நேஹாவுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ஆனால் இப்போதே அவளை எந்தப் பள்ளியில்
சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டோம்!கூடுமானவரை வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், தரமான கல்வியுடன் விளையாட்டு மைதானமும் இருக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான் எப்போதோ படித்த இந்தப் புத்தகம் நினைவுக்கு வந்தது. பெற்றோர்களும் முக்கியமாக ஆசிரியர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி ஜப்பான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது சிறுமியாக இருந்த டெட்சுகோ குரோயாநாகி என்பவர் தனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதாகத் தான் படித்த பள்ளியைப் பற்றியும் அதன்
தலைமை ஆசிரியரைப் பற்றியும் கூறியுள்ளார்.
புகழ்பெற்ற ஒரு பள்ளியிலிருந்து முதல் கிரேடிலேயே வெளியேற்றப் படும் டோட்டோ சான் என்ற சிறுமி கோபயாஷி என்பவர் நடத்தும் வித்தியாசமான பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.
”டோமோயி” என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகளில் வகுப்பறைகள், சுதந்திரமான பாடத் திட்டங்கள், ”கடல்களிலிருந்து கொஞ்சம், மலைகளிலிருந்து கொஞ்சம்” என்று சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகள் கொண்டாடி மகிழும் வண்ணம் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரட்டியாக கற்பிக்கும் முறை, உதாரணத்துக்கு விவசாயப் பாடம் கற்பிக்க விவசாயி ஒருவரையே கௌரவ ஆசிரியராக அழைத்து வருதல், அசெம்பிளி ஹாலில் கூடாரமடித்துத் தங்கும் கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என்று படு எளிமையாகவும் அதே சமயம் குழந்தைகளுக்குக் குதூகலம் நிறைந்ததாகவும் விளங்குகிறது அந்தப் பள்ளி.
முந்தைய குறும்பு செய்து பள்ளியில் வகுப்பையே கெடுப்பதாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட டோட்டோ சான் இந்தப் பள்ளியில் உற்சாகமாகப் பள்ளி சென்று ஆர்வத்துடன் கல்வி கற்கிறாள்.
நூலிலிருந்து:
”டோட்டோ சானை விட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்த ஒரு பையன் அப்பள்ளியை விட்டுச் செல்ல
நேர்ந்த போது தன் மனக் கசப்பை வெளியிட தலைமை ஆசிரியரின் முதுகில் புளி மூட்டை ஏறிக்
கொண்டு கண்களில் நீர் வழிய கைகால்கள்:ஐ உதைத்து அடம்பிடித்தான். அவன் சென்று மறையும்
வரை கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள பள்ளியைப் பிரிய மனமின்றிச் சென்றான், தலைமையாசிரியர் கண்கள் சிவக்க அழுதே விட்டார்.”
”நாம் போன தடவை போனப்ப அங்குள்ள குளத்தில் பாம்பு பார்த்தோம்” சாக்கோ சான் சொன்னாள்.
குழந்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். வானம் நீலமாக இருந்தது. காற்ரு படபடக்கும் பட்டாம்பூச்சிகளால்
நிறைந்திருந்தது. அவர்கள் பத்து நிமிடம் ந்டந்த பின்பு டீச்சர் நின்றார். சில மஞ்சள் பூக்களைக் காட்டிச் சொன்னார்,
“இந்தக் கடுகுப் பூக்களைப் பாருங்கள். பூக்கள் ஏன் பூக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?”
இப்புத்தகத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. டோட்டோசான் என்ற துடிப்பான சிறுமியின் பார்வையில் அன்பும் குழந்தைகளின் இயல்பைச் சற்றும் கெடுக்காத கல்விமுறை எவ்வளவு சிறந்தது என்பது புலனாகிறது.
டெட்சுகோ குரோயாநாகி ஜப்பான் தொலைக்காட்சியில் “டெட்சுகோ அரங்கம்” என்ற பிரபல நிகழ்ச்சி நடத்தி வந்தவர். இவரது சொந்த அனுபவமே இப்புத்தகம். நூலின் இறுதியில் தன்னுடன் படித்தவர்களையும் பேட்டி கண்டு டோமோயி பற்றிய அவர்களின் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோருக்குச் சுட்டி இங்கே:http://gyanpedia.in/tft/Resources/books/Tottochan.pdf
தமிழில்:
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி
ஆசிரியர் : டெட்சுகோ குரோயாநாகி
தமிழாக்கம் : சு. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்
வெளியிடு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்
South Asian Books6/1, Thayar Sahib II LaneChennai - 600 002
19 comments:
நல்லபதிவு, நான் சமீபத்தில் ஒரு பாதரைப் போய்பார்த்தேன். என்னோட குழந்தைக்கு பாத்திமா ஸ்கூலில் ஒரு இடம் வாங்கித்தரவேண்டும் என்று. அவரும் சம்மதித்தார்.பள்ளியில் விண்ணப்பம் வாங்கும் நாளும் வந்து போனபோது அவர்கள் வயதைக் கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு தூக்கிவாரிப் போட்டது என் குழந்தைக்கு ஒன்றைரை வயதுதான், ஆகிறது. எவளவு மோசமாக கல்வி என்னும் வணிக வெறிக்கு நாம் ஆட்பட்டிருக்கிறோம் என்பது தெரியவந்தது. “ஜன்னனில் ஒரு சிறுமி” நானும் படித்திருக்கிறேன். கூடவே “ கரும்பலையில் எழுதாதவை” “ எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கீனீங்க” என்ற சில நூலகளையும் படியுங்கள். குழந்தை கல்வித் தொடர்பாக நல்ல பார்வை கிடைக்கும். நாம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு வயசிலேயே இந்த யோசனையா? நான் கொஞ்சம் பரவாயில்லை. இப்பொதுதான் ப்ளே ஸ்கூல் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் கல்வியென்பது மட்டமான நிலையிலே இருக்கிறது என்பது என் கருத்து. நீங்கள் கொடுத்த சுட்டியை படிக்க முயலுகிறேன்.
பயணத்தின் போது படித்தேன். அருமையான பதிவு. நமக்கு எல்லாம் அது கனவுதான்.
சுட்டி கொடுத்ததற்கு நன்றி தீபா ...
எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி மூன்று வயதை தாண்டியே பள்ளியில் சேர்க்க வேண்டும் ...தனக்கு எது தேவை அல்லது தனக்கு நேர்வதை சொல்லத் தெரிந்த பின்னரே குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதே என் தனிப் பட்ட கருத்து .
கதையில் வரும் பள்ளியைப் போன்ற பள்ளிகள் ஒன்றிரண்டாவது நம் தமிழகத்தில் உண்டா? அதைப் பற்றி தேடிப் பார்க்க வேண்டும்.
பொன்னிலா! தங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வித்யா! சும்மா யோசித்துக் கொண்டு தானிருந்தேன். முயற்சி எல்லாம் இல்லை. மூன்றரை வயதில் தான் அவளைப் பள்ளியில் சேர்ப்பதாக எண்ணம்.
அங்கிள்! இந்தப் புத்தகமே நீங்கள் எனக்குக் கொடுத்தது தான்.
மிஸஸ் தேவ்!
தமிழகத்தில் அப்படி ஒரு பள்ளி இருப்பதாக மாதவராஜ் தனது பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டி இங்கே:
http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html
இந்தப் பதிவு எழுதத் தூண்டியது இந்த வார விகடனில் வசந்தி தேவி அவர்களின் கட்டுரை தான். உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு ஏற்றத் தாழ்வுடன் கூடிய கல்வி முறை இல்லை என்று சாடி இருக்கிறார். ”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் இரண்டாவது படிக்கும் மாணவனுக்கு ஒன்று இரண்டு கூட எண்ணத் தெரியவில்லை.” என்று அவர் கூறியிருப்பது நமக்கெல்லாம் வெட்கக்கேடான ஒன்று.
//நேஹாவுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ஆனால் இப்போதே அவளை எந்தப் பள்ளியில்
சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டோம்!//
இப்பெல்லாம் கல்யாணதன்னைக்கே எந்த ஸ்கூல்னு முடிவு பண்ணிறுவாங்க!
மிக அழகான பயனுள்ள அறிமுகம்.
ஹ்ம்ம்..வசந்திதேவி சொல்வதும் உண்மையே! பாடதிட்டங்கள் வேறுபடுகிறதும் கருத்தில்கொள்ளவேண்டிய விஷயம்! ஸ்டேட்போர்டு, சிபிஎஸ்ஈ, ஐசிஎஸ்ஈ என்று எத்தனையெத்தனை!
பயனுள்ள பதிவு.
நல்ல புத்தகமொன்றை அறியபடுத்திருக்கீங்க நன்றி.
நல்ல பதிவு. அறிமுகத்திற்கு நன்றி. படிக்க முயற்சிக்கிறேன்.
தீபா!
//முந்தைய குறும்பு செய்து பள்ளியில் வகுப்பையே கெடுப்பதாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட டோட்டோ சான் இந்தப் பள்ளியில் உற்சாகமாகப் பள்ளி சென்று ஆர்வத்துடன் கல்வி கற்கிறாள்.//
தொடர்புடைய ஜெயமோகனின் தேர்வு இடுகையும் வாசிப்பிற்குகந்தது (நீங்க இந்தப்புத்தகத்தை எத்தனை முறை வாசிச்சிருக்கீங்களோ, அதில் பாதி முறையாச்சும் நானும் இதைப் படிசசிருப்பேன்!)
இடுகைகள் சுவாரசியமாயுள்ளன! தொடர்ந்து எழுதுங்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
வால்பையன்!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆனா நான் அவசரமெல்லாம் படலீங்க. சும்மா ட்ரீம் அடிச்சிட்டு இருந்தேன்.
சந்தனமுல்லை!
அமுதா!
முத்து ராமலிங்கம்!
ரொம்ப நன்றி.
வெங்கட்ரமணன்!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் தந்த சுட்டியைப் படிக்கிறேன்.
தமிழகத்தின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இதனை பாடப் புத்தகமாகவே வைக்கலாம்.
ஆனால், எங்கேயோ படித்தது வேறு நினைவுக்கு வந்து அச்சுறுத்துகிறது "ஒரு புத்தகத்தின் மதிப்பை மிகவும் குறைக்க வேண்டுமா அதைப் பாடப் புத்தகமாக்கிவிடுங்கள்"
தரவிறக்கிவிட்டேன், நன்றி தீபா,
நேஹாவுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ஆனால் இப்போதே அவளை எந்தப் பள்ளியில்
சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டோம்!கூடுமானவரை வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், தரமான கல்வியுடன் விளையாட்டு மைதானமும் இருக்கவேண்டும் //
ம், நானும் தான். என் கணவரின் நண்பரின் குழந்தைக்கு ஹோலி ஏஞ்சல் ஸ்கூலில் அட்மிஷனுக்கு போய் கிடைக்காத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட அட்வைஸ் கிடைத்ததாம், இது போன்ற பள்ளிகளில் நீங்கள் முன்பே அட்மிஷன் வேலைகளை துவக்கியிருக்கவேண்டும் என்பது போன்ற....
அவர் எனக்கு கொடுத்த அட்வைஸ் தான் நான் யோசிக்க ஆரம்பித்ததற்கு காரணம்
பயனுள்ள பதிவு.
கையேடு!
யோசனை கூறிவிட்டுக் கூடவே அதன் வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அமித்து அம்மா!
படித்துப் பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
நன்றி ராம்!
அருமையான பதிவு தீபா.
பெற்றோர்கள் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயத்தை கூறி உள்ளீர்கள்.
குழந்தைகளை நல்ல பண்புள்ளவர்களாக வளர்த்தாலே போதும்.அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் நல்ல நிலைமையிலேதான் இருக்கும்.
keep writing , best wishes
நன்றி பட்டாம்பூச்சி!
Thank you Doctor!
Post a Comment