கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாள். பால்கனியில் நின்று சாதம் ஊட்டும் போது ரோட்டில் போகிறவர்களை "அது யாரு, அவங்க எங்கே போறாங்க...", விளம்பரங்களைப் பார்த்து "அது என்ன இது என்ன, அவங்க என்ன பண்றாங்க..." என்பதாக ஆரம்பித்திருக்கிறது நேஹாவின் கேள்வி கேட்கும் படலம்.
புத்தகங்கள் மீது ஆசை இன்னும் போகவில்லை. பல முறை படித்த அரிச்சுவடிப் புத்தகங்களைக் கூட ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்து படங்கள் பார்த்துப் பெயர் சொல்லி விடுகிறாள். நான் படிக்க நினைத்து அருகில் வைத்துக் கொண்டிருக்கும் புத்த்கங்களை எடுத்து அம்மா புக் படிக்கிறேன் என்பதும் அதில் அட்டையில் அவளுக்குத் தெரிந்த எழுத்துக்களைச் சொல்லிப் பார்ப்பதும் நடக்கிறது.
கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.
அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள். பெரியவர்கள் பாடு தான் கஷ்டம்!
மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம். அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
Enough in third person...!
உனக்கு அடுத்து தங்கை பிறந்ததும் உன் மீது கவனம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினாலேயே நீ இன்னும் செல்லமாகி விட்டாய் நேஹா. இதை நீ புரிந்து கொள்ளும் நாளும் வரும். ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன.
நன்றியுள்ள விலங்கின் மீது என்ன பாசமோ, சில சமயம் (அன்னியன் டைம்ஸ்)சகட்டு மேனிக்கு எல்லாரையும் அதன் பெயர் சொல்லி அழைக்கிறாயே? சரி ஒரு விலங்கோடு போகிறதே என்று விட்டு விட்டேன். நல்லவேளை நீ அனிமல் ப்ளானட் இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை.
வேடந்தாங்கல் சென்ற போது குரங்குகளைப் பார்த்துக் குதூகலித்தாய். "பெரிய குரங்கு ப்ரட்டை மோந்து பாத்து தூஊஊக்கிப் போட்டுச்சு, சின்ன குரங்கு அழக்க்கா சாப்டுச்சு" என்பதில் உனக்கு அத்தனை பரவசம். அத்தனை என்றதும் நினைவுக்கு வருகிறது.
"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி" "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.
ஃபோட்டோ எடுத்தால் அழகாகப் போஸ் கொடுக்கிறாள்; மேலும் நான் பாக்கணும் என்று வாங்கிப் பார்க்கிறாய். நேரங்கெட்ட நேரங்களில் தன் நண்பர்கள் வீடுகளுக்குப் போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய்.
உனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, "அன்னிக்கு அந்த ப்ளாக் நாய் பாத்துட்டே சாப்டோம்ல, அது மாரி...." என்று அதை மறுபடியும் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.
ஸ்கூலுக்குப் போவதற்கு உனக்குப் பிடித்துத் தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத் தான் பிடிப்பதில்லை. " போ நான் தூங்கப் போறேன்." என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் எழுந்திருக்கிறாய். சட்டென்று ஏதோவொரு கணத்தில் மூடு மாறி குஷியாகி விடுகிறாய். அந்தத் தருணம் எப்போதென்று தான் இன்னும் பிடிபடவில்லை எனக்கு.
வேறென்ன சொல்வது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be!
17 comments:
சிறப்பிதழ் மிகவும் சிறப்பாக இருக்கிறது - மனதுக்கு நெருக்கமாக!!நேஹாவுக்கும் நேஹாவின் அம்மாவுக்கும் எங்களின் பிறந்தநாள் வாழ்த்தும் அன்பும்!
/ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன/
அவ்வ்ளோ டெரரா???
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!
Happy Birthday Neha. Neha rocks.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நேஹா. many more happy returns of day
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
அனுபவிப்பதை படிப்பவர்கள் அனுபவிக்கிறபடி
எல்லோராலும் சொல்ல முடிவதில்லை
உங்களுக்கு சொற்கள் இயல்பாய் கூடி வருகின்றன
மிகவும் அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
சிறப்பிதழ் சிறப்பாக இருக்கிறது... indli யில் வாக்களித்துவிட்டேன்...!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
\\\இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be! \\\
முல்லை சொல்வது போல மனதுக்கு நெருக்கமாக உணர முடிகிறது.
சிறப்பிதழ் - ஐடியா புதுமை. வாழ்த்துகள்!!
//கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று//
நெஜமாவே டெரர் பார்ட்டிதான் போல - நேஹாவைச் சொல்றேன்!! உங்க வீட்டுக்கு வந்தா கவனமா இருக்கணும்னு சொல்றீங்க, ரைட்டு!!
//அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.//
அவர் பரிதாபமா தன் நிலைமையைச் சொல்லி ஆறுதல் தேடலாம்னு வந்தா, நீங்க என்னடான்னா... இப்பத்தான் தெரியுது நேஹா எப்படி இப்படின்னு!! ;-))))))))
நேஹா குட்டி எப்போதும் இது போன்ற சின்ன சின்ன குறும்புத்தனங்களுடன் வளர வாழ்த்துகிறேன்.
இந்தக் குறும்புத்தனம் அவளைச் சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்தும்.
/*"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி" "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.*/
சோ ஸ்வீட்....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.
அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள்//
so sweet! :-)
//மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம்//
:-))
நாங்கள் தப்பிச்சோம். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தாள் எங்களிடம். (குலசாமி புண்ணியமாக இருக்கலாம்!) :-)
மிக அருமையான, நெகிழ்வான, ப்ரியமான உங்களின் கடிதம் நேஹாவிற்கு. விபரம் தெரிந்து வாசிக்கும் போது நிறைந்து போவாள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் நேகா!
அன்பு தீபா,
நல்லாயிருக்கு இந்த பதிவு. நெகிழ்வாய் இருக்கு. முதலிலிருந்தே நேரடியாக பேசியிருக்கலாம் நேஹா என்ற பெரிய மனுஷியிடம்.
அன்புடன்
ராகவன்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
உங்கள் வார்த்தைகளை கேட்கும் பொது நானும் அந்த நிகழ்வுகளை நேரில் இருந்து பார்ப்பது போலவே இருக்கிறது... மிக்க நன்று...
Post a Comment