Monday, December 13, 2010

கந்தர்வன் கதைகள்

கந்தர்வன் என்கிற எழுத்தாளரைப் பற்றி எப்போதோ செம்மலரில் வாசித்ததோடு சரி. அவர் கவிஞர் என்றும் அறிந்திருக்கிறேன். காளை மாடுகளை வசக்கி வண்டிகளில் பூட்டும் வழக்கத்தை விவரிக்கும் ஒரு கதையையும் மனம் பதை பதைக்க வாசித்த ஞாபகம். மற்றபடி அவர் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை.

கந்தர்வன் கதைகள் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுப்பை வம்சி புக்ஸ் வெளியிட்டு அந்தப் புத்தகமும் ஓராண்டுக்கு மேல் வீட்டிலிருக்கிறது. இப்போது தான் நேரம் கிடைத்தது வாசிக்க.

மிக நாசுக்காக நாத்திகம் பேசும் மங்கலநாதர், சீவன், கிரகசாரம் இவற்றுள் எனக்கு மங்கல்நாதர் கதை மிகவும் பிடித்திருந்தது. இருபது மூட்டை நெல், தூண் தூணாக வாழை இலைக்கட்டுகள் என்று ஊருக்கே சாப்பாடு போட்டு மூத்த மகளுக்குத் திருமணம் நடத்தியவர் திடீரென்று உத்திரகோச மங்கைக் கோயில் மங்கல்நாதருக்குத் தன் குடும்பத்தையே அடிமையாக்கிய கதை.

சவடால் நாம் சாதாரணமாகப் பேருந்துகளில் ரயில்களில் பார்த்து முகம் சுளிக்கும் அல்லது பெருந்தன்மையோடு சகித்துக் கொள்ளும் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டும் கதை.

பங்களாவாசிகளின் தாகம் தீர்க்க இளநீர் கொண்டு வருபவரின் தாகத்தைத் தீர்ப்பது எது? ‍ தனித்தனியாய் தாகம் எதார்த்தத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.

துண்டு கிராமப்புறப் பண்ணையார்களின் ஆண்டை மனப்பான்மையை, தலித்களுக்கு எதிரான அவர்களது நயவஞ்சகத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறது.

தான் தனித்துவம் மிக்க கதை. மனிதாபிமானத்தின் உன்னதம் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் எளிமையுடன் வெளிப்படலாம் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.

எங்கெங்கும் அம்மாக்கள், இரண்டாவது ஷிப்ட் ஆகியவை பெண்களின் வேதனைகளைப் பேசும் கதைகள். இரண்டாவது ஷிப்ட் எழுதியது ஓர் ஆண் தான் என்றால் நம்ப முடியவில்லை.

உலகம் முழுதும் பெண்களுக்கான கொடுமைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. அவரவர் தேசத்துக் கலாசாரத்துக்கேற்ப அவற்றை அவர்கள் அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை எங்கெங்கும் அம்மாக்கள் கதை சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நம்மூர்காரரின் ஒருவரின் உரையாடலில் கதை போகிறது.

மொத்தம் 61 கதைகள். முழுதும் வாசித்து முடிக்கவில்லை. படித்த‌தையே திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் எழுத்து. தேவையற்ற வார்த்தை ஜாலங்கள் இல்லை. நீண்ட வர்ணனைகள் இல்லாமலேயே காட்சிகள் கண்முன் விரிகின்றன. சிக்கலான வட்டார வழக்குச் சொலவடைகள் இல்லாமலே மண்வாசனை மணக்கிறது. வெகு இயல்பான உரையாடல்களிலேயே கதை மாந்தர் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள்.

முன்னுரையாகப் எழுத்தாளருக்கும் பதிப்பாசிரியர் பவா செல்லதுரை அவர்களுக்கும் இடையிலான உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. சுவாரசியமாகவும் எழுத்தாளரைப் பற்றிய புரிதலுக்கு மேலும் உதவுவதாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
இந்த அரிய படைப்பாளி நம்முட்ன் இப்பொது இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இவரைப் பற்றிச் சொல்வது:
"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்."

"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்."

படித்துப் பாருங்கள், இந்த வார்த்தைகளுட‌ன உடன்படுவது நிச்சயம்.

கந்தர்வன் கதைகள்
வம்சி புக்ஸ்
டி.எம். சாரோன்,
திருவண்ணாமலை ‍ 606601
தொ.பே. 04175 ‍ 238826
விலை: ரூ: 300

6 comments:

'பரிவை' சே.குமார் said...

//"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்."


"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்."//

unmaithaan. naanum indiyavil irukkum podhu semmalaril avarai vasiththirukkirean.

அம்பிகா said...

நுட்பமான விவரணைகளுடன் நல்ல நூல் அறிமுகம். நன்றி தீபா.

அமுதா said...

நல்ல நூல் அறிமுகம். நன்றி தீபா.

Chitra said...

நல்ல பகிர்வு. நன்றிங்க

மாதவராஜ் said...

மிக நுட்பமான எழுத்தாளர்களில் கந்தர்வனும் ஒருவன். அவருடன் பழகிய காலங்களும் இன்னேரம் வந்து போகின்றன.’பூவுக்குக் கீழே’ மிக அருமையான தமிழ்ச்சிறுகதைகளில் ஒன்று.

பாற்கடல் சக்தி said...

இலக்கியம் பயனுற வேண்டும் ...