குலாபி கேங் - இந்தப் பெயரை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்போம்? சமீபத்தில் தான் ஒரு நட்பின் மூலம் (www.facebook.com/hannah.priya) இந்தப் புரட்சிகர அமைப்பினைப் பற்றி அறிந்து கொண்டேன்.
யார் இவர்கள்? உத்திரப்பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பண்டாவைச் சேர்ந்த உழைப்பாளிப் பெண்கள். இம்மாவட்டத்தில் 20% மேல் மிகவும் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்கள்.
பிங்க் நிறச் சேலையை அடையாளமாகவும் கையில் லத்திகளையும் தங்கள் ஆயுதமாகவும் கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவர்களைப் படையெடுத்துச் சென்று நையப்புடைப்பதில் தொடங்கியது இவர்களின் புரட்சி.
2008 ல் எடுத்த கணக்குப் படி 20,000 உறுப்பினர்களும் ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஒரு கிளையும் கொண்டு வளர்ந்திருக்கிறார்கள்.
சீரியலில் வரும் கொடுமைகளைப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டு "அடப்பாவி, இவனையெல்லாம் அடிச்சுச் சாத்தணும்" என்று வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் பெண்கள் இப்படி ஒன்றை உண்மையில் செய்ய முடியும் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா?
பன்னிரண்டு வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு பதின்மூன்று வயதில் முதல் குழந்தையைப் பெற்று, ஐந்து குழந்தைகளுக்குத் தாயுமான சம்பத் பால் தேவி என்ற பெண்மணி ஆரம்பித்தது தான் இந்தக் குலாபி கேங். இவர் முன்னாள் அரசுச் சுகாதார ஊழியர்.
வழக்கேதுமின்றி கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்காகவும் காவல்நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
அதனால் தான் பெண்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்படுகிற ஆண்களும் இவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் போராடுகிறார்கள். தங்கள் பகுதியில் நடக்கும் பல்வகை ஊழல்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராகப் பல போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
"இந்தியாவின் கிராமப் புறச் சமூகம் பெண்களுக்கு மிகவும் அநீதி இழைப்பதாக இருக்கிறது. அங்கு பெண்கள் படிப்பதற்கு அனுமதி இல்லை, இளம்வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்விக்கப்பட்டு, பணத்துக்காக விற்கப்படும் பண்டங்களாய் நடத்தப்படுகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் கல்வி பெற்றுச் சுதந்திரம் அடைய வேண்டியது மிக அவசியமாகிறது."
"இங்கு யாருமே எங்கள் உதவிக்கு வருவதில்லை. அதிகாரிகளும் காவல்துறையும் ஊழலில் ஊறியவர்களாகவும் ஏழைகளுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு நீதி வேண்டியும் தவறு செய்பவர்களை உணர வைக்கவும் சட்டத்தை எங்கள் கையிலெடுக்க வேண்டி வருகிறது. தற்காப்புக்காக லத்தியை எப்படிக் கையாள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்குக் கற்பித்தபடியே பேசுகிறார் சம்பத் பால் தேவி.
பெண் சக்தி எவ்வளவு மகத்தானது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தக் குலாபி கேங் பெண்கள் தாம். பெண்ணைக் காளியாகவும் அம்மனாகவும் வழிபட்டாலும் அவளது சகல சக்திகளையும் பறிப்பதையன்றி இச்சமூகம் வேறென்ன செய்திருக்கிறது. இச்சமூகத்தில் இனி அதிகம் தேவை இந்த நிதர்சனக் காளிகள் தாம்.
மேலும் விவரங்களுக்கு...
http://news.bbc.co.uk/2/hi/7068875.stm
http://www.gulabigang.org/?page_id=196
http://en.wikipedia.org/wiki/Gulabi_gang
1 comment:
Good write up...
Keep writing.
Post a Comment