Wednesday, February 2, 2011

செகாவின் மீது பனி பெய்கிறது

செகாவைப் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

"தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ர‌ஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின், துர்கனேவ், லெர்மந்தேவ், குப்ரின், கொரலெங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப் படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ். ராமகிருஷ்ணன் அது குறித்த் தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்."

பின்னட்டையில் கண்ட இந்தக் குறிப்பு புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக ரஷ்ய எழுத்தாளர்களோடு நிறுத்தி விடாமல், மாப்பசான், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஓவியர் வான்கோவின் எழுத்துக்கள், வர்ஜினியா வுல்ஃப் என்று சிறந்த‌ உலக இல‌க்கிய ஆளுமைகளை
சுவாரசியமான முறையில் அறிமுகம் செய்து தந்திருக்கிறார்.

ஒவ்வொரு எழுத்தாளரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுவதோடு அவர்களது தனித்துவத்தையும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்.

குறிப்பாக செகாவையும் மாப்பசானையும் "இரண்டு ஆசான்கள்" என்று குறிப்பிட்டது எனக்குத் தனிப்பட்ட முறையில் பரவசம் அளித்தது. அதிகம் இலக்கியம் வாசித்தறியாத நான் விரும்பிப் படித்ததில் அதிகம் இவர்களது சிறுகதைகள் தாம்.

செகாவின் மீது பனி பெய்கிறது என்ற கவிதையான தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

"செகாவ் மீது பனி பொழிந்து அவரை நடுங்கச் செய்கிறது. அவர் நோயாளி. ஆனாலும் குளிரோடு போராடியபடியே நின்று பார்க்கிறார். அந்த வீதியில் செகாவும் குதிரையும் மட்டுமே நிற்கிறார்கள். இருவர் மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. செகாவ் துயரமடைகிறார். கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்ர குறிப்பை எழுதுகிறார்.அவரது கதைகள் இந்த இரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன."
என்ன அற்புதமான உருவகம்? உன்னதமான படைப்பாளி இந்த உலகத்தைப் பார்ப்பதாகவே செகாவ் குதிரையைப் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.
செகாவின் எழுத்துக்கள் மீது ஆசிரியருக்கு உள்ள‌ ஆழமான அபிமானமும் புரிதலும் வெளிப்படுகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற வெண்ணிர இரவுகள் பற்றிய அலசல் 'இரவில் ஒளிரும் சூரியன்'. தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் வரும் ஆண்கள் விசித்திரமானவர்கள் என்றும் பேச முடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்றும் ஆசைப்படுகிற ஆண்கள் தான் அவரது கதை நாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார். (இதில் என்ன விசித்திரம், ஊரில் பாதி ஆண்கள் இப்படித்தானே?!)

டால்ஸ்டாயின் வாழ்க்கையின் கடைசி நாட்களையும் அவரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் குறிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

கடவுளின் எட்டாம் நாள் என்ற கட்டுரையில் ஆர்மினிய எழுத்தாளர் வில்லியம் மிகைலீனின் சிறுகதையொன்றை நமக்காகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். மிகவும் ரசிக்கத்தக்க பகடி.

இவ்வாறாகத் தான் வாசித்து ரசித்த எழுத்தாளர்களை வெற்றுக் குறிப்புகளாக இல்லாமல், கொஞ்சம் அவர்களது சொந்த வாழ்க்கை, அதில் நடந்த சுவையான சம்பவங்கள், அவர்களது வாய்மொழிகள், சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றிய அலசல்கள் என்று மிகவும் நூதனமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார்.

சிறுகதைகளுக்கான செகாவின் ஆறு விதிகள் மற்றும் ஒரு சிறுகதையை எப்படி எடிட் செய்வது என்பதற்குச் செகாவின் சுவாரசியமான மறுமொழியும் இட்ம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இச்சிறு புத்தகம் உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய சுவையான Teaser trailer ஆக மட்டுமல்லாமல் பொதுவாக நல்ல இலக்கியம் படிக்கவும் புதிதாக எழுத விரும்புவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செகாவின் மீது பனி பெய்கிறது,
எஸ். ராமகிருஷ்ணன்
உயிர்மை பதிப்பகம்
விலை: 110

6 comments:

Chitra said...

அருமையான பகிர்வு.... நன்கு எழுதி இருக்கீங்க.

'பரிவை' சே.குமார் said...

"செகாவின் மீது பனி பெய்கிறது" - nalla alasal...

Philosophy Prabhakaran said...

இப்போதான் சாருவை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்... எஸ்.ராவை படிக்க இன்னும் நாள் ஆகும்...

Sriakila said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தீபா.

ponraj said...

waiting for your next article!!

சி.பி.செந்தில்குமார் said...

எஸ் ராம கிருஷ்ணனின் எழுத்துக்கள் மனித நேயத்தை வலியுறுத்துபவை...விக்டனில் அவரது கதா விலாசம் கல்வெட்டு படைப்பு