என் நாத்தனார் மகள் படு சுட்டி. ஒன்றரை வயதில் பேசத் தொடங்கிய அவள் மூன்று வயதுக்குள் நீட்டி முழக்கிப் பாட்டி கணக்காய்ப் பேசத் தொடங்கி விட்டாள். ஊருக்குப் போகும் போது அவள் வீட்டில் இருந்தால் பொழுது போவதே தெரியாது.
அவளது அம்மாச்சி (என் மாமியார்) பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும் பாவமும், பெரியமனுஷத்தனமும்.
அவள் பேசியதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் தனிப்பதிவே போட வேண்டும். முன்பொரு முறை போட்டும் இருக்கிறேன். இப்போது விஷயம் அதுவல்ல.
கடவுள் பக்தி அதிகம் உள்ள என் மாமியார் அவளுக்கு நிறைய ஜெபங்களூம் தோத்திரங்களும் சொல்லிக் கொடுத்திருந்தார். மேலும் "தற்குறிப்பேற்ற அணி" யாகக் குழந்தைக்கு இயற்கையிலேயே கடவுள் பக்தி அதிகம் எனவும் சொல்லி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
ஒரு நாள் எல்லாரும் அமர்ந்திருக்கத் தான் சொல்லிக் கொடுத்த ஜெபங்களையெல்லாம் வரிசையாகச் சொல்லச் சொன்னார்கள். அவள் அழகாக மழலைக் குரலில் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாரும் ரசித்துக் கொண்டிருந்தோம். அத்தை மட்டும் கண்கள் மூடி ஜெபிக்கவே தொடங்கி விட்டார்கள். இறுதியாக "மன்மதராசா மன்மதராசா..." என்று அதே சிரத்தையுடன் குழந்தை பாடவும் பதறிப் போய் அதை அதட்டி உட்கார வைத்தார்கள்.
எல்லாருக்கும் சிரிப்புத் தாங்க வில்லை. சுட்டித் தனமான குழந்தை எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பார்த்தாலும் பிடித்துக் கொண்டு அழகாகச் சொல்கிறது. அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்கள் என்று சமாதானப் படுத்தினோம்.
நான் குழந்தையாக இருந்த போதும் இப்படித் தான் அண்ணனும் அக்காவும் சொல்கிறார்கள் என்று ஆவேசத்துடன் நானும் கந்தர் சஷ்டிக் கவசம் முழ்தும் கஷ்டப்பட்டு வாசித்து முடிப்பேன். என் அம்மாவும் "பொண்ணுக்கு என்ன பக்தி" என்று மகிழ்ந்திருக்கக் கூடும். பக்த துருவ மார்க்கண்டேயன் படம் பார்த்து விட்டு வந்த போதோ, ஞாயிற்றுக் கிழமை வீட்டில் "கந்தன் கருணை" பார்த்த போதோ பக்தி பீறிட்டு மனதில் எழுந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல, மூன்றாவது படிக்கும் போது புனித வெள்ளியனறு "தேவ மைந்தன் போகின்றான்" பாட்டை ஒளியும் ஒலியும் இல் பார்த்து விட்டுக் கதறிக் கதறி அழுததும் அதற்காக அண்ணனும் அக்காவும் என்னை ஓட்டித் தள்ளியதும் நான் மறக்க விரும்பும் தர்மசங்கடங்கள்.
வீட்டில் பெரிதாகப் பூசை, விரதம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, சஷ்டி இத்யாதிகள் பார்க்கும் வழக்கமெல்லாம் அம்மாவுக்கு இருந்ததில்லை. மாலையில் தினமும் சாமி விளக்கேற்றுவார்கள்.பண்டிகைகள் வந்தால் சாமி படங்களுக்குப் பூ போட்டு, படையல் வைத்துக் கற்பூரம் காட்டுவார்கள். சனிக்கிழமைகளில் காக்காவுக்குச் சாதம் வைப்பார்கள். அவ்வளவு தான்.
நானும் பெரிதாகப் பக்தி என்றும் இல்லாமல், நாத்திகமென்றும் இல்லாமல் கோயிலுக்கெல்லாம் போய் வந்து கொண்டு தானிருந்தேன்.எங்கள் கல்லூரிக்கருகிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதற்குப் பேரே செமஸ்டர் பிள்ளையார் கோயில். ஏனென்றால் மற்ற நேரங்களில் காத்தாடும் அந்தக் கோவிலில் செமஸ்டர் சமயம் கால் வைக்க முடியாத் அளவு கூட்டம் அம்மும்.
அதே போல் மார்கழி மாதங்களில் காலையில் ஐந்து மணிக்குப் போனால் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தொன்னையில் தருவார்கள். ஓரிரு முறை சென்று வாங்கியதாக ஞாபகம். (காலை உணவுக்கு மெஸ்ஸுக்குப் போய் அழ வேண்டாமே!)
ரொம்ப எரிச்சல் வந்தது எதனாலென்றால் கூட்டம்; ஜன நெருக்கடி. விசேஷ நாட்களில் கோவில் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்.
பூசாரிகளின் அதட்டலும் அர்ச்சனைத் தட்டுகளில் போடப்படும் காசுக்கேற்ப தரும் மரியாதையும், பொது வழி சிறப்பு வழி என்று பிரித்து வைத்து ரகவாரியாகப் பிசினஸ் செய்வதும் கோவில் வழிபாடுகள் மீது முதல் அவநம்பிக்கை ஏற்படச்செய்தது.
கடவுள் பக்தி அதிகமிருக்கும் சிலர் (எம்மதமாக இருந்தாலும்) பேசுவதில் ஒரு மேட்டிமைத் தனமும் Self righteousness ம் இருப்பதையும் உணர முடிந்தது. (சிறு வயதில் இப்படிப் பேசுபவர்களைப் பார்த்தால் ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றும். நாம் இப்படியெல்லாம் சாமி கும்பிடுவதில்லையே, நமக்கு இந்த அளவு பக்தி இல்லையே என்று.)
எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. 'வெள்ளிக் கிழமையா? ஒரே வேளை சாப்பிட்டு விரதம் இரு. திங்கட்கிழமையா? சோமவார விரதம் இரு. அஞ்சு விரல்லயும் அதிர்ஷ்டக் கல் மோதிரம் மாட்டு. பிரதோஷமா? சாயங்காலம் வேலை முடிஞ்சு எவ்ளோ நேரமானாலும் சரி, கோவிலுக்குப் போயிட்டு வா.'
பிரதோஷமென்றால் சிவன் கோவிலில் கூட்டம் கேட்கவே வேண்டாம். கூட்டத்தில் சென்று இடிபட்டு நசுங்கி, அதன் பின் பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அவள் விழி பிதுங்கி விடும். ஒரே ஒரு நாள் அவளுக்காகத் துணைக்குச் சென்று படாத பாடு பட்டேன்.
இது போன்ற சம்பவங்களால் பொதுவாக சம்பிரதாயங்கள் மீதும், வழிபாடுகளின் மீதும் கொஞ்ச கொஞ்சமாக அசிரத்தை ஏற்பட ஆரம்பித்தது. கடவுள் பக்திக்கும் மதவெறிக்கும் இடையே பெரிதாக வேறுபாடில்லை என்று மதக்கலவரங்களும் கொடூரங்களும் நம்ப வைத்தன. (இது என் ஆழமான நம்பிக்கை அவ்வளவு தான்.)
மேலும், "நட்ட கல்லைத் தெய்வமென்று..." போன்ற பாடல்களும், அபு பென் ஆதம் கதைகளும், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் பேச்சிலும் எழுத்திலும் (மதமென்பது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட அபினி) நாட்டமேற்பட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஓஷோவின் discource களையும் ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தேன். போதாதா? Life is a better word than God என்ற அவரது வாசகம் மனதில் ஆழமாகப் பதிந்தது.
ஒன்று, இதையெல்லாம் நம்ப வேண்டும். இல்லை கடவுளை நம்ப வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடியாது என்று தீர்மானம் ஏற்பட்டது.
கோவிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவது என்றொரு வழக்கம் என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. இதனாலெல்லாம் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் திருமணம் செய்து கொண்டது வேற்று மதத்தவரை. அவரும் என்னைப் போலவே தான்; மதச் சம்பிரதாயங்களுக்கும் கற்பிக்கப்பட்ட புனிதங்களுக்கும் பின்னால் இருக்கும் போலித் தனங்களை உணர்ந்து வெறுத்தவர். இருவரும் எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் செல்வதில்லை. எல்லாப் பண்டிகைகளையும் எந்தவிதமான பூசை வழிபாடுகள் இல்லாமலும் கொண்டாடப் பழகி விட்டோம். இருந்தாலும் திருமணமான பின்பு சில சம்பிரதாயங்களுக்கு உட்படவேண்டி இருந்தது. பிறகு இருதரப்பினரும் எங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு விட்டார்கள். வருத்தம் தான் ஆனாலும் எங்கள் சுதந்திரத்தில் பெரிதாகத் தலையிடுவதில்லை.
நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு. இது என்னளவில் சரி. அவ்வளவு தான்.
கடவுள் நம்பிக்கை என்பதையெல்லாம் தாண்டி சில பழக்கங்களை (திருமணமானவர்கள் வீட்டுக்கு வந்து விடை பெறும் போது குங்குமம் கொடுப்பது, இளம் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் பூ வாங்கிச் செல்வது) போன்றவற்றை விட மனமில்லை; விடுவதாகவும் இல்லை! அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன.
நேஹாவும் மிகச் சுதந்திரமாகத் திரிகிறாள். இயேசு படத்தைப் பார்த்தால் "தாத்தா தாடி" என்றும் பிள்ளையார் படத்தைப் பார்த்தால் "எலிஃபென்ட்" என்றும் சொல்கிறாள். தாத்தா பாட்டிகள் "அப்படிச் சொல்லக் கூடாது... சாமி சொல்லு" என்று சொன்னாலும் நாங்கள் தடுப்பதில்லை. நம்மை விட நிச்சயம் அறிவும் தெளிவுடனும் இருக்கப் போகும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவள் தனது விருப்பத்தைத் தானே தேர்வு செய்யட்டுமே. அப்படி என்ன பெரிய விஷயம் இது?
எல்லாருக்குள்ளும் ஏதாவது சமயம் இப்படி ஒரு மனப்போராட்டம் வந்திருக்கலாம்; அல்லது இவ்விதமான குழப்பங்களுக்கெல்லாம் இடமில்லாத வகையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கலாம். என்னவாக இருப்பினும் அவர்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.
அவ்விதம் நான் அழைக்க விரும்புவது:
அண்ணாமலையான்
தமிழ்நதி
நாஸியா
மயில் விஜி
சந்தனமுல்லை
ராகவன்
34 comments:
நன்றாக இருக்கு.
திருமணம் மற்றும் கடவுள் நம்பிக்கையில் , என் வாழ்க்கையை யாரோ எழுதியது போலிருந்தது ..
நாளை என் குழந்தையும் நேஹா போல தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
-Arul
தனிமனித உணர்வுகளுடன் ஒரு உரசல் எனும் மிகவும் அழகிய பதிவு இது.
ஆகா...அடுத்த தொடர்பதிவா.. செம ஃபார்ம்லே இருக்கீங்க போல! :-)
இடுகை..செம சுவாரசியம்..எங்கிருந்தோ ஆரம்பிச்சு எங்கியோ போய் முடிச்சுட்டீங்க..எனக்கும் குழப்பம்லாம் இருந்துருக்கு..எஸ்பெஷலி..பரிட்சை சமயத்துலேதான் வரும்! LoL!
அப்புறம் கல்யாணத்துக்காக விரதம் - அக்காங்க நிறைய பேர் நினைவில் எட்டிப் பாக்கிறாங்க...:-(
நல்ல கருத்தைப் பற்றிய அவசியமான இடுகை. வழக்கம் போல் நன்றாக எழுதியிருந்தீர்கள். பிறர் இடுகைகளுக்கும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
//நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன்.//
அவர்கள் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெரும் அளவிற்கு உழைத்த அவர்கள், கடவுள் குறித்தும் சிறுவயதில் கற்பிக்கப்பட்டதை மீறி அறிவதற்காக உழைத்திருப்பார்களா?
நல்லதொருத் தொடர் இடுகையைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள்.
இன்னும் சாமிகிட்ட கண்ணு குத்து வாங்கலை போலிருக்கு நீங்க... :)
discourse - "சொல்லாடல்" ன்னு சொல்றாங்களே.
கடவுள் நம்பிக்கை முழுவதும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு. பொது இடத்தில் தனிப்பட்ட விசயங்களை பேசுவதே தவறு. நீங்கள் என்ன மதம் என்று கேட்பது முற்றிலும் அநாகரிகமான செயல்.
//கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று.//
மட்டை அடியாக கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயல் என்று சொல்வது சரி இல்லை. இரண்டையும் ஏன் பொட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டும்.
பெரியார் கூட கடவுள் கற்பனைக் கற்பிதங்களைத்தான் மறுத்தார்.
நியூட்டனின் வாழ்க்கையைப் படித்தால் அவருடை தேவாலயங்களுடன் இருந்த முரண்பட்ட தொடர்பை அறியலாம்.
சர்.சி.வி.ராமன் சந்திரமண்டல ஆராய்ச்சியைப் பற்றி "அதெல்லாம் பகவான் சமாச்சாரம் இல்லியோ" என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன். எவ்வளவு பெரிய அறிவாளியானாலும் தெரியாத விசயத்திற்கு கடவுளைக் காரணம் காட்டுவது காலம் காலமாக நடப்பதுதான்.
நல்ல பதிவு... உங்கள் எண்ண ஓட்டங்களை நன்றாக வடித்துள்ளீர்கள்.
கடவுள் வழிபாட்டிற்காகப் பெரிதாக மெனக்கெட்டதில்லை. அதற்காக நம்பிக்கையும் தளர்ந்ததில்லை. சில கோயில்களுக்குச் செல்லும் பொழுது மனதிற்கு நிறைவாக இருப்பது பிடித்திருக்கிறது. அதனால் நம்பிக்கையைத் தொடர்கிறேன்.
அதற்காகப் பல விசயங்களைக் கேள்விக்கு உட்படுத்தாமல் இல்லை. அண்மையில் நடந்த விசயம் எங்கள் குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுத்த பொழுது. இந்த நட்சத்திரம், இந்த எழுத்துகளில் தான் பெயர் இருக்கவேண்டுமென்றார்கள்.
எனக்கு அதில் உடன்பாடில்லை. காது கொடுக்கவுமில்லை! உடன்படவுமில்லை!!
அதைப்பற்றியே ஒரு தனிப்பதிவிட வேண்டும்.
எனக்கு இப்படிச் சொல்கிற வழக்கம் உண்டு: My God is different. It (She/He) exists but in crisis.
சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க...
// நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு //
கடவுள் வழிபாடு என்பது வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலத்தில் இது சரியே
நானும் கோவிலுக்கு செல்பவன் தான் .. ஆனால் அமைதியான கோவிலுக்கு சென்றால் நலம்
-Arul
ஏனுங்க, இப்பிடியும் இல்லாம அப்பிடியும் இருக்கதுதானுங்க நல்லது. ஏன்னா ரெண்டு பேருகிட்டயும் பிரச்சினை, வறட்டுப் பயலுவோ. யோசிக்க மாட்டானுவோ. நாம்புடிச்ச கல்லுதான் நல்ல கல்லும்பானுவோ. ஆனா நம்ம சித்தருங்களை மட்டும் மறந்துடாதீங்க. தமிழருன்னா யாருன்னு அவங்களைப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கோனும்!
நல்ல இடுகை.
மகிழ்ச்சி.
குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவதே சரியான வளர்ப்பு முறையாகும். அவர்கள் குழந்தைகளாகவே பிறக்கிறார்கள். இந்துவாகவோ முஸ்லீமாகவோ இல்லை என்று சொல்வது வேறு நடைமுறையில் கொண்டுவருவது வேறு.
சுவாரசியமாக இருந்தது பதிவு. கடவுள் குறித்த குழப்பங்கள் காலகாலமாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பக்தி இல்லையென்றாலும் பழக்கமாகவும் ஊறிப்போய் இருக்கிறது. சில சம்பிரதாயங்கள் அவை அழகாகவோ அல்லது எதோ சந்தோஷம் தருபவைகளாகவோ நமக்குள் தொடர்கின்றன. இதுதான் மதமும், கடவுள் நம்பிக்கையும் கலாச்சார ரீதியாக வலுப்பெறுவதற்கு காரணம்.
பாடமெல்லாம் எடுக்கத் தேவையில்லைதான். ஆனாலும், மதமும், கடவுள் நம்பிக்கையும் இயற்கைக்கும், அறிவுக்கும் முரணானது என்பதில் குழப்பம் தேவையில்லை என்பதை இங்கு கண்டிப்பாக சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
//நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே!//
எவ்வளவு பெரிய அறிஞ்ராயிருந்தாலும், யாரும் எல்லாவற்றையும் அறிந்தவர் இல்லை. அதனால்தான் ’எல்லாம் அறிந்த‘ கடவுள் மீது நம்பிக்கையும், பக்தியும் வருகிறது. வாழ்க்கை குறித்த பயம், நிச்சயமற்ற தன்மை, புதிர் எல்லாம்தான் மதத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் அடைப்படையாகின்றன. இதை வைத்துக்கொண்டு அறிஞர்கள் எல்லாம் ஆத்திகர்கள்தான் என வாதத்தை முன்வைப்பது எப்படி சரியாய் இருக்கும்? நாஜிக்களிடமும் கூடத்தான் எவ்வளவோ அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் ஹிட்லரிடம் மிகுந்த ‘பயபக்தி’யோடுதான் இருந்தனர். அதனால் நாஜிஸத்தையோ, பாசிசத்தையோ அறிவாளிகள் எனச் சொல்லிவிட முடியுமா? வறுமையை, அடித்தட்டு மக்களைப் பற்றி சிந்திக்காத அற்புதமான கலைஞர்கள், சிந்தனையாளர்கள் இருக்கின்றனரே, அவர்களது அறிவை எப்படி புரிந்துகொள்வது?
யோசிக்கலாம் இன்னும் குழப்பங்கள் தீர....
சுவாரஸ்யமான பதிவு....
ஐ!!! ஜாலி!! என்னையும் அழைத்திருக்கிறீர்கள். ரொம்ப சுவாரசியமான விஷயம்... நிச்சயம் எழுதுகிறேன் சகோதரி! :))
**
நீங்க, உங்க நம்பிக்கையை பற்றியும் , அது காலப்போக்கில் மாறி வருவதை பற்றியும் சொன்ன விதம் ரொம்ப பிடித்திருக்கு..
Me two vote போட்டாச்சு..
அப்படினா நல்லா இருக்குன்னு அர்த்தம்
:)
சிக்கலில்லாத இந்த சிறு குழந்தைகளைப்போல் எல்லோருடைய மத நம்பிக்கைகளும் இருந்துவிட்டுப்போனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களே வளர்ந்து, வாழ்க்கை நீரோட்டத்தில் கலந்து, தன்னை சுற்றியுள்ளவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு தன் மதம், தன் ஜாதி என்று வெறிக்கொண்டு உருமாரும்போதுத்தான் கடவுள், மதம் போன்றவைகள் தேவையா ? என்றக்கேள்வி எழுகிறது. இயேசு பிரானின் ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது இங்கே. " நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராட்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " ஆனால் நிஜத்தில் நடப்பது வேறல்லவா ? நீங்கள் எலிஃபென்ட் சாமியும் தாடித் தாத்தாவும் என்றப்போது, எனக்கு ஏனோ விநாயகரும் தந்தைப் பெரியாரும் மனதில் வந்துப் போனார்கள்!
நன்றி வடுவூர்குமார்!
நன்றி A!
நன்றி ராதாகிருஷ்ணன்!
நன்றி முல்லை!
எழுதுங்கள் மேடம்.
நன்றி உமா!
நன்றி கும்மி!
//கடவுள் குறித்தும் சிறுவயதில் கற்பிக்கப்பட்டதை மீறி அறிவதற்காக உழைத்திருப்பார்களா?//
நியாயமான கேள்வி.
நன்றி கையேடு!
:))
நன்றி Paul!
உங்களைப் போலவே எல்லாரும் சிந்தித்து விட்டால் ப்ரச்னை இல்லை.
நன்றி குலவுசனப்ரியன்!
இன்னும் கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.
நன்றி செந்தில்வேலன்!
ஆமாம், அதெல்லாம் கண்டிப்பாக ஒதுக்கப்படவேண்டியவை தான். :) உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள்.
நன்றி ராஜசுந்தரராஜன்!
நன்றி ரௌத்ரன்!
நன்றி A!
நன்றி அக்கினிச்சித்தன்!
:)
நன்றி செல்வநாயகி!
நன்றி அரைக்கிறுக்கன்!
உண்மை.
நன்றி அங்கிள்!
//அறிஞர்கள் எல்லாம் ஆத்திகர்கள்தான் என வாதத்தை முன்வைப்பது எப்படி சரியாய் இருக்கும்?//
நான் அப்படிச் சொல்லவில்லை. சிறிதும் அப்படி நினைக்கவும் இல்லை. அந்த வரியில் "அறிவாளிகள் அனைவருமே" என்று இருந்திருக்க வேண்டும். லேசாகப் பொருள் மாறித் தொனிப்பதை இப்போது தான் உணர்கிறேன்.
நன்றி சங்கவி!
நன்றி நாஸியா!
கண்டிப்பாக எழுதுங்கள்!
நன்றி எறும்பு!
நன்றி MSERK!
நல்ல இடுகை தீபா.
உன் கருத்துக்களை அழகாக பதிந்திருக்கிறாய்.
மற்ற்வர்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
தீபா,
"எல்லாருக்குள்ளும் ஏதாவது சமயம் இப்படி ஒரு மனப்போராட்டம் வந்திருக்கலாம்."
நீங்கள் சொல்வது உண்மை. அழைத்தமைக்கு நன்றி. அவசியம் எழுதுகிறேன்.
I like to make a single comment:
WHEN GOD IS NOT THERE, EVERYTHING IS RIGHT AND EVERYONE IS RIGHT.
நல்ல பதிவு தீபா. நெறைய பேரு மனசுல இருக்கறது சொல்ல தயங்கரத நீங்க அழகா சொன்னீங்க. அதுவும் அந்த விரதம் ராசிமோதிரம் மேட்டர் நானும் நெறைய வாட்டி எரிச்சல் பட்ட விடயம்
ஞாயிற்றுக் கிழமை வீட்டில் "கந்தன் கருணை" பார்த்த போதோ பக்தி பீறிட்டு மனதில் எழுந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்...
எனக்கு டி.எம்.எஸ்ஸோட பக்தி பாடல்கள் கேட்டா ஒரு ஃபீல் வரும் பாருங்க... :)))
அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன. ///
ம்ம்ம்.
சூப்பரா ஸ்டார்ட் பண்ணிவிட்டிருக்கீங்க ஒரு முக்கியமான தொடர்பதிவை.
சூப்பரா ஸ்டார்ட் செய்திருக்கீங்க ஒரு முக்கியமான தொடர்பதிவை.
அன்பு தீபா,
நீங்கள் அழைத்த தொடர் பதிவிற்கு நன்றி...எழுதி விட்டேன்... படித்துட்டு வந்து... இனிமேல் அழைப்பது சாத்தியமா என்பதை பார்க்கவும் ஒரு உரைகல்லாய்...
தலைப்பு... பழங்கடவுளர்களின் பரிபாடல்...
அன்புடன்
ராகவன்
தேவமைந்தன் போகின்றான் பாட்டு கேட்டாலே என்னமோ பண்ணுமே
எழுதிட்டேன் சகோதரி!
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
"வீட்டில் பெரிதாகப் பூசை, விரதம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, சஷ்டி இத்யாதிகள் பார்க்கும் வழக்கமெல்லாம் அம்மாவுக்கு இருந்ததில்லை. மாலையில் தினமும் சாமி விளக்கேற்றுவார்கள்.பண்டிகைகள் வந்தால் சாமி படங்களுக்குப் பூ போட்டு, படையல் வைத்துக் கற்பூரம் காட்டுவார்கள். சனிக்கிழமைகளில் காக்காவுக்குச் சாதம் வைப்பார்கள்."
நானும் கிட்டத்தட்ட இவ்வாறே வளர்ந்தேன்.
"எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை."
திருமணம் நடப்பதற்காக விரதங்களோடு, வாழைமரத்துக்கெல்லாம் பூசை, மேள தாளத்துடன் தாலி கட்டியவர்களைத் தெரியும். அழுவதா சிரிப்பதா என்றே தெரிவதில்லை.
நானும் கோயில்களில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு வெறுத்து போனாலும்......
அங்கு கிடைக்கும் அமைதி.....நீங்கள் நினைக்கலாம் இந்து கோயிலில் சத்தமாக இருக்குமென்று.... உண்மை ஆனால் அதையும் தாண்டி ஒரு அமைதியை அனுபவித்திருக்கிறேன்....
இயல்பாக உணர்வுகளைப் பதிந்துள்ளீர்கள். இந்த பதிவுகளின் ஏதேனும் ஒரு வரியாவது அனுபவமாகவே இருக்கிறது
Post a Comment