மாமியாரின் டைரிக் குறிப்புகள் என்று வல்லிசிம்ஹன் அவர்கள் இந்த சுவாரசியமான இடுகையை எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து மருமகளின் டைரிக் குறிப்புகள் என்ற அதிரடியான தொடர் இடுகையைத் துவக்கி வைத்து அதில் என்னையும் கோத்து விட்டார் முல்லை!
எதெல்லாம் நல்லவிதமான காம்ப்ரமைஸ்கள்? எதெல்லாம் விட்டுக் கொடுக்கவே கூடாத உரிமைகள்? - உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இதிலெல்லாம் இன்னும் தெளிவே வரவில்லை.
எனக்குத் தெரிந்ததெல்லாம், அன்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்பது தான். ஆனால் எனக்கு இருந்தது அவ்வளவு கள்ளம்கபடமில்லாத நேர்மையான எண்ணமல்ல என்பது எனக்குக்கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. மனம் எப்போதும் கணக்குப் போடும், நான் அதிகமா நீ அதிகமா என்று ஒரு தராசை வைத்து அளந்து கொண்டே இருக்கும்; அப்படி எதிர்பார்ப்புடன் விட்டுக் கொடுப்பது என்பது காதலே அல்ல என்று டாக்டர் ருத்ரன் அவர்கள் தனது நூலொன்றில் எழுதி இருந்ததைப் படித்தபோது எனக்குப் பொளேரென்று அறை வாங்கியது போலிருந்தது. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போல என்பதை அழகாக்ச் சொல்லி இருந்தார். (புத்தகத்தை எடுத்து அதே வரிகளை ட்விட்டரில் கோட் செய்கிறேன்!)
நான் தான் பெரிய தியாகி போலவும் நிறைய விட்டுக் கொடுத்திருப்பதாகவும் அதற்கெல்லாம் எனக்கு மகுடம் வந்து சேராததாகவும் எண்ணிக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய அறிவீனம் என்றும் கொஞ்சம் அயோக்கியத்தனம் என்றும் புரிந்தது. புரிந்தாலும் இன்னும் நான் தெளிவடைய வேண்டிய, உறுதி கொள்ள வேண்டிய, புரிந்து பக்குவமடைய விஷயங்கள் நிறைய உண்டு. இருந்தாலும் இங்கே பகிரவும் கொஞ்சம் விஷயம் இருக்கிறது!
நாங்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் சிற்சில ஊடல்கள், காம்ப்ரமைஸ்கள் நிகழத்தான் செய்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காலப் போக்கில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விட்டது.
திருமணச் சடங்குகளிலெல்லாம் எனக்குப் பெரிதாக எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. நான் முக்கியமாகக் கருதிய எல்லாமே எங்கள் இருவரின் விருப்பம் போல் தான் அமைந்தது. திருமணம் மதுரையில் ஜோ வீட்டின் அவர்கள் முறைப்படி நடந்தது. சென்னையில் வரவேற்பு எங்கள் வீட்டு ஏற்பாட்டில். கல்யாணப் புடவையை ரொம்ப ஆடம்பரமில்லாமல் நானே தேர்ந்தெடுத்தேன். அத்தைக்கு அது வருத்தம் தான். இருமடங்கு விலையில் அவர்கள் விரும்பிய புடவையைப் பிடிவாதமாக நிராகரித்தேன்.
எனக்கும் ஜோவுக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய இருந்ததால் இருவருமே சேர்ந்து அழைக்கும் படியாக ஒரு செட் பத்திரிகைகள் அடித்தோம். அதன் பொருள் முழுக்க நானே தான் வடிவமைத்தது. ஜோ என்னிடமே விட்டு விட்டார் எழுத்து விஷயத்தையெல்லாம்.
பெயர் முதலில் வருவது பெரிய விஷயமாக நான் கருதவில்லை. ஆனாலும் மணமகள் பெயர் தான் முதலில் வர வேண்டும்; அது தான் முறை என்று ஏதோ ஜோவிடம் அடித்து விட்டதாக ஞாபகம். (அப்போது அப்பாவியாக இருந்ததால் நம்பிவிட்டார் போலும்!) என் பெற்றோர் அழைக்கும் விதமான பத்திரிகையை நானும் அக்காவும் தேர்ந்தெடுத்தோம். அதனுள் வரும் பொருளை நான் எழுத அப்பா திருத்திக் கொடுத்தார். ஜோ வீட்டில் அவர்கள் உறவினருக்கென சில பத்திரிகைகள் அடித்தனர்; (இதில் மட்டும் தான் ஜோ பெயர் முதலில்.) அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
திருமண ஏற்பாடுகளில், வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது எல்லாமே ஜோவும் நானும் அல்லது அக்காவும் நானும் சேர்ந்து செய்ததாக ஞாபகம்.
என் மாமியார் கிராமத்தைச் சேர்ந்தவரென்றாலும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்ததை விட முற்போக்கானவர். என் உடைகள் விஷயத்தில் இதுவரை எந்த விமர்சனமும் வைத்ததில்லை. திருமணமான அடுத்த நாளே நகைகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வீட்டில் சுடிதாரில் தான் வளைய வந்தேன். தாலிக்கும் அந்த நிலை ஏற்படத்தான் ஓராண்டு ஆனது!
வீட்டு விஷயங்களை நான் நிர்வகிப்பதிலும் அவர்கள் எந்தவிதமான விமர்சனமும் வைத்ததில்லை. ஊரிலிருந்து இங்கு வரும்போது தன்னாலான ஒழுங்குகளையும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அதைப் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்து விடும்; எது எப்படி இருக்க வேண்டும் என்பது. மற்றபடி அட்வைஸ், அதிகாரம் இதெல்லாம் அவருக்கு என்னவென்றே தெரியாது!
ஜோ - என்ன சொல்வது? தற்பெருமையே தவறு எனும்போது என்னவனைப் பற்றி நானே புகழ்வது முறையாகாது! :)
ஆனால், யாரும் எதுவும் சொல்லாமலே, திணிக்காமலே நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் சில விலங்குகள் இருக்கத் தான் செய்கின்றன.
நமக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் நமக்கு அமைத்திருக்கும் முன் மாதிரிகளை மீறுவது என்பது நமக்கே Taboo ஆகப் படும். அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் நமக்கான மாற்றங்களை நிறைவேற்றிக் கொள்வது தான் மிகவும் கடினமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக, திருமணத்துக்குப் பிறகு ஜோவைப் பிறர் முன்னிலையில் (குறிப்பாக அவர்கள் உறவினர் மத்தியில்) "என்னங்க..." என்று மரியாதையாக அழைப்பதும் பெயர் சொல்லாமல் இருப்பதும் தான் இயல்பு மீறிய விஷயமாக இருந்தது. முதலில் அதுவும் கூட ஒரு புது விளையாட்டாக, சுவாரசியமாகத் தான் இருந்தது. எவ்வளவு நாளைக்கு? இப்போதெல்லாம் நான் மெனக்கெடுவதில்லை!
அப்புறம் வீட்டு வேலைகள். சமையல் செய்வது தான் இதில் பெரிய பங்கு வகிப்பது. சமையல் எனக்குப் பிடிக்காத விஷயமெல்லாம் இல்லை. ஆனாலும் தினப்படி ஒவ்வொரு வேளையும் என்ன சமைக்க வேண்டும் என்று யோசித்துச் செய்வது, சமைத்து வீணான பதார்த்தங்களை எப்படி ஒழுங்கு செய்வது, வீட்டில் என்ன இல்லை, இருக்கிறது என்று பார்த்துத் திட்டமிட்டு வாங்கி வருவது இதெல்லாம் மலை போன்ற காரியமாகத் தான் இன்னும் இருக்கிறது. இதில் ஜோ பலவகையில் உதவினாலும், இதில் ஏதாவது பிசகு ஏற்பட்டால் அது என் பொறுப்பாக மட்டுமே பார்க்கப்படுவது கொஞ்சம் அநியாயம் தானே?
ஜோ தனது நண்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தை ஒப்பிட்டால் நான் எனது தோழிகளுடன் செலவிடும் நேரம் ரொம்பக் குறைவு. நேரில் சந்தித்து அளவளாவுவது என்பது பெரிய luxury!அலுவலகம் முடிந்து நினைத்த நேரம் அவர் போய் ஒரு பாரில் அமர்ந்து கொண்டு, "இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிறது. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா? இதை ஒரு குறையாகச் சொன்னால் என் பெற்றோரே கூடச்சிரிப்பார்கள்.
ஆனால் நான் தனிப்பட்ட முறையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் முன் கூட்டியே திட்டமிட்டு, குழந்தைக்கும் வீட்டுப் பொறுப்புகளுக்கும் ஆவன செய்து விட்ட பிறகே என்னால் அந்த நிகழ்ச்சியை நிம்மதியுடன் எதிர்பார்க்க முடியும். இந்தக் கண்ணுக்குத் தெரியாத தளைகளை நினைத்தால் வரும் ஆயாசமே பெண்களுக்கு "ஒண்ணும் வேண்டாம், வீட்டிலிருப்பதே மேல்" என்ற நினைப்பை விதைத்து விடுகிறது போலும்.
கண்ணைத் திறந்து கொண்டு தான் இந்தக் (திருமண பந்தக்) கிணற்றில் விழுந்தேன் என்பதால் நிராசைகள் ஏதும் இல்லை. Life is as good as it can be within the prescribed limits! ;-) ஆனாலும், என் மகள் (அவள் தலைமுறையும்) எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன். அவள் எத்தகைய பெண்ணாக இருக்க விரும்புகிறேனோ அதில் பாதியையாவது நான் அடைந்து காட்ட வேண்டாமா?
அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா?.
இப்போது தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அன்புடன் அழைப்பது:
தன்னைச் சுற்றியுள்ள பெண்களின் அனுபவங்களையும், தனது பார்வையில் சமூகத்தையும் கூர்மையாகக் கவனித்து எழுதி வரும் அம்பிகா அவர்கள்.
'சிறுமுயற்சி' என்ற பெயரில் பெருவிஷயங்களை அசத்தலாக எழுதி வரும் முத்துலெட்சுமி அவர்கள்.
14 comments:
முதல் பாதி அப்படியே என் கதை போல இருக்கு!!
இனிதே தொடர வாழ்த்துகள்!!
பெண்களின் கஷ்டம் புரிகிறது...ஆனால் நாங்கள் எந்த அளவிற்கு மாறவேண்டும் என்கிற போது கிலி பிடிக்கிறது...
அருமையான பதிவு!!!
waiting for Ambika anni's article..
"எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன்."
--Excellent.
My mom is an illiterate but was handling complete economic administration of the family for several years. Most of the time a wife doesn't know what the savings and investment for the family is done. They leave it to the husband until the husband dies. I wish every spouse should know and learn how to handle this.
//வீட்டு விஷயங்களை நான் நிர்வகிப்பதிலும் அவர்கள் எந்தவிதமான விமர்சனமும் வைத்ததில்லை//
கொடுத்து வைத்த மாமியார்...
கொடுத்து வைத்த மருமகள்...
நன்றாக எழுதியுள்ளீர்கள். ஒரளவிற்கு என் கதை மாதிரியே உள்ளது. :)
"ஜோ தனது நண்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தை ஒப்பிட்டால் நான் எனது தோழிகளுடன் செலவிடும் நேரம் ரொம்பக் குறைவு. நேரில் சந்தித்து அளவளாவுவது என்பது பெரிய luxury!அலுவலகம் முடிந்து நினைத்த நேரம் அவர் போய் ஒரு பாரில் அமர்ந்து கொண்டு, "இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிறது. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா?"
:)
"ஆனால் நான் தனிப்பட்ட முறையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் முன் கூட்டியே திட்டமிட்டு, குழந்தைக்கும் வீட்டுப் பொறுப்புகளுக்கும் ஆவன செய்து விட்ட பிறகே என்னால் அந்த நிகழ்ச்சியை நிம்மதியுடன் எதிர்பார்க்க முடியும்."
அப்படியே என் வாழ்வைச் சொல்கின்ற வரிகள்.
"என் மகள் (அவள் தலைமுறையும்) எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன். அவள் எத்தகைய பெண்ணாக இருக்க விரும்புகிறேனோ அதில் பாதியையாவது நான் அடைந்து காட்ட வேண்டாமா?"
"அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா?"
Perfectly said!
//அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா?.
//
நல்லா சொல்லியிருக்கீங்க.
தராசு முள் எந்த பக்கமும் சாயாமல் நிற்கிறது!
சந்தனமுல்லை தொடங்கும் தொடர்பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கும்போலிருக்கிறதே.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி.
\\ஆனால், யாரும் எதுவும் சொல்லாமலே, திணிக்காமலே நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் சில விலங்குகள் இருக்கத் தான் செய்கின்றன.\\
\\எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன்.\\
நல்ல பகிர்வு தீபா.
நானும் விரைவில் எழுதுகிறேன்.
பல பெண்களின் மனதை படம் பிடித்த விதம் அருமை. ஆஹா, சமையல் என்றாலே வேப்பங்காயா? ;)
நன்றாக இருக்கு.
விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்து இப்பத்தான் படிக்கிறேன்..
நேரம் கிடைத்தவுடன் எழுதுகிறேன்ப்பா..நன்றி..
நீங்க சொன்னமாதிரி ஒரு இடத்துக்கு கிளம்பும் முன் பொறுப்பா எல்லாவற்றையும் ப்ளான் செய்துவிட்டு கிளம்பனும் என்றாலே போகத்தோணாமல் கூட ஆகிடும் சில சமயம்.. அதோட திரும்ப வரும்போது ப்ரச்சனை இல்லாம இருந்தாத்தான் சரி..நாம வெளீய போன நேரமா பாத்து இதுக கையை கதவில் நசுக்கிக்கும்.. கீழ் விழுந்து மண்டை ய புடைச்சுக்கும்.. :)
நன்றாக இருக்கு.
Post a Comment