Thursday, May 26, 2011

நேஹா நேரம்!

"நேஹா, தண்ணி குடிச்சிட்டு டம்ளரை இப்படி தூக்கிப் போடற? இது என்ன பழக்கம்?"

கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி "நல்லப் பழக்கம்"

என்னது?

"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"

மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,
"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"
"கால்ல அடிபட்டிருக்குடா"
"ரொம்ப‌ வ‌லிக்குமா?"
"ஆமாண்டா, க‌ட்டு போட்டு ஊசி போடுவாங்க‌, ச‌ரியாயிடும்"
"இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?"
"ஹாஸ்பிட‌ல்ல‌.."
"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"
:)

ந‌ல்ல‌ மூடில் இருந்தால், அவ‌ளைச் செய்ய‌க் கூடாது என்று த‌டுத்து வைத்திருக்கும் வேலைக‌ளை நாம் செய்யும் போது,
"என‌க்கு இப்ப‌ தெரியாதும்மா, பெரிய‌ பொண்ணான‌வுட‌னே நானும் செய்வேன்." என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்ட‌ர் ஓட்டுவ‌து, க‌த்தியை உபயோகிப்ப‌து, குழ‌ந்தையை குளிப்பாட்டுவது உட்ப‌ட‌ ப‌ல‌ அட‌க்க‌ம்.

அலுவ‌ல‌க‌த்துக்குக்க் கிள‌ம்பும் போது கேட்ட‌ருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை ம‌ற‌ந்து விட்டு மீண்டும் ஓடி வ‌ந்தேன். அய்யோ குழ‌ந்தை நாம் திரும்பி வ‌ந்து விட்ட‌தாக‌ ஏமாந்து விட‌ப் போகிற‌தே என்ற பயம் வேறு. ஆனால் "ஹெல்மெட் ம‌ற‌ந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்ற‌ப‌டி ஓடிச் சென்று எடுத்து வ‌ந்ததுட‌ன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"

பெரிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ம‌ரியாதை கொடுத்துப் பேசுவ‌து என்ற‌ பேச்சே இல்லை. :‍( (உண்மையில் ரொம்ப‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து என‌க்கு.)

ஆனால் ஒன்ப‌து வ‌ய‌தாகும் என் அக்கா ம‌க‌னை, "நிகில‌ண்ணா, இங்கே உட்காருங்க" என்ப‌தும், அவ‌னை யாராவ‌து அத‌ட்டினால் அவ‌ர்க‌ளுக்கு வ‌சை மாரி பொழிவ‌தும் தாங்க‌ முடிய‌வில்லை.
ஆனால் ஒரு முறை அவனை அத‌ட்டிக் கொண்டிருந்த‌ அவ‌ன‌து அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உட‌னே இவ‌ள்,
"டேய் நிகில், ம‌ரியாதையாப் பேசுடா."

ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. "அப்பா எங்கே" என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.

ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், "அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!" இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.

அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், "நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :)

Monday, May 16, 2011

மீட்சி

சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.

Friday, April 15, 2011

சின்ன‌க் குயிலுக்கு...

என் இனிய சின்னக் குயில் சித்ராவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக் கூடாது. எப்போதும் குழந்தை போலச் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ள் விற்கும் க‌டையொன்றில் "பாடகி சித்ரா எங்க‌ள் வாடிக்கையாள‌ர்" என்று சொன்னதால் அந்த‌ப் ப‌க்க‌ம் செல்லும் போதெல்லாம் அவ‌ர் வ‌ந்திருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். 'அவ‌ர் குழ‌ந்தையை அழைத்துக் கொண்டு வ‌ரும் போது என‌க்குத் தெரிவியுங்கள்' என்று கூட‌ அந்த‌க் க‌டைக்கார‌ரிட‌ம் சொல்லி வைத்திருந்தேன். அந்த‌ அள‌வுக்குச் சித்ராவைப் பிடிக்கும். இசை என்னும் ச‌ஞ்சீவி அவரது துய‌ரை மாற்றட்டும். வேறெதுவும் சொல்ல‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.

Friday, March 25, 2011

நமக்குச் சுதந்திரம் த‌ரும் பெண்கள்

ஆயிற்று, பேறு கால‌ விடுமுறை முடிந்து அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ வேண்டும். அரை நாள் ப‌ள்ளிக்குச் செல்ல‌ ஆர‌ம்பித்திருக்கும் மூன்று வ‌ய‌துக் குழ‌ந்தை, கைக்குழ‌ந்தை இர‌ண்டையும் பாதுகாப்பாக‌ விட்டுச் செல்ல‌ வேண்டும். காலையிலேயே முழு நாளைக்குமான ச‌மைய‌ல் முடித்துக் கையிலும் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்தால் குழ‌ந்தைகளுட‌ன் நேர‌ம் செல‌விட‌ வேண்டும். இடையில் நம் ம‌ன‌த்திருப்திக்காக‌வும் ஆசைக்காக‌வும் இணைய‌த்தில் உல‌வ‌ வேண்டும். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேச‌ வேண்டும். இத்தனையும் எனக்குச் சாத்தியப்படுவது யாரால் என்று நினைக்கிறீர்கள்?

படித்து வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ள‌து க‌ண‌வ‌ர் பெற்றோரையும் விட‌ அதிக‌ அள‌வு உறுதுணையாக‌ இருப்ப‌து அவ‌ர்க‌ள் வீட்டு வேலைக்கு வ‌ரும் பெண்க‌ளே.


நாம் ந‌ம‌க்கு ர‌சனையான‌ வேலைக‌ளிலும், 'ந‌ம் திற‌மைக‌ள் வெளிப்ப‌டும்' வேலைக‌ளிலும் ஈடுப‌டுவ‌த‌ற்காக‌, ந‌ம‌து வீட்டின் ந‌ச்சுப் பிடித்த‌ வேலைக‌ளை அவ‌ர்க‌ள் வாங்கிக் கொள்கிறார்க‌ள்.

வீட்டு வேலைகளில் சரிசமமாகப் பங்கேற்கத் தயங்கும் ஆணாதிக்கம் இன்னும் ஒழியாத குடும்பச் சூழலில் நாம் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து இவ‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கிக் கொள்வ‌து வேலைகளை மட்டுமல்ல ந‌ம‌க்கான‌ சுத்ந்திர‌த்தை. இதை நாம் உண‌ர்ந்திருக்கிறோமா என்று தெரிய‌வில்லை.

ஆயிரம் முற்போக்குக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்தாலும் நம் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களை எப்படி நடத்துகிறோம் என்றொரு சுயபரிசீலனை செய்வது மிக அவசியம் என்று தோன்றியது.

ஆணாதிக்கத்தின் பிடியில் இருக்கும் பெண்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நபர்களாக் இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் மாட்டுகிறார்கள் போலும்; வீட்டு ஆண்களின் முன் இவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் இருப்பது போல்.

முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஓரளவு ஆண்களுக்குச் சமமான உரிமை பெற்றிருக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு வருபவர்களைக் கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஆனால் சென்ற‌ த‌லைமுறையின் அழுக்கு போகாத‌ சில‌ர் அவ‌ர்க‌ளுக்குத் த‌ரும் அறிவுரைக‌ள் இருக்கின்ற‌ன‌வே. ஐய்யோ!

என் தோழியொருத்தியின் வீட்டில் அவரது வீட்டில் வேலை செய்பவர் தேனீர் அருந்திக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வ‌ந்த‌ தோழியின் உற‌வுக்கார‌ப் பெண்ம‌ணி ஒருவ‌ர் அதிர்ந்து விட்டாராம். வேலை செய்யும் பெண் போன‌ பின்பு என் தோழிக்கு செம டோஸாம். "என்ன‌ இது, வேலைக்காரியை எல்லாம் வைக்க‌ வேண்டிய‌ எட‌த்துல் அவெக்க‌ணும். சோஃபால‌ உட்கார‌ வெச்சு ச‌ரிக்குச் ச‌ம‌மா பேசிக்கிட்டிருக்கியே? இப்ப‌டியெல்லாம் பண்ணா அவ‌ உன்னை ம‌திக்க‌வே மாட்டா." ?!!

தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைக‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்தால் தான் நீங்க‌ள் நிம்ம‌தியாக‌ வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் ‌ச‌ம்பாதிக்க‌ முடியும். இதில் எங்கே வ‌ருகிற‌து ஏற்ற‌த் தாழ்வு? ப‌ர‌ஸ்ப‌ர‌த் தேவைக்கான‌ ஒப்ப‌ந்த‌த்தில் பொருளாதார‌த்தில் ஓங்கி இருக்கும் ஒரே கார‌ண‌த்தினால் அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌க் கூட‌ ம‌திக்காத‌ ந‌ட‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌து?

நான் அன்பாகத் தான் இருக்கிறேன். இரக்கம் பாராட்டுகிறேன் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் அன்பும் இரக்கமும் அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னவிதமான மரியாதை எதிர்பார்ப்பீர்களோ அதை வழங்க வேண்டும் உங்கள் வீட்டு வேலைக்கு வருபவருக்கு.

யாரும் யார் வீட்டு வேலையையும் செய்து பிழைக்க வேண்டிய சூழல் இல்லாத, நச்சுப்பிடித்த வேலைகளுக்கெல்லாம் எந்திரங்கள் வந்துவிடும் காலம் ஒரு நாள் வரும். அதுவரை இந்தச் சூழலில் இருதரப்புக்கும் ஆதாயம் இருப்பதால் அதனை ஓரளவு நியாயமாக்கிக் கொள்ளலாமே.

த‌ங்க‌ள் வீட்டில் வேலை பார்ப்பவருடன் தாம் நல்லவிதமாகத்தான் ப‌ழ‌குவ‌தாக‌ ந‌ம்புப‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ கேள்விக‌ளுக்கு ம‌ன‌திற்குள் ப‌தில் சொல்லிச் சோதித்துக் கொள்ள‌லாம் (நானும் தான்) :

1. வீட்டின் மற்ற அறைகளை அவர்கள் சுத்தம் செய்யட்டும். கழிவ்றைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்கிறீர்களா?

2. சாப்பிட்ட தட்டுகளைச் சுத்தமாய் ஒழித்து ஒரு முறை நீரில் கழுவிப் போடுகிறீர்களா?

3. உங்க‌ள் ம‌னைவி அல்ல‌து க‌ண‌வ‌ர் வரவேற்பறையில் சோஃபாவில் அம‌ர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டுவேலைக்கு வ‌ருப‌வ‌ர் வேலைக‌ளை முடித்து விட்டு வ‌ந்து அவ‌ர் எதிரே அம‌ர்ந்து கொள்கிறார். உங்க‌ளுக்குக் கோப‌ம் வ‌ருகிற‌தா?

4. நீங்க‌ள் அவ‌ருக்காக‌த் தேனீரோ சிற்றுண்டியோ த‌யாரித்தால் உண‌வு மேஜை மீது உட்கார‌ச் சொல்லிக் கொடுக்கிறீர்க‌ளா? (அவரே மறுத்தாலும்)

5. உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் அவ‌ரை மரியாதையுடன் அழைக்கிறார்க‌ளா அல்ல‌து பெய‌ர் சொல்லியா?

6. அவ‌ர்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வீட்டுக்கு வ‌ந்தால் உங்க‌ள் குழந்தைகளுடன் ச‌க‌ஜ‌மாக‌ விளையாடுகிறார்களா அல்ல‌து அமைதியாக மூலையில் அம‌ர்ந்து கொள்கிறார்க‌ளா?

7. அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ ப‌டிக்கிறார்க‌ள், எப்ப‌டிப் ப‌டிக்கிறார்கள் என்ப‌தில் உங்க‌ளுக்கு அக்க‌றை உண்டா?

8. வார‌ம் ஒரு நாள் விடுமுறை உண்டா அவ‌ர்க‌ளுக்கு?

9. உங்களை அவர் அம்மா/ஐயா என்று அழைக்கிறாரா பெயர் சொல்லியா?

10. இன்னும் தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள். I want to reform myself!

Wednesday, March 23, 2011

A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா









ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.

தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டிகளுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.

மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.


நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட‌ வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.


ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.

பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் க‌ன‌விலியும் ந‌ட‌க்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.

க‌டின‌ உழைப்பு, உற்சாக‌ம், காத‌ல், க‌ன‌வுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய‌ சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.


இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத‌ ப‌ட்ச‌த்தில் தாமோத‌ருட‌ன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ண‌ம் அவ‌ன் ம‌ன‌தோர‌த்தில் இருந்து வ‌ருகிற‌து.

இந்திய ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌க் கூட்டுக் குடும்ப‌த்தின் வாழ்க்கை முறை மிக‌வும் எதார்த்த‌மான‌ முறையில் க‌தையில் விரிகிற‌து. புதிதாக‌த் திரும‌ண‌மான‌வ‌ர்க‌ளுக்காகப் வாட‌கைக்குக் க‌ட்டில் எடுப்ப‌தும் ப‌த்து நாளான‌தும் அது திருப்ப‌ப்ப‌ட்டு விடுவ‌தும், ஒரே அறையின் இடையில் த‌டுப்பு அமைத்து இரு குடும்ப‌ங்க‌ள் ப‌டுத்துக் கொள்வ‌தும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை க‌ருவுறுவ‌தும் நம‌க்குப் புதிதான‌ ச‌ங்க‌திக‌ள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட‌‌ விதம் ந‌ம்மை அடித்துத் தான் போடுகிற‌து.


குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்கார‌ரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது ப‌ட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவ‌ர் ப‌த‌றுவ‌தும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு த‌ர‌வேண்டுமே என்று ர‌வி குழ‌ந்தையை அடித்து நொறுக்குவ‌தும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத‌ சோக‌ நாட‌க‌ம்.


மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.

அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.

'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.


கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.

ஆங்கில‌ வாச‌க‌ர்க‌ளுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டுவ‌த‌ற்காக எழுதப்பட்ட புத்த‌க‌கமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் க‌ம‌லா மார்க்க‌ண்டேயா ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி ஓர் இட‌துசாரியாக‌ மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்ப‌தாலேயே இந்த‌க் க‌தை முக்கிய‌மாக‌ப் ப‌டுகிற‌து.

Sunday, March 6, 2011

நேஹா நேரம் (பிறந்தநாள் சிறப்பிதழ்!)

கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாள். பால்கனியில் நின்று சாதம் ஊட்டும் போது ரோட்டில் போகிறவர்களை "அது யாரு, அவங்க எங்கே போறாங்க...", விளம்பரங்களைப் பார்த்து "அது என்ன இது என்ன, அவங்க என்ன பண்றாங்க..." என்பதாக ஆரம்பித்திருக்கிறது நேஹாவின் கேள்வி கேட்கும் படலம்.

புத்தகங்கள் மீது ஆசை இன்னும் போகவில்லை. பல முறை படித்த அரிச்சுவடிப் புத்தகங்களைக் கூட ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்து படங்கள் பார்த்துப் பெயர் சொல்லி விடுகிறாள். நான் படிக்க நினைத்து அருகில் வைத்துக் கொண்டிருக்கும் புத்த்கங்களை எடுத்து அம்மா புக் படிக்கிறேன் என்பதும் அதில் அட்டையில் அவளுக்குத் தெரிந்த எழுத்துக்களைச் சொல்லிப் பார்ப்பதும் நடக்கிறது.

கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.

அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள். பெரியவர்கள் பாடு தான் கஷ்டம்!

மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம். அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

Enough in third person...!

உனக்கு அடுத்து தங்கை பிறந்ததும் உன் மீது கவனம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினாலேயே நீ இன்னும் செல்லமாகி விட்டாய் நேஹா. இதை நீ புரிந்து கொள்ளும் நாளும் வரும். ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன.

நன்றியுள்ள விலங்கின் மீது என்ன பாசமோ, சில சமயம் (அன்னியன் டைம்ஸ்)சகட்டு மேனிக்கு எல்லாரையும் அதன் பெயர் சொல்லி அழைக்கிறாயே? சரி ஒரு விலங்கோடு போகிறதே என்று விட்டு விட்டேன். நல்லவேளை நீ அனிமல் ப்ளானட் இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை.

வேடந்தாங்கல் சென்ற போது குரங்குகளைப் பார்த்துக் குதூகலித்தாய். "பெரிய குரங்கு ப்ரட்டை மோந்து பாத்து தூஊஊக்கிப் போட்டுச்சு, சின்ன குரங்கு அழக்க்கா சாப்டுச்சு" என்பதில் உனக்கு அத்தனை பரவசம். அத்தனை என்றதும் நினைவுக்கு வருகிறது.

"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி" "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.
ஃபோட்டோ எடுத்தால் அழகாகப் போஸ் கொடுக்கிறாள்; மேலும் நான் பாக்கணும் என்று வாங்கிப் பார்க்கிறாய். நேரங்கெட்ட நேரங்களில் த‌ன் நண்பர்கள் வீடுகளுக்குப் போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய்.

உனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, "அன்னிக்கு அந்த ப்ளாக் நாய் பாத்துட்டே சாப்டோம்ல, அது மாரி...." என்று அதை மறுபடியும் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.

ஸ்கூலுக்குப் போவதற்கு உனக்குப் பிடித்துத் தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத் தான் பிடிப்பதில்லை. " போ நான் தூங்கப் போறேன்." என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் எழுந்திருக்கிறாய். சட்டென்று ஏதோவொரு கணத்தில் மூடு மாறி குஷியாகி விடுகிறாய். அந்தத் தருணம் எப்போதென்று தான் இன்னும் பிடிபடவில்லை எனக்கு.

வேறென்ன சொல்வது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be!

Sunday, February 27, 2011

What's (not) in a name?!

என்னத்த எழுதறதுன்னு ஒரு மனநிலையில் இருக்கும் போது இப்படி தொடர் பதிவு, அதிலும் சொந்தக் கதை எழுதக் கூப்பிட்டா ஈஸியாத்தான் இருக்கு. அஃப்கோர்ஸ் எழுதற எனக்கு மட்டும் தான் ஈஸி!

என் முழுப்பெயர் தீபலக்ஷ்மி. இதை இப்போதெல்லாம் தீபலட்சுமி என்றும் எழுதினால் ஏற்றுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பிடிக்காது.

என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் உண்மையில் அரிதான் அழகான பெயர்கள். காதம்பரி, ஜெயசிம்மன். நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், உனக்கு மட்டும் ஏன் அப்படி அழகான பெயர் வைக்கலன்னு. என் அண்ணனும் அவன் பங்குக்கு முடிந்தவரை இது பற்றி வெறி கொட்டியிருக்கிறான்.

வீட்டில் கேட்ட போது நீ தீபாவளி அன்னிக்குப் பிறந்ததால் தீபான்னு வெச்சோம். லக்ஷ்மி சேத்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு நினைச்சோம்னு. எனக்கு என் பெயர் பற்றிப் பெருமையும் இல்லை, பெரிதாக வருத்தமும் இல்லை. என் நெருங்கிய தோழி ஜோதிலட்சுமி. அவளுக்கும் பெயரில் லட்சுமி இருப்பது பிடிக்காது. எங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. எந்த ஆசிரியையாவது என்னை தீபா எனறும் அவளை முழுப் பெயர் சொல்லியும் அழைத்து விட்டால் போச்சு. அவள் மூட் அவுட் ஆகி விடுவாள். இது ரிவர்சில் நடந்தால் நான் ரொம்பப் பொருட்படுத்த மாட்டேன். மீ குட் கேர்ல் நோ!?

ஆனால் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களான போது பலரும் எங்கள் பெயர்ப் பொருத்தத்தைக் குறிப்பிட்டுப் பேசும் போது இருவருக்குமே பெருமையாக இருக்கும். நாங்கள் சேர்ந்து சொந்தமாக லைபரரி வைக்க வேண்டும், ஸ்கூல் நடத்த‌ வேண்டும் என்றெல்லாம் கனவுகளுடன் பேசிக் கொண்ட போது அதற்கு 'தீப்ஜோதி' என்று நாமகரணம் சூட்டிப் பரவசப்பட்டிருக்கிறோம்.

ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் படித்த காலத்தில் இங்கிலிஷ் பெயர்களின் மீது மோகம் இருந்தது. எனிட் ப்ளைடன் கதைகளில் வரும் சிறுமிகளின் பெயர்களெல்லாம் அழகாகத் தோன்றி இருக்கின்றன. பெஸ்ஸி, கோனி, ஜார்ஜினா என்ற பெயர்களெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.அதே போல் ஆர்ச்சி காமிக்ஸில் வரும் பெட்டி, வெரோநிகா.

அம்புலி மாமா கதைகளில் வரும் அழகான தமிழ்ப்பெயர்கள் மீதும் காதல் இருந்தது. வெயில்கால மதிய‌ நேரங்களில் உட்கார்ந்து 'கதை பண்ணி' விளையாடும் போது ராஜா ராணி இளவரசிக்கெல்லாம் அழகழகாக்ப் பெயர் சூட்ட உதவியது அம்புலிமாமா கதை மாந்தர்கள் தாம்.

குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் தான் சூட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் நேஹா என்ற பெயருக்கு 'அன்பு' என்று அர்த்தம் இருப்பதாலும் ஏனோ ரொம்பப் பிடித்துவிட்டது.

என் சித்தப்பா தனது மூன்று மகள்களுக்கும் அழகான தமிழ்ப்பெயர் சூட்டி இருக்கிறார். பூங்குழலி (பொ.செ இன்ஸ்பிரேஷன்), வண்டார்குழலி, மற்றும் கார்குழலி.
வீட்டில் இவர்கள் முறையே அமுதா அருணா மற்றும் வனிதா. இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியைகள் "ஏங்க நீங்க மட்டும் வீட்ல கூப்பிட ஈஸியான பேரா வெச்சிட்டு, எங்கள இப்டி ட்ரில் வாங்குறீங்களே" என்று கமென்ட் அடித்ததுண்டு.

தன் பெயரைக் "காதுக்குள்ள ஈ" என்று சக மாணவர்கள் கேலி செய்வதாகக் கார்குழலி சொல்லிச் சிரித்ததுமுண்டு. ஆனாலும் குழலி சிஸ்டர்ஸ் பெயருக்காகவே பிரபலம் தான்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஊரெல்லாம் வைத்த அளவு என் பெயர் ரொம்பப் பிரபலமும் (common) அல்ல, ரொம்ப அரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. ஆனாலும் தீபா என்ற என்ற பெயர்ச் சுருக்கம் எனக்குப் பிடிக்கும் தான். அதிலும் என் மீது மிக்க அன்புள்ளவர்கள் தீபூ என்று அழைப்பது மிகவும் பிடிக்கும். அப்படி என்னை அழைப்பவர்கள் ரொம்பக் கம்மி. என் ரூம்மேட் சுதா, எப்போதாவது அங்கிள், சில உறவினர்க்ள், இப்போது ஜோ! என்ன கோபமாக இருந்தாலும் தீபூ என்று அழைத்துச் சண்டை போட்டால் நான் தணிந்து விடுவேன். இந்த ரகசியம் அவருக்குப்பல சமயம் மறந்து விடுகிறது, என்ன செய்வது!

கல்லூரியில் பெரும்பாலும் நண்பர்களுக்கு நான் 'தீப்ஸ்'. அப்போது தான் ஒரு சுவாரசியமான விஷயம் கண்டுபிடித்தேன். நடந்து செல்லும் போது சில சமயம் பசங்க ஸ்பீட் ஸ்பீட் என்று கத்துவார்கள். எதுக்குடா நமக்கு இப்படி ஒரு பெயர்னு எனக்குக் குழப்பம். பிறகு தெரிந்தது Deeps ஐத் திருப்பி எழுதினால் Speed என்று. அட நம்ம பேர்ல இப்படி ஒரு விஷய்ம் இருப்பது நமக்கே இதுவரை தெரியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

இத்துடன் என் பெயர்ப் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்! அழைத்த அகில்ஸுக்கு நன்றி!