தனது அரண்மனைத் தோட்டத்தில் பிரபுக்களுக்கும் ஏனைய பணக்காரர்களுக்கும் ஆடம்பரமான விருந்தொன்று ஏற்பாடு செய்கிறான் நீரோ மன்னன். ஆட்டம் பாட்டம், கேளிக்கை, உயர்தர உணவு, மது வகைகள் என்று தடபுடலாக நடக்கிறது விருந்து. பொழுது சாயத் தொடங்கும் போது தோட்டத்தில் இருள் கவிகிறது. கேளிக்கைகளுக்கு இடையூறாக இருள் சூழ்வது மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அரண்மனைச் சிறையிலிருக்கும் ஏழை எளிய மக்களைப் பிடித்து வந்து கூட்டம் கூட்டமாகக் கொளுத்துகிறான். அந்த வெளிச்சத்தில் விருந்து தொடர்ந்து நடக்கிறது.
நீரோ மன்னன் அதிபயங்கர மனோ வியாதி பிடித்தவன் என்பது அறிந்ததே. ஆனால் அவனது விருந்தினர்கள்? அவர்களில் ஒருவர் கூட இதை எதிர்க்காமல் சலனமின்றி எப்படி உண்டு களித்துக் கொண்டிருக்க முடிந்தது?
தீபா பாட்டியாவும் சாய்நாத்தும் இணைந்து தயாரித்திருக்கும் "நீரோவின் விருந்தினர்கள்" என்ற குறும்படம் விவசாயிகள் தற்கொலைகளைப் பற்றியது.
நீரோவின் விருந்தினர்கள் வேறு யாருமல்ல நாம் தான் என்று ஓங்கிச் சாட்டையால் அடிக்கிறார் சாய்நாத்.
அக்டோபர் 2002. பல முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டிருந்தது இந்த மாதம். காஷ்மீர் தேர்தல்கள், ஒரு பசுவைக் கொன்றதற்காக ஐந்து தலித்துகள் கொடூரமாக கொல்லப்பட்டது, மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது எல்லாம் இந்த மாதத்தில் தான்.
ஆனால் பிற்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் நாட்டின் முக்கிய நாளேடுகள் அப்போது கர்ம சிரத்தையாகப் பல பக்கங்களில் வண்ணப்படங்களுடன் வெளியிட்டிருந்தது அமிதாப் பச்சனின் பிறந்த நாள் கொண்டாட்டச் செய்திகளைத் தாம்.
இன்னும் பல முரண்பாடுகளையும் நாட்டில் விவசாயிகளுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளையும் இக்குறும்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
ஊடகங்களைப் பொறுத்தவரை ஏனிந்த அவலமான நிலை?
பொதுவாக நாலுபேர் கூடினால் பேசிக் கொள்ளும் விஷயங்களிலிருந்து,
நமது ஆக்கிரமிக்கக் கூடிய விஷயங்கள் வரை வெகுவாகப் பாதிக்கும் அரிய சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. பொதுவாக நாட்டு நடப்புகளில் ஓரளவு பரிச்சய்ம் கொள்ள விரும்பும் சராசரி மனிதன் நம்பி இருப்பது நாளேடுகளையும் தொலைக்காட்சி செய்திகளையும் தான்.
நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், (கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளக் கூடாது) என்பதையும் முடிவு செய்யும் பெரிய அரசியலைத் தாண்டி உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
ஒரு கிராமமே திரண்டு ப்ரியங்கா போட்மாங்கே எனும் பதினேழு வயதுப் பெண்ணையும் அவளது தாயையும் கொடூரமான முறையில் வன்புணர்ச்சி செய்து கொன்றதையும், அவளது அண்ணன்களையும்) குற்றவாளிகளைக் காவல் துறையே மறைக்க முற்பட்டு சாட்சிகளை அழித்ததும் செய்தித்தாளின் மூன்றாம் பக்கத்தில் சின்ன தலைப்பின் கீழ் வெளியாகிறது.
திரு. மாதவராஜ் எடுத்திருந்த "இது வேறு இதிகாசம்" என்ற குறும்படத்தைப் பார்த்துத் தான் இந்தச் செய்தியை முதன் முதலில் தெரிந்து கொள்ளும் போது இந்தக் குற்றம் நடந்து ஓராண்டுக்கு மேலாகி இருந்தது. வெட்கமாக இருந்தது.
இது போல் இன்னும் எத்தனை தலித் கொலைகள்? விவசாயிகள் தற்கொலைகள்? நீரோவின் பிணைக்கைதிகள்?
ஆனால் நித்தியானந்தா விவகாரமோ நேற்றுப் பல்முளைத்த குழந்தைக்குக் கூடத் தெரியும்.
குற்றம் முழுக்க முழுக்க நம் மீது மட்டும் இல்லை.
ஊடகத் துறை நீரோவின் முன் கை கட்டிச் சேவகம் புரிந்தால் நாம் நீரோவின் விருந்தினர்களாகத் தான் கண்ணைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டி இருக்கும். அறியாமை என்ற காரணத்துக்காக மட்டும் வரலாறு நிச்சயம் நம்மை மன்னிக்காது.
(பி.கு: படத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய www.nerosguests.com தளத்துக்குச் செல்லுங்கள்.
மேலும், நீரோவின் விருந்தாளியா நீங்கள்? என்ற தெரிந்து கொள்ள இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதிலளித்துப் பாருங்கள்.
http://alternativeperspective.blogspot.com/2007/03/are-you-among-neros-guests.html)
நன்றி:
http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_17.html
www.anniezaidi.com
http://www.hrw.org/en/iff/neros-guests
9 comments:
பதிவிற்க்கு நன்றி ஆனல் நீரோவின் விருந்தாளிகள் ஆவணப்படம் , இந்த ஆண்டு நடந்த மும்பை சர்வதேச குறும்படம் மற்றும் ஆவண பட விழவில் முதற் பரிசு வென்ற திரைப்படம். அதே போல் சாய் நாத் எழுதியுள்ள Everybody Loves a Good Drought என்ற புத்தகமும் அருமையானது.
அருமையான பகிர்வு தீபா.
\\நீரோவின் விருந்தினர்கள் வேறு யாருமல்ல நாம் தான், என்று ஓங்கிச் சாட்டையால் அடிக்கிறார் சாய்நாத்.\\
சுடும் நிஜம்.
இந்த அறிமுகத்தகவல் அரிதானது.
நன்றி தீபா.
மிக அருமையான பதிவு. இதைவிட நம்மை குத்திக் காட்ட முடியாது.
Thanks for the inspiration!
இந்தப் படம் குறித்து இதுவரை கேல்விப்படாமல் இருந்திருக்கிறோமே என்றிருந்தது. அதுகுறித்த விபரங்களை படித்துக்கொண்டு இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தீபா.
நன்றி தீபா.. மனம் பாரமா இருக்கு..
மிக அருமையான பதிவு தீபி.
சூப்பரா சொல்லியிருக்கீங்க..
நல்ல பகிர்வு
Post a Comment