Saturday, April 4, 2009

பேஜ் த்ரீ - சினிமா


நம் நாட்டில் நிறைய நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை நாடு முழுவதும் மக்களைச் சென்றடைவதில்லை. ஹாலிவுட் படங்கள் எல்லா மொழிகளிலும் வந்து மோதுகின்றன.
தெலுங்கில் எடுக்கப்பட்ட அருந்ததி என்ற பரம மசாலாப் படம் டப் செய்யப்பட்டு செம போடு போடுகிறது. நன்றாகவே ஒடிய ஆனால் நல்ல படங்கள், ஏன் டப் செய்யப்படுவதில்லை? (விருதுப் படம், கலைப் படம், ஜனரஞ்சகப் படம் என்று பிரிக்க எனக்குச் சம்மதமில்லை)

வெயில், இயற்கை, ஆட்டோகிராஃப் இவற்றை வடநாட்டில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அதே போல் பிற மொழிகளில் எடுக்கப்படும் நல்ல படங்கள் எத்தனை நம்மை வந்து சேர்கின்றன?நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்த ஒரு இந்திப் படத்தைப் பற்றிச் சொல்லலாமென்று நினைக்கிறேன். இந்தி என்றால் உடனே சிலர் முகம் சுளிப்பது தெரிகிறது. இதில் கான்களோ கபூர்களோ இல்லை. மதுர் பண்டார்கர் என்ற நம்பிக்கை தரும் இளம் இயக்குனர் எடுத்த் படம் இது. (கார்ப்பொரெட், ட்ராஃபிக் சிக்னல், ஃபாஷன் இவரது வேறு சில படங்கள்)


பேஜ் த்ரீ (2005)


பத்திரிகை உலகில் பெரிதாகச் சாதிக்கும் கனவுகளுடன் நுழையும் ஒரு இளம்பெண்ணின் பார்வையில் இந்தச் சமூகத்தின் அவலங்கள், மேல்தட்டு மக்களின் பார்ட்டி கலாசாரங்கள், போலி முகங்கள், ஊடகங்களை ஆட்டி வைக்கும் நிழல் மனிதர்கள் என்று பல்வேறு புதிய விஷயங்களை அநாயாசமாகத் தொட்டுச் செல்கிறது படம்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த துடிப்பான புத்திசாலி இளம்பெண் மாதவி ஒரு பிரபல நாளிதழில் நிருபராகப் பணியாற்ற மும்பை வருகிறாள். விமானப் பணிப்பெண் ஒருத்தியுடன் (பேர்ல்) அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி இருக்கும் அவளது சராசரி மும்பை வாழ்க்கைக் கலாசாரமே நம்மில் பலருக்கு அந்நியமாக இருக்கலாம், ஆனால் அப்படியும், நம் அடுத்த வீட்டுப்பெண் போன்ற பிம்பத்தைக் கொன்கொனா சென் ஷர்மா ஏற்படுத்தி மிகவும் நெருக்கமாகி விடுகிறார்.

அவருக்கு பிரபலங்கள், நகரின் முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ளும் பார்ட்டிகளைப் பற்றி எழுதும் ’பேஜ் த்ரீ’ வேலை தரப்படுகிறது. தன் வயதுக்கே உரிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மாதவி தினமும் பார்ட்டிகளுக்குச் செல்கிறாள். எழுதுகிறாள். நிறைய பெரும் புள்ளிகளுடன் இயல்பாகப் பழகி நட்பும் ஏற்படுத்திக் கொள்கிறாள்.
அவளது தோழி ஒருத்தி (காயத்ரி) ஊரிலிருந்து நடிகையாகும் கனவுடன் வருகிறாள். அவளைத் தனக்குத் தெரிந்த நடிகரிடம் அறிமுகப் படுத்தி வைக்கிறாள் மாதவி. அவனோ அவளைத் தவறான முறையில் பயன்படுத்திப் பின்பு கைவிட்டு விடுகிறான். மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற அவளை மாதவியும் அவளது இன்னொரு அறைத் தோழியும் காப்பாற்றுகிறார்கள். கோபமடைந்த மாதவி அந்நடிகனின் செயலை அம்பலப்படுத்திக் கட்டுரை எழுதி வெளியிடுகிறாள் (ஆசிரியரின் அனுமதி இல்லாமலேயே). அது பிரச்னையாகிப் பின்பு அவனிடமே மன்னிப்பு கேட்க வைக்கப் படுகிறாள்.
சமூக சேவகி ஒருத்தி (இவளும் பெரிய புள்ளி ஒருவரி மனைவி) இறந்து போக, அதைப் பற்றி எழுதச் செல்லும் போது பெரிய புள்ளிகள் கேமராவுக்கு முன் மட்டும் அழுவதும் மற்றபடி இழவு வீட்டில் கூட பிசினஸ் பேசிக் கொள்வதையும் பார்த்து வெறுப்புற்று பேஜ் த்ரீ எழுத தான் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறாள். இவளது முடிவை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் குற்றப் பகுதி நிருபர் விநாயக் மானேவிடம் உதவியாளராக அனுப்புகிறார். வேண்டா வெறுப்புடன் இவளைச் சேர்த்துக் கொள்ளும் விநாயக் இவளின் ஆர்வத்தைக் கண்டு கொண்டு பின்பு தனது வேலையைக் கற்றுக் கொடுக்கிறான். எது நிஜமான ஜர்னலிசம், மக்களுக்கு உண்மையில் போய்ச்சேர வேண்டிய செய்திகளைச் சேகரிப்பது எப்படி என்று புரிய வைக்கிறான். தனக்குத் தகவல் தரும் உளவாளிகள், நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எல்லாரிடமும் மாதவியை மதிப்புடன் அறிமுகம் செய்து வைக்கிறான். மாதவிக்கு தனது இலக்கு என்ன வென்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது.
ஒரு நாள் விநாயக்குடன் சேரி வாழ் மக்களைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் பொது அந்தப் பகுதியில் குண்டு வெடிக்கிறது. பதறியடித்துக் கொண்டு விநாயக்கும் மாதவியும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அப்போது பத்திரிகை ஆசிரியரிடமிருந்து அவசரமாக அழைப்பு வருகிறது. பார்ட்டி ஒன்றுக்குச் சென்று வரும்படி. இவளுக்குப் பதிலாகத் தற்போது பேஜ் த்ரீ எழுதும் பெண் விடுப்பு எடுத்ததால்.
வேறு வழியின்றி அதிர்ச்சி விலகாமலே அந்தப் பார்ட்டிக்குச் செல்லும் மாதவி அங்கு நடக்கும் கூத்துக்களைச் சலனமின்றிப் பார்க்கிறாள். நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி அங்கு சாதாரணமான அரட்டைப் பேச்சுக்கள் நிலவுகின்றன. அப்போது தான் அங்கே அவரைப் பார்க்கிறாள். அவர் மாநகரக் காவல் துணை ஆளுநர். கையில் மதுக் கிண்ணத்துடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு விளம்பரப் பிரியர் என்று ஏற்கனவே அறிந்தது தான். ஆனால் இன்று அவளால் சகிக்க முடியவில்லை. அவரிடம் சென்று அவரது பொறுப்பின்மையைக் குறிப்பிட்டு வெளுத்து வாங்குகிறாள். அதிர்ச்சிய்டைந்து அவளையே வெறித்துப் பார்க்கும் கூட்டத்தை அலட்சியப் படுத்தி வெளியேறுகிறாள்.
விறுவிறுப்பாகச் செல்லும் இந்தப் படத்தில் ரசிக்கவும் அட போடவும் வைக்கும் காட்சிகள் நிறைய்ய்ய. சான்றுக்கு:
யாராவது பணக்காரனைத் (வயதானவனாக இருந்தாலும் சரி) திருமணம் செய்து கொள்வதே லட்சியமாக இருக்கும், சிகரெட் பிடிக்கும், படு அலட்சிய பாவம் கொண்ட நவ நாகரிகப் பெண்ணாகக் காட்டப்படும் பேர்ல், காயத்ரி கருவும் கலைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் போது சமூகத்தின் மொத்தப் பெண் குலத்துக்காகவும் வருந்துவது போல் கதறியழும் காட்சி...
பார்ட்டி நடக்கையில் வெளியே கார் ஓட்டுநர்கள் தங்கள் முதலாளிகளின் வண்டவாளங்களைக் கிழிக்கும் வாயிலாக மேல்தட்டுக் கலாசாரத்தை இயக்குநர் செய்யும் நையாண்டி...
தனிப்பட்ட முறையில் நல்லவராகவும் இனிமையானவராகவும் ஆனால் படு யதார்த்தமான பத்திரிகையாளராகவும் உலவும் அந்த ஆசிரியர்...(பொம்மன் இரானி) அலட்டாமல் தூள் கிளப்பி இருக்கிறார்.
விநாயக்காக வரும் அதுல் குல்கர்னியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. (ரன் படத்தில் வில்லன்) பாத்திரத்துடன் அப்படியே பொருந்திப் போகிறார்.
அப்புறம் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ..சான்ஸே இல்லை. மற்ற படங்களில் சத்தியமாக அப்படி ஒரு முகத்தைக் கடைந்தெடுத்த பொறுக்கியாகவோ ரவுடியாகவோ தான் பார்க்கலாம். பொறுப்புள்ள போலிஸ் இன்ஸ்பெக்டர் அழகாக, பளபளக்கும் உடையில் கறுத்த மீசையுடன் லிப்ஸ்டிக் அணிந்து காட்சி அளிக்கத் தேவையில்லை என்று காட்டி இருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
அவரது வசனங்களில் ஒன்று:
போதைமருந்து வாங்கிய பணக்கார இளைஞன்: “ஏய்! எங்க அப்பா யாருன்னு தெரியுமா உனக்கு?”
இன்ஸ்பெக்டர்: “ஏன் உனக்கு யாருன்னு தெரியாதா? எனக்கு உங்க அப்பாவை மட்டும் இல்ல, உங்க அம்மாவையும் தெரியும். அவ இப்ப யார் கூட இருக்கான்னும், நீ ஏன் இப்படி போதை மருந்து தேடி அலையறேன்னும் தெரியும்.”(இளைஞன் கண் கலங்கித் தலை குனிகிறான்”
இன்ஸ்பெக்டர்: ”Cool dude.. it happens.. வண்டியில ஏறுப்பா!”
மாதவி சந்திக்கும் வேறு சில பிரச்னைகளும் அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவு அவள் வேலைக்கே உலை வைப்பதும், அதிகம் பேசாத விநாயக் மானே அவளைச் சந்தித்து ஆறுதல் கூறி “You have to be IN the system if you want to CHANGE the system" என்று அறிவுறுத்துவதும் படத்துக்கு மேலும் வலுவூட்டும் காட்சிகள்.
ஆகக் கூடி ரொம்ப வித்தியாசமான இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன். நீங்களும் முடிந்தால் பாருங்கள். ஆங்கில சப் டைட்டில்களுடன் சி.டி. அல்லது டி.வி.டி கிடைக்கலாம்.
பிடித்தால் சந்தோஷம். பிடிக்கவில்லை என்றால் என்னைத் திட்டாதீர்கள். :-)ஏனென்றால் எனக்கே பிடிக்காத அல்லது தேவையில்லாத ஒரு சில சிறு அம்ச்ங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி எதற்குப் பேசுவது என்று விட்டு விட்டேன்.
(பி.கு: இப்படம் தேசிய அளவில் சிறந்த படத்துக்காகத் தங்கத் தாமரை விருதும், திரைக்கதை மற்றும் படத்தொகுப்புக்காக வெள்ளித் தாமரை விருதும் பெற்றுள்ளது.)

18 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல விமர்சணம்.

butterfly Surya said...

Xlent film.

Nice review.

Thanx

Surya

வடுவூர் குமார் said...

இங்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை.ஊருக்கு வந்தால் பார்த்துக்கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

உங்க பின்னூட்டப்பெட்டி அடிக்கடி எதையோ தேடுது....கொஞ்சம் பாருங்க.

Deepa said...

//உங்க பின்னூட்டப்பெட்டி அடிக்கடி எதையோ தேடுது....கொஞ்சம் பாருங்க.//

புரியவில்லை குமார். ஏதேனும் பிரச்னையா பின்னூட்டம் இடுவதில்??

Deepa said...

ஜமால்! சூர்யா!
ரொம்ப நன்றி.

ராம்.CM said...

நல்லாயிருந்தது விமர்சனம்!

கிரி said...

நான் இந்த படம் பார்த்து விட்டேன்..நல்ல படம்..இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை

சென்ஷி said...

விமர்சன பகிர்வுக்கு நன்றிகள்

Deepa said...

ராம்! கிரி! சென்ஷி!

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

உண்மைத்தமிழன் said...

மிக அருமையான திரைப்படம்.

சுவையான திரைக்கதை..

இது மாதிரியான திரைப்படங்களால்தான் திரைப்படங்களைத் தொடர்ந்து காண்பதற்கு ஒரு ஆர்வமே ஏற்படுகிறது.

சிறந்த விமர்சனம் வித்யா.. தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.!

மாதவராஜ் said...

தீபா!

மிகத் தெளிவான, இயல்பான நடையில் விமர்சனம் இருந்தது. பாராட்டுக்கள். படத்தை எப்போது பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியவில்லை.

Deepa said...

வாங்க அங்கிள்!
காலையிலிருந்தே எதிர்பார்த்தென்.. நன்றி.

உண்மைத் தமிழா!

மிக்க நன்றி.

ஆனால் நான் வித்யா அல்ல, தீபா!
:-)

சந்தனமுல்லை said...

ஆகா..விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது! நல்லா நுட்பமான விஷயங்களை அலசியிருக்கீங்க....//You have to be IN the system if you want to CHANGE the system" என்று அறிவுறுத்துவதும் //

உண்மை!!

Manikandan AV said...

நான் விரும்பி பார்த்த மதுர் பண்டார்கரின் திரைப் படங்களில் இதுவும் ஓன்று. இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது நினைப்பதுண்டு, ஏன் தமிழ் சினிமா மட்டும் இன்னும் முதன்முதலில் டி போட்டு கூப்பிடும் ஒருவனை காதலிக்கும் பெண்களையே கதாநாயகியாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று.

ஆனால், அவற்றை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றாமல் போயிற்றே என்று இப்பொது உங்கள் பதிவு யோசிக்க வைத்தது. நல்ல விஷயம் இது. தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

Karthik said...

இந்த படம் பாத்தப்புறம் Mumbai Times(Times of India) இதழின் மூணாவது பக்கத்த(Page 3) பாத்தாலே எரிச்சலா வந்தது

Deepa said...

ரொம்ப நன்றி முல்லை!


Its me the monk!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தமிழ்ப் படங்கள் மட்டுமல்ல நீங்கள் சொல்வது எல்ல மொழிகளிலும் பெரும்பாலான படங்களுக்குப் பொருந்தும்.


வாங்க Karthik,
எனக்கும் அப்படித்தான் இருக்கிறது!

butterfly Surya said...

தீபா, நேற்று "Dosar" பெங்காலி திரைப்படம் பார்த்தேன். அருமை. Plz don't miss it.