Wednesday, March 24, 2010

நான் சந்தித்த கதை சொல்லிகள்

நேஹாவுக்குப் புத்தகங்கள் மீது ரொம்ப ஆர்வம் வந்து விட்டது. இத்தனைக்கும் (விரும்பினாலும்) இதற்கு முன் புத்தகங்களை வைத்துக் கொண்டு அவளிடம் கதை சொன்னதெல்லாம் இல்லை.

இப்போது நான் வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலையாக ஒரு புத்தகத்தைத் தூக்கி வந்து "அம்மா, வா.. படிச்சு, படிச்சு..." என்று கேட்கிறாள். ஒன்று, நானாக "இது என்ன அது என்னா" என்று படங்களைக் கை காட்டிக் கேட்க அவள் - "கோகடைல், மங்கி, பட்டர்ணை (பட்டர்ஃபளை!), சின்பன்ஸி" என்று சொல்வாள். மிருகங்கள், பூச்சிகள், காய்கறிகள் பெயரெல்லாம் சொல்கிறாள். :)

இல்லாட்டி பையரைச் சொல்லி எங்க இருக்கு? என்று கேட்டால், "இங்க" "இங்க" என்று கை காட்டுகிறாள்! Thanks to Mullai who introduced the right books to Neha. தத்தி நடக்கும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு என்ன புத்த்கம் வாங்கலாம் என்று முல்லையிடம் தான் கேட்கவேண்டும்.

ஆனால் கதை மட்டும் அவள் அப்பா சொன்னால் தான் கேட்கிறாள். சிலருக்குத் தான் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கலை அழகாக, இயல்பாகக் கைவருகிறது. நாம் எல்லாருமே சிறுவயதில் கதைகேட்பதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் கதை சொல்பவர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை விரும்புபவர்களாகவும் தான் இருந்திருப்போம்.

சின்னவயதில் எனக்கு வீட்டில் நிறைய கதை சொல்லிகள் இருந்தார்கள். எங்கள் மாமி, தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும் முன்பு சாப்பாடு ஊட்டிக் கொண்டே சொன்ன கதைகள் ராமாயணம், கண்ணன் கதைகள், நீதிக் கதைகள். எபிசோட் எபிசோடாகத் தினமும் கொஞ்சம் சொல்வார்கள்.
அப்போது குழந்தைத்தனமாகக் அந்தக் கதைகளையும் சூழல்களையும் கற்பனை செய்து பார்த்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.


அடுத்த‌து அக்கா. பிர‌மாத‌மான‌ க‌தை சொல்லி இவ‌ர். பெரிய‌ம‌னுஷ‌த்த‌ன‌த்துட‌ன் இர‌வு என‌க்கு உண‌வூட்டித் தூங்க‌ வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட‌ இவ‌ர் ப‌ட்ட‌ பாட்டைச் சொல்லி முடியாது. ஏதாவ‌து க‌தைச் ஒன்னால் தான் சாப்பிடுவேன் என்று அட‌ம் பிடிக்கும் என‌க்காக‌ வித‌வித‌மாக‌க் க‌தைக‌ள் புனைவாள். அக்காவிட‌ம் மிக‌ப் பிடித்த‌து அவ‌ர‌து அபார‌ ந‌கைச்சுவை உண‌ர்வும், ப‌ழைய‌ க‌தைக‌ளைக் கூட‌ப் புதுவித‌மான‌ சேர்க்கைக‌ளுடன் சிரிக்க‌ச் சிரிக்க‌ச் சொல்லும் வித‌மும் தான்.
ஆனால் கடைசி கவளத்தை நான் வாங்கியதும், பட்டென்று நிறுத்தி விட்டு, "ஓடு, கதை அவ்ளோ தான்" என்று போய்விடுவாள். பின்னாலேயே போய் மிச்சக் கதைக்காகத் தொங்க வேண்டும்!

முட்டாள் ராஜா (Emperor's new clothes)க‌தையை இவ‌ர் அருமையான‌ உரையாட‌ல்க‌ளோடு விலாவ‌லிக்க‌ச் சிரிக்கும்ப‌டி சொன்ன‌து இன்னும் நினைவிலிருக்கிற‌து.

தூங்கும் போது க‌தை சொல்லும் வேலை அம்மாவுடைய‌து. கதைப் புத்தகத்தில் படிப்பது போலவே நிதானமாக, மென்மையான மாடுலேஷனுடன், பெரியவர்களிடம் பேசும் அதே சின்சியாரிட்டியுடன் கதை சொல்லும் அம்மாவின் பாணியிலும் தனி ஈர்ப்பு உண்டு. புராணக்கதைகள், நீதிக்கதைகள் எல்லாம் அம்மாவின் ஸ்பெஷாலிட்டி.

அப்பா பெரும்பாலும் பாட்டுக்க‌ள் தான் பாடுவார். உட்கார‌ வைத்துச் சொன்ன‌ இரு க‌தைக‌ள் "குர‌ங்கு பாய‌ச‌ம் தின்ற‌ க‌தையும்" "காட்டான் ஒருவ‌ன் ச‌ந்தியாவ‌ந்த‌ன‌ம் செய்த‌ க‌தையும்". அநியாய நையாண்டி டைப்!அவ்விர‌ண்டையும் இங்கு நிச்ச‌ய‌ம் ப‌கிர‌ முடியாது!

நானாக முத‌ன் முத‌லில் க‌தைப்புத்த‌க‌ங்க‌ள் வாசிக்க‌த் தொட‌ங்கிய‌து ஐந்து வ‌ய‌தில். அப்போதெல்லாம் மாதாமாத‌ம் என‌க்குக் காய்ச்ச‌ல் வ‌ந்து விடும். ம‌ருந்து கொடுத்து ப‌டுக்கைக்கு அருகில் கொள்ளைக் க‌தைப்புத்த‌க‌ங்க‌ளை நிறைத்து விட்டு அவ‌ர‌வ‌ர் வேலையைப் பார்க்க‌ப் போய்விடுவார்க‌ள் -"தூக்க‌ம் வ‌ர்ற‌வ‌ரைக்கும் தான் ப‌டிக்க‌ணும்" என்ற‌ க‌ட்ட‌ளையோடு. என‌க்கெங்கே தூக்க‌ம் வ‌ர‌ப்போகிற‌து?

அந்த‌ப் புத்த‌க‌ங்க‌ளெல்லாம் அக்காவும் அண்ண‌னும் ப‌டித்துக் கிழிந்து வீட்டிலேயே தைத்தும் வைக்க‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ள். ருஷ்ய‌ ப‌திப்ப‌க‌த்துக் க‌தைப்புத்த‌க‌ங்க‌ள், ர‌த்ன‌பாலா, அம்புலிமாமா முத‌லிய‌ன‌. புதிதாக‌ என‌க்கென்று க‌தைப் புத்த‌‌க‌ங்க‌ள் அதிக‌ம் வாங்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லாதிருந்த‌து. மிஷா ம‌ட்டும் வாங்கிக் கொண்டிருந்த‌ ஞாப‌க‌ம். கோகுலமும் சிலகாலம் வாங்க‌ப்ப‌ட்ட‌து.

படிக்க ஆரம்பித்தவுடன் கதை சொல்வதை நிறுத்தி விட்டார்கள். "அதான் சதா கவுந்தடிச்சுக் கதை படிக்கிறியே. உனக்குத் தனியா வேற சொல்லணுமா.. ஓடிப்போ!"


சின்ன‌ஞ்சிறுவ‌ர்க‌ள் ச‌ம‌யோசிதமாய் சூன்ய‌க்கார‌ர்க‌ளையும், ம‌ந்திர‌வாதிக‌ளையும் வெற்றி கொள்ளும் க‌தைக‌ள், ஏழை ம‌னிதனின் திடீர் அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்ளும் ப‌ண‌க்காரன் க‌தைக‌ள், எத்த‌னுக்கு எத்த‌ன் க‌தைக‌ள், முல்லா க‌தைக‌ள், அச‌ட்டுச் சிறுவ‌ன் என்று தூற்ற‌ப்ப‌ட்ட‌ க‌டைசிச் சிறுவ‌ன் ராஜ‌குமாரியை ம‌ண‌ப்ப‌து, பீர்பால், தெனாலிராம‌ன், போன்ற‌ விக‌ட‌க‌வி க‌தைக‌ள். இவையெல்லாம் ப‌த்து வ‌ய‌து வ‌ரை ப‌டித்த‌ க‌தைப் புத்த‌க‌ங்க‌ளில் விரும்பி விரும்பிப் ப‌டித்த‌வை. பிடித்த‌ க‌தைக‌ளை மீண்டும் மீண்டும் படிக்கும் வ‌ழ‌க்க‌மும் இருந்த‌து.

பிற‌கு ஏழெட்டு வ‌ய‌துக்கு மேல் தான் ஆங்கில‌ப் புத்த‌க‌ங்க‌ள் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேன். சில‌ கால‌ம் வ‌ரை இர‌ண்டுக்கும் பேத‌ம் பெரிதாக‌த் தெரிய‌வில்லை. க‌தைக‌ள் சுவார‌சிய‌மாக‌ இருக்க‌வேண்டும். ப‌ட‌ங்க‌ள் ஈர்க்க‌ வேண்டும்! அவ்வ‌ள‌வு தான் வேண்டிய‌து.

ஆங்கிலத்தில் படித்ததும் பெரும்பாலும் ருஷ்யக் கதைப் புத்தகங்கள் தாம். சில புத்தகங்கள் இரு மொழியிலும் வீட்டில் இருந்திருக்கின்றன. பள்ளியிலும் அது தான் பரிசளிப்பார்கள்.

The elephant என்றொரு க‌தைப் புத்த‌க‌ம். வெகுநாட்க‌ளாக‌ உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் இருக்கும் த‌ன் ஆறு வ‌ய‌து ம‌க‌ள் கேட்டாள் என்ப‌த‌ற்காக‌ ஒரு யானையையே வீட்டுக்குள் அழைத்து வ‌ந்து விடுவார் அவ‌ள‌து அப்பா. அத‌னோடு ஒரு நாள் விளையாடிய‌துமே அவ‌ள் பூர‌ண‌ குண‌ம‌டைந்து விடுவாள். அப்பாவின் அன்பும், குழ‌ந்தை ம‌ன‌தும் அழ‌காக‌ப் ப‌ட‌ம்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ அந்தக் க‌தையை எழுதிய‌வ‌ர் அலெக்சாந்த‌ர் குப்ரின். இவ‌ர் பெரிய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் க‌தைக‌ள் எழுதியிருக்கிறார். "செம்ம‌ணி வ‌ளைய‌ல்" என்ற‌ அந்த‌த் தொகுப்பைப்ப‌டித்த‌ போது இந்த‌க் க‌தையும் ம‌ன‌தில் நிழ‌லாடிக் கொண்டே இருந்தது. அப்புறம் When daddy was a little boy. http://deepaneha.blogspot.com/2009_07_01_archive.html

ப‌த்து வ‌ய‌துக்கு மேல் அறிமுக‌மான‌து எனிட் ப்ளைட‌ன். (Enid Blyton)ஓ! இவ‌ர் உண்மையில் ஒரு சூன்ய‌க்காரி தான். கதைகள் என்னும் மாயவலையின் மூலம் சிறுவர்களை மீளவே முடியாமல் கட்டிப் போட்டு விடுபவர். இப்போது இவ‌ர‌து சில‌ க‌தைக‌ளைப் ப‌ற்றி ஆய்ந்து விம‌ர்சித்து, அதில் இருக்கும் பிற‌ழ்வுக‌ளையும், பிற்போக்குத்தனங்களையும் புரிந்து கொண்டாலும் சிறுவ‌ய‌தில் இவ‌ர் ஒரு தேவ‌தையாக‌வே தெரிந்தார்.

கையிலெடுத்தால் கீழே வைக்கவே முடியாத வகையில் இனிக்க இனிக்கக் கதை சொல்லும் பாங்கு இவருடையது. "The enchanted wood" "The folk of th faraway tree" என்ற புத்தகங்கள் அற்புதமான கற்பனைகள் நிறைந்தவை.

ஓர் அட‌ர்ந்த‌ காட்டுக்கு அருகே புதிதாக‌க் குடிவருகிறார்க‌ள் மூன்று சிறுவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து பெற்றோரும். சிறுவ‌ர்க‌ள் ஒரு நாள் காட்டுக்குள் விளையாட‌ச் செல்லும் போது அங்கே ஒரு வித்தியாச‌மான‌ மிக‌ப்பெரிய‌ ம‌ர‌த்தைக் காண்கிறார்க‌ள். அந்த‌ ம‌ர‌த்தில் ஆங்காங்கே பொந்துக‌ளில் வித‌வித‌மான‌ விந்தை ம‌னித‌ர்க‌ள் வாழ்கிறார்க‌ள். ம‌ர‌த்தின் உச்சியில் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு புதிய மாய‌உல‌க‌ம் ஒன்று வ‌ரும்.
ரசித்துப் படித்த புத்தகங்கள் அவை.
அதே போல் அவரது School series ம் Famous five ம் கூட விரும்பிப் படித்தவை.

வாசிப்பில் சிறுவயதில் இருந்த ஆர்வத்தையும் முனைப்பின் அளவையும் வளர வளர ஏனோ sustain செய்ய முடியாமல் போய்விட்டது. ‌சில காலத்துக்குப் பின்பு வாசிப்பில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு விட்டது.

அதுவும் தவிர light reading என்று சில புத்தகங்கள் (Archies comics, கொஞ்சம் Mills n Boon(!)) Harry Potter) வாசிக்கத் தொடங்கி அவற்றில் ரசனையைத் திருப்பிக் கொண்டும் சென்றாகி விட்டது. ரமணிசந்திரனின் சில கதைகளை ரசித்துப் படித்ததும் உண்டு!

ஆனால் Horror novels ஓ, சிட்னி ஷெல்டன் வகை நாவல்களையோ தொட்ட கையால் தொட்டதில்லை. அதே போல் ராஜேஷ் குமார் நாவல்கள் மீதும் சொல்லத் தெரியாத வெறுப்பு. (அவரது ரசிகர்கள் பொறுத்தருள்க. எனக்குப் பிடிக்காது என்று தான் சொன்னேன்!)

க்ரைம் நாவ‌ல்களே பிடிக்காத என்னை மாற்றியது அகதா க்ரிஸ்டி. Queen of crime என்று புகழப்படும் இவர் குற்றம் நடந்த விதத்தை விலாவரிப்பதையும் விட அதிகமாய்க் குற்றம் நடந்த சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அதன் பின்புலத்திலுள்ள மனவியல், கண்டுபிடிப்பதிலுள்ள நுணுக்கங்கள், ஆகியவற்றை மிக அழகாக எழுதுவார். ஹெர்குலே பைரோ என்ற குள்ளமான வழுக்கைத்தலை டிடெக்டிவ் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராகி விடுவார்.

நாவல்களை விட சிறுகதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சிறுகதைகளின் முன்னோடிகளான மாப்பஸான், செகாவ், மற்றும் ஓ. ஹென்றி ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இன்னும் படிக்கவும் விரும்புகிறேன்.

சிலருடைய வாசிப்பனுபவங்களைப் படிக்கும் போது பிரமிப்பும் நிறைய மிஸ் செய்து விட்டோமே என்றும் தோன்றுகிறது. அதுவும் தமிழ் இலக்கியம். வ‌லையுல‌கின் மிக‌ச்சிற‌ந்த இல‌க்கிய‌ வாச‌க‌ர்க‌ளின் வழிகாட்டுதலோடு தான் கொஞ்சம் கொஞ்சமாக‌ ஆரம்பிக்க வேண்டும்.

பெரியவர்களாகி விட்டால் கதைகள் படிப்பதைக் குறைத்துக் கொண்டு Non fic தான் நிறையப் படிக்க வேண்டும் என்று சிலருக்கு எண்ணம் இருக்கிறது. எனக்கென்னவோ அது சரியான கருத்தாகப் படவில்லை. சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வரையறைகள் இல்லை.

சொல்லாடல்கள் சிறப்பாக அமைவது ஒரு படைப்புக்கு அழகு தான். அதே சமயம் எளிய மொழியில் இருந்தாலும் உண்மையோடும் யதார்த்தத்தோடும் ஒட்டி நிற்கும் படைப்புகளும் 'உண்மையிலேயே சொல்ல ஏதாவது இருக்கும்' படைப்புகளும் தான் மிகவும் ஈர்க்கின்றன.

Back to Neha, இப்போது புத்தகம் கையுமாகத் திரிபவள் பெரிய படிப்பாளியாகா விட்டாலும் கூட திசை தவறிவிடாமல் நல்ல நூல் ரசனையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.
இவ்வளவு நேரம் என் ரம்பத்தைப் பொறுமையுடன் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

உங்களில் பலரது கதைகேட்ட அனுபவமும் வாசிப்பு அனுபவமும் என்னுடையதைக் காட்டிலும் பலமடங்கு சிறப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தங்களது அனுபவங்களைப் பகிர‌ நான் அன்புடன் அழைப்பது:

உமாருத்ரன்
அம்பிகா
முத்துலெட்சுமி
நிலாரசிகன்
காமராஜ்

16 comments:

மாதவராஜ் said...

சின்னச் சின்ன மழைத்துளி போல் சொட்டுகிறது.

சுகமான தொடர்.

//படிக்க ஆரம்பித்தவுடன் கதை சொல்வதை நிறுத்தி விட்டார்கள்.// மிக முக்கியமான வரியாகப் படுகிறது.

Radhakrishnan said...

மிகவும் மகிழ்வாக இருக்கிறது, சிறு குழந்தைகள் முதலில் எதைத் தேடுகிறார்களோ, அதிலேயே ஈடுபாடு கொள்வார்கள் என்பது மனநிலை தத்துவம், இது எத்தனை தூரம் உண்மை எனத் தெரியவில்லை. நேகா புத்தகங்களோடு உரையாடுவது மிகவும் சந்தோசம் தரும் விசயேமே. தங்களின் அனுபவங்கள் அனைத்தும் மிகவும் அருமை. எனக்கு வாசிப்பு அனுபவம் பாடப்புத்தகங்களோடு நின்று போனது. சில கதைகள் படித்ததுண்டு. இப்பொழுது படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இவ்வளவு நேரம் என் ரம்பத்தைப் பொறுமையுடன் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. //

ரம்பமல்ல.. நல்ல ஆரம்பம்.

நான் வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலையாக ஒரு புத்தகத்தைத் தூக்கி வந்து "அம்மா, வா.. படிச்சு, படிச்சு..." என்று கேட்கிறாள். //

உங்க வீட்டுலயுமா ;)))

வாழ்த்துக்கள் நேஹா & தீபா.

எனக்கும் ஒரு கதைசொல்லிய பிடிக்குங்க. மொழிபெயர்த்து ரொம்ப லாவகமா சொல்லுவாங்க / எழுதுவாங்க, அவங்க மூலமா தான் நான் மாப்பஸான் என்ற பேரையே தெரிஞ்சுகிட்டேன். அந்த கதைசொல்லி பேர் தீபா! நேர்த்தியா மொழிபெயர்ப்பாங்க.

Deepa said...

நன்றி அங்கிள், இராதாகிருஷ்ணன்!

அமித்து அம்மா!
என்னை மட்டுமல்ல பதிவுலகையே தனது கதைசொல்லும் திறனால் கட்டிப்போட்ட நீங்கள் இப்படிச் சொல்வது ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது! :)

நேசமித்ரன் said...

நேற்று தலைவன் என்று ஒரு எம்.ஜி.ஆர் படம் பார்க்க கிடைத்தது
(இங்கு நைஜீரியாவில் ஜெயா டி.வி மட்டும்தான் வரும் :))

அதில் நம்பியார் ஒரு அய்யனார் சிலை
சிலை ஒன்றை ஒரு பொத்தானால் திறப்பார் அடுத்து உள்ளே சுரங்கம் போல ஒன்று வரும் அந்த சுவற்றில் கொடியை விலக்கியதும் ஒரு பொத்தான் இருக்கும் அதைத்திறந்தால் அழகான மாளிகை
இந்த இடுகையும் அப்படித்தான் நிகழ்வில் துவங்கி பால்யம் ஒவ்வொரு உறவாக கதை சொல்லியாக்கி
வாசிப்பின் பயண வெளியின் மாற்றஙகளை பதிவு செய்து மீண்டும் நிகழ்வில் முடித்திருப்பது
மேல் சொன்ன பொத்தான் வித்தையின் மெல்லிய வியப்பைத்தருகிறது அறிந்ததுதான் என்றாலும் கூட

ஆர்வா said...

சின்ன வயதில் கதை கேட்ட அந்த சுகமான நியாபகங்கள் இன்னமும் பசுமையாய் இருக்கிறது.

அண்ணாமலையான் said...

வெரி குட்.. நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழைப்புக்கு நன்றி தீபா.. கண்டிப்பாக எழுதுகிறேன்.. எங்க வீட்டுல எல்லாருமே நல்லா கதைசொல்லிங்க தான்.. :)

அழகா சொல்லி இருக்கீங்க கதைசொல்லிகள், அக்கா அம்மா , கதை சொன்ன விதம் பத்தி :) அக்கா ஓடுங்கறதும்.. அம்மா பெரியவங்க கிட்ட பேசற அதே கவனத்தோட சொல்ற விதமும் .. சூப்பர்ம்மா..

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இருக்கு உன்னோட கதை கேட்ட அனுபவம். The elephant புத்தகம் இப்போவும் இருக்கு, வீட்டுலே. அப்புறம், ஏழுநிறப்பூ...ஆல் டைம் பேவரிட்!

ஒழுங்கா நேஹாவுக்கு கதை சொல்லாம கதை கேட்ட கதையா எழுதறே! :-))

தமிழ்நதி said...

என்னை ஏன் கூப்பிடலை தீபா...?:)))) நான் போன நூலகங்களைப் பற்றி எழுத ஆசையாக இருக்கிறது. தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

பா.ராஜாராம் said...

இவ்வளவு படிச்சிருக்கீங்களா தீபா?ஐயோடான்னு வருது.உங்களோடு ஒப்பிட்டால் முத்து காமிக்ஸ் சிறுவன் நான். :-)

இதெல்லாம் ஒரு பிராப்தம்தான்.

Gracy said...

அழகான பகிர்வு தீபா மேடம்.. படிக்கையில் எனக்கும் கூட வாரம் முழுக்க காத்திருந்து சிறுவர்மலரில் முல்லா கதைகள் படித்த நாட்களின் நினைவு வந்துவிட்டது.

Deepa said...

நன்றி நேசமித்ரன்!
ந‌ன்றி க‌விதை காத‌ல‌ன்!
ந‌ன்றி அண்ணாம‌லையான்!

உங்க‌ள் அனுப‌வ‌ங்க‌ளையும் ப‌கிருங்க‌ளேன்.

ந‌ன்றி முத்துலெட்சுமி!
ந‌ன்றி முல்லை!
:))

ஆமாம், ஏழு நிற‌ப்பூ நீயும் ப‌டிச்சிருக்கியா?
வாவ்!

ந‌ன்றி த‌மிழ்ந‌தி!
:) நீங்க‌ இப்ப‌டி உரிமையோடு கேட்ட‌து எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ப்ளீஸ்.. த‌ய‌வு செஞ்சு எழுதுங்க‌. உருப்ப‌டியான‌ வாசிப்புன்னா என்ன‌ன்னு தெரிஞ்சுக்க‌றேன்!

ந‌ன்றி ராஜாராம்!
வேணாம்...அழுதுடுவேன்!


ந‌ன்றி க்ரேசி!
ஆமாம், நாளிதழ்களின் சிறுவர் இணைப்புக்காக வார‌ம் முழுக்க‌க் காத்திருப்ப‌தும் ஒரு சுக‌மான‌ அனுப‌வ‌ம். நினைவூட்டிய‌த‌ற்கு ந‌ன்றி!

Dr.Rudhran said...

ஒரு முறை, ஒரு கதைசொல்லி, என்னிடம், இந்தக் கதை தெரியுமா? என்றார். தெரியும், முருகன் எல்லா தேவர்களையும் மிரட்டி கேள்வி கேட்ட கதை. கடிசியாக அவனது அப்பா , "சரி, நீதான் பெரிய ஆள். அந்தக் கேள்விக்கு பதில் என்ன ?" என்றாராம். முருகன் சொன்ன பதில்- " ஒன்னுமில்லேப்பா"
கேள்வி- ஓம் எனும் பிரபஞ்ச மந்திரத்தின் உட்பொருள் என்ன?

ஒன்றுமில்லை என்பது வெறும் கேலியா?

just felt like sharing what i had heard from my master!

Unknown said...

wonderful writing....

அமுதா said...

அழகான பகிர்வு. இப்பொழுது நந்தினி enid blyton , famous five என்று புத்தகப் பைத்தியம் ஆகிவிட்டாள்.