Tuesday, March 30, 2010

பேருந்து அவனது போதிமரம்!

அய்யோ! அலாரம் அடிச்சதே தெரியாம தூங்கிட்டேனே... மணி ஏழு இருபதா?
இன்னும் பத்து நிமிஷத்துல நான் சிக்னல் கிட்ட நிக்கணும்!

அவசர அவசரமா குளிச்சிட்டு வெளிய வரேன்.

பெட்ரூமுக்கு வந்து லைட்டைப் போட்டா...வயிறெரியுது! என்னமா அச‌ந்து தூங்கறாங்க அம்மாவும் பொண்ணும்...
என் குட்டிம்மா. குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச‌ணும் போல‌ இருக்கு. தொட்டா இவ‌ சாமியாடிடுவா. 'போற‌நேர‌த்துல என் தூக்க‌த்தை கெடுக்க‌ற‌துக்காக‌வே அவ‌ளை எழுப்பி விட்டுட்டுப்போற‌. ஸாடிஸ்ட்' அது இதுன்னு.. அம்மாடி, வேண்டாம்பா.

என்ன லைட்டா சிணுங்குறாங்க பெரியமேடம்! ஓ! லைட் போட்டது தொந்தரவா இருக்காம்மா.. ஸாரி ஸாரி. இரு என் ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டுப் போயிடறேன்... இந்தா, லைட்ட‌ ஆஃப் பண்ணியாச்சு.. நிம்மதியா தூங்குமா. ஹூம்!

காலங்காத்தால புருஷன்காரன் எழுந்து வெறும் வயித்தோட ஓடறானே. ஒரு காபி போட்டுக் குடுப்போம்.. மூச்! பேசக்கூடாது..எதையாவது கிறுக்கித் தொலைச்சு நமக்கும் அந்த லிங்கை அனுப்பி வைப்பா...எத்தனை நாளைக்குத் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? போக‌ட்டும் ந‌ம்ம‌ த‌லையெழுத்து ஓட‌றோம். அவ தூக்க‌த்தை ஏன் கெடுக்க‌ணும்.

எல்லாம் இந்த‌ புது க‌ம்பெனிக்குப் போக‌ ஆர‌ம்பிச்ச‌துலேந்து தான். அதுக்கு முன்னாடி ம‌காராஜா மாதிரி ஒன்பது மணி வ‌ரைக்கும் தூங்கிட்டிருந்தேன். மேட‌ம் பாவ‌ம் சீக்கிர‌ம் எழுந்து (என்னை வசை பாடிக்கிட்டே) ச‌மைய‌ல் செஞ்சுட்டுக் குளிக்கப் போகும் போது வந்து ஒரு எத்து விடுவாங்க...

அப்போதான் எழுந்திருப்பேன். ல‌ஞ்ச் பேக் ப‌ண்றதும் பாப்பாவை எழுப்பி அவங்க அம்மா வீட்ல கொண்டு விடறதும் தான் என் வேலை. அது ரொம்ப‌க் க‌ஷ்ட‌ம் மாதிரிக் கொஞ்ச‌ம் சீன் போட்டுக்கிட்டே செஞ்சுட்டிருந்தேன்.

ஊருக்கு வெளிய‌ இருக்க‌ ஐடி பார்க்ல ஜாயின் ப‌ண்ண‌துலேந்து எல்லாம் மாறிப்போச்சு.

அப்பாடி ஒரு வழியா பஸ் வந்துடுச்சு.. கடைசி சீட்ல மட்டும் தான் இடம் இருக்கு..உக்காந்தாச்சு.. போய்ச்சேர ஒண்ணரை மணிநேரம் ஆகுமே, விட்ட இடத்திலேந்து தூக்கத்தைக் கன்டினியூ பண்ணலாம்னா நமக்கு என்னமோ அந்த மாதிரி தூக்கமே வரமாட்டேங்குது. தூங்குனா குறைஞ்சது மூணு நாலு மணி நேரம் வேணும். வீட்ல இருக்காளே ஒரு குட்டிப் பிசாசு அஞ்சு நிமிஷம் கெடச்சாலும் குட்டித் தூக்கம் போட்டுடுவா.

முன்னாடி சீட்டுங்க நிறைய பொண்ணுங்க தான் ஜாஸ்தி. ஹேய் தப்பா நினைக்காதம்மா.. எல்லாம் சிஸ்டர்ஸ் அன்ட் ஆன்ட்டீஸ்!

எல்லார் கையிலையும் ஹேன்ட்பேக், ஒரு டப்பர்வேர். நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கறாங்க. இவங்கல்லாம் இன்னும் முப்பது கிலோமீட்டார் முன்னாடிலேந்து வராங்க.

பாவம் நடுராத்திரியே எழுந்து குளிச்சு, வேலையெல்லாம் முடிச்சு சமைச்சு எடுத்துக்கிட்டு ...ஹைய்யோ! நினைக்கும் போதே தலை சுத்துது...

முதல்நாள் பாத்தப்போ முக்காவாசிப் பொண்ணுங்க‌ தலையை விரிச்சு விட்டிருந்தாங்க.. அரை இருட்டில பாத்துட்டுப் பயந்துட்டேன். ஆஃபீஸ் கிட்ட பஸ் வரும் போது திடுதிப்னு எழுந்து அவசர அவசரமா பேகத் தொறக்கறாங்க‌. சீப்பை எடுக்கறாங்க. கிளிப்பை எடுக்கறாங்க...ரென்டு நிமிசத்துல தலையை வாரி..ஹேர்ஸ்டைல் ஓவர். ஓ!..குளிச்ச தலையைக் காய வைக்கக்கூட நேரமில்லாம ஓடி வர்ராங்க. பேசாம‌ அழ‌கா தலையை பாப் வெட்டிக்க‌லாம்; நேர‌மும் மிச்சம், வேலையும் மிச்சம்.

என்னடா பொண்ணுங்களைப் பத்தியே பேசறானேன்னு பாக்கறீங்களா? என்ன பண்றது, கம்பெனியில பாதிக்கு மேல பொண்ணுங்க தான். அப்புறம் பல் தேய்ச்சு குளிச்சு ட்ரஸ்ஸ மாட்டிட்டு வர்றதுக்கே நாம அலுத்துக்கறோமே, வீட்டு வேலங்களையும் முடிச்சு நமக்கு முன்னாடி பஸ்ல உக்காந்திருக்காங்களேன்னு இன்னொரு ஆச்சரியமும் அட்மிரேஷனும் தான்.
வேறென்ன?

நல்லவேளை அவளுக்கு ஆஃபிஸ் பக்கத்துல தான். இவ்ளோ தூரம்லாம் அவளால ட்ராவல் பண்ண முடியாது.

என்ன இது சத்தம்.. எவண்டா அவன்? பக்கத்து சீட்ல ஒரு பையன். காதுல என்னமோ மாட்டிருக்கானே..ஹியரிங் எய்டா? ஊமையோ...ஏதாவது வலியில கத்தறானோ? அடச்சே.. ஐபாட்!
மறுபடியும் ஆரம்பிச்சான்.
"என்னாவ.. ளே அடி என்னா வளேஏஏ " குரல் ஏகப் பிசிறல். இதைக் கேக்கணும் அவள். நானே சூப்பராப் பாடறேன்னு ஒத்துக்குவா.

ஏன் இப்டிக் க‌த்த‌றான். தாங்க‌ முடிய‌ல‌..தூக்க‌க் க‌ல‌க்க‌ம் வேற‌..

யாருக்குமே கேக்க‌லியா? எல்லாரும் ஒண்ணு ந‌ல்லாத் தூங்க‌றாங்க‌, இல்ல‌ இவ‌னை மாதிரியே காதுல‌ மாட்டி இருக்காங்க‌. நான் ம‌ட்டும் தான் மாட்டிக்கிட்டேன்!

ஹப்பாடி ஒரு வழியா நிறுத்திட்டான்..
"மும்பே வாஅ என் அம்பே வா..ஊஊ" அய்யோ! அடுத்ததா...கடவுளே
உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்கிக்கறேன்.


அடுத்த ஸ்டாப்பிங்கில் நாலு பேர் ஏற்ராங்க‌. நேரா இங்க தான் வ‌ராங்க‌..
"டேய் டேய், வால்யுமைக் குறைடா.."
க‌ண்ணைத் திற‌ந்து திருதிருன்னு முழிக்கிறான். "அவ்ளோ ச..த்..த‌மாவா கேட்டூதூ?"

"இல்ல‌ பாஸ்.. நானும் ட்ரைவ‌ரும் ம‌ட்டும் தான் கேட்டுக்கிட்டு இருந்தோம்"

"ஹீஹீ"

ஆச்சு.. காலையில‌க் க‌தை இப்ப‌டின்னா, சாய‌ங்காலம் இன்னொரு க‌தை...

இந்த‌ப் பொண்ணுங்க‌ இருக்காங்க‌ளே.. த‌ற்காத்துத் த‌ற்கொண்டார் பேணுவ‌து எப்ப‌டின்னு அவ‌ங்க‌ கிட்ட‌க் க‌த்துக்க‌ணும்.

ஆற‌ரை ம‌ணிக்குப் ப‌ஸ்ல‌ ஏறினா ஏழு ம‌ணிக்கு ஆளுக்கு ஒரு சின்ன‌ ட‌ப்பாவைத் திற‌க்க‌றாங்க‌.. இந்தா இந்தா ந்னு அவ‌ங்க‌ளுக்குள்ள‌ ஷேர் ப‌ண்ணிக்கிட்டு முறுக்கு பிஸ்க‌ட், ப‌ழ‌ம்னு ஏதோ ஒண்ணு...

'வீட்ல மேடத்தையும் இந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கிட்டுப் போக‌ச் சொல்ல‌ணும்.. நீட்டி முழக்கி நியாயம் பேசச் சொல்லு, பேசுவா... இதெல்லாம் தெரியாது. வீட்டுக்கு வ‌ரும்போதே பசியோட‌ ட‌ய‌ர்டா வ‌ர‌ வேண்டிய‌து. ந‌ம்ம‌ கிட்ட‌ எரிச்ச‌லைக் காமிக்க‌ வேண்டிய‌து'

நம்ம முன்சீட் அம்மணிகள் சாப்டுட்டுத் துப்பட்டாவை மூஞ்சில போத்திட்டுத் தூங்கிட்டாங்க‌. ஒரு அரை ம‌ணி நேர‌ம் போயிருக்கும். ஒரு மேட‌ம் எழுந்து ப‌க்க‌த்துல‌ இருக்க‌ற‌வ‌ர‌ங்க‌ளை எழுப்ப‌றாங்க‌..

என்ன இது, இவ‌ங்க‌ ந‌ம‌க்கும் அப்ப‌ற‌ம் போக‌ணுமே..எங்க‌ இற‌ங்க‌ப் போறாங்க‌ன்னு பாத்தா, த்தோடா.. ஏதோ க்ரீம் எடுத்துக் கையில‌ முக‌த்துல‌ எல்லாம் த‌ட‌விக்க‌றாங்க‌..

இப்ப‌ என்ன‌டா மேக்கப் வேண்டி இருக்குன்னு நான் கூட‌த் த‌ப்பா நின‌ச்சுட்டேன். கொஞ்ச நேர‌ம் க‌ழிச்சுத் தான் உண்மை புரிஞ்சுது.. பேயாப் ப‌டை எடுத்து வருது பெரிய பெரிய கொசுக்கள். அய்யோ... நாள் பூரா ப‌ஸ் ஸீட்க‌ளுக்கு அடியில ஒளிஞ்சு கெட‌ந்த‌ கொசு எல்லாம் வ‌ந்து பிச்சுப் பிடுங்குது. கவலையே இல்லாம‌ தூங்குறாங்க‌ முன்சீட் ம‌காராணிக‌ள். ஆஹா. அது க்ரீம் இல்ல‌டா சோச‌ப்பு, ஓடோமாஸ்!
இந்தப் பொண்ணுங்களோட முன் ஜாக்கிரதை உணர்வு தாங்கலடா சாமி!

வீட்டுக்குப் போய் சாப்டுட்டு நிம்ம‌தியா மேட்ச் முன்னாடி உக்கார‌ணும்னு நினைக்கும் போதே இந்த‌ப் பொண்ணுங்க‌ என்ன‌ ப‌ண்ணுவாங்க‌ன்னு நினைக்காம‌ இருக்க‌ முடிய‌ல. ஓடிப்போய்க் குழந்தைங்களைக் கவனிக்கணும். சமையல் பண்ணனும். வீட்ல புருஷன்காரன் ஏதாவது உதவி பண்ணுவானா தெரியாது...

ம்க்கும்.. நம்ம என்ன பண்றோம்? அவள் நாலு நாள் கத்தினா ரெண்டு நாள் ஹெல்ப் பண்றேன். அதுவும் சலிச்சுக்கிட்டே. சே... தப்புடா சோசப்பு.. இனிமே அவளுக்குச் சரிக்குச் சரியா வீட்ல வேலை செய்யணும்.

அட்லீஸ்ட அவளோட "டார்ச்ச‌ர் லின்க்ஸ்" வரவையாச்சும் குறைக்கலாம்னு ஒரு சுயநலம் தான்...பார்ப்போம்!

18 comments:

Romeoboy said...

நல்ல நடை .. சுயபுராணம் போல இருக்கே ??

Anonymous said...

இது உங்க மறுபாதி ஐடியா குடுத்து எழுதினதா,:)
நல்லா இருக்கு

சந்தனமுல்லை said...

Gud one Deepa!
செம ஜாலியா இருந்தது படிக்க...அதே சமயம் ஃபீலிங்க்ஸா-வும்! :-(
அங்கங்கே உங்க வீட்டை snapshot எடுத்து காட்டினதுக்கு தேங்க்ஸ்! ;-))
வீட்டுக்கு வீடு காலிங் பெல்!

சந்தனமுல்லை said...

ஹேய்..சின்ன அம்மிணி மேடம்...செம ஷார்ப் அம்மணி மேடம்!! :-)

அம்பிகா said...

\\சின்ன அம்மிணி said...
இது உங்க மறுபாதி ஐடியா குடுத்து எழுதினதா,:)\\
அல்லது எழுதியதே மறுபாதி தானா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொட்டா இவ‌ சாமியாடிடுவா. //

உங்களுக்கும் சாமியாடத் தெரியுமா ;))))))

ரசித்து படித்த இடுகை. படிக்கவேண்டிய படிச்சாங்களா ? ;)

Radhakrishnan said...

;) வீட்டுக்காரருக்கு உதவுங்க தீபா. நன்றாக இருந்தது பதிவு.

மாதவராஜ் said...

இவ்ளோ இருக்கா....
:-)))))

Uma said...

இது ஜோ ஸ்பீக்கிங்கா? இல்ல பெட்டர் ஹாஃப் & ஆல்டர் ஈகோ ஸ்பீக்கிங்கா? எப்படியிருந்தாலும் ச்சோ ச்வீட் :)

பத்மா said...

எல்லாரும் பாவம் தான்

அண்ணாமலையான் said...

எவ்ளோ இருக்கு?

Dr.Rudhran said...

brilliant

அமுதா said...

nice deepa. படிக்க நல்லா இருந்தது...

இனியா said...

ha..ha... good one deepa...

GEETHA ACHAL said...

உண்மையான உண்மை..

Unknown said...

இப்பிடியெல்லாம் நினைக்கிறாருன்னா சொன்னேன்? நினைச்சா நல்லாருக்குமேனு தான் சொன்னேன்..

:))))

Deepa said...

நன்றி ரோமியோ!
ந‌ன்றி சின்ன‌ அம்மிணி!
ந‌ன்றி முல்லை!
ந‌ன்றி அம்பிகா அக்கா‌!
ந‌ன்றி அமித்து அம்மா!
:)
ந‌ன்றி ராதாகிருஷ்ண‌ன்!
ந‌ன்றி அங்கிள்!
இன்னும் இருக்கு.
ந‌ன்றி உமா!
ப‌தில் க‌டைசியில் :)
ந‌ன்றி ப‌த்மா!
ந‌ன்றி அண்ணாம‌லையான்!
ந‌ன்றி டாக்ட‌ர்!
ந‌ன்றி அமுதா!
ந‌ன்றி இனியா!
ந‌ன்றி கீதா!
ந‌ன்றி முகில‌ன்!
:))

ஜோ த‌ன் ப‌ஸ் ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ளைச் சிரிக்க‌ச் சிரிக்க‌ச் சொன்ன‌தை இய‌ன்ற‌வ‌ரை என் எழுத்தில் கொண்டு வ‌ந்த‌ முய‌ற்சி தான் இது!இடைச் செருகலான கமென்ட்கள் கூட‌ப் ப‌ல்வேறு ச‌ம‌ய‌ங்க‌ளில் ஜோ உதிர்த்த‌வை தான்.
ஆனால் இவ்விடுகையை எழுதப் போகிறேன் என்று அவருக்குத் தெரியாது!

ஹுஸைனம்மா said...

//அட்லீஸ்ட அவளோட "டார்ச்ச‌ர் லின்க்ஸ்" வரவையாச்சும் குறைக்கலாம்னு//

இணையத்தின் நன்மைகளில் ஒன்று!!