இந்தத் தலைப்பில் தொடர்பதிவு எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் சங்கவி!
http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html
சரியாப் போச்சு!... நான் காதலில் விழாத ஒரே இடம் அது தான்.
ஏனென்றால் பேருந்தில் பயணம் செய்தது மிகக்குறைவு. நான் படித்தது வீட்டுக்கு அருகிலேயே இருந்த பள்ளி. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டம் வகுப்பு வரை சைக்கிள் தான்.
கல்லூரியோ வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்ததால் பேருந்துப் பயணம் எங்காவது வெளியில் செல்லத்தான்.
ஆனால் வேலைக்காகச் சில காலம் பேருந்தில் சென்ற போது நான் சந்தித்த மறக்க முடியாத அந்த இருவரைப் பற்றிச் சொல்கிறேன்.
அந்தப் பெண்ணுக்கு இருபது இருபத்திரண்டு வயதிருக்கலாம். மாநிறமும், சுருட்டை முடியும் குறுகுறு கண்களுமாய் அழகாக இருப்பாள். நான் ஏறும் நிறுத்தத்துக்கு அடுத்த நிறுத்தத்தில் ஏறுவாள்.
என் நிறுத்தத்துக்கு முன்பாகவே டெர்மினசில் ஏறி பின்சீட்டில் அவளுக்காக இடம் போட்டிருப்பான் அவன். அவள் வந்ததும் எழுந்து ஆண்கள் வரிசையில் கடைசி சீட்டுக்குப் பக்கவாட்டில் நின்று கொள்வான். இடமிருந்தால் அங்கேயே உட்கார்ந்து கொள்வான். இருவரும் அதிகம் கூடப் பேசி நான் பார்த்ததில்லை. நெருக்கமாய் அமர்ந்தும் பார்த்ததில்லை. ஆனால் இருவருக்கும் அப்படியொரு காதல் என்பது அவர்களின் பார்வையிலேயே புரிந்தது.அவன் ஒடிசலாகவும் உயரமாகவும் இருந்தான். கலைந்த தலை; லேசான தாடி, ரப்பர் செருப்பு என்று மிகவும் சாதாரணமாக இருப்பான். ஆனால் அவன் அவளைப் பார்க்கும் போது அவன் கண்களைப் பார்க்கவேண்டுமே!
உலகத்திலேயே அவள் ஒருத்தி தான் பெண் என்பது போல் பார்த்துக் கொண்டிருப்பான்.
அவன் கையில் ஏதேதோ புத்தகங்கள் கொண்ட ஜோல்னாப்பை தொங்கிக் கொண்டிருக்கும். சில நாட்களில் இடம் கிடைத்தால் உட்கார்ந்து கொண்டு பேனாவும் பேப்பருமாய் எதையோ திருத்திக் கொண்டிருப்பான். ஏதோ பத்திரிகையில் ப்ரூப் ரீடர் என்று அனுமானிக்க முடிந்தது. அப்போது அவள் அவனைத் தொந்தரவு செய்யாமல் அவளும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்துக் கொண்டிருப்பாள்.
ஒரு நாள் அவன் வரவில்லை. அவள் புன்னைகையுடன் என்னருகில் வந்தமர்ந்தாள். நான் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். "என்ன உங்க ஃப்ரென்ட் இன்னிக்கு வரலையா?"
வெட்கத்திலும் சந்தோஷத்திலும் அவளுக்கு முகம் சிவந்தது. "ஆமாம், அவர் ஊருக்குப் போயிருக்கார்"
இன்னும் விசாரித்ததில் இருவரும் ஒரே பத்திரிகை அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்களாம். இவளுக்குக் கல்லூரியில் சீனியராம் அவன். கல்லூரி மாணவர்கள் யூனியன் சேர்மனும் கூட.
இவள் வசதியான வீட்டுப் பெண். அவன் ஏழை. ஜாதியும் வெவ்வேறாம்.எப்போதும் ஏதாவது போராட்டம், கூட்டம் என்று தீப்பொறி போல் இருக்கும் அவனுடைய மென்மையான பொழுதுகளே இந்தப் பேருந்தில் ஏறி இறங்கும் இந்த அரை மணி நேரம் தானாம்.
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்று நம்பி இருந்தவன் ஒரு முறை கல்லூரியில் அவனுக்குச் சரிக்குச் சரியாய் உண்ணாவிரதம் இருந்த இவளது மனோதிடத்தைப் பார்த்துத் தான் மனம் பறி கொடுத்தானாம். இவளோ ஏற்கெனவே அவனது பேச்சு, கவிதைகள் எல்லாவற்றையும் ரசித்து அவனையே ரசிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள்.
பெண்கள் மீது ரொம்பவும் மதிப்புள்ளவனாம். மாணவிகளை விளையாட்டுக்குக் கூடக் கேலி செய்வதோ ராகிங் செய்வதோ கூடாது என்று நண்பர்களுக்கும் அறிவுறுத்தி வைத்திருந்தானாம். எல்லாப் போட்டிகளிலும் பெண்களும் பங்கெடுக்கவேண்டும் என்று வகுப்புகளில் வந்து வலியுறுத்துவானாம்.
இவள் என்றால் அவனுக்கு உயிராம். இவளுக்கும் அப்படித்தானாம். அவள் பேசுவதிலேயே தெரிந்தது இருவருக்குள்ளும் ஆழ்ந்த முதிர்ந்த நேசம் இருப்பது. ஆனால் திருமணம் எப்போது, எப்படி என்று தான் தெரியவில்லை என்றாள்.
"வீட்ல ஒத்தக்கலேன்னா என்ன செய்யப் போறீங்க?" என்றேன்.
பலமாகச் சிரித்து விட்டு, "ஹைய்யோ, வீட்ல எல்லாம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. எங்க தூரத்துப்பெரியப்பா பொண்ணு ஒருத்தி ஜாதி விட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு அவ புருஷனை வெட்டிக் கொன்னுட்டாங்க.
அதுக்காக விட்டுட முடியுமா?
அவர் அக்காவுக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதை நல்லபடியா முடிச்சிட்டு ஒரு நாள் வீட்ல சொல்லிட்டுக் கிளம்பிடுவேன் அவர் கூட."
அந்தக் கண்களில் தெரிந்த உறுதியும் தைரியமும் கையெடுத்து வணங்கத் தோன்றியது. அவள் கைகளைப் பிடித்து மனதார வாழ்த்தினேன்.
பின்பு ஒரு நாள் வீட்டுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அவர்கள் பெயர்கள் மறந்திருந்தாலும் அந்த அழைப்பிதழின் எளிமையிலும் வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையிலும் புரிந்தது இவர்கள் தானென்று. திருமணம் வெளியூரில். போக முடியாவிட்டாலும் மானசீகமாக வாழ்த்துக்களை அனுப்பி வைத்தேன்.
இப்போ இவங்களைக் கொஞ்சம் கொசுவத்தி சுத்த வைக்கலாமா?
ராமலட்சுமி
Romeo
அண்ணாமலையான்
அமிர்தவர்ஷினி அம்மா
அமுதா
சந்தனமுல்லை
இயலும்போது எழுதுங்கள் மக்களே!
14 comments:
நமக்கும் பேருந்துக்கும் (பேருந்து பயன் படுத்துவதே இல்ல)மட்டுமல்ல, காதுலுக்கும் தூரம்தான்... அதனால நான் இங்கேயே அம்பேல்...
:) ஓக்கே, மத்தவங்க காதலைப் பத்திதானே எழுதனும், தாராளமா எழுதிடலாம் ;))
இந்தப்பதிவில் குறிப்பிட்ட அந்த இருவர் மீது இயல்பாக ஒரு மரியாதை எழுந்தது. நல்லா எழுதியிருக்கீங்க.
ரொம்ப அருமையான நிகழ்வை சொல்லியிருக்கீங்க தீபா
//சரியாப் போச்சு!... நான் காதலில் விழாத ஒரே இடம் அது தான்.//
அப்ப மத்த இடத்தில் எல்லாம் விழுந்திட்டீங்களோ.........
அவங்க காதலில் இருந்த அழுத்தம் மனதை அள்ளியது...
என் அழைப்பை ஏற்று இத்தொடரை அழகாகவும், ரசிக்கும் படியும், பதியவாக்கிய உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.....
ரசனையான பதிவு ..!
/ஏதோ பத்திரிகையில் ப்ரூப் ரீடர் என்று அனுமானிக்க முடிந்தது. /
!!
நானா இருந்தா, டீச்சர்-ன்னு நினைச்சிருப்பேன்! :-)
ஒரே நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக இருக்கிறது...தீபா!! நம்பத்தான் முடியவில்லை....
பேருந்தில் தினமும் எல்லாம் பயணிக்கவில்லை..இப்படி மாட்டி விட்டுட்டியே! :-))
/இருவரும் அதிகம் கூடப் பேசி நான் பார்த்ததில்லை. நெருக்கமாய் அமர்ந்தும் பார்த்ததில்லை. ஆனால் இருவருக்கும் அப்படியொரு காதல் என்பது அவர்களின் பார்வையிலேயே புரிந்தது/
இதுக்குத்தான் தமிழ் சினிமா அதிகமா பார்க்கக்கூடாதுன்றது...:))
நன்றி அண்ணாமலையான், அமித்து அம்மா, சின்ன அம்மிணி, சங்கவி, நேசமித்ரன்!
எதன் கையிலோ கிடைத்த பூமாலையைப் போல, நான் பீலோ பீல் செய்து எழுதிய காதல் கதையை இப்படி கும்மி அடித்திருக்கும் முல்லைக்குக் கண்டனங்கள்! :)))
உங்க கதைய சொல்ல சொன்னா ஊர் கதைய சொல்றீங்க :))
ஒரு நல்ல காதலைப் பற்றிப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி தீபா. அழைப்புக்கும் நன்றி... எனக்கு கல்லூரி காலம் முழுக்க பேருந்து பயணம் தான். தினம் ஒரே பஸ் தான்... தினமும் ஒரு தலையணை சைசில் புத்தகம் கொண்டு செல்லும் மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் பார்த்து வியந்துள்ளேன்...அதிகாலையில் வீட்டு வேலைகள் முடித்து அலுப்புடன் அலுவலகத்திற்கு செல்லும் நடுத்தர பெண்களைப் பார்த்து வருந்தி உள்ளேன்... தோழியுடன் சேர்ந்து கல்லூரி நிகழ்வுகளைப் பேசி சிரித்து மற்றவர்களின் எரிச்சலைத் தூண்டி உள்ளேன்... ஆனால் .. ஆனால்... காதலைக் கவனித்ததில்லை...
beautiful deepa.
my appreciative whisper is actually a thundering applause.
நன்றி மயில், அமுதா!
Thank you Doctor!
:-)
இந்த தொடரில் என்ன சுவாராசியமாக எழுதிவிட முடியும் என்று இருந்ததை,சொடக்கு போட்டது போல் முறித்து விட்டீர்கள் தீபா.நான் வாசித்தவரையில் மிக சுவாராசியம் இது.
Post a Comment