ஆயிற்று, பேறு கால விடுமுறை முடிந்து அலுவலகம் செல்ல வேண்டும். அரை நாள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மூன்று வயதுக் குழந்தை, கைக்குழந்தை இரண்டையும் பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டும். காலையிலேயே முழு நாளைக்குமான சமையல் முடித்துக் கையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். இடையில் நம் மனத்திருப்திக்காகவும் ஆசைக்காகவும் இணையத்தில் உலவ வேண்டும். நண்பர்களுடன் பேச வேண்டும். இத்தனையும் எனக்குச் சாத்தியப்படுவது யாரால் என்று நினைக்கிறீர்கள்?
படித்து வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்களுக்கு அவர்களது கணவர் பெற்றோரையும் விட அதிக அளவு உறுதுணையாக இருப்பது அவர்கள் வீட்டு வேலைக்கு வரும் பெண்களே.
நாம் நமக்கு ரசனையான வேலைகளிலும், 'நம் திறமைகள் வெளிப்படும்' வேலைகளிலும் ஈடுபடுவதற்காக, நமது வீட்டின் நச்சுப் பிடித்த வேலைகளை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டு வேலைகளில் சரிசமமாகப் பங்கேற்கத் தயங்கும் ஆணாதிக்கம் இன்னும் ஒழியாத குடும்பச் சூழலில் நாம் சம்பளம் கொடுத்து இவர்களிடமிருந்து வாங்கிக் கொள்வது வேலைகளை மட்டுமல்ல நமக்கான சுத்ந்திரத்தை. இதை நாம் உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை.
ஆயிரம் முற்போக்குக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்தாலும் நம் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களை எப்படி நடத்துகிறோம் என்றொரு சுயபரிசீலனை செய்வது மிக அவசியம் என்று தோன்றியது.
ஆணாதிக்கத்தின் பிடியில் இருக்கும் பெண்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நபர்களாக் இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் மாட்டுகிறார்கள் போலும்; வீட்டு ஆண்களின் முன் இவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் இருப்பது போல்.
முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஓரளவு ஆண்களுக்குச் சமமான உரிமை பெற்றிருக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு வருபவர்களைக் கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஆனால் சென்ற தலைமுறையின் அழுக்கு போகாத சிலர் அவர்களுக்குத் தரும் அறிவுரைகள் இருக்கின்றனவே. ஐய்யோ!
என் தோழியொருத்தியின் வீட்டில் அவரது வீட்டில் வேலை செய்பவர் தேனீர் அருந்திக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த தோழியின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிர்ந்து விட்டாராம். வேலை செய்யும் பெண் போன பின்பு என் தோழிக்கு செம டோஸாம். "என்ன இது, வேலைக்காரியை எல்லாம் வைக்க வேண்டிய எடத்துல் அவெக்கணும். சோஃபால உட்கார வெச்சு சரிக்குச் சமமா பேசிக்கிட்டிருக்கியே? இப்படியெல்லாம் பண்ணா அவ உன்னை மதிக்கவே மாட்டா." ?!!
தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள். அவர்கள் வந்தால் தான் நீங்கள் நிம்மதியாக வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் சம்பாதிக்க முடியும். இதில் எங்கே வருகிறது ஏற்றத் தாழ்வு? பரஸ்பரத் தேவைக்கான ஒப்பந்தத்தில் பொருளாதாரத்தில் ஓங்கி இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நடத்தை எவ்வளவு கேவலமானது?
நான் அன்பாகத் தான் இருக்கிறேன். இரக்கம் பாராட்டுகிறேன் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் அன்பும் இரக்கமும் அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னவிதமான மரியாதை எதிர்பார்ப்பீர்களோ அதை வழங்க வேண்டும் உங்கள் வீட்டு வேலைக்கு வருபவருக்கு.
யாரும் யார் வீட்டு வேலையையும் செய்து பிழைக்க வேண்டிய சூழல் இல்லாத, நச்சுப்பிடித்த வேலைகளுக்கெல்லாம் எந்திரங்கள் வந்துவிடும் காலம் ஒரு நாள் வரும். அதுவரை இந்தச் சூழலில் இருதரப்புக்கும் ஆதாயம் இருப்பதால் அதனை ஓரளவு நியாயமாக்கிக் கொள்ளலாமே.
தங்கள் வீட்டில் வேலை பார்ப்பவருடன் தாம் நல்லவிதமாகத்தான் பழகுவதாக நம்புபவர்கள் கீழே உள்ள கேள்விகளுக்கு மனதிற்குள் பதில் சொல்லிச் சோதித்துக் கொள்ளலாம் (நானும் தான்) :
1. வீட்டின் மற்ற அறைகளை அவர்கள் சுத்தம் செய்யட்டும். கழிவ்றைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்கிறீர்களா?
2. சாப்பிட்ட தட்டுகளைச் சுத்தமாய் ஒழித்து ஒரு முறை நீரில் கழுவிப் போடுகிறீர்களா?
3. உங்கள் மனைவி அல்லது கணவர் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டுவேலைக்கு வருபவர் வேலைகளை முடித்து விட்டு வந்து அவர் எதிரே அமர்ந்து கொள்கிறார். உங்களுக்குக் கோபம் வருகிறதா?
4. நீங்கள் அவருக்காகத் தேனீரோ சிற்றுண்டியோ தயாரித்தால் உணவு மேஜை மீது உட்காரச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? (அவரே மறுத்தாலும்)
5. உங்கள் குழந்தைகள் அவரை மரியாதையுடன் அழைக்கிறார்களா அல்லது பெயர் சொல்லியா?
6. அவர்களது குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் உங்கள் குழந்தைகளுடன் சகஜமாக விளையாடுகிறார்களா அல்லது அமைதியாக மூலையில் அமர்ந்து கொள்கிறார்களா?
7. அவர்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பதில் உங்களுக்கு அக்கறை உண்டா?
8. வாரம் ஒரு நாள் விடுமுறை உண்டா அவர்களுக்கு?
9. உங்களை அவர் அம்மா/ஐயா என்று அழைக்கிறாரா பெயர் சொல்லியா?
10. இன்னும் தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள். I want to reform myself!
15 comments:
அருமையான பதிவு தீபா.
எல்லோருமே இதுபோல் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் வீட்டு வேலை செய்பவர்களும் மதிக்கத்தகுந்த மனிதர்களாகி விடுவார்கள். வீட்டு வேலை செய்பவர்களுக்கு மட்டும் சனி, ஞாயிறு விடுமுறை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். எத்தனையோ வீடுகளில் அந்த நாட்களில் கூட வேலை வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்து ஒரு வீட்டு வேலை செய்யும் அக்கா, காலை உணவை எடுத்துக்கொள்ள கூட நேரமில்லாமல், வேலைக்கு போகும் இடத்தில் கொடுக்கும் தேனீரை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வார். வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு போனபிறகு அவங்க வீட்டுக்காரர் "எத்தனை பேரிடம் இளித்து விட்டு வருகிறாய்?" என்றெல்லாம் கேட்டதாக வருத்தப்பட்டிருக்கிறார். பாவம்! இவர்கள் நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான்.
தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள். அவர்கள் வந்தால் தான் நீங்கள் நிம்மதியாக வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் சம்பாதிக்க முடியும். இதில் எங்கே வருகிறது ஏற்றத் தாழ்வு? பரஸ்பரத் தேவைக்கான ஒப்பந்தத்தில் பொருளாதாரத்தில் ஓங்கி இருக்கும் ஒரே காரணத்தினால் அவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நடத்தை எவ்வளவு கேவலமானது?
......நானும் இப்படி யோசித்தது உண்டு. They take those poor souls for granted.
பொதுவாக பத்திரிக்கைகளில் வேலைக்காரி ஜோக்ஸ் வரும்போது நான் நினைப்பேன்.. நீங்கள் எழுதி விட்டீர்கள்.. குட்
அவசியமான பகிர்வு...
இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் ---இப்படியாக எழுதி, எண்ணி பழக்கப்படுத்திக் கொண்டாலே நிறைய மாற்றங்களை நம்மிடையே காணலாம்.
உதவிக்கு ஆள் அமைத்துக் கொள்வதனையே ஒரு சமூக அங்கீகாரமாக காட்டிகொள்பவர்களுக்கிடையேதான் அது போன்ற மனநிலை சற்று தூக்கலாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது...
anyway good luck on your reformation :)
நல்லதொரு பகிர்வு.
Nice thoughts. Good post.
I have seen people hesitate to give 100 rupees to maid service, but won't mind spending in thousands for extravagant things.
அருமையான பதிவு.
தீபா!
லௌகீக வாழ்வில், தங்களை இழந்து ஓடிக்கொண்டு இருகிறவர்களின் பிடரியைப் பிடித்து கேள்விகள் எழுப்புகிற முக்கிய பதிவு இது.எந்தவித குற்ற மனப்பான்மையும் இல்லாமல் இருக்கிறவர்களை நிச்சயம் அசைய வைக்கும்.சரியான கோணத்தில் பார்த்திருக்கிறாய்.பாராட்டுகிறேன்.
நிச்சயமாய் இந்த விஷயத்தில் நாங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்..
அந்த மூன்று நாட்கள் விடுப்பு.. தவிர அவர் வீட்டில் ஏதாச்சும் விசேஷம் என்றாலும் லீவு.. முன்பணம்.. அக்கறையாய் பேசுதல்.. இப்படி .. உங்கள் கேள்விகள் அனைத்துமே சுய பரிசீலனைக்குரியவை..
நீங்க சொல்லும் அனைத்தும் நாங்க இங்கே கடைபிடிக்கிறோம்.
இப்ப மட்டுமல்ல நான் சிறுமியாய் இருந்த காலத்திலிருந்தே வேலை செய்யும் பெண்ணுக்கு சம உரிமை கொடுத்ததுண்டு..
இப்படி செய்வதால் பலத்த எதிர்ப்பும் வரும்.. சக மனிதப்பண்பற்றவரிடமிருந்து.. அவர்களே ஒதுக்கப்படவேண்டியவர்கள்.
இப்படி சம உரிமை வந்தால் சாதி , மத வேறுபாடற்று நாடு முன்னேறும்..
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி அகிலா!
நன்றி சித்ரா!
நன்றி சி.பி.செந்தில்குமார்!
நன்றி தெகா!
நன்றி சரவணக்குமார்
நன்றி ஓலை!
நன்றி சே.குமார்!
நன்றி அங்கிள்!
நன்றி ரிஷபன்!
நன்றி எண்ணங்கள்!
நன்றி அன்னா!
அருமையான பதிவு தீபா.
Arumaiyaana vaarthai.... "வீட்டு உதவிக்கு வருபவர்கள்" Great....
Thank you Nesan. :)
பாராட்டப்படவேண்டிய, கற்றுக்கொள்ளப்படவேண்டிய அவசியமான சிந்தனைகள்... மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... Written Nicely...
Post a Comment