Friday, March 26, 2010

உதிரிப்பூக்கள்

அம்மாவுக்குக் கேடரக்ட் ஆப‌ரேஷ‌ன் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. வெளியே காத்திருந்த‌ போது அருகில் அம‌ர்ந்திருந்த‌ ஒரு பெண்ம‌ணியிட‌ம் பேச்சுக் கொடுத்தேன். அவ‌ர் க‌ண‌வ‌ருக்கு மாறுக‌ண் சிகிச்சையாம். ஆந்திராவைச் சேர்ந்த அவர் நான்கு முறை செய்து தோல்விய‌டைந்து ஐந்தாவ‌து முறையாக‌ இங்கே செய்து கொள்ள வ‌ந்திருக்கிறார்க‌ள். ஆச்சரிய‌ப்ப‌ட்டு ஏன் நான்கு முறை அப்ப‌டியான‌தென்று கேட்ட‌த‌ற்கு க‌ர‌க‌ர‌வென‌ அழ‌த்தொட‌ங்கி விட்டார்.

கொச்சையான இந்தியில் அவர் பேசியதைக் கஷ்டப்பட்டுத் தான் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. வசதியான முஸ்லிம் குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள். இரு ம‌க‌ள்க‌ள் ஒரு ம‌க‌ன். மூத்த‌ ம‌க‌ளைக் க‌ல்லூரி ப‌டிப்பு முடித்த‌வுட‌னே பெரும் ப‌ண‌க்கார‌ இட‌மொன்றில் க‌ட்டிக் கொடுத்திருக்கிறார்க‌ள். மிகப்பெரிய வீடு, அரசியல் செல்வாக்கு, வீடு நிறைய வேலைக்காரர்கள் என்று பிரமித்துப் போய் மகளைக்கொடுத்திருக்கிறார்கள்.

திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌ பிற‌கு பெண்ணை இவ‌ர்க‌ள் பார்க்க‌வோ அவ‌ளை இங்கு அனுப்ப‌வோ த‌டை விதித்து விட்டார்க‌ளாம். ஃபோன் கூடப் பேச முடியாத நிலை. ஏழுமாத‌ க‌ர்ப்பிணியாக‌ இருந்த‌போது பார்த்த‌ ம‌க‌ள் ப‌ய‌ந்து போய் சுத்த‌மாய் உருமாறிப் போயிருந்தாளாம். வீட்டில் வேலைக்காரி போல் நடத்துகிறார்களாம்.

என்னவென்று விசாரிக்கப் போய்த் தொடர்ந்து பல பிரச்னைகளுக்குப் பின் அங்கு வாழ விரும்பாத மகளின் கோரிக்கையை ஏற்று விவாகரத்துக்கு முயன்றிருக்கிறார்கள். மாப்பிள்ளையின் குடும்பம் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் காவல் துறையிலும் நீதிமன்றத்திலும் நல்லவிதமாக நடித்துப் பெண்ணை மீண்டும் அழைத்துப் போய்விட்டார்களாம். இப்போது மீண்டும் அவள் சிறையில். உற்றார் யார் சென்று பார்த்தாலும் அடையாளம் தெரியாதது போல் பேசுகிறாளம் அவள். ஒரு வயதுப் பேரக்குழந்தையைக் கூட இன்னும் கண்ணால் பார்க்கவில்லை, "என் பொண்ணுக்கு ஏதோ மருந்து வெச்சு எங்களையே தெரியாத மாதிரி பண்ணிட்டாங்க" என்று ஏதேதோ சொல்லி அழுதார் அந்த அம்மாள்.

மகள் நினைவால் சதா அழுது கொண்டே இருப்பதால் தான் ஒவ்வொரு தடவை கண் சிகிச்சையும் பயனளிக்காமல் போகிற‌தென்று அவர் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியாமல் அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தேன். முப்ப‌து ல‌ட்ச‌ம் செல‌வு செய்தார்க‌ளாம் ம‌க‌ள் திரும‌ண‌த்துக்கு.
அடுத்த‌ ம‌க‌ள் என்ன‌ செய்கிறாள் என்று கேட்டேன். கல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருப்ப‌தாக‌ சொன்னார். "அவ‌ளை மேற்ப‌டிப்புப் ப‌டிக்க‌ வைத்து நல்ல‌ வேலைக்கு அனுப்புங்க‌ள்" என்றேன்.

"அது தான் எல்லாரும் சொல்கிறார்க‌ள். அப்ப‌டித் தான் செய்ய‌ வேண்டும். இவளையும் அவ‌சர‌ப்ப‌ட்டுக் க‌ல்யாண‌ம் செய்து கொடுக்க‌க்கூடாது" என்று த‌ன‌க்குத் தானே சொல்வ‌து போல் சொல்லிக் கொண்டார்.
'ஹும்..ஒரு க‌ண் கெட்ட‌ பின் சூர்ய‌ ந‌ம‌ஸ்கார‌ம். இன்னொரு க‌ண்ணுக்காவ‌து ந‌ல்வ‌ழி பிற‌க்க‌ட்டும்!'

________________________


"அங்காடித் தெரு" - 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்ற பாட்டை டிவியில் பார்த்தேன்.வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்தைப் பார்த்தே ஆக‌ வேண்டும் என்று ஒரு வெறி வ‌ருகிற‌து. இந்த‌ யதார்த்த‌ நாய‌க‌ர்க‌ளின் காத‌லில் க‌சிந்துருகுவ‌து தான் ம‌ன‌துக்குப் பிடிக்கிற‌து.

டிசைன‌ர் ஆடைக‌ளில், ஆர்டிஃபிஷிய‌ல் லைட்டிங்கில், ஏ. ஆர். ர‌ஹ்மானின் ஊளை‌யின் பின்ன‌ணியோடு பின்ம‌ண்டையைச் சொறிந்து கொண்டு (ஸாரி சார், என‌க்கு உங்க‌ இசை பிடிக்கும்..குர‌ல் நோ!) என்ன‌ காத‌ல் வேண்டிக்கிட‌க்கிறது? மண்ணாங்கட்டி! (காதல்னா என்னனே தெரியாத, இல்லத் தெரிஞ்சுக்கற ஆர்வம் மட்டுமே இருந்த‌ விடலைப் பருவத்தில் இதெல்லாம் ரசித்தது உண்மை தான். இப்போ வயசாகிடலை, கொஞ்சூண்டு அறிவு வந்துடுச்சு!)

________________________


ராக‌வ‌ன் அவ‌ர்க‌ளும் த‌மிழ்ந‌தி அவ‌ர்க‌ளும் "நான் ச‌ந்தித்த‌ க‌தை சொல்லிக‌ள்" தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைக்க‌வில்லை என்று உரிமையுட‌ன் காதைத் திருகி இருந்தார்க‌ள். இன்ப அதிர்ச்சியாக இருந்தது! ராக‌வ‌ன் அருமையாக‌ அவ‌ர‌து அனுப‌வ‌த்தைப் ப‌திந்திருக்கிறார். த‌மிழ்ந‌தி அவ‌ர்க‌ளின் இடுகையை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன் என்று சொல்ல‌வும் வேண்டுமோ?
உமாருத்ரன் (Personal Pages) அவ‌ர்க‌ளும் காம‌ராஜ் (அடர்கருப்பு) அவ‌ர்க‌ளும் அடித்து ஆடியிருக்கிறார்க‌ள்.
சுட்டிகளுக்கு இட‌ப்ப‌க்க‌ம் பார்க்க‌வும்.
__________________________


கிரிக்கெட் என்றாலே வெறுத்து ஓடுகிற எனக்கு இந்த ஐபிஎல் கூடுதல் வெறுப்பைத் தருகிறது. ஏதோ சொந்த நாட்டுக்காக ஆடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. காசுக்கு ஏலமெடுத்தவர்களுக்காக ஆடுவதற்கும் கூலிக்கு மாரடிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று சத்தியமாகப் புரியவில்லை. ஹும்ம்.. சரி சரி. கிரிக்கெட் வெறியர்கள் சண்டைக்கு வரவேண்டாம். பார்த்துத் தொலையுங்கள். - சேச்சே! வேண்டாம்...தொலையாமல் பாருங்கள்!

11 comments:

பத்மா said...

வாசனையான கதம்பம்

Anonymous said...

//அங்காடித் தெரு" - 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...' என்ற பாட்டை டிவியில் பார்த்தேன்.வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்தைப் பார்த்தே ஆக‌ வேண்டும் என்று ஒரு வெறி வ‌ருகிற‌து.//
பார்த்துங்க,,,முத்த விட்றாதீங்க...அருமையான பதிவு!

ஸ்ரீவி சிவா said...

முதல் பத்தி... மனதை ஏதொ செய்தது.

//இந்த‌ யதார்த்த‌ நாய‌க‌ர்க‌ளின் காத‌லில் க‌சிந்துருகுவ‌து தான் ம‌ன‌துக்குப் பிடிக்கிற‌து. //
அதென்னமோ, எனக்கும் மிகச் சரியாய் இந்த உணர்வுதான். இருந்தாலும் எனக்கு அப்படியொன்றும் அதிக வயதில்லை. ;-)

//டிசைன‌ர் ஆடைக‌ளில், ஆர்டிஃபிஷிய‌ல் லைட்டிங்கில், //
கெளதம் மேனன்களும், பரணிகளும், விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்களும் இருக்கிற வரை இதை மாற்ற முடியாது.

Unknown said...

அங்காடிதெரு நல்ல படமாம்

காமராஜ் said...

கண்ணீருக்கான காரணம் டமால்னு விழுமென்று பதுங்கி பதுங்கிப்படித்தேன்,கண்ணீர் தான் காரணமா?
இந்த கதை புதியது. தீபா கதையைக் கேட்டு இன்னும் ஒரு முறை பண்ணவைத்துவிட்டாயே.
அம்மா எப்டியிருக்காங்க,அப்பாவும்.

ஆடி முடிக்கலை.

Unknown said...

முதல் செய்தி இன்னும் மனதை விட்டு அகலவில்லை.. அந்த இரண்டாவது பெண்ணின் வாழ்க்கை நல்ல அமையணும்னு மனசு அலைபாயுது

Uma said...

கண்ணீர் கண்ணுக்கு நல்லது என்றுதான் நினைத்திருந்தேன். மனதிற்கும் கூட. ஆனால், இந்தக் கதை கண்ணீரின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது. அங்காடித் தெரு பார்த்து விடுகிறேன். நல்ல இடுகைக்கு நன்றி.

Uma said...

கண்ணீர் கண்ணுக்கு நல்லது என்றுதான் நினைத்திருந்தேன். மனதிற்கும் கூட. ஆனால், இந்தக் கதை கண்ணீரின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது. அங்காடித் தெரு பார்த்து விடுகிறேன். நல்ல இடுகைக்கு நன்றி.

அண்ணாமலையான் said...

as usual.... gud

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹும்..ஒரு க‌ண் கெட்ட‌ பின் சூர்ய‌ ந‌ம‌ஸ்கார‌ம். இன்னொரு க‌ண்ணுக்காவ‌து ந‌ல்வ‌ழி பிற‌க்க‌ட்டும்!' //

அதே.

அமுதா said...

nice