எனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்றால் யோசிக்காமல் சொல்வேன், சைக்கிள் தான்.
சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி, செலவும் இல்லை, சுற்றுச் சூழல் மாசும் இல்லை. இருந்தும் இந்த அழகிய வாகனத்தை நாம் புறக்கணிப்பது ஏன்? பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் டூ வீலர் வாங்கித் தருகிறார்கள். இது சரியான போக்காக எனக்குப் படவில்லை.
எனக்குச் சைக்கிள் ஆசை வந்ததே பள்ளியில் பெரிய வகுப்புப் பெண்கள் ஒயிலாக ஏறி அமர்ந்து வருவதைப் பார்த்துத் தான். அதுவும் துப்பட்டாவைப் பின்புறம் கவனமாக முடிச்சிட்டு, ஸ்டாண்டைத் தள்ளி விட்டு ரன்னிங்கில் ஏறும் அக்காக்களைக் கண் கொட்டாமல் பார்ப்பேன்.முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்டது அண்ணன் வைத்திருந்த சின்ன பைசைக்கிளில்.
நான் ஆறாவது வரை ரிக்ஷாவில் தான் பள்ளிக்கூடம் போனேன். ஏழாவது வரும் போது 'சே, இன்னுமா இந்த ரிகஷாவில் சின்னப் பிள்ளைகளுடன் போவது? எப்படியாவது இந்த வருடத்துக்குள் சைக்கிள் வாங்கி விட வேண்டும்' என்ற எண்ணத்தில், ரிக்ஷாவில் போகமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் ஏழாவதும் எட்டாவதும் நடந்தே சென்றேன். ஒன்பதாம் வகுப்பு வந்த போது தான் அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க மனம் வந்தது. அப்போது தான் நான் ஓரளவு ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.
சைக்கிள் ஓட்டப் பழகிய காலங்கள்...ஆஹா! எட்டாவது லீவில் எனக்கும் பக்கத்து வீட்டு அனுவுக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலையே வாடகை சைக்கிள் எடுக்கச் செல்வது தான். இரண்டு ரூபாய் கொடுத்து "அனு, தீபா" என்று பெயர் சொல்வாள். (எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)
சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது. போனால் போகிறதென்று கடைசி பத்து நிமிடங்கள் அவளது தம்பிகளுக்குக் கொடுப்போம். அவர்களிட்மிருந்து சைக்கிளைப் பிடுங்கிக் கடைக்குக் கொண்டு செல்வது பெரும்பாடு.
சைக்கிளின் மீது தீராத மோகம் வந்ததற்கு இன்னொரு காரணம் நூலகம். அப்போதெல்லாம் உலகிலேயே நீ மிகவும் விரும்பும் பொருள் என்னவென்று கேட்டால் அசோக் பில்லர் பப்ளிக் லைபரரியில் ஒரு மெம்பர்ஷிப் கார்டும் ஒரு சைக்கிளும் தான் என்று சொல்லி இருப்பேன். சைக்கிளில் லைப்ரரிக்குச் சென்று கேரியர் கொள்ளாமல் புத்தகங்கள் அள்ளி வருவது தான் என் கனவு. ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை.
ஆசைகளில் ஒன்று நிறைவேறியது. ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் சைக்கிள் வந்தது. ஆனால் வாடகைக் கடையில் எடுத்து ஓட்டியதெல்லாம் டயர் பெரிதாகவும் உயரம் கம்மியாகவும் இருந்த ஹீரோ சைக்கிள்கள். புதிதாக வாங்கிய பி.எஸ்.ஏ எஸ் எல் ஆர் உயரமாகவும் டயர்கள் மெலிதாகவும் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால் பேலன்ஸ் தவறி விழுந்து வாரியது, மெயின் ரோட்டில் புத்தகப்பை கேரியரிலிருந்து நழுவி ஓடிச் சென்று எடுத்தது என்று காமெடிகள் ஏராளம் அரங்கேறின.
ஆனால் ஒரு சில வருடங்களிலேயே பெல்லும் இல்லாமல் ப்ரேக்கும் இல்லாமல் துரைசாமி சப்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓட்டும் அளவுக்குக் கேடி ஆகி விட்டேன்! டபிள்ஸ் அடிக்கவும் தான்.
அந்தச் சைக்கிளைத் தான் கல்லூரிக்கும் கொண்டு சென்றேன். கோவை மாநகர வீதிகளிலும் கல்லூரி கேம்பஸிலும் ஆனந்தமாய் உலா வந்தது என் அருமை பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆரில் தான்.
கல்லூரி விட்டு வரும் போது யாரோ கேட்டார்கள் என்று யோசனையில்லாமல் அதை முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு வந்து விட்டேன். (அது இருந்த நிலைமைக்கு அது நல்ல பேரம் தான்!)
வீட்டுக்கு வந்ததும் வேலை தேடும் படலங்களில் முக்கிய அம்சங்களான கம்ப்யூட்டர் க்ளாஸ், ப்ரௌசிங் சென்டர், இவற்றுக்குப் போய் வருவதற்காக வாகனம் தேவைப்பட்டது. வழக்கமாக இந்தக் காலகட்டத்திலாவது சைக்கிளிலிருந்து பலரும் ஸ்கூட்டி அல்லது கைனடிக் ஹோண்டாவுக்கு மாறுவார்கள். என் தோழிகளில் பலரும் கல்லூரிப் பருவத்திலேயே அவற்றுக்கு மாறி இருந்தார்கள். அனு சைக்கிளை விட்டொழித்து டிவிஎஸ் 50 வைத்திருந்தாள் அப்போது. ஆனால் நான் சைக்கிளே வேண்டுமென்று கேட்டேன். ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பதும், பெட்ரோல் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யப் பிடிக்கவில்லை என்பதும் காரணம்.
மீண்டும் ஒரு சைக்கிளே வாங்கினேன். (செகன்ட் ஹான்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.)
இந்தச் சைக்கிளில் தான் என் முதல் வேலைக்குச் சென்றது. வீட்டுக்கு மிக அருகிலேயே அலுவலகம் இருந்ததால் பஸ், ஆட்டோ, நடை என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சைக்கிளில் சென்றேன். ஆனால் அதே தொலைவில் இருந்து வந்த என் மற்ற அலுவலகத் தோழிகள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தும் கூட அதில் வரக் கூச்சப்பட்டது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.
அனுவின் தம்பி (அப்போது கல்லூரி மாணவனாகி இருந்தான்) நான் சைக்கிளில் கிளம்பும் போதெல்லாம் "அய்யோ தீபா, ஏன் இப்படி தம்பி மானத்த வாங்கறே. ஆட்டோல போகக் கூடாதா" என்று கிண்டல் செய்வான். சிரித்து விட்டுச் சொல்வேன். "டேய், உங்கப்பா ரிட்டையராகற வரைக்கும் அதோ நிக்குதே அந்த சைக்கிளில் தானேடா 35 கிலோமீட்டர் ஒட்டிட்டு வேலைக்குப் போனார்? எனக்கு சைக்கிள்ல போறது பெருமையாத் தான் இருக்கு." அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஒரு முறை சிக்னலில் நிற்கும் போது, கேரியரில் வைத்திருந்த என் பர்ஸை எவனோ (அல்லது எவளோ) அடித்து விட்டார்கள். அதனால் அப்பா என் சைக்கிளுக்குப் பக்கவாட்டில் பூட்டுப் போட்ட ஒரு பெட்டி பொருத்தித் தந்தார். இது இன்னும் கேலிப் பேச்சுகளுக்கு வழி வகுத்தது. "டப்பா சைக்கிள்!" நான் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே.
விபத்து ஒன்றுக்குள்ளாகி அந்தச் சைக்கிள் நசுங்கிப் போகும் வரை அதில் தான் அலுவலகம் சென்று வந்தேன்.
அலுவலகத்துக்கு மட்டுமல்ல, டி.நகரில் ஷாப்பிங் செய்ய, துரைசாமி சப்வேக்கு மேலே இருந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் அம்மாவுக்கு மருந்து வாங்கி வர, தண்ணி டாங்கிலிருந்து கயிறுகட்டிக் குடங்கள் எடுத்து வர என்று எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது சைக்கிள் தான். அது நொறுங்கிய போது மிகவும் வேதனைப்பட்டேன்.
சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சைக்கிள் வாங்கினேன்; அது வீம்புக்காக. ஜோவை நேசிக்கத் தொடங்கிய காலத்தில் அவன் சொன்னான், "நான் பைக் வாங்கும் போதே ஸாரி கார்ட் எல்லாம் வெச்சு வாங்கினேன். என்னிக்காவது நீ உட்காருவேன்னு." என்று. ஏனோ இது சந்தோஷம் அளித்தாலும், 'பைக்கின் பின்னாடி உட்கார்வது' என்பது ஏனோ என் கௌரவத்துக்கு இழுக்காகத் தோன்றியத.
அடுத்த சில நாட்களிலேயே ஒரு புத்தம்புதிய லேடிபேர்ட் சைக்கிள் வாங்கினேன். அதிலேயே அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தேன். ஜோவுக்குச் செம கடுப்பு. ரொம்பக் கோபமாக இருந்தான், சைக்கிள்லே வராதே என்று கெஞ்சவும் ஆரம்பித்தான்.
சில மாதங்களுக்குள் இருவருக்கும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துப் பிரிந்தவுடன், சைக்கிளுக்கு வேலையில்லாமல் போனது. (பைக்குக்கு அதிகமாக வேலை வந்தது!)
அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது.
28 comments:
எனது சிறுவயது நினைவுகளை மீண்டும் வரவழைத்தது உங்கள் பதிவு...
//சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது.//
கிழே விழுந்து சிறாய்த்து ரத்தம் கசியும் போதும் பரவசம் குறையாது.இன்னொன்று அதை ஓட்டிக்கொண்டு பிடித்தவர்களின் முன்னாடி வளையம் போடுவது இன்னும் பரவசமாகும்.
அன்பு தீபா,
என் அனுபவங்கள் வேறு மாதிரியானவை... நான் சைக்கிள் உருப்படியாய் ஓட்டக் கற்றுக் கொண்டது நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும்போது தான்... எனக்கு என் அப்பாவின் பச்சைக்கலர் ராலே சைக்கிள் என்றால் அவ்வளவு பிடிக்கும், அவருக்கும் ரொம்ப பிடிக்கும். தினமும் அதை நான் தான் துடைப்பேன், டுபாண்ட் டைனமாவும், டையம்ண்ட் செயினும் செயின் கவர், மட்கார்ட் ரப்பர் என்று சைக்கிள் பார்க்கவே அழகாய் இருக்கும், ஆனா எளிமையாய் இருக்கும்.
என் மேல் இருந்த பாசத்தில் தான் (விழுந்து அடிபட்டு விடுவேன் என்று) அப்பா எனக்கு சைக்கிள் ஓட்டவே கற்றுத் தரவில்லை என்பதாக சொன்னாலும், இருக்கிற ஒரு சைக்கிளையும் ஓக்குட்டுட்டான்னா என்ன பண்றது என்ற பயம் தான் காரணமாயிருக்கும்...
இப்ராஹிம் என்ற என் நண்பனின் சைக்க்ளில் தான் நான் கற்றுக்கொண்டேன்... நான் சைக்கிள் ஓட்டுவேன் என்று சொன்னால், என் அப்பா ரொம்ப நாள் நம்பவே இல்லை... ஒரு முறை என் நண்பனிடம் இருந்து ஓசி வாங்கி வந்து சைக்கிளை காட்டிய போது தான் நம்பினார்... அந்த சைக்கிளை அப்பா ரிடையர்டாகி ஐந்து வருடத்தில் நூத்தம்பது ரூபாய்க்கு விற்றார்... ரொம்பவும் வருத்தப்பட்டார்... கொடுக்கும்போது... அதற்கப்புறம் கார் வாங்கிய பிறகு, என் அப்பாவை ஒக்கார வைத்து ஓட்டிக் காண்பித்த போது... என்னடா ஓட்டுற... சாண்ட்ரா பாரு என்ன சுதாரனமா ஓட்டுறா... நீ வேகவேகமா போயி பக் பக்குன்னு பிரேக் போடுற என்று திட்ட ஆரம்பித்தார்... அப்பா இன்னும் மாறவே இல்லை என்று தோன்றியது அப்போதும்.
அன்புடன்
ராகவன்
ஒரு முறை முக்கிய வேலை ஒன்று..
அவசரமாக முடிக்க வேண்டும்..
வாகனம் இல்லாத நிலையில், சட் என சைக்கிளை எடுத்து பறந்தேன்..
அலுவலகத்தில் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்..
பல நினைவுகளை தூண்டியது உங்கள் பதிவு
ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை.
.....என்னங்க இது அநியாயம்? இங்கே நிலைமை உல்டாவா இருக்குது.
உங்கள் பதிவு, எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. நல்லா எழுதி இருக்கீங்க.
சைக்கிள் இப்போ கூட ஓட்டனும் போல தோன்ரும் ஆனால் விட மாட்டேன்கறாங்களே என்ன செய்ய :(
உங்கள் பதிவு பழைய ஞாபகங்களை கிளறச்செய்தது :)
நாங்கல்லாம் சைக்கிள் ஓட்டப் படிக்காமலே ஸ்கூட்டி ஓட்டிய ஜன்மங்க! ம்ம்.... நல்ல அனுபவத்தை இழந்துட்டோமோன்னு இருக்கு!
சைக்கிள் பிடிக்காத ஆளுங்க கம்மி தான். என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சது. மூணு நாலு வயசிலேயே சொல்லிக் கொடுத்தாச்சு.
நீங்களும் உங்கப் பொண்ணுக்கு சொல்லிக் கொடுங்க.
30 வருஷத்துக்கு முன்னாடி பை-பாஸ் surgery பண்ண ஆளு அவரது இதயம் நன்கு இயங்குவதற்கு அவர் தினமும் செய்யும் ஒரே பயிற்சி ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது தானாம் என்று பேட்டி கொடுத்திருந்தார். மனிதருக்கு வயது 70 க்கு மேல இருக்கும்.
தீபா,
எனக்கும் சைக்கிள் ஓட்டி பழக மிகவும் ஆசை. சின்னவயசில், குட்டி சொல்லி தர்றேன்னு, கீழே விழுந்து அடிவாங்கியது தான் மிச்சம். இப்போ ஆசையா இருக்குன்னு சொன்னதும், கவீஷ் சொல்லி தர்றேன்னு சொல்றான். இப்பவும் பயமா இருக்கு. உன் பதிவை படித்ததும் மறுபடியும் ஆசை வருகிறது.
நல்ல அனுபவம்..
//சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும்.
பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது.//
ஒரு பிளாஸ்பேக் போய்ட்டு வரவச்சு து உங்க பதிவு..நன்றி..
நீங்க சொன்ன நிறைய விஷயம் எனக்கும் அப்படியே பொருந்தி வருது ..அதான் இன்னும் யோசிச்சிகிட்டு இருக்கேன் :-)
பத்தாவது படிக்கும் பொழுது வாங்கிய சைக்கிள், இப்ப சமீபத்தில் தான் விற்றேன். அதுவரைக்கும் இருந்தது. ஊருக்கு சென்றால் சைக்கிளில் சென்று ஊரை ஒரு வலம் வருவேன். இப்ப ....?
நல்ல அனுபவம்...
Its very nice. Our company has initiated freewheelers team to avoid corbon footprint and encourages the employees who ride in cycle to office by giving lots of surprise.
Very interesting Deeps.I used my cycle only during school that too during 8th and 9th stds..Then gave it to my cousin..Now my girls have started to ride their cycles..Enjoying their childhood..
சைக்கிள் ஓட்டுவது ஒரு நல்ல ஜாலியான அனுபவம்தான்.. ஆசைக்காக ஒரு பத்து நாள் ரங்க்ஸிடம் கற்றுக்கொண்டேன்.. அத்துடன் மூட்டை கட்டியாச்சு :-)))
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. முதல் முறையாக நமக்கே நமக்கென்று ஒரு சைக்கிள் கிடைக்கப்பெறுவதன் சந்தோஷம் அலாதியானது. என் சிறுவயது நினைவுகளில் சைக்கிளுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஒரு பதிவாகவே எழுத வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி தீபா.
ராகவனின் பின்னூட்டமும் கிளாஸ்.
நல்ல பதிவு!!
சிறுவயது நினைவுகள்,
நல்ல அனுபவம்!!!
எல்லாம் சரிதான், வரும் தேர்தலில் சோனியாவும் அம்மையாரும் சேர்ந்தால், உங்கள் கட்சி நிலை என்ன???? சொல்லுங்ள் பார்போம்!!!!!
நல்ல பகிர்வு . நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன் .அது குறித்த நினைவுகளை தூண்டியது .நன்றி
நன்றி பிரபாகரன்!
நன்றி காமராஜ் அங்கிள்!
//அதை ஓட்டிக்கொண்டு பிடித்தவர்களின் முன்னாடி வளையம் போடுவது இன்னும் பரவசமாகும்// அது சரி. :))
ராகவன்!
//இருக்கிற ஒரு சைக்கிளையும் ஓக்குட்டுட்டான்னா என்ன பண்றது என்ற பயம் தான் காரணமாயிருக்கும்...// :))
நன்றி பார்வையாளன்!
நன்றி சித்ரா!
ஆம், அப்போது அந்த நிலை தான் இருந்தது.
நன்றி சக்தி!
நன்றி அருணா!
மிஸ் செய்தாலென்ன, இப்போது ஓட்டிப் பழகுங்கள். கமான்!
நன்றி சேது!
சுவாரசியமான தகவல்.
நன்றி அம்பிகா அக்கா!
Very good akka. You can do it.
ஆனால் கவிஷை நம்பி சைக்கிளில் ஏறுவது ரிஸ்க் தான். பார்த்துக்கோங்க! :)
நன்றி ஹரிஸ்!
நன்றி ஜெய்லானி!
நன்றி எல்.கே!
நன்றி சங்கவி!
Thank you Geetha!
That's indeed a very good initiative.
Thank you Krithi!
நன்றி அமைதிச்சாரல்!
நன்றி சரவணக்குமார்!
நன்றி பொன்ராஜ்!
கட்சியா? நான் எந்தக் கட்சியிலும் இல்லையே? நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? :)
//எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)//
அதைக் கவனமாக் கவனிச்சுட்டே வந்த நீங்க?? :-)))
”வரலாறு திரும்புகிறது” மாதிரி, இப்ப க்ளோபல் வார்மிங்னாலே, சைக்கிளை மறுபடி ஊக்கப்படுத்துறாங்க!!
ஒவ்வொருவருக்கும் சைக்கிள் ஓட்டிக் கற்றுக்கொண்ட அனுபவங்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது, இல்லையா தீபா?
நானும் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியிருக்கிறேன். நான் சைக்கிளை அதிகமாகப் பயன்படுத்தியதும் லைப்ரரிக்குப் போவதற்குத்தான்.
இப்போதும் கூட எனக்கு சைக்கிள் ஓட்ட ரொம்பவும் ஆசைதான். என் கணவரும் உனக்கு ஸ்கூட்டியெல்லாம் வாங்கித்தர மாட்டேன், சைக்கிள் வேணும்னா வாங்கித் தர்றேன்னு சொல்றாரு..
சைக்கிள் வாங்கலாமா, ஸ்கூட்டி வாங்கலாமான்னு இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறேன்.
இந்தப் பதிவு பலபேருக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவங்களை அசைபோடவைக்கும்.
//அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது//
உண்மைதான் தீபா!
நேற்று உங்க வீட்டிலேயே இந்தப் பதிவைப் படித்திருந்தால் கூட என்னால் இந்த அளவுக்கு பதிவில் லயித்திருக்க முடியுமா தெரியவில்லை. இன்று தனியாகப் படித்துப் பார்க்கும் போதுதான் சைக்கிள் ஓட்டிய சுவாரஸ்யங்கள் மனதில் ஏக்கமாக இருப்பது புரிகிறது.
பால்ய கால நினைவுகளை
திரும்ப பெற வைக்கும் பதிவு அருமை
மாணவப் பருவத்தி்ல் மதுரை நகரம் முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றி வந்த ஆனந்தமான தினங்களுக்கு என்னை மீண்டும் செல்ல வைத்து விட்டீர்கள் தீபா. இன்று வாகனத்தில் போய் வந்தாலும் மனது அன்றைய தினத்தை எண்ணுகையில் பூப் பூத்து வஸந்தமாகி விடுகிறது. ரொம்ப நன்றிங்க!
Post a Comment