Wednesday, March 31, 2010

தெருவோடு உறவாடி...

நான் சிறுவயது முதல் இன்றுவரை ஒரே பகுதியில் ஒரே தெருவில் தான் வசித்து வருகிறேன் - நான்கு வருட வெளியூர் கல்லூரி வாழ்வைத் தவிர.
திரும‌ண‌த்துக்குப் பிற‌கும் அதே தெருவில் வேறு வீட்டில் தான் க‌ண‌வருட‌ன் இருக்கிறேன். இதைப் ப‌ற்றிப் பெரிதாக‌ நான் யோசித்த‌தில்லை; ஆனால் ஊர் உல‌க‌மெல்லாம் சுற்றி வ‌ரும் தோழிய‌ரைப் பார்த்து நான் விய‌க்கையில் அவ‌ர்க‌ளோ, 'நீ குடுத்து வெச்ச‌வ‌' என்ற‌ ரீதியில் பேசும்போது தான் யோசித்துப் பார்க்கிறேன்.

இதே தெருவில் அக்காவின் இடுப்பில் உட்கார்ந்து போயிருக்கிறேன். அம்மாவின் கைவிர‌லைப் பிடித்த‌ப‌டி ந‌டைப‌ழ‌கி இருக்கிறேன்.
ம‌ணி ரிக்ஷா எனக்காக‌ ம‌ணிய‌டித்துக் காத்து நின்றிருக்கிற‌து. சைக்கிளில் விழுந்து வாரி இருக்கிறேன். ஜோவுட‌ன் பைக்கில், என‌து ஸ்கூட்டியில்,...இப்போது என் ம‌க‌ளின் கை பிடித்து மெதுவாக‌ ந‌ட‌ப்ப‌தும் இதே தெருவில் தான்.

என்னைப் போலவே தெருவும் ஏகத்துக்கும் மாறி இருக்கிறது.தெரிந்தவர்கள் இருந்த பல‌ ப‌ழைய‌ வீடுக‌ள் இடித்து அடுக்குமாடிக் குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌ன. அத‌ன் பிற‌கு அங்கு குடியிருப்போரும் மாற்றிச் செல்வோரும் ப‌ற்றி அவ்வ‌ளவாகப் ப‌ரிச்ச‌ய‌ம் இல்லாது போய்விட்ட‌து. டான்ஸ் மாஸ்ட‌ர் ஒருவ‌ர் இருந்த‌ வீட்டில் க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ந‌ர்ஸ‌ரி ப‌ள்ளி ஒன்று ந‌ட‌க்கிற‌து.

ஆனால் எங்கள் தெருவின் சுவார‌சிய‌மான‌ ப‌குதியே அத‌ன் இன்னொரு ப‌குதி தான். முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்தைய‌ விஷ‌ய‌ம் இது.
ஏழு தெருக்க‌ள் சேர்ந்த எங்கள் செக்ட‌ர் என‌ப்ப‌டும் தொகுதியின் திட்டத்தில் ஒரு பூங்கா அல்ல‌து விளையாட்டு மைதான‌மும் இட‌ம் பெற்றிருந்த‌து. எங்க‌ள் செக்ட‌ரைத் த‌விர‌ ஏனைய‌ செக்ட‌ர்க‌ளில் அப்ப‌டி உண்டு.

ஆனால் அர‌சாங்க‌ம், எங்கள் செக்டரில் மட்டும் பூங்காவுக்கான இட‌த்தைக் குடிசை மாற்று வாரிய‌ப் ப‌ணிக்காக‌ ஒதுக்கி ஹ‌வுசிங் போர்டு குடியிருப்புக‌ள் க‌ட்ட‌ப் போவ‌தாக‌ அறிவித்த‌து. அப்போது இப்ப‌குதியில் இருந்த சிலர் இதை எதிர்த்துப் போர‌டிய‌தாக‌வும் அப்பாவும் இன்னும் சிலரும் ந‌ம‌க்குப் பூங்கா என்ப‌தையும் விட‌ ப‌ல‌ நூறு பேர்க‌ளுக்கு வீடு என்ப‌து முக்கிய‌ம் என்று ம‌றுத்துவிட்ட‌தாக‌வும் சொல்வார்க‌ள்.

ஆக‌வே என‌க்கு நினைவு தெரிந்து எங்க‌ள் தெருவில் இர‌ண்டு வ‌ர்க்க‌ ம‌க்க‌ளும் வாழ்கிறார்க‌ள். இந்த‌ப்ப‌க்க‌ம் அமைதியாக‌ வீடுக‌ளுக்குள் பூட்டிக் கொண்டு வாழும் நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ம்.

அந்த‌ப் ப‌க்க‌ம், தெருவுக்கும் வீட்டுக்கும் அதிக‌ பேத‌மில்லாம‌ல் எந்நேர‌மும் ஜேஜேவென‌ இருக்கும் ச‌ற்றே எளிய ம‌‌த்திய வ‌ர்க்க‌ம்.வெளிப்படையாகப் பார்த்தால் நிறையவே வித்தியாசம் தெரியும் இரண்டு பகுதிக்கும். செக்டரின் சங்க நிர்வாகிகள் முயற்சி எடுத்து ரோடு போடும் போது கூட சரியாய்ச் சாலையின் பாதி வரை புதிய தார் போடப்பட்ட கூத்துகளும் அரங்கேறி இருக்கின்றன. அந்தப் பக்க அம்மன் கோயில் விசேஷத்துக்காக அலறும் மைக்செட்களில் தொடங்கி தண்ணீர் லாரிப் பிரச்னை வரை பல சண்டைகளும் நடந்திருக்கின்றன.

வீட்டிலிருந்து மெயின்ரோட்டுக்குச் செல்ல‌ இட‌து புற‌மும் போக‌லாம், வ‌ல‌து புற‌மும் போக‌லாம். இட‌து புற‌ம் சென்றால் அமைதியாக‌, வேக‌மாக‌ ந‌ட‌ந்து போய் விட‌லாம். வ‌ல‌து புற‌ம் திரும்பினாலோ, "அம்மூஊ... எப்டிரா இருக்கே.." என்ற பெரிய பொட்டு வைத்த மாவுக்கார‌ம்மாவின் அழைப்பையோ, (நிறைய பேர் அக்காவின் பெயரான அம்முவைச் சொல்லித் தான் என்னையும் அழைப்பார்கள். சிறுவயதில் திருத்திக் கொண்டிருந்தேன். இப்போது விரும்பி ரசிக்கிறேன்.) "பாப்பா எங்க? அம்மாவூட்ல வுட்டுட்டியா" என்ற தண்ணி விடும் கிழவியின் குரலையோ, தண்ணீர் குடத்துடன் எதிர்ப்படும் அவரது மகளின் சினேகமான சிரிப்பையோ லேசில் கடந்து போக முடியாது.

"டேய் டேய், அவுட்டுறா நீ, போடா‌ அந்த‌ண்ட" என்றும் "டேய் அக்கா வருது, இருடா.. நீ போக்கா" என்று பெரியமனுஷத்தனம் பேசியபடி அரை டவுசர் பொடியன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்க‌ள்.

ம‌தியான‌ வேளையில் ம‌ர‌நிழ‌லில் அம‌ர்ந்த‌ப‌டி இர‌ண்டு மூன்று கிழ‌வ‌ர் கிழ‌விக‌ள் ஆடுபுலி ஆட்ட‌மோ தாய‌பாஸோ விளையாடுவார்க‌ள். இன்னொரு ப‌க்கம் ஆடுகளும் எருமைமாடுக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு நின்று கொண்டிருக்கும். சின்னதாக இருப்பதால் எருமைக் க‌ன்னுக்குட்டியைப் பார்த்து நேஹா "மே மே ..ஆடு" என்றாள் ஒரு முறை. 'ஆடு அதில்ல‌டா.. இங்கெ இருக்கு பாரு' என்று சிரித்துக் கொண்டே காட்டினார் அங்கே அமர்ந்திருந்த ஒரு அம்மாள்..

இவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாய் மடிசார் மாமி ஒருவரும் வெகு நாளாக அங்கொரு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். படுத்தபடுக்கையாயிருந்த கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த அவர் வற்றல் வடகம் போட்டு விற்பது, மாவு அரைத்துக் கொடுப்பது என்று சதா உழைத்துக் கொண்டே இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்து விட்டார். இன்னும் அதே வேலையைத் தொடர்ந்து செய்தபடி அதே தெருவில் வளைய வருகிறார் மாமி. இந்தப் பக்கத்துப் பிராமணர்கள் சிலர் வீட்டில் சமையல் வேலையும் அவர் செய்ததுண்டு.

இந்தப்பக்க‌ ம‌க்க‌ளுக்கு வீட்டு வேலைக‌ளுக்கு வ‌ருவ‌தெல்லாம் வ‌ல‌து ப‌க்க‌ப் ப‌குதிப் பெண்க‌ள் தாம். வீட்டுக்கு அருகே இருக்கும் ரேஷ‌ன் க‌டையின் ம‌ண்ணெண்ணெய்க்காகவும் அரிசிக்காகவும் மணிக்கணக்காய் வெயிலில் உட்கார்ந்திருக்கும் கூட்ட‌த்தில் நன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌ முக‌ங்களைக் காண்பது சில நேரங்களில் ஏதோவொரு நெருட‌ல் ஏற்ப‌டுத்தும்.

முன்னை விட‌ இப்போது அங்கு ப‌ல‌ர‌து வாழ்க்கைத் த‌ர‌ம் உய‌ர்ந்திருக்கிற‌து. சில‌ குடியிருப்புக‌ளின் முன் பைக்குக‌ளும் ஆட்டோக்க‌ளும் நிற்கின்றன. ஆனாலும் தெருவோடு உறவாடி அவர்கள் வாழும் வாழ்க்கை முறை மட்டும் பெரிதாக மாறவில்லை.

முக்கியமாய் ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
நேஹா வ‌யிற்றில் இருந்த‌போது அப்பா உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்தார். அலுவ‌ல‌க‌ம், ம‌ருத்துவ‌ம‌னை, வீடு என்று சில‌ நாட்க‌ள் அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நாள் வீட்டுக்கு வ‌ந்த‌போது வீட்டு வேலை செய்ப‌வ‌ர் வ‌ந்திருக்க‌வில்லை. எல்லாம் போட்ட‌து போட்ட‌ப‌டி கிட‌ந்த‌து. ம‌ற்ற‌ ச‌ம‌ய‌ம் என்றால் எப்ப‌டியோ செய்திருப்பேன்; அன்று சுத்த‌மாக‌ முடிய‌வில்லை. அவ‌ர் வீட்டுக்குச் சென்று அழைத்துவ‌ர‌லாமென்று போனேன். போகும் வ‌ழியிலேயே ஒரு வீட்டில் என்னை ம‌றித்த‌ பெண்ணொருத்தி "என்ன‌ அக்கா, இந்நேர‌த்துல் யாரைத் தேடி வ‌ந்தீங்க‌?" என்றாள். அவ‌ள் புதிதாக‌க் க‌ல்யாண‌மான‌வ‌ள். அவ‌ளும் அப்போது மாச‌மாக‌ இருந்தாள்.

"அம்சா வீடு எங்க‌ம்மா...வேலைக்கு வரலம்மா அவங்க இன்னிக்கு" அவரது வீடு கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லையே என்று லேசான வெட்கத்துடன் கேட்டு வைத்தேன். இதற்கு முன் எப்போதோ இந்தப் பெண்ணைப் பார்த்ததோடு சரி, பெயரும் தெரியாது; பேசியதுமில்லை.

"நீங்க‌ இங்க‌ இருங்க‌க்கா. இதோ என் த‌ம்பியை அனுப்பிப் பாத்துட்டு வ‌ர‌ச் சொல்றேன். அந்தக் குடியிருப்பின் வாசலில் ஒரு சின்ன்னக் கோயில் உண்டு. அதன் திண்டில் அமர்ந்தேன்.

அங்கு கூடி இருந்த‌ ம‌ற்ற‌ பெண்க‌ளும் அன்புட‌ன் என்னை விசாரிக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

உள்ளே சென்ற‌வ‌ள் சூடாக‌க் காப்பியுட‌ன் வ‌ந்தாள். என‌க்குத் திடுக்கிட்டுப் போய்விட்ட‌து... யாரென்றே தெரியாத‌ என‌க்கு இவ்வள‌வு அன்புட‌ன் உப‌ச‌ரிக்கிறாளே. க‌ளைப்பும், ம‌ன‌ச்சோர்வும், அச‌தியுமாய் இருந்த‌ என‌க்கு அந்த‌ அன்பு ச‌ட்டென்று க‌ண்ணில் நீர் வ‌ர‌வ‌ழைத்து விட்ட‌து. வயதிலும் படிப்பிலும் வசதியிலும் கூட‌ அவளைவிட உயர்ந்தவளாகத் தென்படும் நான் முன்பின் தெரியாத‌ யாருக்காவது இம்மாதிரி குறிப்பறிந்து அன்பு செய்திருக்கிறேனா என்று நினைக்கும் போதே அவமானமாக இருந்தது.

ரொம்ப நாள் பழகியது போல் க‌ல‌க‌ல‌வென்று பேசிக் கொண்டே போன‌து அந்த‌ப் பெண். வ‌ர‌ப்போகும் குழ‌ந்தையைப் ப‌ற்றி, க‌ண‌வ‌ரைப் ப‌ற்றி, புகுந்த‌ வீட்டுக் காமெடிக‌ள் ப‌ற்றி என்று வெகுளித் த‌னமாக‌ப் பேசிக் கொண்டிருந்த‌வ‌ளை ர‌சித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நேர‌மாக‌வே, நீங்க வீட்டுக்குப் போங்க‌க்கா, நான் அம்சாக்காவை அனுப்பி வெக்கிறேன், என்றாள்.

அம்சா வ‌ர‌வில்லை. ஆனால் இந்த‌ப் பெண்ணின் எதிர்பாராத அன்பு கொடுத்த‌ தெம்பில் வீட்டுக்குப் போய் க‌ட‌க‌ட‌வென்று எல்லா வேலைக‌ளையும் நானே முடித்துவிட்டேன்.

என்ன தான் சொன்னாலும் நமது நடுத்தரவர்க்க சுகாதாரம், நாகரிகம், privacy இலக்கணங்களை அல‌ட்சிய‌மாக‌ மீறும் இப்ப‌குதியைக் க‌ட‌க்கையில் முன்பொரு ச‌ம‌ய‌ம் அசூசைப் ப‌ட்ட‌துண்டு. ஆட்டோவில் வ‌ரும்போது, நாங்க‌ள் இந்த‌ இட‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இல்லை' என்று சொல்ல‌ விரும்புவ‌து போல் "இந்த‌ இட‌ம் தாண்டி, அந்த‌ப் ப‌க்க‌ம்" என்று சொல்ல‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட்ட‌துண்டு. அத்த‌கைய போலி கௌரவங்கள் உடைந்து சிதறிய நாள் அது. முன்னெப்போதையும் விட‌ அப்ப‌குதியை ம‌ரியாதையுட‌னும் வாஞ்சையுட‌னும் பார்க்க‌ வைத்த‌து அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் தான்.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அனுபவம் தீபா..

நாஸியா said...

நானும் சொல்றேன்..

நீங்க குடுத்து வெச்சவங்க தான்! எத்தனை பேருக்கு உங்களை போல கிடைக்கும்! :)

**

Rithu`s Dad said...

அருமையான பதிவு..

///வயதிலும் படிப்பிலும் வசதியிலும் கூட‌ அவளைவிட உயர்ந்தவளாகத் தென்படும் நான் முன்பின் தெரியாத‌ யாருக்காவது இம்மாதிரி குறிப்பறிந்து அன்பு செய்திருக்கிறேனா என்று நினைக்கும் போதே அவமானமாக இருந்தது. ///

நம்மள்ளா நிறைய பேர் இது தானெ நினைச்சுட்டு இருக்கோம்.. படிச்சுட்டோம்னு..

உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்திய இந்த பொறி.. அனைவருக்கும் வந்தால் ... நாடே நன்றாகும் தானே..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனசில இருந்து அப்படியே வார்த்தையா எழுதியிருக்கீங்க.

இப்ப தெருவோடு அவ்வளவு பரிச்சயமில்லை, ஆனா ஒரு காலத்தில் சாப்பாடு மட்டும் தான் தெருவில் சாப்பிட்டது இல்லை.மத்தபடி
எல்லா நேரமும் அங்கேயே குடிகொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்துவிட்டது இந்த இடுகையை படித்தவுடன்.

சந்தனமுல்லை said...

அருமையான பகிர்வு! எளிய மக்கள்..உயர்ந்த உள்ளங்கள்! :-)

Uma said...

மிகவும் நல்ல பதிவு. ஒரு முறை அந்தத் தெருவிலுள்ள கோவில் திருவிழாவால் ரோடு அடைத்திருந்த போது கூட அந்த நல்ல மனிதரில் சிலர் காரை ரிவர்ஸில் தெரு முனை வரை கொண்டு செல்ல உதவினார்கள். இதன் உச்சம் அவர்கள் என்னிடம் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டதுதான்!! அன்று முழுக்க இந்த அனுபவத்தைப் பற்றித்தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

பத்மா said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க தீபா

மாதவராஜ் said...

அவர்களிடம் போலித்தனங்கள் இருப்பதில்லை. எளிமையான அந்த மனிதர்கள் உண்மையும், அன்பும் நிறைந்தவர்கள். நல்ல பதிவு தீபா.

அண்ணாமலையான் said...

வெரி லக்கி கேர்ள்

ரிஷபன் said...

மனதைத் தொட்டது..

காமராஜ் said...

ஆரம்பத்திலிருந்தே தீபாவிடமிருந்து இப்படியொரு பதிவு வரணும் என்று காத்திருந்தேன்.
படு க்ளாஸ் தீபா. ஒரு தெருவில் வாழும் மனிதர்களுக்குள் ஊடுபாவாய் கிடக்கிற இழைகள்
கண்ணுக்குத் தெரியாதவை.ஆனால் கட்டாயம் நினைத்துப் பார்க்கையில் கண்ணீர் முட்டுபவை.
வெகு இயல்பாக நில்லு அக்கா போகட்டும் என்று நிறுத்துகிற இடம் தான் எழுத்தின் வீர்யம்.

அன்புடன் மலிக்கா said...

அனுபவங்களும் அழகிய நினைவுகள் நம்மை சில நேரமல்ல பலநேரங்களில் கட்டிப்போடுவிடுகிறது

தெருவோடு உறவாடியவைகள் மிக அழகாக மிகத்தெளிவாக சொல்லியிருக்கீங்க தீபா.
கொடுத்து வச்சவங்க நீங்க.

VijayaRaj J.P said...

உள்ளதை உள்ளபடி சொல்லும்
தீபாவுக்கு பாராட்டுக்கள்.

அருமையான பதிவு.

Radhakrishnan said...

ஏனோ இந்த அருமையான மனிதர்களிடம் இருந்து நான் தொலைந்து போனேன். மனதை நெகிழ வைத்த சம்பவம், நல்லதொரு பதிவு.