Friday, April 3, 2009

13 வாரங்களும் சில பல வருடங்களும்

இது பழைய விஷயம் தான். நாம் எல்லோரும் எப்போதும் பேசிக் கிண்டலடிக்கும் விஷயம் தான். ஆனால் அப்படியும் இதற்கு இருக்கும் மவுசு குறைந்தபாடில்லையே. கூடிக் கொண்டே அல்லவா போகிறது. அனைத்து மொழிகளிலும் தயாரித்துக் குவித்த வண்ணம் இருக்கிறார்களே?
மெகா சீரியல்களைத் தான் சொல்கிறேன். முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே பார்த்து வந்ததாகக் கருதப்பட்டதால் மாமியார் மருமகள் பிரச்னை, கணவன் மனைவி ஊடல்கள், நாத்தனார், மைத்துனி வில்லிகள் என்று ஒரு புளித்துப் போன ட்ராக்கில் ஒரு மாதிரி ஓடிக் கொண்டிருந்தது.
இப்படி ஒரு ஐந்நூறு சீரியல்கள் எடுத்துச் சாதனை புரிந்த பின்பு இந்த சீரியல் தயாரி(தாளி)ப்பாளர்கள் கண்டு பிடித்தது என்ன தெரியுமா?
இப்போது ஆண்களும் வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பது தான். ஆகவே ஆண் நேயர்களின் மனம் கவரும் வண்ணம் எல்லா சீரியல்களிலும் வன்முறை, கொலை, அடிதரி போன்ற மசாலா ஐட்டங்களையும் சேர்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இவ்வளவு சொல்கிறாயே ஏன் பார்க்கிறாய் எங்கிறீர்களா?நான் பார்த்த ஒரே சீரியல் ”சித்தி” அது கூட முழுவதும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் யார் வீட்டுக்குப் போனாலும் எந்நேரமும் ஓடுவது இந்த அழகுச் சித்திரங்கள் தானே.
வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது என்று இல்லாமல் இந்தக் கொடுமைகளைப் பார்த்துத் தொலைத்து விட்டு இரவில் தூக்கம் வராமல் அவதிப் படுகிறார்கள்.
முன்னொரு காலம் இருந்தது. தூர்தர்ஷனில் 13 வாரங்களுக்கு மட்டுமே ஒளிபரப்பாகும் நல்ல தொடர்கள் வந்தன. (ரயில் ஸ்னேகம், இவளா என் மனைவி, மண்வாசனை) இந்தியில் கூட ஏராள்மான நல்ல தொடர்கள் வந்தன.

நமது நகைப்புக்கும் கேலிக்குமே ஆளான, செவ்வாய் தோறும் ஒளிபரப்பபட்ட தூர்தர்ஷன் தயாரிப்பான நாடகங்கள் கூட ரசிக்கும்படியாக இருந்தன. சிறந்த சிறுகதைகளும், நாவல்களும் தொடர்களாக்கப்பட்டன. நாம் யாராவது அவை வேண்டாம். தினந்தோறும் கழுத்தை அறுக்கும் இந்த ரம்பங்கள் வேண்டும் என்று கேட்டோமா?
சினிமாவில் இடமில்லாத இலக்கியங்களுக்குத் தொலைக் காட்சியில் நிறைய இடமிருந்தது. னல்ல படைப்பாளிகள் வந்து கொண்டிருந்த நேரமது.என்னவாயிற்று திடீரென்று? எங்கிருந்து வந்தது இந்த மெகா சீரியல் மோகம்? சாட்டிலைட் டி.வி. வந்தது முதல் ஸ்டார் டிவி போன்ற ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட “போல்ட் அண்ட் பியுட்டிஃபுல்”, “சண்டா பார்பரா” போன்ற பல வருடங்களுக்கும் மேலாக ஓடிய அந்தத் தொடர்கள் தான் நம் தயாரிப்பாளர்களுக்கு பேராசை வரக் காரணமாக இருந்த முன்னோடிகள். சில வாரங்களுக்காக மட்டுமே கதை தேடி தயாரித்துச் சொற்ப காசுபார்த்து வேறொரு தயாரிப்பாளருக்கு ”ஸ்லாட்டை” விட்டுக் கொடுக்க வேண்டும்?மொத்தமாக ‘ஸ்லாட்’ புக் பண்ணி வைத்துக் கொண்டு கதை பண்ணிக் கொண்டே போகலாமே?
அந்த மேல்னாட்டு சீரியல்களை நான் பார்த்ததில்லை அதனால் அவை பற்றிய விமர்சனம் கூற நான் ஆளில்லை. ஆனால் அவை நமக்கு விளைவித்த கேடுகள் நமது மெகா சீரியல்கள்.
பல வருடங்களுக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? இங்கே எழுதக் கூசும் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
ஏன் இந்த ஊடகங்கள் இப்படிக் குப்பைகளைத் திணிக்கிறார்கள்? இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். நிச்சயமாக. டி.ஆர்.பி ரேட்டிங் சட சட வென சரிய வேண்டும் அனைத்து மெகா சீரியல்களுக்கும். ஆனால் வீட்டில் வயதான்வர்களும் ஓய்வு பெற்றவர்களும் தான் இவற்றுக்கு முதல் ரசிகர்கள். ஆனால் அவர்களோடு சேர்ந்து மொத்தக் குடும்பமே அல்லவா பார்க்க வேண்டி இருக்கிறது?அவர்கள் கண்களை எப்படி இதன் முன்னிருந்து அகற்றுவது?யோசிப்போம்.
ஏன் இவர்கள் சீரியல்களை நாடுகிறார்கள். தனிமை. ஒதுக்கப்பட்ட உணர்வு. பேச ஆளில்லாமை. அதற்கு என்ன மருந்தோ அதைக் கொடுக்க முயல்வோம்.பல வீடுகளில் குழந்தைகள் ஒரு தீவாகவும் அவர்கள் தாத்தா பாட்டி இன்னொரு தீவாகவும் இருக்கிறார்கள். அவர்களை நாம் தான் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு தனி பதிவே போட வேண்டும். இல்லையா?

8 comments:

நட்புடன் ஜமால் said...

முன்பு பாலச்சந்தர் சீரியல்கள் வந்தது

இப்போ மீண்டும் தரவிறக்கம் செய்து பார்த்தேன்.

எவ்வளவு எதார்த்தமா இருந்தது.

இப்பல்லாம் விளம்பரங்களுக்காக தான் தொ(ல்)லைக்காட்சிகள்.

அடிக்‌ஷன் தவிர்க்க முடியவில்லை.

மாதவராஜ் said...

பாலு மகேந்திராவின் கதை நேரமும் தொலைக் காட்சித் தொடர்களில் முக்கியமானது.

இப்போது ஆட்ட பாட்டங்கள் கூட மெகா தொடர்கள் ஆகிவிட்டன. போட்டியில் தோற்று வெளியேறும் போது ஒரு சோக இசை. கொஞ்சம் கண்ணீர் முகம் எல்லாம் கலந்து காட்டப்படுகிறது. சிரிப்பை அடக்கமுடியவில்லை.

இந்த மெகா தொடர்களைப் பார்ப்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.நான்கு நாட்களுக்கு முன் என்ன நடந்தது என்றால் யோசிப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து பார்க்க வைக்கிற வசியம் தொடர்களுக்கு இருக்கிறது.

சினிமா என்பதன் வாலாய் (அனுமார் வாலாய்) நீண்டு போனதன் குறியீடுதான் இந்தத் தொடர்கள். கன்னித் தீவு முடிந்தால் கூட முடிந்து விடும் போல, இந்தக் கோலங்கள் முடியவே மாட்டேன்கிறது.

இந்த மெகா சீரியல்களுக்கு , ஸ்டார் டிவி தொடர்கள் என்றாலும் இராமாயணம், மகாபாரதத் தொடர்களையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

சினிமா, ரசனை பற்றித் தொடர்ந்து பேச வேண்டும். தங்கள் பிரசினைகளைத் தாண்டி, சமூகப் பிரச்சினைகளை பேசுகிற இடங்களாக வீடுகள் மாறினால் இந்தக் குட்டிச் சாத்தான்களின் தொல்லை குறைய வாய்ப்புண்டு.

சந்தனமுல்லை said...

உண்மைதான்..ஒண்ணு தொடர்நாடகமா இருக்கிறது..இல்லை ரியாலிட்டி ஷோக்கள் மயமாக! மக்கள் டீவி கொஞ்சம் மாற்றாக இருக்கிறது...தொடர்நாடகம் பார்த்தால் நன்றாக இருக்கும் உறவுகளும் நாளடவில் தொடர்பு விடுபட நிறைய சாத்தியங்கள் உண்டு..:-))! நல்ல பதிவு தீபா!

Deepa said...

வாங்க ஜமால்!

நேற்றே வந்துட்டீங்க போல. ஆமாம், விளம்பரங்கள் கொடுக்கும் காசுக்காகத் தான் இந்த அலைச்சல். நான் பார்க்கா விட்டால் விளம்பரங்களும் இல்லை, இந்தத் தொல்லைகளும் இல்லையே.

வாங்க அங்கிள்!

ஆமாம் கதை நேரம் முக்கியமானது. அது மேலும் சில வருடங்களுக்குப் பின் சன் டிவியில் வந்ததால் தனியாகக் குறிப்பிட வேண்டுமென்று நினைத்தேன். தவறிவிட்டேன்.

//இராமாயணம், மகாபாரதத் தொடர்களையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.//
அவை நன்றாகத் தான் இருந்தன, என்பது என் கருத்து.

சந்தனமுல்லை!

ஆமாம்! ரியாலிட்டி ஷோக்களில் எந்த ரியாலிட்டியும் இல்லை. மகா போலியான கேல்க் கூத்துக்கள் அவை! அது பற்றி நான் எப்போதோ எழுதிய ஆங்கிலப் பதிவின் சுட்டி இங்கே:

http://deepajoe.blogspot.com/2007/10/reality-shows-happened-to-watch-one-of.html

Rajaraman said...

சரியான நேரத்தில் எழுதப்பட்ட அவசியம் தேவையான பதிவு.

ஆ.சுதா said...

ஏல்லோருக்கும் இது வெளிச்சமாக தெறியும். முதலில் முழுக்க முழுக்க பென்களை தனிமைபடுத்தி அவர்களை முழுவதுமாக ஈர்த்துக்கொண்டு அதில் தொலையவைதார்கள், இப்போது ஆன்களுக்கும் வளைவிரிக்கராங்களா
எல்லாம் வியாபாரமா போச்சி,
இதைபற்றி ஆதங்கபடவும் விவாதம் பன்ன முடியுமே தவிற மாற்றங்களை கொண்டு வரிவதில்லை ஏன்..?

பட்டாம்பூச்சி said...

புரிதலுடன் கூடிய புறக்கணிப்பு மட்டுமே இதற்கு தீர்வு.

Unknown said...

//ஏன் இவர்கள் சீரியல்களை நாடுகிறார்கள். தனிமை. ஒதுக்கப்பட்ட உணர்வு. பேச ஆளில்லாமை. // சத்தியமா இல்லீங்க. சொல்ல கஷ்டமா இருக்கு, பேரக்குழந்தைகள், பல நாட்களாகப் பார்க்காத உறவு என்றால் கூட, உறவுகளைப் புறந்தள்ளி விட்டு இந்த சீரியல் நேரங்களில் சீரியல்கள் தாம்:-( சொல்லி முடியலை!!!

நான் ஊர்ப்பக்கம் எப்பவாவது தான் வரேன், வந்தால், இந்த சீரியல்கள் இல்லாதப்போ தான் உறவுகளைப் போய்ப் பாக்க முடியும்:-(

சந்தனமுல்லை, //தொடர்நாடகம் பார்த்தால் நன்றாக இருக்கும் உறவுகளும் நாளடவில் தொடர்பு விடுபட நிறைய சாத்தியங்கள் உண்டு..// சத்தியமான வார்த்தை. சினிமாவிலிருந்து வர்ற வன்முறைக்கு உள்ள தாக்கம், இந்த கண்ணீர்க் காவியங்களில் வர்ற (மாமியார், மருமகள் / நாத்தனார், அண்ணி ) மென்-வன்முறைக்கும் உண்டு!!