இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஐவன் ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு ரூபிள் சம்பளத்துடன் திருப்திகரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.
"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு"
"ஆமா, வந்திருக்கு. ஆனா உன் சீட்டு காலாவதியாயிருக்குமே?"
"இல்ல, செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்."
"நம்பர் என்ன?"
"வரிசை 9,499. நம்பர் 26"
"சரி, இரு பாக்கலாம்... 9,499 26...."
ஐவனுக்குப் பரிசுச்சீட்டுகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை; பொதுவாக இதையெல்லாம் பார்த்துச் சொல்லச் சம்மதித்திருக்க மாட்டான். ஆனால் இப்போது 'சும்மா தானே இருக்கோம்' என்றும், கண்முன்னே நாளிதழ் கிடந்ததாலும் அந்த எண்களின் மீது விரலையோட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.
சட்டென்று அவனது நம்பிக்கையின்மையைக் கேலி செய்வது போல், இரண்டாவது வரிசையிலேயே அந்த எண் அவன் கண்களில் பட்டது 9,499.
தன் கண்களையே நம்ப முடியாமல், அடுத்து சீட்டுக்குரிய எண்ணைக் கூடப் பார்க்காமல் பேப்பரை நழுவ விட்டான். திடுமென்று யாரோ வாளி நிறைய சில்லென்ற தண்ணீரை முகத்தில் கொட்டிவிட்டுப் போனதைப் போல் உணர்ந்தான். அடிவயிற்றில் ஜிலீரென்றது.
நடுங்கும் குரலில், "மாஷா 9,499 வரிசை வந்திருக்கு."
அதிர்ந்திருந்த அவனது முகத்தைப் பார்த்த அவன் மனைவி அவன் விளையாடவில்லை என்று உணர்ந்தாள்.
மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு வெளிறிய முகத்துடன் கேட்டாள் ""9,499?"
"ஆமாம், ஆமாம். இதோ இங்கே..."
"சீட்டு நம்பர் என்ன வந்திருக்கு?"
"இரு இரு அதையும் தான் பார்க்கணும்.அனா கொஞ்சம் இரு. எப்படியும் நம்ம வரிசை வந்திருக்கு. புரியுதா."
மனைவியைப் பார்த்து அர்த்தமில்லாமல் சிரித்தான். சின்னக் குழந்தை ஒன்று கண்கவரும் பொம்மையைப் பார்த்தவுடன் சிரிப்பது போல.
அவன் மனைவியும் புன்னகைத்தாள். அவளுக்கும் அவன் வரிசை எண்ணை மட்டும் பார்த்து சீட்டு எண்ணைப் பார்க்காமல் சற்றுத் தாமதித்தது பிடித்திருந்தது. ஆஹா! கிடைக்கப் போகும் புதையலைப் பற்றிக் கனவில் திளைப்பது தான் எவ்வளவு இன்பமானது!
"நம்ப வரிசை தான் வந்திருக்கு. நம்ப நம்பராக் கூட இருக்கலாம். ஒரு சான்ஸ்தான்... ஆனா அப்படியே இருந்துட்டா?"
"அய்யோ சீக்கிரம் பாரேன்!"
"கொஞ்சம் பொறு. ஏமாற்றமடைய நமக்கு நிறைய நேரமிருக்கு. மேலேர்ந்து ரெண்டாவது வரிசை. அதனால பரிசுத் தொகை எழுபத்திஅஞ்சாயிரம் ரூபிள்.
அது வெறும் பணம் இல்லம்மா. முதலீடு, அதிகாரம்! இதோ ஒரு நிமிஷத்துல பார்க்கப் போறேன். இருபத்திஆறாம் நம்பர் மட்டும் இருந்திச்சுன்னா? ஏய்! நாம நெஜம்மாவே ஜெயிச்சிட்டோம்னா?"
கணவனும் மனைவியும் கலகலவெனச் சிரித்து ஓய்ந்து ஒருவரை ஒருவர் மௌனத்துடன் வெறிக்க ஆரம்பித்தனர். அவ்வளவு பணத்தை ஜெயித்து விடக்கூடும் என்ற நினைப்பே அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.
எழுபத்தி ஐயாயிரம் ரூபிள்களுக்குத் தங்களுக்கு என்ன தேவை, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன வாங்குவது என்று அவர்களைக் கேட்டால் தெளிவாக நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. 9499 என்ற எண்ணையும் 75000 என்ற எண்ணையும் மாறி மாறிக் கற்பனை செய்து கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஐவன் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினான். கொஞ்சம் படபடப்பு அடங்கியதும், பணம் கைக்கு வந்தால் என்ன செய்யலாமென்று நிதானமாக எண்ணமிட ஆரம்பித்தான்.
"நாம மட்டும் ஜெயிச்சிட்டா, நமக்கு ஒரு புது வாழ்வு தொடங்கிடும்; அப்படியே எல்லாம் தலை கீழா. அந்தச் சீட்டு உன்னோடது. என்னோடதா மட்டும் இருந்தா முதல்ல இருபத்தையாயிரத்துக்கு ஒரு எஸ்டேட் வாங்குவேன். பத்தாயிரம் உடனடி செலவுகளுக்காக. வீட்டுக்குப் புது சாமான் செட்டுகள், ஊர் சுத்திப் பார்க்க, கடன்களை அடைக்க.. அப்புறம் மீதி நாற்பதாயிரத்தை பாங்க்ல போட்டு நிம்மதியா வட்டி வாங்கிட்டு இருக்கலாம்."
"ஆமா ஒரு எஸ்டேட் வாங்கினா நல்லாத் தான் இருக்கும்" என்றபடி நாற்காலியில் சாய்ந்தாள் அவன் மனைவி.
"டூலா, இல்லேன்னா ஓர்யோல்ல வாங்கணும். அப்போ தான் அதை டூரிஸ்டுகளுக்கு வாடகைக்கு விட்டா நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்."
அவனது மனதில் மேன்மேலும் செழிப்பான வாழ்க்கை குறித்து வரையறை இல்லாமல் சித்திரங்கள் பெருகத் தொடங்கின. அவற்றிலெல்லாம் தன்னை ஒரு வசதியான கனவானாக, இளமையும் ஆரோக்கியமும் நிறைந்த கவலையில்லாத மனிதனாகக் கண்டான். கோடைக்காலத்தில் வீட்டுக்கு வெளியே சின்னச் சிற்றோடையின் அருகே மரத்தடியில் படுத்திருக்கிறான். அவனது சின்ன மகனும் மகளும் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 'இன்னிக்கு வேலைக்குப் போக வேண்டாம்; 'இன்னிக்கு மட்டுமில்ல, இனி எப்பவுமே போக வேண்டாம்' என்ற நினைப்பே அவனுக்குச் சொல்ல முடியாத சுகமாக இருக்கிறது. சற்று நேரம் கழித்து வயற்காட்டுப் பக்கம் போகிறான். அப்படியே காட்டுக்குள் காளான் சேகரிக்க; இல்லையென்றால் ஆற்றுக்குப் போய் குடியானவர்கள் மீன்பிடிப்பதை வேடிக்கை பார்க்க.
அந்தி சாயும் நேரத்தில் பூத்துவாலையும் சோப்பும் எடுத்துக் கொண்டு மிக அழகிய பளிங்கு குளியலறைக்குச் செல்கிறான். சாவகாசமாக உடைகளைக் களைந்து சோப்பு நுரைகள் நிறைந்த தொட்டியில் மூழ்கிக் குளிக்கிறான். குளித்த பிறகு க்ரீம் ரொட்டிகளும் தேனீரும் சாப்பிடுகிறான். மாலையில் வாக்கிங் போகிறான் அல்லது நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான்.
"ஆமா, ஒரு எஸ்டேட் வாங்கினா நல்லாத்தானிருக்கும்" - அவன் மனைவி அவன் நினைவுகளைக் கலைத்தாள். அவள் முகபாவனையிலிருந்து அவளும் ஆழ்ந்து கற்பனை செய்து கொண்டிருந்தாள் என்று தெரிந்தது.
ஐவன் இப்போது இலையுதிர்க் காலங்களைப் பற்றிக் கனவு காண ஆரம்பித்தான். அந்தப் பருவத்தில் தோட்டத்திலும் ஆற்றங்கரையோரமாகவும் நீள நடைகள் நடப்பான். பின்பு குளிர் அதிகமானவுடன் வீட்டுக்கு வந்து ஒரு பெரிய கோப்பை வோட்கா அருந்துவான்; காளான்களும் வெள்ளிரிகாய்களும் சேர்த்துச் சமைத்த கறி சாப்பிடுவான். தோட்டத்திலிருந்து பிடுங்கிய காரட்டுகளையும் முள்ளங்கிகளையும் அள்ளிக் கொண்டு குழந்தைகள் ஓடி வருவார்கள். பின்பு இவன் சோபாவில் நீட்டிப் படுத்துக் கொண்டு பளபளக்கும் அட்டை கொண்ட ஏதாவது வார இதழைப் புரட்டியவாறே தூங்கிவிடுவான்.
இலையுதிர் காலத்துக்குப் பிறகு கடுமையான குளிர் மற்றும் மழைக் காலம் வருமே. அப்போது எங்கும் போக முடியாது. வீட்டு நாய்களும், மாடுகளும் கூடச் சோர்ந்து படுத்திருக்கும். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியது தான். என்ன கொடுமை!
அப்போது தான் கற்பனையை நிறுத்தி மனைவியைப் பார்த்தான் ஐவன்.
"நான் வெளிநாடு போக விரும்பறேன் மாஷா."
அடுத்து குளிர்காலத்தில் போக விரும்பும் நாடுகளைப் பற்றி எண்ணமிட்டான்; இத்தாலி, இந்தியா?!
"நானும் கண்டிப்பா போவேன். ஆனா முதல்ல டிக்கட் நம்பரைப் பாரு!"
"இரு.. இரு..."
மீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்த அவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணினான். தனியாகப் போவது ஆனந்தமாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் நாளையைப் பற்றியும் பெரிதும் அக்கறையில்லாத சிலவகைப் பெண்களுடன் சென்றால் நன்றாக இருக்கும்! சதா குழந்தைகளைப் பற்றிய பேச்சும், ஒவ்வொரு பைசா செலவையும் கணக்குப் பார்க்கும் புலம்பல்களையும் தவிர்க்கலாம்.
ஐவன் தன் மனைவியுடன் ஏதோ ரயிலில் பயணம் செய்வதை நினைத்துப் பார்த்தான். ஒரு பாடு மூட்டை முடிச்சுகள், பைகள் கொண்டு வருவாள். அத்தோடு 'ரயில் பிரயாணம் ஒத்துக்கலை, தலை வலிக்குது, இதுவரைக்கும் எவ்ளோ பணம் விரயம் பண்ணிட்டோம்' என்று எதைப் பற்றியாவது புலம்பிக் கொண்டிருப்பாள். மேலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சுடு தண்ணீர் பிடிக்கவும், தின்பண்டங்கள் வாங்கவும் நாயாக நாம் ஓட வேண்டி இருக்கும். 'எனக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கு அநியாய பிசுநாரித்தனம் பண்ணிக்குவா! டிக்கட் அவளுதாச்சே. என்னொடதில்லையே? தவிர அவளைக் கூட்டிக்க்கிட்டு வெளிநாடு போறதுல என்ன பிரயோஜனம்? அவளுக்கு அங்கே என்ன வெச்சிருக்கு? ஹோட்டல் ரூம்லயே அடைஞ்சு கிடப்பா. என்னையும் எங்கையும் போக விடமாட்டா; ஆமா!'
அப்போது தான் முதன் முறையாகத் தன் மனைவிக்குக் வயதாகி அவலட்சணமாகி விட்டதாகவும், தானோ இன்னொரு முறை கல்யாணம் செய்து கொள்ளும் அளவு இளமை மாறாமல் இருப்பதாகவும் உணர்ந்தான்.
'ஹூம் இவளுக்குப் பணம் கிடைச்சிட்டா, எனக்குத் தெரியாம மறைச்சிடுவா. அவ சொந்தக் காரங்களுக்கெல்லாம் நல்லாக் குடுப்பா. எனக்குத் தர்ரதுக்கு ரொம்ப அலட்டிக்குவா.'
ஐவன் இப்போது அவளது உறவினரைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவளுடைய மாமா, மச்சான், அக்கா, தங்கை, அண்ணன் தம்பி மார்களெல்லாரும் பரிசு விழுந்த செய்தி கேட்டதும் ஓடோடி வருகிறார்கள். கூச்சலும் போலி சிரிப்புமாய் பிச்சைக்காரர்களைப் போல் இவர்கள் வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாகாமல் திரும்பத் திரும்ப் வருகிறார்கள். கொடுக்க முடியாதென்று மறுத்தாலோ அடிவயிறு குலுங்கச் சபித்து விட்டுப் போகிறார்கள்.
பிறகு தன் உறவினர்களையும் நினைத்துப் பார்த்தான். இவர்களைப் பற்றி முன்பு விருப்பு வெறுப்பு ஏதுமில்லையென்றாலும் இப்போது இவர்களை நினைக்கவும் அருவருப்பாக இருந்தது. "எல்லாம் பச்சோந்திகள்."
பார்க்கப் பார்க்க மனைவியின் முகமும் விகாரமாகத் தெரிந்தது. அவளைப் பற்றிக் கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தது. 'அவளுக்கு என்ன தெரியும் பணத்தைப் பத்தி? கஞ்சப் பிசுனாறி! அவ மட்டும் ஜெயிச்சான்னா போனாப் போவுதுன்னு எனக்கு நூறு ரூபிள் தந்துட்டு எல்லாத்தையும் பூட்டி வெச்சுக்குவா."
ஆத்திரத்துடன் மனைவியைப் பார்த்தான். அவளும் அதே வெறுப்பும் ஆத்திரமுமாய் அவனைப் பார்ப்பதைக் கண்டான். அவளுக்கும் சொந்தக் கற்பனைகள், திட்டங்கள் இருந்தனவே! கணவனின் மனவோட்டத்தையும் அவள் அனுமானித்திருந்தாள். தனக்குப் பரிசு கிடைத்தால் முதலில் பிடுங்கிக் கொள்ள நினைப்பவன் அவன் தான் என்று உணர்ந்திருந்தாள். அவள் கண்கள் அவனைப் பார்த்து, 'அடுத்தவங்க செலவில குளிர் காயறது ரொம்ப சுகமாத்தான் இருக்கும்; நினைச்சுக் கூடப் பார்க்காதே' என்று சொல்வதைப் போலிருந்தது.
ஐவனுக்கு அது புரிந்தது. மனதில் மீண்டும் வெறுப்பு மண்ட, அவளை வெறுப்பேற்ற விரும்பி, அவசர அவசரமாய்ப் பேப்பரை எடுத்தான்; நாலாம் பக்கத்தைப் பிரித்து வெற்றிக் கூக்குரலுடன் படித்தான்.
"வரிசை 9,499. எண் 46, 26 இல்ல."
வெறுப்பும் கனவுகளும் ஒருசேர மறைந்து போயின. திடீரென்று இருவருக்கும் தங்கள் வீடு இருண்டும் குறுகியும் தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன் ரசித்துச் சாப்பிட்ட உணவு தொண்டையிலேயே நிற்பதாகப் பட்டது. பொழுது கனத்து வெறுமை படர்ந்தது.
"என்ன எழவு இதெல்லாம்?" சிடுசிடுக்க ஆரம்பித்தான் ஐவன். "வீட்ல எங்க பாத்தாலும் குப்பையும் கூளமுமாய். வீட்டை ஒழுங்காக் கூட்டறதே இல்ல. எங்கயாவது வெளிய போய்த் தொலையலாமான்னு இருக்கு. போய் முதல் வேலையா தும்பைச் செடியில தூக்குப் போட்டுக்கப் போறேன்."
ஆன்டன் செகாவ் எழுதிய "The Lottery Ticket" என்ற ருஷ்யச் சிறுகதையின் தமிழாக்கம்.
20 comments:
நல்ல சிறுகதை... மொழிநடை குன்றாத தமிழாக்கம்...
நல்ல தமிழாக்கம்... அருமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்ல பகிர்வு. தமிழாக்கமும் அருமை.
நல்லாயிருக்கு தீபா.
கதை ஏற்கெனவே படித்திருந்தாலும் தமிழாக்கம் சூப்பர்!
மொழிநடை குன்றாத தமிழாக்கம் .. அருமை
நல்ல தமிழாக்கம்
மொழிநடை நல்லாயிருக்கு
மிகவும் அருமையான சிறு கதை .நல்ல தமிழாக்கம் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லாருக்கு தீபா..நம்ம மனசும் எண்ணங்களும்தான்...எவ்வளவு வினோதமானவை! பகிர்வுக்கு நன்றி!
அருமையான சிறுகதை.நன்றி தீபா!
அற்புதம்.. அந்தச் சூழலுக்கு நம்மை அப்படியே அழைத்துச் செல்கிறது எழுத்து.
வாழ்த்துகள்
Read the story for the first time in Tamil. It was good.
The unusual but the true jump of emotions is very well captured by Checkov.
தீபா!
மதியமே பதிவைப் பார்த்தேன். படிக்க நேரமில்ல. இப்போதுதான் படித்தேன். ரொம்ப ரசித்து படித்தேன்.
சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறாய். காலம், பிரதேசம், மொழி எல்லாம் தாண்டி கதை மிக இயல்பாக நமக்குள் ஊடுருவுகிறது.
மிக்க நன்றிம்மா.
good. keep writing.
நல்ல இருக்குங்க தீபா கதை.வாழ்த்துக்கள்
நல்ல தமிழாக்கம். நல்லாருக்குங்க தீபா
:))
Excellent narration and very nice translation. Initially I thought it was written by you , and wondering all along why a russian name and currency being used in the story, never realized till the end it was a translation. (Naan oru muttalunga). Nice translation. Congrats.
Greediness comes with the money, will destroy the core essence of a family and humanness.
Swami
நல்ல கதை...பகிர்வுக்கு நன்றி தீபா.
very very very veryvery
good story ,
Post a Comment