Monday, December 13, 2010

கந்தர்வன் கதைகள்

கந்தர்வன் என்கிற எழுத்தாளரைப் பற்றி எப்போதோ செம்மலரில் வாசித்ததோடு சரி. அவர் கவிஞர் என்றும் அறிந்திருக்கிறேன். காளை மாடுகளை வசக்கி வண்டிகளில் பூட்டும் வழக்கத்தை விவரிக்கும் ஒரு கதையையும் மனம் பதை பதைக்க வாசித்த ஞாபகம். மற்றபடி அவர் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை.

கந்தர்வன் கதைகள் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுப்பை வம்சி புக்ஸ் வெளியிட்டு அந்தப் புத்தகமும் ஓராண்டுக்கு மேல் வீட்டிலிருக்கிறது. இப்போது தான் நேரம் கிடைத்தது வாசிக்க.

மிக நாசுக்காக நாத்திகம் பேசும் மங்கலநாதர், சீவன், கிரகசாரம் இவற்றுள் எனக்கு மங்கல்நாதர் கதை மிகவும் பிடித்திருந்தது. இருபது மூட்டை நெல், தூண் தூணாக வாழை இலைக்கட்டுகள் என்று ஊருக்கே சாப்பாடு போட்டு மூத்த மகளுக்குத் திருமணம் நடத்தியவர் திடீரென்று உத்திரகோச மங்கைக் கோயில் மங்கல்நாதருக்குத் தன் குடும்பத்தையே அடிமையாக்கிய கதை.

சவடால் நாம் சாதாரணமாகப் பேருந்துகளில் ரயில்களில் பார்த்து முகம் சுளிக்கும் அல்லது பெருந்தன்மையோடு சகித்துக் கொள்ளும் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டும் கதை.

பங்களாவாசிகளின் தாகம் தீர்க்க இளநீர் கொண்டு வருபவரின் தாகத்தைத் தீர்ப்பது எது? ‍ தனித்தனியாய் தாகம் எதார்த்தத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.

துண்டு கிராமப்புறப் பண்ணையார்களின் ஆண்டை மனப்பான்மையை, தலித்களுக்கு எதிரான அவர்களது நயவஞ்சகத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறது.

தான் தனித்துவம் மிக்க கதை. மனிதாபிமானத்தின் உன்னதம் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் எளிமையுடன் வெளிப்படலாம் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.

எங்கெங்கும் அம்மாக்கள், இரண்டாவது ஷிப்ட் ஆகியவை பெண்களின் வேதனைகளைப் பேசும் கதைகள். இரண்டாவது ஷிப்ட் எழுதியது ஓர் ஆண் தான் என்றால் நம்ப முடியவில்லை.

உலகம் முழுதும் பெண்களுக்கான கொடுமைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. அவரவர் தேசத்துக் கலாசாரத்துக்கேற்ப அவற்றை அவர்கள் அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை எங்கெங்கும் அம்மாக்கள் கதை சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நம்மூர்காரரின் ஒருவரின் உரையாடலில் கதை போகிறது.

மொத்தம் 61 கதைகள். முழுதும் வாசித்து முடிக்கவில்லை. படித்த‌தையே திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் எழுத்து. தேவையற்ற வார்த்தை ஜாலங்கள் இல்லை. நீண்ட வர்ணனைகள் இல்லாமலேயே காட்சிகள் கண்முன் விரிகின்றன. சிக்கலான வட்டார வழக்குச் சொலவடைகள் இல்லாமலே மண்வாசனை மணக்கிறது. வெகு இயல்பான உரையாடல்களிலேயே கதை மாந்தர் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள்.

முன்னுரையாகப் எழுத்தாளருக்கும் பதிப்பாசிரியர் பவா செல்லதுரை அவர்களுக்கும் இடையிலான உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. சுவாரசியமாகவும் எழுத்தாளரைப் பற்றிய புரிதலுக்கு மேலும் உதவுவதாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
இந்த அரிய படைப்பாளி நம்முட்ன் இப்பொது இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இவரைப் பற்றிச் சொல்வது:
"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்."

"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்."

படித்துப் பாருங்கள், இந்த வார்த்தைகளுட‌ன உடன்படுவது நிச்சயம்.

கந்தர்வன் கதைகள்
வம்சி புக்ஸ்
டி.எம். சாரோன்,
திருவண்ணாமலை ‍ 606601
தொ.பே. 04175 ‍ 238826
விலை: ரூ: 300

Saturday, December 11, 2010

பாரதீ! உன் நினைவாக...



கிழவனுடைய 
அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், 
இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும்,
தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று
மிடிமையும் அச்சமு
ம் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்

துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது தீயது நாமறியோம்! அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

ண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !

என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ
விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய் மின்மினி கொள்வாரோ? 
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?  

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? 
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  
வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ? 
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ?

Thursday, December 9, 2010

சைக்கிள்...


எனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்றால் யோசிக்காமல் சொல்வேன், சைக்கிள் தான்.
சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி, செலவும் இல்லை, சுற்றுச் சூழல் மாசும் இல்லை. இருந்தும் இந்த அழகிய வாகனத்தை நாம் புறக்கணிப்பது ஏன்? பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் டூ வீலர் வாங்கித் தருகிறார்கள். இது சரியான போக்காக எனக்குப் படவில்லை.

எனக்குச் சைக்கிள் ஆசை வந்ததே பள்ளியில் பெரிய வகுப்புப் பெண்கள் ஒயிலாக ஏறி அமர்ந்து வருவதைப் பார்த்துத் தான். அதுவும் துப்பட்டாவைப் பின்புறம் கவனமாக முடிச்சிட்டு, ஸ்டாண்டைத் தள்ளி விட்டு ரன்னிங்கில் ஏறும் அக்காக்களைக் கண் கொட்டாமல் பார்ப்பேன்.முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்டது அண்ணன் வைத்திருந்த சின்ன பைசைக்கிளில்.

நான் ஆறாவது வரை ரிக்ஷாவில் தான் பள்ளிக்கூடம் போனேன். ஏழாவது வரும் போது 'சே, இன்னுமா இந்த ரிகஷாவில் சின்னப் பிள்ளைகளுடன் போவது? எப்படியாவது இந்த வருடத்துக்குள் சைக்கிள் வாங்கி விட வேண்டும்' என்ற எண்ணத்தில், ரிக்ஷாவில் போகமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் ஏழாவதும் எட்டாவதும் நடந்தே சென்றேன். ஒன்பதாம் வகுப்பு வந்த போது தான் அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க மனம் வந்தது. அப்போது தான் நான் ஓரளவு ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.

சைக்கிள் ஓட்டப் பழகிய காலங்கள்...ஆஹா! எட்டாவது லீவில் எனக்கும் பக்கத்து வீட்டு அனுவுக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலையே வாடகை சைக்கிள் எடுக்க‌ச் செல்வது தான். இரண்டு ரூபாய் கொடுத்து "அனு, தீபா" என்று பெயர் சொல்வாள். (எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)

சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது. போனால் போகிறதென்று கடைசி பத்து நிமிடங்கள் அவளது தம்பிகளுக்குக் கொடுப்போம். அவர்களிட்மிருந்து சைக்கிளைப் பிடுங்கிக் கடைக்குக் கொண்டு செல்வது பெரும்பாடு.

சைக்கிளின் மீது தீராத மோகம் வந்ததற்கு இன்னொரு காரணம் நூலகம். அப்போதெல்லாம் உலகிலேயே நீ மிகவும் விரும்பும் பொருள் என்னவென்று கேட்டால் அசோக் பில்லர் பப்ளிக் லைபரரியில் ஒரு மெம்பர்ஷிப் கார்டும் ஒரு சைக்கிளும் தான் என்று சொல்லி இருப்பேன். சைக்கிளில் லைப்ரரிக்குச் சென்று கேரியர் கொள்ளாமல் புத்தகங்கள் அள்ளி வருவது தான் என் கனவு. ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை.

ஆசைகளில் ஒன்று நிறைவேறியது. ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் சைக்கிள் வந்தது. ஆனால் வாடகைக் கடையில் எடுத்து ஓட்டியதெல்லாம் ட‌யர் பெரிதாகவும் உயரம் கம்மியாகவும் இருந்த‌ ஹீரோ சைக்கிள்கள். புதிதாக வாங்கிய பி.எஸ்.ஏ எஸ் எல் ஆர் உயரமாகவும் டயர்கள் மெலிதாகவும் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால் பேலன்ஸ் தவறி விழுந்து வாரியது, மெயின் ரோட்டில் புத்தகப்பை கேரியரிலிருந்து நழுவி ஓடிச் சென்று எடுத்தது என்று காமெடிகள் ஏராளம் அரங்கேறின.

ஆனால் ஒரு சில வருடங்களிலேயே பெல்லும் இல்லாமல் ப்ரேக்கும் இல்லாமல் துரைசாமி சப்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓட்டும் அளவுக்குக் கேடி ஆகி விட்டேன்! டபிள்ஸ் அடிக்கவும் தான்.

அந்தச் சைக்கிளைத் தான் கல்லூரிக்கும் கொண்டு சென்றேன். கோவை மாநகர வீதிகளிலும் கல்லூரி கேம்பஸிலும் ஆனந்தமாய் உலா வந்தது என் அருமை பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆரில் தான்.

கல்லூரி விட்டு வரும் போது யாரோ கேட்டார்கள் என்று யோசனையில்லாமல் அதை முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு வந்து விட்டேன். (அது இருந்த நிலைமைக்கு அது நல்ல பேரம் தான்!)

வீட்டுக்கு வந்ததும் வேலை தேடும் படலங்களில் முக்கிய அம்சங்களான கம்ப்யூட்டர் க்ளாஸ், ப்ரௌசிங் சென்டர், இவற்றுக்குப் போய் வருவதற்காக வாகனம் தேவைப்பட்டது. வழக்கமாக இந்தக் காலகட்டத்திலாவது சைக்கிளிலிருந்து பலரும் ஸ்கூட்டி அல்லது கைனடிக் ஹோண்டாவுக்கு மாறுவார்கள். என் தோழிகளில் பலரும் கல்லூரிப் பருவத்திலேயே அவற்றுக்கு மாறி இருந்தார்கள். அனு சைக்கிளை விட்டொழித்து டிவிஎஸ் 50 வைத்திருந்தாள் அப்போது. ஆனால் நான் சைக்கிளே வேண்டுமென்று கேட்டேன். ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பதும், பெட்ரோல் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யப் பிடிக்கவில்லை என்பதும் காரணம்.

மீண்டும் ஒரு சைக்கிளே வாங்கினேன். (செகன்ட் ஹான்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.)

இந்தச் சைக்கிளில் தான் என் முதல் வேலைக்குச் சென்றது. வீட்டுக்கு மிக அருகிலேயே அலுவலகம் இருந்ததால் பஸ், ஆட்டோ, நடை என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சைக்கிளில் சென்றேன். ஆனால் அதே தொலைவில் இருந்து வந்த என் மற்ற அலுவலகத் தோழிகள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தும் கூட அதில் வரக் கூச்சப்பட்டது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.

அனுவின் தம்பி (அப்போது கல்லூரி மாணவனாகி இருந்தான்) நான் சைக்கிளில் கிளம்பும் போதெல்லாம் "அய்யோ தீபா, ஏன் இப்படி தம்பி மானத்த வாங்கறே. ஆட்டோல போகக் கூடாதா" என்று கிண்டல் செய்வான். சிரித்து விட்டுச் சொல்வேன். "டேய், உங்கப்பா ரிட்டையராகற வரைக்கும் அதோ நிக்குதே அந்த சைக்கிளில் தானேடா 35 கிலோமீட்டர் ஒட்டிட்டு வேலைக்குப் போனார்? எனக்கு சைக்கிள்ல போறது பெருமையாத் தான் இருக்கு." அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு முறை சிக்னலில் நிற்கும் போது, கேரியரில் வைத்திருந்த என் பர்ஸை எவனோ (அல்லது எவளோ) அடித்து விட்டார்கள். அதனால் அப்பா என் சைக்கிளுக்குப் பக்கவாட்டில் பூட்டுப் போட்ட ஒரு பெட்டி பொருத்தித் தந்தார். இது இன்னும் கேலிப் பேச்சுகளுக்கு வழி வகுத்தது. "டப்பா சைக்கிள்!" நான் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே.
விபத்து ஒன்றுக்குள்ளாகி அந்தச் சைக்கிள் நசுங்கிப் போகும் வரை அதில் தான் அலுவலகம் சென்று வந்தேன்.

அலுவலகத்துக்கு மட்டுமல்ல, டி.நகரில் ஷாப்பிங் செய்ய, துரைசாமி சப்வேக்கு மேலே இருந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் அம்மாவுக்கு மருந்து வாங்கி வர, தண்ணி டாங்கிலிருந்து கயிறுகட்டிக் குடங்கள் எடுத்து வர என்று எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது சைக்கிள் தான். அது நொறுங்கிய போது மிகவும் வேதனைப்பட்டேன்.

சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சைக்கிள் வாங்கினேன்; அது வீம்புக்காக. ஜோவை நேசிக்கத் தொடங்கிய காலத்தில் அவன் சொன்னான், "நான் பைக் வாங்கும் போதே ஸாரி கார்ட் எல்லாம் வெச்சு வாங்கினேன். என்னிக்காவது நீ உட்காருவேன்னு." என்று. ஏனோ இது சந்தோஷம் அளித்தாலும், 'பைக்கின் பின்னாடி உட்கார்வது' என்பது ஏனோ என் கௌரவத்துக்கு இழுக்காகத் தோன்றியத.

அடுத்த சில நாட்களிலேயே ஒரு புத்தம்புதிய லேடிபேர்ட் சைக்கிள் வாங்கினேன். அதிலேயே அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தேன். ஜோவுக்குச் செம கடுப்பு. ரொம்பக் கோபமாக இருந்தான், சைக்கிள்லே வராதே என்று கெஞ்சவும் ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்குள் இருவருக்கும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துப் பிரிந்தவுடன், சைக்கிளுக்கு வேலையில்லாமல் போனது. (பைக்குக்கு அதிகமாக வேலை வந்தது!)
அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது.