Friday, March 12, 2010

ஸ்காலர்ஷிப்!

என் பேர் செல்வி. பி.எஸ்ஸி ஃபைனல் இயர் படிக்கறேன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. எங்க‌ம்மா பேர் சரசு. வீட்டு‌ வேலை செய்ய‌றாங்க‌. திவ்யா அக்கா வீட்ல‌ காலைல‌ எட்டு ம‌ணிலேந்து ப‌த்து ம‌ணி வ‌ரைக்கும், அப்புற‌ம் ஜெஸ்ஸீ அக்கா வீட்ல பத்துலேந்து ப‌ன்னெண்டு ம‌ணிவ‌ரைக்கும். சாயங்காலம் நாலு மணிக்கு கே.கே ஸார் வீட்ல. எங்க‌ப்பா மீன்பாடி வ‌ண்டி வெச்சிருக்கார். என்னைப் ப‌டிக்க‌வெக்கிற‌துக்கான்டி தான் எங்க‌ம்மா இத்த‌னை வீட்டுல‌ வேலை செய்ய‌றாங்க. என் அட்மிஷன் ஃபீஸுக்காகவும் கம்ப்யூட்டர் கோர்ஸ்க்காகவும் எல்லா வீட்லயும் அட்வான்ஸ் வாங்கி இருக்காங்க. அதனால அறுமாசத்துக்கு எந்த வீட்லயும் ச‌ம்ப‌ளமே வ‌ராது.

இத‌ எதுக்கு இப்ப‌ சொல்றேனா? இன்னிக்கு எங்கம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லை. நானும் காலேஜ்க்கு போகல. இப்ப‌
கே.கே ஸார் வீட்ல மட்டும் என்னை வேலை செய்ய‌ப் போக‌ச் சொல்லி இருக்காங்க‌ அம்மா. நானும் ச‌ரினு சொல்லிட்டேன். என்ன‌ பிர்ச்னைன்னா அவ‌ங்க‌ வீட்ட‌ம்மாவை என‌க்குப் பிடிக்காது.

மத்தவங்கல்லாம் அம்மா ஒரு நாள் லீவ் போட்டா அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க. இவங்க உன் பொண்ணு இருக்கால்ல அவளையாவது அனுப்பேன். என்னால் முடியலல்லன்னு அலுத்துக்குவாங்க. பாவம் வயசானவங்கடின்னு அம்மாவும் என்ன போகச் சொல்லும். 'அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கேம்மா' ன்னு ஒரு நா சொன்னதுக்கு தலையில கொட்டிடுச்சு.

வேலை ஒண்ணும் கஷ்டமில்ல. எங்கம்மாவெ செய்யறப்போ நான் போய் அதை விட சீக்கிரமா கடகடன்னு முடிச்சிடுவேன். ஆனா அவங்க பேசற பேச்சு இருக்கே. சரியான இத்துப் போன ரம்பம்!

வீட்டக் கூட்டிட்டுப் பாத்திரம் வெளக்கிட்டுப் பின்கட்டுல துணி துவைச்சிட்டு இருக்கேன்.
சேரை இழுத்துப் போட்டு உக்காந்துகிட்டு "ஆமா, நீ என்ன படிக்கிறேன்னு" ஆரம்பிச்சாங்க. "பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்... மா" (ஆமா, நான் ஏன் இவங்கள அம்மான்னு கூப்புடனும்? இவங்க என் அம்மாவா என்ன? ஆன்ட்டின்னு கூப்பிடட்டான்னு அம்மாகிட்ட கேட்டேன். அதுக்கும் என் தலையில கொட்டிடுச்சு.)

"ஹூம்..ப‌ர‌வாயில்ல‌..சரசு ராங்கிக்காரி தான். ப‌டாத‌ பாடு ப‌ட்டு உன்னைக் காலேஜ் வ‌ரைக்கும் ப‌டிக்க‌ வெச்சிட்டாளே!"(எங்க‌ம்மா ராங்கியாம்!)

நான் பதில் பேசாம சிரிச்சேன்.

"நல்லாப் படிக்கிறியா?"

"ம்.." (ஏன், இல்லன்னா எனக்கு டியூஷன் சொல்லித் தரப்போறிங்களா?)

"உங்கம்மா உயிரைக் கொடுத்து உழைச்சு உன்னைப் படிக்கவெக்கிறா. அதை மறந்துடாதே."(ம்க்கும்... அவங்க கொடுக்கலன்னா விடவா செய்றீங்க. குடுக்கற எழுநூறு ரூபா சம்பளத்துக்கு பாதி உயிரை வாங்கிட்டுத் தானே அனுப்பறீங்க.)

"பி.எஸ்.ஸி முடிச்சிட்டு என்ன‌ ப‌ண்ண‌ப் போறே?"

"எம்.பி.ஏ" ப‌ண்ண‌ப் போறேம்மா."

அவ்வ‌ள‌வு தான், முக‌ம் க‌டுகடுன்னு ஆயிடுச்சு அந்த‌ம்மாவுக்கு.

"என்னாது எம்.பி.ஏ வா? ஏண்டி உனக்கு ம‌ன‌சாட்சி இருக்கா? ஏதாச்சும் வேலைக்குப் போய் ஆயிர‌மோ ரெண்டாயிர‌மோ ச‌ம்பாரிச்சுக் குடுத்தா உங்க‌ வீட்டுக்கு ஒத்தாசையா இருக்கும். உன‌க்கும் ந‌கை ந‌ட்டு சேத்து ஒண்ணு ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ உன்னைக் க‌ட்டிக் குடுத்துருவா உங்க‌ம்மா. அத்தை விட்டுட்டு ம‌த்த‌ புள்ளைன்க‌ள‌ப் பாத்துட்டு இப்பிடி அக‌ல‌க்கால் வெக்கிறியே?"
ப‌ட‌ப‌ட்ன்னு பொரிஞ்ச‌துல‌ மூச்சிறைக்குது அந்த‌ம்மாவுக்கு.

"ஏம்மா, நான் எம்.பி. ஏ ப‌டிக்க‌க் கூடாதா?" (இவ‌ங்க‌ளுக்கென்ன‌ எங்க‌ மேல‌ திடீர்னு இவ்வளவு அக்க‌றை?)

"அதுக்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும்னு தெரியுமா? உங்க‌ம்மா அதுக்கும் என் உசிர‌த்தான் வ‌ந்து வாங்குவா?" (அப்ப‌டிப் போடு, அதானே பாத்தேன்!)
"ஏண்டி நிலமை தெரியாம‌ ஆடுறீங்க‌. துரையோட‌ சொக்க‌ட்டான் போட‌ணும்னு எல்லாரும் நின‌ச்சா ஆகுமா? எங்க குட்டி படிக்கிறாளே செகன்ட் இயர்.
இது வரைக்கும் எவ்வளவு செலவாச்சு தெரியுமா?"
(யாரு குட்டி, ஓ, இவங்க பொண்ணு... !)

விடாம‌ பேசிக்கிட்டே போச்சு அந்த‌ம்மா. என‌க்குக் க‌டுப்பான‌ க‌டுப்பு. அம்மாவை நின‌ச்சுக்கிட்டுப் பல்லைக்கடிச்சுக்கிட்டுப் பொறுமையா இருந்தேன்.
"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்மா. எங்க லெக்சரர் ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருக்காங்க." சொல்லிட்டு நகர்ந்துட்டேன்.

ஒரே ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். பேச்சு இந்த விஷ‌யத்துக்குத் திரும்பிட்டதால, "கால‌ரைப் பாரு அப்ப‌டியே அழுக்கு இருக்கு, இன்னும் ந‌ல்லாத் தேய்" , "அந்த‌ச் சுடிதார் க‌ல‌ர் போகும்.. த‌னியா ந‌னைச்சுத் துவை" அப்ப‌டி இப்ப‌டின்னு உசிரை வாங்கல‌ அந்தம்மா. துவைச்சு முடிச்சு துணிங்களைக் காய‌ப் போட்டுட்டேன்.

"நான் கிள‌ம்ப‌றேம்மா." ந்னு புற‌ப்ப‌ட்ட‌வ‌ளை,

"இந்தாடி வ‌ந்து இந்தக் காபிய‌க் குடிச்சிட்டுப் போ" னாங்க‌.

வழக்க‌த்தை விட திக்காவும் சர்க்கரை கூடுதலாவும் இருந்துச்சு காபி. ரசிச்சுக் குடிக்கும் போது கேட்டாங்க.

"செல்வி ('இந்தாடி' எங்க போச்சு?)அது என்ன ஸ்காலர்ஷிப்புடா? எங்க குட்டிக்கும் வாங்க முடியுமா? உங்க மிஸ் கிட்ட விசாரிச்சு சொல்லேன்!"

17 comments:

Uma said...

என்ன சொல்ல? எப்போதும் சொல்வதுதான்... எனக்கு ரொம்பப் பிடித்தது!!!

அண்ணாமலையான் said...

மூர் மார்க்கெட்லன்னு சொல்ல வேண்டியதுதான்

Unknown said...

சூப்பரான பதிவு....மிகவும் யதார்த்தமான உரையாடல்கள்...ரொம்ப நல்லாயிருக்கு!!!!

sathishsangkavi.blogspot.com said...

தீபா...

ஏதோ பக்கத்து வீட்ல நடந்த மாதிரி இருக்கு...

இன்றைக்கும் இந்த மாதிரி பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

கே.என்.சிவராமன் said...

வளவளனு இழுக்காம ஷார்ப்பா எழுதியிருக்கீங்க; முடிச்சிருக்கீங்க. ரெண்டு பேரோட உரையாடலும் அவங்கவங்க தன்மைய பிரதிபலிக்குது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நேசமித்ரன் said...

ரொம்பப் பிடித்தது...!!நல்லாயிருக்கு!!

அம்பிகா said...

நல்லாயிருக்கு தீபா.
கடைசி பஞ்ச் சூப்பர்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் கதை தீபா. குனிய குனிய குட்றது தான் இந்த சமூகம். கொஞ்சம் நிமிர்ந்து நின்னா வெலகிடுவாங்க. அழகிய சிந்தனை. வாழ்த்துக்கள்

பத்மா said...

nalla irukkuma

மாதவராஜ் said...

மிக இயல்பான உரைநடைமொழி, இந்தக் கதையின் சிறப்பம்சம். ஒவ்வொன்றுக்கும் இன்னொரு பதில் வைத்திருப்பதைச் சொல்லும் விதம் ரசித்தேன். வாழ்த்துக்கள் தீபா.

சந்தனமுல்லை said...

எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு தீபா! தெளிவான நீரோட்டம் போல...நல்லா வந்திருக்கு! சூப்பர்!

ராமலக்ஷ்மி said...

அருமை.

☀நான் ஆதவன்☀ said...

முடிவுல சிரிச்சுட்டேன்ங்க :) நல்ல கதைங்க

ப.கிஷோர் said...

நல்ல இருக்கு.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

நல்லாயிருக்கு!!சூப்பர் கதை தீபா

ரிஷபன் said...

சரளமான எழுத்து நடை..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு.