும் எரின் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறார். அதற்காக அவர் போடும் வழக்கில் தோற்றுப் போகிறார். தோற்க வைத்த தனது வக்கீலின் (எட் மேஸ்ரி) மேலுள்ள கடுப்பில் வம்படியாக அவரது அலுவலகத்திலேயே வேலை வேண்டும் என்று கேட்டுச் சேர்ந்து கொள்கிறார். இவரது பேச்சும், நடவடிக்கைகளும், குறிப்பாக உடைகளும் அந்த அலுவலகத்துக்குச் சற்றும் பொருத்தமாக இல்லை. யாரும் இவரை மதிக்கவும் இல்லை. ஆனால் இவரோ குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு முனைப்புடன் வேலையில் ஈடுபடத் தயாராகிறார்.

அப்போது யதேச்சையாக பசிபிக் காஸ் அன்ட் எலக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்தின் கோப்புகளில் ஹின்கிலி நகர மக்களின் ரத்தப் பரிசோதனைக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கிறார். அது அவரது ஆர்வத்தைத் தூண்டவே, அந்தக் கோப்பில் இருக்கும் குடும்பத்தைச் சென்று சந்திக்கிறார். பின் மேலும் ஆராய்ந்ததில் அந்த நிறுவனத்தின் கழிவுகள் நல்ல க்ரோமியம் (ட்ரைவேலன்ட்) என்ற பெயரில் உயிர் கொல்லியான ஹெக்ஸாவேலன்ட் க்ரோமியத்தை ஹின்க்லி நிலங்களிலும் நீர்நிலைகளிலும் செலுத்தி வருவது புரிகிறது.
சட்டநிறுவன முதலாளி எட் மேஸ்ரியிடம் தெரிவித்தவுடன் அவரும் ஆர்வமாகிறார். இருவரும் சேர்ந்து அந்த நிறுவனத்துடன் போராடிப் பணிய வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு மில்லியன் டாலர் இழப்பீடும் பெற்றுத் தருகின்றனர்.

எரின் ப்ரோக்கோவிச்சாக ஜூலியா ராபர்ட்ஸ் ஜொலிக்கிறார். முதலில் அந்நிறுவனம் சமரசம் பேச தனது வழக்கறிஞர்களை அனுப்புகிறது. அவர்கள் மொத்தமாக இருபது மில்லியன் டாலர் தான் இழப்பீடு தரமுடியும் என்று அடாவடியாகப் பேசுகிறார்கள். அப்போது எரின் வெடிக்கிறார். "அங்கு 634 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு மூளையில் கட்டி, பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய், முதுகெலும்பில் பாதிப்பு... இன்னொரு முறை இங்கு வந்து பேரம் பேசும் முன் உங்கள் கருப்பையும் முதுகெலும்பும் ஆரோக்கியமாய் இருக்க என்ன விலை கொடுப்பீர்களோ அதை யோசித்து அந்தத் தொகையை நூறால் பெருக்கிய பின் இங்கு வாருங்கள். அதை விட ஒரு பைசா குறைந்தாலும் எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று பொருள்."

பதில் பேசாமல் எதிராளியான‌ பெண்மணி தண்ணீர் குடிக்க எத்தனிக்கிறார்; "ஓ! அந்தத் தண்ணி உங்களுக்காகப் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. ஹின்க்லியிலிருந்து!" என்கிறார் எரின்! அந்தப் பெண்மணி திடுக்கிட்டுத் தண்ணீரைக் குடிக்காமல் க்ளாஸைக் கீழே வைக்கிறார்.

தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு வேலையை விட்டு நீக்கிய முதலாளி, தான் வழக்கு சம்பந்தமாய் முக்கியமான தகவலைக் கண்டுபிடித்ததை அறிந்து(ஹெக்ஸாவேலன்ட் க்ரோமியம் பற்றி) வீடு தேடி வந்து பேசும் போது சோஃபாவில் ஹாயாகப் படுத்துக் கொண்டு குழந்தையுடன் விளையாடியபடியே சம்பள உயர்வு கேட்பதும் அட்டகாசமான காட்சி.

எரினின் முதலாளி, எட் மேஸ்ரியாக‌ வ‌ரும் ஆல்ஃபிர‌ட் ஃபின்னி அபார‌மான‌ தேர்வு. எரினின் துடிப்பான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை உள்ளுக்குள் ர‌சித்தாலும் முக‌த்தை இறுக்க‌மாக‌ வைத்துக் கொள்ள‌ முய‌ல்வ‌து, அவ‌ர‌து அநியாய வசவு மொழிகளைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போவது, கொஞ்சம் கொஞ்சமாக எரினின் திறமையையும் உழைப்பையும் ம‌தித்து அவ‌ரைக் கௌர‌வ‌ப்ப‌டுத்துவ‌து என்று எல்லாக் காட்சிக‌ளிலும் க‌ச்சித‌மாக‌ ந‌டித்திருக்கிறார். அதுவும் க‌டைசிக் காட்சி ஓஹோ! ப‌ட‌த்தின் மிக‌ப்பெரிய‌ ப‌ல‌ம் வ‌ச‌ன‌ங்க‌ள்.

இரண்டு முறை விவாகரத்தான எரினின் வாழ்வில் மூன்றாவதாக ஒருவன் நுழைகிறான். எரின் இவனைப் புறக்கணித்துப் பேசும் விதத்திலேயே (அதுவும் ஒரு சூப்பர் சீன்!) அவன் கவரப்படுகிறான். மேலும் குழந்தைகள் மீது உண்மையிலேயே பிரியமாகவும், எரின் ராப்பகலாக வேலையில் ஈடுபடும் போது குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள‌வும் செய்கிறான். எரின் அவன் மீது ஈடுபாடு கொள்கிறாள். ஆனாலும் எரினின் ஓயாத வேலையினால் தான் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுவதாக‌ ம‌ன‌ம் வெம்பிய‌ அவ‌ன் பிரிந்து செல்ல‌ முடிவு செய்கிறான்.

எரின் "ஏன்" என்று கேட்கும் போது, இப்படி குழ‌ந்தைக‌ளையும் என்னையும் ம‌ற‌ந்து போகும் அளவுக்கு ஒரு வேலை வேண்டுமா. உன் திற‌மைக்கு எளிதாக‌ வேறு வேலை கிடைக்குமே." என்ற ரீதியில் பேசுகிறான்.
அப்போது எரின் சொல்கிறாள் - "முதன் முறையாக என்னைச் சில‌ மக்கள் மதிக்கிறார்கள். நான் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்புகிறார்கள். நான் ஒரு அறைக்குள் நுழைந்தால் அங்குள்ளவர்கள் அமைதியாகி நான் பேசுவதைக் கேட்க ஆயத்தமாகிறார்கள். தயவு செய்து இதை என்னிடமிருந்து கேட்காதே."

இதுவரை பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்.

பி.கு. இநதப் ப‌ட‌த்தைப் பாராட்டி ர‌சிக்கும் போது இதைவிட‌ப் ப‌ன்ம‌ட‌ங்கு கொடுமையான‌ போபால் விஷ‌வாயுக் க‌சிவுக்கு, ந‌ம்ம‌க்க‌ளுக்கு கிடைத்த‌ "நீதி"யும் நினைவுக்கு வ‌ருவ‌தைத் த‌டுக்க‌ முடிய‌வில்லை.
"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும்.

20 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான விமர்சனம்.. படம் இன்னும் பார்க்க வில்லை... பார்த்துவிட வேண்டியது தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப‌ன்ம‌ட‌ங்கு கொடுமையான‌ போபால் விஷ‌வாயுக் க‌சிவுக்கு, ந‌ம்ம‌க்க‌ளுக்கு கிடைத்த‌ "நீதி"யும் நினைவுக்கு வ‌ருவ‌தைத் த‌டுக்க‌ முடிய‌வில்லை.
"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும்.

//

யார் சொன்னது நம் நாட்டில் வெற்றி பெறாது என்று... நிச்சயமாக வெற்றி பெறும் படமாக எடுத்தால்.. படம் மட்டும்..

ஆதவா said...

எல்லாத்தையும் சொன்ன நீங்க
ஜூலியா, இந்த படத்துக்கு ஆஸ்கர் வாங்கினதை மறந்திட்டீங்களே!!

எனிவே, ரொம்ப நல்ல விமர்சனம்!! நானும் இந்த படத்தை ரசிச்சு பார்த்திருக்கிறேன்!!

ஆதவா said...

பி.கு... அருமை!!

வாழ்த்துக்கள

Unknown said...

Yes. I saw this movie. Nice one.

Sriakila said...

படத்தின் விமர்சனம் நன்றாக இருக்கிறது தீபா!

நமக்குத் தெரியாத, பார்க்காத படங்களைப் பற்றி இவ்வளவு அழகான விமர்சனம் கொடுத்தால் பார்க்காமல் இருக்க முடியுமா?

Madumitha said...

தொடர்ந்து போராடினால் இங்கும்
ஜெயிக்கலாம்.

மதுரை சரவணன் said...

இன்றைய நிகழ்வுகளுடன் பட விமர்சனம் அருமை. .. வாழ்த்துக்கள்

velji said...

விமர்சனமும் பின்குறிப்பும், நச்!

runaway bride பார்த்தீர்களா...ஜுலியாவின் காமெடி கலக்கல்!

R. Gopi said...

நான் இந்தப் படம் பார்த்து இருக்கிறேன். உங்கள் விமர்சனம் மிக அருமை.

ravikumar said...

I have seen this movie more than 5 times.The performance of Julia Roberts was outstanding no wonder she was awarded Oscar for this movie. I could see that equal performance by our Late Smt.Savithri Ganesh in her movies

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்.

அன்புடன் அருணா said...

Yet to see:(

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு, தீபா.

நீச்சல்காரன் said...

சகோதரி
Just for your information,
நீங்கள் சைடு பாரில் கொடுத்திருக்கும் twitter இணைப்பு வேறு தளத்திற்கு இணைப்புக் கொடுக்கிறது.

Anonymous said...

ஜெயமோகனுக்குள் ஒரு குழந்தை

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_16.html

Gokul Rajesh said...

Enjoyed the movie. nice review.

Mahi_Granny said...

ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பிற்க்காக பார்த்த படம் . இதனுடன் நம் நாட்டுபோபால் விஷ வாயு கசிவு அநியாயத்தை எழுதிய உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அழகி said...

//இநதப் ப‌ட‌த்தைப் பாராட்டி ர‌சிக்கும் போது இதைவிட‌ப் ப‌ன்ம‌ட‌ங்கு கொடுமையான‌ போபால் விஷ‌வாயுக் க‌சிவுக்கு, ந‌ம்ம‌க்க‌ளுக்கு கிடைத்த‌ "நீதி"யும் நினைவுக்கு வ‌ருவ‌தைத் த‌டுக்க‌ முடிய‌வில்லை.//

உண்மை சுடும் தோழி

அழகி said...

//இநதப் ப‌ட‌த்தைப் பாராட்டி ர‌சிக்கும் போது இதைவிட‌ப் ப‌ன்ம‌ட‌ங்கு கொடுமையான‌ போபால் விஷ‌வாயுக் க‌சிவுக்கு, ந‌ம்ம‌க்க‌ளுக்கு கிடைத்த‌ "நீதி"யும் நினைவுக்கு வ‌ருவ‌தைத் த‌டுக்க‌ முடிய‌வில்லை.//

உண்மை சுடும் தோழி...