Tuesday, February 16, 2010

டாக்டர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2

சென்ற இடுகையின் தொடர்ச்சி:

முதல் பகுதி இங்கே.

கேள்வி: ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம தான் வித்தியாசம் காட்டறோமா இல்ல அதெல்லாம் மரபணுக்களிலேயே வருவதா? இது பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர்?

டாக்டர்: இதுவரைக்கும் நடத்திய பரிசோதனைகளில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் விருப்பங்கள் வித்தியாசப்படும் என்பது தான் கணிப்பு. Even with the same set of toys, they'll have different preferences.

ஒரு ஆறு வயது ஏழு வயது ஆகும் போது நாம அவர்களை எப்படி நடத்தறோம், எந்த விதமான exposure குடுக்கறோம்ங்கறதைப் பொறுத்து அவர்களோட விருப்பங்கள் மாறலாம்.

கேள்வி: இந்த ஆண் பெண் சமத்துவம்கிறது எப்போ டாக்டர் சாத்தியமாகும்? சிலர் சொல்றாங்க, இது சாத்தியமே இல்ல. ஏதாவது ஒரு இனம் இன்னொண்ணை ஆதிக்கம் செலுத்தினாத் தான் எல்லாம் சரியா நடக்கும்னு.

டாக்டர்: கண்டிப்பா சமத்துவம் வரணும்; இப்போதைக்கு நம்ம நாட்டுல அது இல்ல. வீட்டு வேலைகளும் சமையலும் நம்ம வேலையும் தானனு (உதவி செய்றது மட்டுமில்ல) ஆண்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தான் வரும்.

கேள்வி: இதுக்குப் பெண்களால என்ன செய்ய முடியும்? இந்த எண்ணம் ஆண்கள் மனத்தில் வரணும்னா அவங்க எந்த விதத்துல போராடணும்?

டாக்டர்: பல காலமா அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் உரிமைக்காக்ப் போராடும் போது வேகம் வர்றது இய்ல்பு தான். ஆனா ஒரு விஷயம் கவ்னிக்கணும்.
அரசியல் புரட்சி ஏற்படணும்னா கூட மக்கள் மனதில் மாற்றம் முதல்ல வரணும். இது சமூகத்தில, குடும்பங்களில் ஏற்பட வேண்டிய புரட்சி. அதனால நிதானமா, பக்குவமா ஆண்களுக்குப் புரிதலை ஏற்படுத்தித் தான் சாதிக்க முடியும்.


கேள்வி: சரி, ஆண் குழந்தை வித்தியாசம் இருக்கு சரி But generally are we products of genes or environment? உதாரணமா, இப்போ பாரம்பரியமா ரொம்ப புத்திசாலியான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை ஒண்ணு சந்தர்ப்பவசமா ரொம்ப அறியாமையோட‌ இருக்கற‌ பெற்றோர் கிட்ட வளர்ந்தா இயற்கையா அதுக்கு இருக்கற புத்திசாலித்தனம் வெளிப்படுமா?

டாக்டர்: பிறக்கும் போது இருக்கக்கூடியது ஒரு basic capacity. ஒரு பாத்திரம் மாதிரி. அதுல நாம எவளோ போடறோம்கறதைப் பொறுத்துத் தான் அதோட வளர்ச்சி இருக்கும். அது வளர்ற சூழ்நிலையைப் பொறுத்துத் தான் அமையும்.

இய‌ல்பான‌ கொள்ள‌ள‌வுங்க‌ற‌து சில‌ பேருக்கு அதிக‌ம், சில‌ பேருக்குக் குறைச்ச‌ல். குழந்தைக்கு இயல்பா எவ்வளவு கொள்ளளவு இருந்தாலும் சூழ்நிலை அமையலேன்னா வளர்ச்சி சாத்தியமில்லை.

அதே மாதிரி ஓட்டைப் பாத்திரமா இருந்தா எவ்ளோ தான் போட்டாலும் நிறையாது!

அதனால தான் சில பேர் தங்கள் குழந்தைகளை இஞ்சினியரிங் தான் படிக்கணும்னு போட்டுப் படுத்தி அவங்க ப்ரேக் டவுன ஆகறாங்க. அவங்களுக்கு அந்த விஷயத்தில aptitude ம் இருக்காது. ஆர்வமும் இருக்காது.

கேள்வி: சரி, சின்ன வயசிலயே ஒரு துறையில ஆர்வம் இருக்கா இல்லையான்னு எப்படிக் கண்டு பிடிக்கறது?

டாக்டர்: அது கஷ்டம்மா; நம்ம கல்வி முறையைப் பொறுத்த் வரைக்கும். இங்கே கல்வி முறையே ஞாபக சக்தியை முக்கியமா வெச்சுத் தானே இருக்கு. அது மாறணும் முதல்ல.

கேள்வி: இந்த left brain, right brain னு சொல்றாங்களே. சிஸ்டமாட்டிக் மூளை, க்ரியேட்டிவ் மூளை அப்படின்னு. அதை வெச்சு ஒருத்த‌ரோட‌ திற‌மையை அள‌விட‌ முடியுமா?

டாக்டர்: அது பாப்புலர் மனவியல்ல ஒரு பிசகான தியரி.
மூளையில நிறைய பகுதிகள் இருக்கு Fine motor areas, language areas னு லெஃப்ட் ரைட் பிரிஞ்சு தான் இருக்கு.

எல்லாராலையும் கவிதை எழுத முடியறதில்ல, அதை ரசிக்கவும் முடியறதில்ல. அந்தந்த மூளைப் பகுதி எப்படித் தூண்டப்படுதுங்கறது அப்படிங்கறதை வெச்சுத் தான், ஒரு குறிப்பிட்ட‌ ப‌குதியில‌ நியூரான்க‌ள் எவ்வ‌ள‌வு செய‌லாக்க‌த்தோட‌ இருக்குங்க‌ற‌தைப் பொறுத்துத் தான் அந்த‌ விஷ‌ய‌த்தில் ஈடுபாடும் திற‌மையும் இருக்கும்.

அப்புறம் தூண்டறதுங்கறதும் திணிக்கறது இல்ல.
ஒரு விஷயத்தைப்பத்தி ஆர்வம் உண்டாகற மாதிரி சொல்லிட்டு விடறது. அப்படி விடற அந்த இடைவெளியில தான் தான் அவங்க உள்ள வர்றாங்களா இல்ல அப்ப‌டியே ஓடிப் போயிடறாங்களான்னு தெரியும்.

மேலும் மனவியல் மருத்துவம், பரிசோதனைகள் எல்லாமே என்ன ‌கோளாறுன்னு (abnormalities) க‌ண்டுப்பிடிக்க‌ற‌துக்காக‌ வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்ட‌வை தான்.
ஏதாவ‌து த‌ப்பா இருக்கான்னு க‌ண்டுபிடிக்க‌றதுக்காக‌. எது ரொம்ப சரியா இருக்குன்னு க‌ண்டுபிடிக்க‌ற‌து முடியாது.
(To find out what is wrong. Not to find out which is more right!)

கேள்வி: அப்போ ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ம் த‌த்துவார்த்த‌மான‌து தானா?

டாக்டர்: இலலை., அது pure science. (மூளையில) இந்தக் கெமிக்கல் கூடுது குறையுது. அதனால இந்தப் பிரச்னை; எந்த மருந்து கொடுத்தால் அது சம‌நிலைக்கு‌ வ‌ரும்னு பார்த்து வைத்திய‌ம் ப‌ண்ற‌து தான் ஸைக்யாட்ரி. அவ்வ‌ள‌வு simple and straight forward. என்ன, வர்றவங்க‌ ஒரு அன்பில‌ பேச‌றாங்க‌. நானும் அன்பால‌ கேட்டுக்க‌றேன். அதான் நேர‌மாகுது. இல்ல‌னா ஜென‌ர‌ல் ப்ராக்டிஸ் மாதிரி தான்; கொஞ்சம் பேசினவுடனேயே diagnosis முடிச்சிடலாம்!

கேள்வி: மனநோய் இருக்கற‌ ஒருத்தரைப் பாத்த‌வுடனே கண்டுபிடிச்சிடலாமா டாக்டர்?

டாக்டர்: பார்த்த‌வுட‌னே இல்ல‌, பேசின‌வுட‌னே க‌ண்டுபிடிச்ச‌ட‌லாம்.
நம் எண்ணங்கள் எல்லாமே, உட‌ல்மொழியாவும் வாய்மொழியாவும் தானே வெளிப்ப‌டுது. இதுல‌ ஒரு relevance, coherence, logic, continuity இருக்க‌ணும். (பொருத்தமாக‌, தொடர்புடன், அறிவுபூர்வமாக‌, தொட‌ர்ச்சியாக‌)

அதீத‌உண‌ர்ச்சி வெளிப்பாட்டுடன் (exaggerated) நடவடிக்கைகள், சூழ்நிலைக்குப் பொருத்த‌மில்லாத‌ பேச்சு, இதெல்லாமே இந்த வேதிப் பொருட்கள் கூடறதாலயோ குறைய‌ற‌தால‌யோ ஏற்ப‌ட‌லாம். மொத்த‌ம் 116 வித‌மான‌ மனநோய்கள் டாக்குமென்ட் பண்ணி இருக்கு.

ஸைக்காலஜி, ஸைக்கியாட்ரி வித்தியாசம் தெரியும்ல.
(தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தை பார்க்க‌வும்!)

ந‌ம்மூர்ல‌ பொதுவா ரெண்டையும் குழ‌ப்பிக்க‌றாங்க‌. பொதுவா குடும்ப‌த்துலயோ திரும‌ண‌ வாழ்க்கையில‌யோ பிர‌ச்னை இருந்தாலோ, இல்ல இப்ப‌ல்லாம் குழ‌ந்தைங்க‌ ஸ்கூலுக்குப் போக‌ மாட்டேன்னு ரொம்ப‌ அட‌ம்பிடிக்கிறாங்க‌. இதெல்லாம் ஒரு ஸைக்கால‌ஜிஸ்டே க‌வுன்ச‌லிங் மூல‌மா ச‌ரிப‌ண்ணிட‌லாம்.

ஆனா, ஒரு வேளை அப்படி சரியாகலைன்னா அந்த‌க் குழ‌ந்தைக்கு அடிப்ப‌டையிலேயே மூளையில‌ ஏதோ ஒரு வேதிப் பொருளின் ச‌ம‌நிலை த‌வ‌றி இருந்தா அதைச் ச‌ரி ப‌ண்ண‌ற‌துக்கு ஒரு ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர் ஸைக்க்யாட்ரிஸ்ட் தேவை.

நம்மூர்ல ஸைக்யாட்ரின்னாலே ஒரு mystic (தெய்வீகமான) பார்வை பாக்கறாங்க. குரு மாதிரி பார்க்கறது, எல்லாத்துக்கும் அவங்க கிட்ட ஆலோசனை கேக்கறது அப்படி ஆயிடுது. என் கிட்ட அது ரொம்ப அதிகம் எதிர்பார்க்கப்படுது. என்னோட‌ தோற்ற‌ம் கார‌ண‌மா இருக்க‌லாம்.


கேள்வி: உட‌ல் மொழின்னு சொல்றாங்க‌ளே. அது எவ்வ‌ள‌வு தூர‌ம் துல்லிய‌மான‌து? அதைப் ப‌த்தி நீங்க‌ என்ன‌ நினைக்கிறீங்க‌?

டாக்டர்: I believe in it. It can be made more of a science than what it is now. சில குறிப்பான பாவனைகள், நடவடிக்கைகள் இருக்கு. காலம்காலமா இருந்துட்டு வர்ற விஷயம் இது. டார்வின் தான் முத‌ல்ல‌ இதை அறிவிய‌ல் பூர்வ‌மா பார்க்க‌ முய‌ற்சி ப‌ண்ண‌வ‌ர்.

ந‌ம்ம ஊர்ல‌யும் நாட்டிய‌ம் நாட‌க‌ம் இதிலெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ற அபிந‌ய‌ங்க‌ளுக்கு அடிப்ப‌டை பாடி லேங்வெஜ் தானே. மெய்ப்பாட்டிய‌ல்னு தொல்காப்பிய‌ர் சொல்லி இருக்கார். இதுவும் ஸைக்யாட்ரி மாதிரி தான். ஒரு ஆளோட‌ அந்த‌ நேரத்து ம‌ன‌நிலை (mood status) தெரிஞ்சுக்க‌லாமே த‌விர‌ ஒருத்த‌ர் ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா, புத்திசாலியா முட்டளான்னெல்லாம் க‌ண்டுபிடிக்க‌ முடியாது.

கலை, ஓவியம், எழுத்து என்று தொடர்ந்த டாக்டரின் பேச்சு அவர் மிகவும் ரசித்த லா.ச.ரா வின் அபிதா பக்கம் சென்றது.

டாக்டர்: அதுல கதை என்று பெரிசா ஒண்ணும் இல்லை. அத‌ன் மொழிய‌ழ‌குக்காக‌வே ம‌ய‌ங்கிடலாம். க‌தை இல்லாத‌ குறையை அந்த‌ அற்புத‌மான‌ மொழி நிறைவு செய்துடும். த‌மிழ் மொழியை எப்ப‌டியெல்லாம் அழ‌காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்க்றதுக்கு எடுத்துக்காட்டு லா.ச‌.ராவின் அபிதா.
அத‌னாலேயே அதை மேடை நாட‌க‌மாக‌ப் போட்ட‌ போது எடுபடல. மேடை நாட‌க‌த்துக்குக் க‌தையும் பாத்திர‌ப்ப‌டைப்பும் ரொம்ப‌ முக்கிய‌ம்.

(டாக்டரின் நாடக அனுபவங்களை அவரே அழகாக எழுதி இருக்கிறார்.)

கேள்வி: கனவுகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு டாக்டர்? கனவுகள் ஏன் வருது?

டாக்டர்: கனவுங்கறதே ந‌ம்மோட‌ உள் ம‌ன‌ ஆசைக‌ள் அல்ல‌து ப‌யங்கள் தான். உறக்கத்தில் நிறைய நிலைகள் உண்டு.ஓரிரு மணி நேர ஆழ்ந்த உறக்கம், அடுத்து சில நேரம் லேசான உறக்கம் என்றுமாறி மாறி தான் வரும். உறக்கத்தில் அப்படி ஆழம் குறையும் சில நிலைகளில்தான் மூளை கனவுகளை உருவாக்குகிறது.

கனவுல நேரம் ரொம்பக் குறுகிய விஷயம். அப்புறம் குறியீடுகள். ஒருத்தருக்குப் பதிலா இன்னொருவர் அதே குணாதிச‌ய‌ங்க‌ளோட‌ வர‌லாம்.
அப்புறம் நேற்று வந்த கனவு இன்னிக்குத் தொடர்றதும் நார்மல் தான். தூங்கற நேரம் முழுக்க கனவு வந்து அது நினைவும் இருந்தா அது தப்பு. மூளைக்கு ஓய்வில்லைன்ன்னு அர்த்தம். நார்மலா அப்படி இருக்காது.

எத்தனை கனவு கண்டாலும் கடைசியில் வர்ர கனவு மட்டும் காலையில ஞாபகம் இருக்கும். மற்றதெல்லாம் மறந்துடும். கனவு வர்ரதே தூக்கத்தில சில நிலைகள்ல தான். கண்ணிமைகள் படபடக்கறது, கருவிழி அசையறதெல்லாம் கனவு வரும்போது நடக்கும்.

கேள்வி: க‌ன‌வுக‌ளே வ‌ராம இருந்தா அது ப்ர‌ச்னையில்லையா?

டாக்டர்: அப்ப‌டி யாருக்கும் இருக்காது. மறந்து போயிடுதுன்னு தான் அர்த்த‌ம். அது ரொம்ப‌ நிம்ம‌தியான‌ விஷ‌ய‌ம்!

அப்புறம் கனவுகளைப் பத்தி உறுதியா எந்த ஆராய்ச்சியும் பண்ண முடியாது. கனவு வரும்போது மூளையோட செயல்பாடு என்ன மாதிரி இருக்குன்னு graph பண்ணிப் பார்க்கலாம். பொருளைப் பண்ண முடியாது.ஃப்ராய்டு எழுதினதெல்லாம் பாதி தியரி தான்.

கேள்வி: ஓருபாலின‌ ஈர்ப்புங்கறது ம‌ன‌ந‌ல‌க் கோளாறா?

டாக்டர்: இல்லை. அதுக்காக‌ அது இய‌ல்பான‌ விஷ‌ய‌மும் இல்லை. அதை மாற்றவும் முடியாது. சில‌ பேர் bisexual (ஒரு பாலின‌ ஈர்ப்பு, எதிர்பாலின‌ ஈர்ப்பு இர‌ண்டுமே இருத்த‌ல்) ஆக‌ இருக்க‌லாம். ஆனா முழுமையா ஹோமோ வாக‌ இருந்தா ஒண்ணும் ப‌ண்ண‌ற‌‌‌துக்கு இல்லை.

ச‌மூக‌ அழுத்த‌ங்க‌ளுக்காக‌ அவ‌ங்க எதிர் பாலினத்தைத் திரும‌ண‌ம் ப‌ண்ணிக்கிட்டாலும் அத‌னால‌ இரு த‌ர‌ப்புக்குமே கேடு தான்.
ஹோமொசெக்சுவ‌ல் ஆணால‌ க‌ண்டிப்பா ம‌னைவியையும் திருப்திப் ப‌டுத்த‌ முடியாது. குழ‌ந்தைப் பேறும் இருக்காது.

ஹோமோசெக்சுவ‌ல் ஜோடிக‌ளுக்கு ஆண் பெண் உற‌விலிருக்கும் அத்த‌னை உணர்வு ரீதியான அம்ச‌ங்க‌ளும் கூட ஈகோ, பொறாமை, possessivness, அப்படியே இருக்கும். ஆனா ரெண்டு பேர்ல ஒருத்த‌ர் அதிக‌ ஆளுமை உடைய‌வ‌ரா இருப்பார்.
ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ ரீதியா இதுக்கு ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாதுங்க‌ற‌துனாலேயே நான் பெரிசா இந்த‌ விஷய‌த்துக்குள்ள‌ போற‌தில்ல‌.

ஆனா ஒரு ஹோமோ உண்மையிலேயே எதிர்பாலின‌ விருப்ப‌முள்ள‌வ‌ரா மாற‌ விரும்பினா (அப்படி சிலர் உண்டு)அதுக்கு முய‌ற்சி ப‌ண்ண‌லாம். ஆழ்நிலை உற‌க்க‌த்துக்குக் கொண்டு போய் suggestion சிகிச்சை கொடுக்க‌லாம். எதிர்பாலின‌ விருப்ப‌த்தைத் தூண்டும் வ‌கையில் ப‌ட‌ங்க‌ளோ புத்த‌க‌ங்க‌ளோ பார்க்க‌ வைக்க‌லாம். இது எதுவுமே பலன் தரலைன்னா விட்டுட‌ வேண்டியது தான்.

கேள்வி: ஓரின‌த் திரும‌ண‌த்தைப் ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க?
டாக்டர்: திருமணம் என்னம்மா. பிடிச்சா அவங்க தாராளமா சேர்ந்து வாழ வேண்டியது தானே. முன்னாடி இது குற்றமாவே பார்க்கப்பட்டது. இப்போ தான் அது இல்லையே.

கேள்வி: இல்லை, ச‌ட்ட‌ப்ப‌டி அங்கீகாரம் வேண்டும், குழ‌ந்தைத் த‌த்தெடுக்கும் உரிமை வேண்டும்னெல்லாம் இவ‌ர்க‌ளில் சில‌ர் போராட‌றாங்க‌ளே? அது ச‌ரியா? ஓரின‌ப் பெற்றோரிட‌ம் வள‌ரும் குழ‌ந்தை இய‌ல்பான‌ வ‌ள‌ர்ச்சி இருக்குமா? அதுக்கும் அவங்களைப் பாத்து அதே மாதிர்யான விருப்பம் வர வாய்ப்பு இருக்கா?

டாக்டர்: இல்ல, அப்படிலாம் பாத்துக் கெட்டுப் போக முடியாது. ஒரு aversion வரலாம். இயல்பான குடும்ப அமைப்பு இல்லாததுனால நிச்சயம் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கு.

கேள்வி:
ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி ஒரு கேள்வி. மகனுக்கு அப்பா மேல வரும் பொறாமை அல்லது வெறுப்புணர்வு மாதிரி ஒரு அப்பாவுக்கு மகன் மேல வருமா?

டாக்டர்: வெறுப்புன்னில்ல, கடந்து போன தன்னோட இளம் வயதை அவன் கிட்ட பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சு வரலாம். That is quite normal.

கேள்வி: அப்படி இல்ல, மகன் தன்னை விட உயர்வா வளர்ந்துடக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு அவன் வளர்ச்சியைத் தடைபண்ற அளவுக்கு இந்தக் காம்பிளக்ஸ் வருமா?

டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு அப்படி யாருக்கும் வந்து நான் பார்த்ததில்ல, ஆனா சாத்தியக்கூறுகள் இருக்கு.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டாக்டரின் பொன்னான நேரத்தை விரயம் செய்து விட்டிருந்தோம்! போதுமென்று தோன்றியதால் விடைபெற எழுந்தோம்.

வீட்டிலேயே மிகப்பெரிய அறையை டாக்டர் புத்தகங்களுக்கு ஒதுக்கி இருந்தார். அதைப் பார்க்காமல் எப்படிக் கிளம்புவது?
கம்ப இராமாயணம் முதல் காஃப்கா வரை, ஓஷோ முதல் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வரை சகலமும் இருந்த அந்த நூலகம் அவர்களின் பரந்து பட்ட ரசனைக்கும் அறிவுக்கும் சான்றாக இருந்தது. ஆனால் தான் நம்புவதும் ஆதரிப்பதும் இடது சாரி சிந்தனைகளைத் தான் என்பதை உறுதியாகக் கூறுகிறார் டாக்டர்.

அன்பளிப்பாக டாக்டர் கொடுத்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு மிகுந்த மன்நிறைவோடு வீடு திரும்பினோம்.

தொழில் ரீதியாகவோ, அவரது துறை சார்ந்தோ எவ்வித தகுதியும் இல்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்ட போதும் எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு சம்மதித்ததோடு, பொறுமையாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு நன்றி என்பதை வார்ததைகளால் சொல்லி முடிக்க முடியாது.

தனது அலுவலகப் பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி எங்களுடன் அன்புடன் அளவளாவிய திருமதி. உமா ருத்ரன் அவர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும்.

17 comments:

Thamiz Priyan said...

நல்ல முயற்சி! நன்றிகள்!

மதுரை சரவணன் said...

arumaiyaana santhipppu payanulla nalla kelvi atharkku thakuntha pathilkal. mikka nanri. ithu ponru niraya petti etuththu podavum.

Radhakrishnan said...

பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது, இந்த சந்திப்பு தங்களுக்கு மட்டும் நன்மை தந்ததோடு நில்லாமல் எங்களுக்கும் பயனாக அமைந்தது. ஒரு தெளிவான பார்வை எப்போதுமே மன நிம்மதியைத் தரும். மிக்க நன்றி தீபா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேட்டி சிறப்பாக அமைந்திருக்கிறது.. எங்களுக்காக அதை இங்கே பகிர்ந்தும் கொண்டதற்கு மிக்க நன்றி.. தீபா

☀நான் ஆதவன்☀ said...

//விரயம் செய்து விட்டிருந்தோம்!//

இது விரயமா? அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த எளிமையான பதில்கள். நன்றி தீபா. டாக்டரும் நன்றிகள்

Uma said...

தீபா, முல்லை, உங்கள் வருகைக்கும் தெளிவான பதிவுக்கும் நன்றி (உங்கள் பேச்சுக்கு நடுவில் என் குறுக்கீடுகளைப் பொறுத்துக் கொண்டதற்கும்). நான் படித்து வரும் சில பதிவர்களையாவது நேரில் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

மாதவராஜ் said...

முதலில் தீபாவுக்கும், சந்தனமுல்லைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

குறிப்பிடத்தக்க முயற்சி இது.ருத்ரன் சார் சொன்ன விஷயங்களுக்குள் இன்னும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் scope இருக்கிறது. அதற்கான ஆவலையும், ஈடுபாட்டையும் இந்த பதிவுகள் ஏற்படுத்தும் என்றே நம்புகிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி.

அம்பிகா said...

அருமையான பகிர்வு.
நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. உனக்கும், முல்லைக்கும், நன்றிகள்.
கலந்துரையாடிய டாக்டர். ருத்ரன் அவர்களுக்கும் நன்றி.

ரவி said...

நல்ல முயற்சி மேடம். மேலும் இதுபோல நிறைய செய்யுங்க...ஹேட்ஸ் ஆப்.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தீபா

கே.என்.சிவராமன் said...

அன்பின் தீபா,

வலைத்தளத்தில் நல்லதொரு முயற்சி.

அவ்வப்போது இது மாதிரியான நேர்காணல்களை வலைத்தளத்துக்காகவே எடுத்து பதிவிடவும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ponraj said...

நல்ல முயற்சி!!!!
அருமையான பதிவு!!!

வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிறப்பான முயற்சி. மேலும் இது போல் தொடரவும்.

CS. Mohan Kumar said...

ரொம்ப நல்ல கேள்விகள். அவரின் பதில்களும் தெளிவாக, அழகாக இருந்தன. நன்றாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள். நன்றி

அமுதா said...

அருமையான பகிர்வுக்கு நன்றி தீபா. சாரி... இன்னிக்கு தான் படிக்க நேரம் கிடைத்தது. இரண்டு பகுதிகளும் படித்தேன். அருமையான கேள்விகள் கேட்டுள்ளீர்கள். நிறைய விஷயங்களை அழகாகத் தொகுத்துள்ளீர்கள். நன்றி.