Sunday, August 29, 2010

யாரிடம் சொல்லி அழ?

அந்திமாலைப் பொழுது. தெருவிளக்குகளின் மீதும் சாலையோரம் படுத்துக் கிடந்த குதிரைகளின் முதுகின் மீதும் பனித்துளிகள் மெல்ல விழுந்து படிந்து கொண்டிருந்தன. குதிரை வண்டிக்காரன் ஐயோனா உடல் முழுதும் வெள்ளைப் பனியால் மூடப்பட்டுப் பிசாசு போல் உட்கார்ந்திருந்தான். வண்டியின் மீது அமர்ந்திருந்த அவன் உடல் எவ்வளவு மடங்க முடியுமோ அப்படி மடங்கி இருந்தது. தன் மீது விழும் பனியை உதறிக் கொள்ளக்கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனது குதிரையும் செயலற்று நின்றிருந்தது.

அசையாமல் அது நின்றிருந்த கோலமும், குச்சிபோல் நேராக இருந்த அதன் கால்களும், ஏதோ அரையணாவுக்குக் கிடைக்கும் பொம்மைக் குதிரையோ எனும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குதிரையும் ஏதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆம், ஏர் கலப்பைகளிடமிருந்தும், நன்கு பரிச்சயமான வயல்வெளிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கொடூரமான நகரவெளியில், யந்திர மனிதர்களுக்கிடையே எறியப்பட்டால், மிருகங்கள் கூட கனத்த மௌனத்துடன் யோசனையில் ஆழ்ந்து விடக்கூடும்.

வெகு நேரமாக ஐயோனாவும் அவன் குதிரையும் அப்படியே இருந்தார்கள். மாலை மயங்கும் போதே அவர்கள் இங்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு சவாரி கூட வரவில்லை. ஆனால் இப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டது. இருளின் அடர்த்தியில் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியத்துவங்கின; சாலையில் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.

"ஹேய், குதிரை வண்டி, பஜாருக்கு வருமா?" ஒரு அதட்டலான குரல் வண்டிக்காரனின் காதில் விழுந்தது.

அவசரமாக எழுந்தவன் பனி மூடிய தன் கண்ணிமைகளின் வழியாகப் பார்த்தான்; இராணுவ அதிகாரி ஒருவன் கோட்டும் தொப்பியும் அணிந்து மிடுக்காக நின்று கொண்டிருந்தான்.

"என்னா தூங்க்குறியா? பஜாருக்குப் போகணும்யா" என்றான் அவன் மீண்டும்.
வண்டிக்காரன் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். பனித்துகள்கள் நாலாபக்கமும் சிதறின. குதிரை வேண்டாவெறுப்பாக எழுந்து நடக்கத் தொடங்கியது.

"யோவ், எங்கய்யா போறே? ஓரமாப் போய்யா" எதிரே வந்த ஒருவன் திட்டி விட்டுப் போவது லேசாகக் கேட்டது. உடனே வண்டியிலிருந்தவனும் கத்தினான். "வண்டி ஓட்டத்தெரியுமாய்யா உனக்கு? ஒழுங்காப் போய்யா..."

வண்டிக்காரன் குழப்பமும் பதற்றமுமாக குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். வண்டி தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த இன்னொரு வண்டிக்காரனும் இவனை நாராசமாகத் திட்டிவிட்டுக் கடந்தான். இன்னொரு நடைபாதை வாசியும் சடாலென்று நகர்ந்து இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.

"பொறுக்கிப் பயலுக..வேணும்னே நம்மளை விழவெக்கிறதுக்காக இதெல்லாம் பண்ணுவானுங்க..." மிலிட்டரிக்காரன் பின்னாலிருந்து முணுமுணுத்தது கேட்டது.

வண்டிக்காரன் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஒரு மெல்லிய விசும்பல் மட்டுமே.

"என்னய்யா?" அதட்டினான் மிலிட்டரிக்காரன்.
அவன் ஒரு கைத்த சிரிப்புடன் வறண்ட தொண்டையிலிருந்து அந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உதிர்த்தான்: " எம்மகன், எம்மகன் போனவாரம் இறந்து போயிட்டான் சார்."

"ஹும்ம்..எப்படி இறந்தான்?"
அவ‌ன் தன் உடலை முழுதும் திருப்பி மிலிட்டரிக்காரனைப் பார்த்து, "ஏன்னு யாருக்கு சார் தெரியும்; அவனுக்குக்க் காய்ச்சல் வந்துது. மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே கெடந்தான்; போயிட்டான், எல்லாம் ஆண்டவன் சித்தம்."

அப்போது ஒரு இருண்ட திருப்பத்திலிருந்து மீண்டும் ஒரு குரல்:
"டேய் சாவு கிராக்கி, எங்கெடா போறே? ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு."

உடனே மிலிட்டரிக் காரனும், "ஆமா, நேராப் பாத்து வண்டிய ஓட்டு. இந்த மாதிரி நீ போனா விடிஞ்சுடும். உம்! சீக்கிரம் சீக்கிரம்"

வண்டிக்காரன் பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்தான். அவ்வப்போது திரும்பிப் பார்த்தான். ஆனால் அந்த மிலிட்டரிக்காரனோ கண்களை இறுக்கி மூடியபடி, இவனிடம் தான் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அமர்ந்திருந்தான்.

பஜாரில் மிலிட்டரிக்காரனை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அமைதியாக வண்டிக்குள் சுருண்டு உட்கார்ந்தான் வண்டிக்காரன். ஒரு மணி நேரம் போயிருக்கும்...இரண்டு மணி நேரம்...

அப்போது மூன்று வாலிபர்கள் வந்தார்கள். இருவர் ஒல்லியாக உயரமாக இருந்தனர். மூன்றாமவன் குள்ளமாகச் சற்றுக் கூன் முதுகுடன் இருந்தான்.
"ப்ரிட்ஜ் ஹோட்டலுக்குப் போகணும்; நாங்க மூணுபேர். இருபது கோபெக். ஓகேவா?"

வண்டிக்காரன் பதில்பேசாமல் குதிரையைக் கிளப்பினான். இருபது கோபெக் என்பது ரொம்பக் குறைவு தான். ஆனால் அவனுக்கு இப்போது ஐந்து கோபெக் கிடைத்தாலும் ஒரு முழு ரூபிளே கிடைத்தாலும் அதெல்லாம் பொருட்டில்லை. யாராவது சவாரிக்கு வரவேண்டும்; அவ்வளவு தான்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டும் வண்டியில் ஏறினர். இப்போது யார் பின்னால் அமர்வது, யார் வண்டிக்காரனுடன் நின்று கொண்டு வருவது என்ற சர்ச்சை கிளம்பியது. இறுதியில் குள்ளமாக இருப்பதனால் கூனுடையவனே நிற்பது என்று முடிவானது.

அவனோ வண்டிக்காரனிடம் எரிந்து விழுந்தான். "என்ன நிக்கிறே. சீக்கிரம் போய்த்தொலை. இது என்ன தொப்பிய்யா போட்டிருக்கே. கண்ராவியா இருக்கு."
"ஹீ..ஹீ, அது சும்மாய்யா..." சிரித்தான் வண்டிக்காரன்.
"சரி சரி..போ. என்ன‌ இவ்ளோ மெதுவாப் போறே. உன் முதுகுல ஒண்ணு குடுக்கவா?"

பின்னாலிருந்த ஒருவன் சொன்னன், "தலை ரொம்ப வலிக்குது. நேத்து நானும் வாஸ்காவும் நாலு பாட்டில் பிராந்தி அடிச்சோம்."
"எப்படிரா இப்படி அள்ளி வுடரே? நீயாவது நாலு பாட்டிலாவது..." சிரித்தான் இன்னொருவ‌ன்.
"டேய், சத்தியமாடா..." ரோஷமானான் முதலாமவன்.

வண்டிக்காரன் இவர்களின் உரையாடலை ரசித்துச் சிரித்தான், "கவலையில்லாத சின்னப் பசங்க..."
உடனே குள்ளமானவன் கத்தினான். "யோவ், வேகமாப் போய்யா...இப்படியா குதிரைக்கு வலிக்காம் ஓட்டுவே? நல்லா சாட்டைய வீசி அடிய்யா..."

இவனது வசவில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். தன்னை அவர்கள் திட்டத் திட்ட, வண்டிக்காரனின் மனம் லேசாகியது. தனது கொடுமையான தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சில் ஒரு சின்ன இடைவெளிக்குக் காத்திருந்த வண்டிக்காரன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்," என்மகன் செத்துப் போயிட்டான்யா.."

"ஹூம்..நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம்..." அசுவாரசியமாகப் பதிலளித்தான் அவனுடன் நின்றிருந்தவன். உடனேயே, "ம்..ம்.. சீக்கிரம் போ. டேய், எவ்வளோ நேரம் தாண்டா நான் இவன் கூட நெருக்கியடிச்சிக்கிட்டு நிக்கிறது. எப்போடா போய்ச் சேருவோம்?"

"அவன் முதுகுல ஒண்ணு போட்டா சரியாப் போகும்." சிரித்தனர் மற்ற இருவரும்.
"யோவ் கெழவா, கேட்டியா. உன்னோட வண்டியில வரதுக்கு நாங்க நடந்தே போயிருக்கலாம். சீக்கிரம் போய்யா." நிஜமாகவே அவன் முதுலில் ஒரு தட்டு தட்டினான் கூட இருந்தவன்.

"யோவ், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாய்யா? பொண்டாட்டி புள்ள இருக்கா?" பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்.
"எனக்கா? ஹும்ம் இருக்கா சுடுகாட்டுல. அவளும் என் மகனும். அய்யோ..என்ன கொடுமை! நான் உயிரோட இருக்க, எம்மவன் போயிட்டான்யா...சாவு தப்பான கதவைத் தட்டிடுச்சே..."

வண்டிக்காரன் இது தான் சமயமென்று தன் மகன் இறந்த கதையைச் சொல்வதற்காகத் திரும்பினான். ஆனால் அதே கணம், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக ஒருவன் அறிவிக்கவே, மூவரும் "அப்பாடா வென்று பெருமூச்சு விட்டபடி வண்டியிலிருந்து குதித்தனர். இருபது கோப்பெக்குக்ளை வண்டிக்காரனிடம் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினர்.

அவர்கள் போய் வெகு நேரமாகியும் வண்டிக்காரன் காசைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் சென்று மறைந்த திக்கையே வெறித்தபடி இருந்தான்.

மீண்டும் அவன் தனியனானான். வெறுமையும் அமைதியும் அவனைச் சூழ்ந்தது. ஏக்கமும் தவிப்புமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். பல ஆயிரம் பேர் குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்லும் இந்தச் சாலையில் அவன் பேசுவதைக் கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் அந்த மாநகரமோ அவனது துயரத்தைப் பற்றிய பிரக்ஞையே இன்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவன் மனப்பாரம் அதிகரித்துக் கொண்டே போனது. அப்போது மட்டும் அவன் இதயம் வெடித்துச் சிதறி இருந்தால் அவன் நெஞ்சில் இருந்த சோகம் அந்த ஊரையே முழ்கடித்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்துக்குக்குப் பிறகு ஒரு போர்ட்டர் அங்கு வந்தான்.

அவனிடம் பேசலாமென்று, "தம்பி மணி என்னப்பா" என்றான்.
"பத்தாகப் போகுது. இன்னும் இங்கெ என்ன பண்றே.. போ போ..." என்று விட்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான்.

மெல்ல வண்டியைச் செலுத்தத் தொடங்கினான். அவன் நெஞ்சில் தேங்கி இருந்த சோகத்தைத் தாங்கவியலாமல் அவன் உடல் மேலும் வளைந்தது. பயங்கரமாகத் தலை வலித்தது. அவ்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. இனிமேலும் மனிதர்களுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்று புரிந்தது.

"ஷெட்டுக்கே போயிடலாம், வா", குதிரையைத் திருப்பினான்.
அரை மணி நேரம் கழித்து அவன் குதிரை வண்டிக்காரர்கள் தங்கும் ஷெட்டில் அடுப்பின் முன்னால் அமர்ந்திருக்கிறான். பெஞ்சுகளின் மேல், தரையின் மேல், அடுப்புப் பரணின் மேல் என்று அங்கங்கு பல வண்டிக்காரர்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்க‌ள்.

அறை முழுதும் நைத்துப் போன வாடை வீசியது. தாடையைச் சொறிந்து கொண்டே தூங்குபவர்களைப் பார்த்தான்.

"ஹூம் தவிடு வாங்கக் கூட‌ இன்னிக்குக் காசு கிடைக்கல. ரொம்பக் கஷ்டமா இருக்கு. சே...தன் வேலையை ஒழுங்கா செய்யத் தெரிஞ்சவனுக்கு, வயிறாரச் சாப்பாடு இருக்கிற‌வனுக்கு, குதிரைக்கு ஒழுங்காத் தீனிகுடுக்க முடிஞ்சவனுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. "

அப்போது மூலையில் படுத்திருந்த ஒரு இளம் வண்டிக்காரன் எழுந்து இருமிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றான். அள்ளி அள்ளித் தண்ணீர் குடித்தான்.

"என்ன, ரொம்பத் தாகமா?" இவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
"ம்..ஆமாம்."
"குடி குடி. இருமலுக்கு நல்லது. சரி, இங்கெ கேளேன், என் மகன்..என் மகன் இறந்துட்டான்யா இந்த வாரம். ஆஸ்பத்திரியில. திடீர்னு...கொடுமை தெரியுமா.."

சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் அவனிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறதென்று பார்த்தான். அவனோ அதற்குள் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். கிழவன மறுமடியும் முகத்தைச் சொறிந்து கொண்டு பெருமூச்செறிந்தான். யாரிடமாவது பேச‌ வேண்டுமென்று அளவற்ற‌ தாகம் ஏற்பட்டது அவனுக்கு; சற்று முன் அந்த இளைஞனுக்கு ஏற்பட்டக் குடிநீர் தாகத்தைப் போல.

இதோ, அவன் மகன் இறந்து ஒரு வாரமாகப் போகிறது. இன்னும் யாரிடமும் அதைப் பற்றி அவன் துக்கம் தீரப் பேசியாகவில்லை. அவனுக்கு உணர்ச்சிததும்ப அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. எப்படி அவன் மகன் நோய்வாய்ப்பட்டான், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான், சாகும் முன் என்ன பேசினான், எப்படிச் செத்துப் போனான்...எல்லாம்.

அவனது இறுதி ஊர்வலம், ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அணிந்திருந்த உடைகளை எடுத்து வந்தது, எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. அவனது ஒரே மகள் அனிஸ்யா கிராமத்தில் இருக்கிறாள். அவளைப் பற்றியும் யாரிடமாவது பேச வேண்டும். ஆம், அவனுக்குப் பேச ஏராளமாய் இருந்தன. யாராவது பெருமூச்சுடன், அவன் புலம்பல்களுக்கு ஈடுகொடுத்துக் கேட்க வேண்டும்.
பெண்களிடம் பேசுவது இன்னும் நன்றாக இருக்கும்; ஆனால் பெண்கள் பாவம், சில சமயம் முதல் வார்த்தையிலெயே கண்ணீர் சிந்தத் தொடங்கி விடுவார்கள்.

"வெளிய போய்க் குதிரையைப் பார்க்கலாம். தூக்கத்துக்கென்ன; மெதுவா வந்து தூங்கிக்கிட்டா போச்சு..." தனக்குள் பேசியவாறே வெளியே சென்றான்.
கோட்டை மாட்டிக் கொண்டு குதிரை லாயத்துக்குச் சென்று தன் குதிரையருகே போய் நின்று கொண்டான். குதிரைக்கு வாங்க வேண்டிய தவிடு பற்றி, வைக்கோல் பற்றி, பனி அதிகமாகப் பெய்வதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான். தனியாக இருக்கும் போது அவனால் தன் மகனைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. யாராவது அருகில் இருந்தால் அதைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியதே தவிர தனிமையில் அந்நினைவுகள் அவனைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கின.

"வைக்க‌ல் திங்கிறியா?" இருளில் பளபளத்த தன் குதிரையின் கண்களைப் பார்த்துக் கேட்டான்." "நல்லா தின்னு...தவிடு வாங்கத் தான் காசில்ல. வைக்கலயாச்சும் நல்லா தின்னு. ஹும்! என்ன பண்றது. எனக்கு வயசாயிப் போச்சு. முன்ன மாதிரி வண்டியோட்ட முடியல. என் மகன் இருந்திருந்தா நல்ல வண்டிக்காரனா இருந்திருப்பான். அவன் வாழ்ந்திருக்கணும்..."

சில கணங்கள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தான்,
"ஆமாம்மா, நம்ம பையன் போயிட்டான்மா, என்னைத் தனியா விட்டுட்டு. எந்தக் காரணமுமே இல்லாம திடீர்னு செத்துப் போயிட்ட்டான்மா. இதோ பாரு, உனக்கு ஒரு குதிரைக் குட்டிப் பிறந்து அதுக்கு நீ தாயா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ...ஒரு நா திடீர்னு உன் குட்டி இறந்து போச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? சொல்லு...ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்ல?"

அவன் குதிரை வைக்கலை மென்றபடியே தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி அவன் கைகளில் தன் மூக்கைத் தேய்த்தது. அதன் சூடான‌ சுவாசம் கைகளில் பட்டதும் அவனுக்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. சட்டென்று உடைந்து குதிரையிடம் தன் துக்கமெல்லாம் சொல்லி அழத் தொடங்கினான்.
********************************************************************************

பின் குறிப்பு:
சென்ற முறை பேச்சாளர் என்ற தலைப்பில் செக்காவ் கதையைத் தமிழாக்கம் செய்த போது செகாவ் கதைகளை ஏற்கனவே தமிழறிஞர்கள் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்களே, நீங்கள் மீண்டும் செய்வதனால் என்ன பயன் என்று ஒருவர் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை இங்கே தருகிறேன்.

நான் ஆங்கில‌த்தில் தான் இக்க‌தைக‌ளைப் ப‌டித்திருக்கிறேன். த‌மிழில் பிறமொழி எழுத்தாளர்களின் எந்தெந்த‌க் க‌தைக‌ள் மொழிபெய‌ர்க்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து என‌க்குத் தெரியாது. அப்ப‌டி த‌மிழில் ப‌டித்த‌ க‌தையை நான் மீண்டும் செய்ய‌ மாட்டேன்.

நான் முத‌லில் செய்த‌ போது அதற்கு வரவேற்பு இருந்ததாலும் சிலர் அப்போது தான் இக்கதைகளைப் படிப்பதாகவும் கூறவே அவ்வப்போது செய்து வ‌ருகிறேன்.

மேலும் ஒரு படைப்பை மொழியாக்கம் செய்யும் போது அதற்கு மூலப்படைப்பிலிருந்து மொழியாக்கம் செய்தவர்கள் பற்றிய‌ குறிப்புகளையும் தர வேண்டும் என்றும் ஒரு கருத்து வந்தது.

செய்தால் சிறப்பாகத் தான் இருக்கும். நான் இணையத்திலிருந்து ஆங்கில மொழியாக்கத்தை எடுத்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

மேலும், நண்பர்களின் ஆசைக்காகவும், என் சுய‌திருப்திக்காகவும், பயிற்சிக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறேன். வியாபார ரீதியாக மொழியாக்கம் செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

புரித‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி. எனது புரிதலில் ஏதாவ‌து த‌வ‌றிருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

Friday, August 27, 2010

முடிவுறாத கனவு...


இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால் நம்மிருவருக்கும் அப்போது இருந்ததைப் போல் இருமடங்கு வயதாகி இருக்கும். என்ன சொல்வது?அப்போது நாம் இருவருமே குழந்தைகள் தானோ? அந்த வயதில் இப்போது யாரையாவது பார்த்தால் குழந்தைகளாகத் தான் தோன்றுகிறார்கள். அது தானே பதின்மவயதின் பிரச்னையே. குழந்தைகளா பெரியவர்களா என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. புரிந்து வழிநடத்த வேண்டிய பெரியவர்களுக்கும் பல சமயம் புரிவதில்லை.

அதை விடு. உனக்கு நினைவிருக்கிறதா அந்த நாள்? ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை குத்திக் கிழித்த அந்த நாள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் கள்ளம் கபடமில்லாமல் அன்பு பெருகி வழிந்து கொண்டிருந்தது இரு உள்ளங்களிலும்.

நாம் ஒருவரையொருவர் பார்த்தாலே பரவசம் கொள்ளத் தொடங்கினோம். என் லேப் நோட்டில் ரீடிங் எழுதிய உன் அழகான கையெழுத்தும் நான் உனக்கு எழுதிக் கொடுத்த அசைன்மென்டும் பரஸ்பரம் விலை மதிப்பில்லாத சொத்தாகின. ந‌ட்பா, ப்ரியமா, காத‌லா, "ம்...சீக்கிர‌ம் முடிவெடு ஏதாவ‌து ஒன்று" என்று அவசரத்துக்குள் ந‌ம்மைத் த‌ள்ளிய‌து எது?

ஆளுக்கு ஒன்றாக, எப்படியும் தவறாகத் தேர்ந்தெடுத்ததில் சிதறிப் போனது அந்த அழகான நாட்கள். நாம் அதுவரை பார்த்தறிந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, இம்மாதிரியான சூழலில் மற்றவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருந்ததோ அப்படி மாறத் தொடங்கினோம்.

நீ என்னை ஓயாமல் துரத்தத் தொடங்கினாய். நான் உன்னை விஷம் போல் வெறுக்கத் தொடங்கினேன். வெற்றிகரமாக இந்தப் பாத்திரங்களுக்குள் நாம் இயல்பாகப் பொருந்திப் போனோம். நான் உன்னை வெறுக்கவே இல்லையென்பது நிரந்தரமாய் உன்னைப் பிரிந்ததுமே புரிந்து போனது.வேறெதுவும் இல்லாவிட்டாலும் அழகான நட்பாக மலர்ந்திருக்க வேண்டிய நம் உறவைச் சிதைத்ததில் நம் பங்கு எவ்வளவு?

அப்போது அறிவில்லை, அனுபவம் இல்லை, பக்குவமும் இல்லை. ஆனால் வானம்பாடிகளாய்ச் சஞ்சரித்த அந்தப் பதின்மகாலத்தில் ஈரம் காயாத‌ மனதில் உண்டான அந்த அன்பு சுத்தமான பாலைக் கடைந்து எடுத்த முதல் அமுதம் போன்றதல்லவா? முடிவுறாத கனவாக அதன் சுவை என் நினைவலைகளில் சுழன்று கொண்டே இருக்கிறது; சில சமயம் இனிதாகவும் சில சமயம் லேசாகக் கசப்பாகவும்...

அன்பான கணவனாக, தந்தையாக உன்னை என்றாவது காண நேர்ந்தால் அந்தக் கனவு இனிதே முற்றுப் பெற்று விடும். அன்பு நண்பனே, அந்நாளை எதிர்பார்த்து...

Monday, August 23, 2010

சோறு வடிக்கிற ராச்சியம்

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

இந்த‌ நூலை வெகு நாட்க‌ள் க‌ழித்து ம‌றுவாசிப்பு செய்தேன்.எத்த‌னை முறை ப‌டித்தாலும் ம‌ன‌தில் நின்ற‌து வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றையும் தான்.

முத‌ல் க‌தை ஆசிரிய‌ரின் சொல்வ‌ழி வெளிப்படுகிற‌து. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்க‌ளின் வாழ்க்கைமுறை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காக‌ ஆசிரியை இரு வீடுக‌ளுக்குச் செல்கிறார்.

வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத‌, "சோறு வ‌டிக்கிற‌ ராச்சியந்தான்" என்று பெருமை பேசுகிற‌, "ச‌முத்திர‌ம் பார்க்க‌ணும்" என்கிற‌ ர‌க‌சிய‌க் காத‌லைத் தன‌க்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிட‌ம் அடி வாங்குவ‌தை மிக‌ இய‌ல்பாக‌ப் ப‌கிர்ந்து கொள்கிற‌ ஐம்ப‌து வ‌ய‌துப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கிறார்.அவ‌ர் வாழ்வில் எத்த‌னை இட்லிக‌ள் தோசைக‌ள், அடைக‌ள் சுட்டிருப்பார் என்ப‌தைக் க‌ண‌க்குப் போட்டு ம‌லைக்கிறார்.

மேலும், இவ‌ர் ப‌டித்த‌வ‌ர் என்ப‌தால் ச‌ற்றே ம‌ரியாதையுட‌ன் பேசும் அந்த‌ வீட்டுக் குடும்ப‌த் த‌லைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து "இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க? இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொள‌ம்பு வேணா ந‌ல்லா ஆக்குவா" என்கிறார்.

இன்னொரு வீட்டில் இதே க‌தை. ஆனால் இங்கு ஓர் இள‌ம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது.

திரும‌ண‌ம் செய்து கொண்டால் க‌ண‌வ‌னுட‌ன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கிய‌ம் கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌வே திரும‌ண‌த்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்த‌ப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள்.

இர‌ண்டு த‌லைமுறைக‌ள் தாண்டியும் பெண்க‌ள் நிலை சிறிதும் மாற‌வில்லை என்ப‌தை அழ‌காக‌ச் சொல்கிற‌து இந்த‌க் க‌தை.

'வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றை' என‌க்கு மிக‌வும் பிடித்த‌து. ஒரு ராஜ‌ஸ்தானி குடும்ப‌ம். ப‌ல‌ அறைக‌ள் கொண்ட‌ விசால‌மான‌ அந்த‌ வீட்டில் ச‌மைய‌ல‌றை ம‌ட்டும் ஓர் இருண்ட‌ மூலையில்.

வாயில் நீரூற‌ வைக்கும் ப‌ல‌வித‌மான‌ ப‌தார்த்த‌ங்க‌ள் நாள் தோறும் த‌யாராகிற‌, விருந்திர்ன‌ர்க‌ள் வ‌ந்தால் தேனீருட‌ன் நிறுத்தாம‌ல் உபசரிக்கப் ப‌ல‌விதமான‌ ப‌ண்ட‌ங்க‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌ அந்த‌ வீட்டின் ச‌மைய‌ல‌றையில் எரிவ‌து ஒரு பூஜ்ய‌‌ம் வாட் விள‌க்கு. பாத்திர‌ங்க‌ள் தேய்க்க‌ச் ச‌ரியான‌ தொட்டி இல்லை. வெளிச்ச‌மோ காற்றோ புக சரியான சாள‌ர‌ம் இல்லை.

இதில் தான் அந்த‌க் குடும்ப‌த்த‌லைவியான‌ ஜீஜீ த‌ன‌து ராஜ்ஜிய‌த்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவ‌ள‌து ம‌ரும‌க‌ள்க‌ளும் விடுமுறைக்கு வ‌ரும் நாட்க‌ளில் அங்கேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டி வ‌ருகிற‌து.

க‌டைசி ம‌ரும‌க‌ளான‌ மீனாட்சி தான் அந்த‌ச் ச‌மைய‌ல‌றையின் கேடான‌ நிலையைப் ப‌ற்றி முத‌ல் முறை அக்குடும‌ப்த்த் த‌லைவ‌ர் ப‌ப்பாஜியிட‌ம் வாய் திற‌க்கிறாள். இது வீட்டினரிடையே மிக‌ப் பெரிய‌ ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் மாற்ற‌ங்க‌ள் ஏதும் ந‌டைபெற‌வில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.

உல்லாசப்ப‌ய‌ண‌ம் போக‌லாமென்று முடிவு செய்த‌ நாள‌ன்று வீட்டுப் பெண்க‌ள் அத்தனை பேரும் அந்த‌ வெக்கையான‌ ச‌மைய‌ல‌றையில் அதிகாலை நான்கு ம‌ணி முத‌ல் க‌டுமையாக‌ வேலை செய்ய‌ வேண்டி வ‌ருகிற‌து. இருப‌து பேருக்கு நூறு பூரிக‌ள், சான்ட்விச்சுக‌ள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழ‌ந்தைக‌ளுக்குப் பால் பாட்டில்க‌ள், மாலை ப‌க்கோடா சாப்பிடுவ‌த‌ற்கும் அடுப்பு, அரிந்த‌ வெங்காய‌ம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள‌ வேண்டி வ‌ருகிற‌து. குழ‌ந்தைக‌ளை எழுப்பிக் குளிக்க‌ வைத்துக் கிள‌ப்புவ‌தும் பெண்க‌ள் வேலை தான்.

இடையே இவ‌ர்க‌ள் சத்த‌த்தால் தூக்க‌ம் க‌லைகிற‌ ஆண்க‌ள் போடும் அத‌ட்ட‌லால், ர‌க‌சியமாக‌வே பேசிக் கொண்டு வேலையில் ஈடுப‌டுகிறார்க‌ள். எல்லா ம‌ரும‌க‌ள்க‌ளும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.

கணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.

இறுதியில் உட‌ல் நிலை மோச‌ம‌டைந்த‌ நிலையில் ப‌டுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து "நீ நல்ல உழைப்பாளி" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.

ஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.

பெண்க‌ள் த‌ங்க‌ள் ராஜ்ஜிய‌மென்று வ‌ரித்துக் கொண்ட‌வை எதுவுமே அவ‌ர்க‌ளுடைய‌த‌ல்ல‌, அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு யாதொரு சிற‌ப்பும‌ல்ல‌ என்ப‌தை அழுத்த‌மாக‌ நிறுவுகிற‌து இக்க‌தை.

இக்க‌தையைப் ப‌டிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன‌?

நூற்குறிப்பு: வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள்.

Thursday, August 19, 2010

ஒரே கோண‌ம், ஒரே பார்வை

வெந்தழலாய்ச் சுடுகின்ற வெறுப்புக்கு மறுபுறம்
ஈரமான‌ அன்பிருந்தால்
வெறுப்பும் கூட அழகு தான்;

குத்திக் கிழிக்கும் குரோத‌ம் கூட‌
ச‌த்திய‌த்தின் ஆத்மாவினால்
சுத்தமாக வெளிப்பட்டால்
குரோதம் கூட‌ அழகு தான்;

அதர்மத்தையும் அநீதியையும்
வேரறுக்கும் முயற்சியில்
வஞ்சகமும் துரோகமும் கூட
நிச்சயமாய் அழகு தான்;

எக்கோண‌த்திலும் அழ‌கில்லை
எப்பார்வையிலும் ஏற்பில்லை
அற்ப‌ங்க‌ளும் சுய‌ந‌ல‌மும்
வ‌க்கிர‌ங்க‌ளின் வ‌டிகால்க‌ளும்.

மீண்டு வ(ச)ந்த காலம்!

விடை தெரியாக் கேள்விகளால் நிறைந்திருந்தது ஒரு காலம் - அது

துள்ளித் திரிந்த வாழ்வின் வசந்த காலம் ;

ஒரே கேள்விக்குப் பல விடைகள் தெரிய,

சரியெது தவறெது என‌க் குழம்பியதொரு காலம்;

தெரிந்தெடுத்த விடைகளுக்காய்ச்

சாதுர்யமாய் வினாக்களை

வடிவமைக்க நேர்ந்ததோர் காலத்தின் கோல‌ம்!

வினாக்களும் விடைகளும் பொருளிழந்து போகக் கண்டு

மோன நிலை வேண்டி நின்றேன்

மீண்டு(ம்) வந்தது வ‌ச‌ந்த கால‌ம்!

Tuesday, August 17, 2010

பட்டுப்பூச்சியும் ஆந்துப்பூச்சியும்

பட்டாம்பூச்சி

பட்டுப்பூச்சி, வண்ணத்துப் பூச்சி என்றும் அழைக்கப் படுகிற இந்தச் சின்னப் பூச்சிக்கு மட்டும் நம்மிடையே ஒரு தனி அந்தஸ்து இருக்கிறது. கண்ணைக் கவரும் சிறகுகள், கைக்கு லேசில் அகப்படாமல் படபடவெனப் பறந்து திரியும் அழகு; பொதுவாகவே அழகான மலர்களும், புற்தரையும் இருக்கும் ரம்மியமான சூழலில் மட்டுமே காணப்படும் தன்மை இதெல்லாம் தான்.

நேஹாவுக்கு மிகவும் பிடித்த உயிரினமும் பட்டுப் பூச்சி தான். பட்டுப்பூச்சி எப்படிப் பறக்கும் என்று கேட்டால் கைகளை இரண்டு ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலோடு சேர்த்து அழகாக அசைத்து "திகுதிகுதிகுன்னு போகும்" என்பாள். (அவள் மாமிப்பாட்டி சொல்லிக் கொடுத்தது.)

ஆந்துப்பூச்சி

Moth என‌ப்படும் ஆந்துப்பூச்சியும் பட்டுப்பூச்சியின் வகையைச் சேர்ந்தது என்றாலும் இதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன‌. பட்டுப்பூச்சிகளுக்கு பலவித பளிச் நிறங்களில் சிறகு இருக்கும்; ஆந்துப் பூச்சிகளுக்குப் பெரும்பாலும் பழுப்பு அல்ல கறுப்பு நிறத்தில். ஆனால் இரண்டுமே அதன் தனித்தன்மைக்கேற்ப அழகு தான்.

உன்னிப்பாகப் பார்த்தால் பட்டுப் பூச்சி அமரும் போது சிறகுகளை மூடிக் கொண்டு அமரும். Moth சிறகினை விரித்தபடியே அமரும். ஆந்துப்பூச்சி பூக்களிருக்கும் இடம் தான் இருக்கும் என்பதில்லை. பட்டுப்பூச்சி பெரும்பாலும் பகல்நேரங்களில் பறக்கும்; ஆந்துப்பூச்சி இரவு நேரங்களில். இது தவிர உடற்கூறுகளிலும் சில வேறுபாடுகள் உண்டு.

ஒரு நாள் மாலை வீட்டுக்குள் ஒரு மாத் வந்தது. நேஹா ஒரேயடியாக உற்சாகமாகி அதைப் பிடிக்க அதன் பின்னாடியே ஓடினாள். பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி என்று உற்சாகக் கூச்சல்!

அவளது உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் பறந்த அது திடீரென்று எங்களுக்கருகில் தரையில் உட்கார்ந்தது. நானும் நேஹாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தவாறே அதைப் பிடிக்கக் கை நீட்டினோம். லேசாக நேஹாவின் விரல் பட்டதும் பூச்சி பறந்து வெளியே போய் விட்டது.

அவ்வளவு தான், உடனே முகமெல்லாம் மாறி அழுகை. "பட்டுப் பூச்சி போச்சு! பட்டுப்பூச்சி போச்சு... பாப்பா அடிச்சா, பாப்பா அடிச்சா..." முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது; தான் அடித்ததால் தான் அது பறந்து விட்டதாக நினைத்து அழுகிறாள் என்று. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினேன்.

"அதுக்குத் தொப்பை பசிச்சுதாம். வீட்டுக்குப் போய் சாப்பிடப் போயிருக்கும்மா. சாப்டுட்டு வந்து உன் கூட விளையாடும் என்ன?" என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கையில் 'வீல்' என்ற கூச்சலுடன் இடுப்பை விட்டு இறங்கி விட்டாள். புயலாக சன்னல் வழியே உள்ளே மீண்டும் நுழைந்த அந்தப் பூச்சியுடன் விளையாடத் தயாராகி விட்டாள்; என்னை மறந்தே போனாள்!

(பி.கு: தேவையில்லாம எதுக்கு உயிரியல் பாடம்னு கேட்காதீங்க, சும்மா ஒரு ஜெனரல் நாலட்ஜுக்குத் தான்!)

Friday, August 13, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

நண்பரொருவர் தன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாக் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுப‌வ‌த்தைப் பகிர்ந்து கொண்டார். கேட்கவே உற்சாகமாக இருந்தது. தொடர்ந்து நினைவலைகள் என் பள்ளி நாட்களின் ஆண்டுவிழா அனுபவங்களை நோக்கிச் சென்றது. ஹார்மோனியம் தபேலாவுடன் திரைமறைவில் பின்னணி இசைக்குழுவின‌ர், திரை மூடும் திறக்கும் தருண‌ங்கள், மேடைக்குப் பின் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த நிமிடங்கள்...

இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆண்டுவிழா என்ற சாக்கில் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, செலவுக்கெல்லாம் மாணவர்களிடமே நிதி வசூலிப்பது, கண்ட கண்ட சினிமாப் பாடல்களை ஓடவிட்டுப் பிள்ளைகளை இடுப்பை நெளித்து ஆடவிடுவது, என்று தொடங்கி இருக்கிறார்கள்.

எங்கள் பள்ளி சின்னப் பள்ளி தான். மைதானமும் சிறியது தான். ஆனாலும் அங்கு நடந்த ஆண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தன். அங்கு படித்த மாணவியான எனக்கும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் பசுமையாக நினைவிலிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?

நிகழ்ச்சிகளும் தரமாக இருந்தன. சினிமாப்பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கிறோம். ஆனால் அந்தந்த நேரத்து ஹிட்பாடல்களுக்குக் குத்தாட்டம் போடுவது போலல்ல. நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு மட்டுமே.

பள்ளியில் எப்போதும் பிப்ர‌வ‌ரி மார்ச் மாத‌த்தில் தான் ஆண்டுவிழா ந‌ட‌த்துவார்க‌ள். அனேக‌மாக‌ மூன்றாம் ப‌ருவ‌த் தேர்வுக்கு முன்பாக.அத‌ற்குப் ப‌த்துப் ப‌தினைந்து நாட்க‌ளுக்கு முன்பாக‌வே க‌ளைக‌ட்ட‌த் தொட‌ங்கி விடும். ந‌ட‌ன‌ம், நாட‌க‌ம், சேர்ந்திசை என்று நிக‌ழ்ச்சிக‌ள் திட்ட‌மிட்டு அத‌ற்கேற்ப‌ பிள்ளைக‌ளைத் தேர்வு செய்வார்க‌ள். எதிலும் சேர்க்காத பிள்ளைகள் வருந்தத் தேவையில்லை. அவர்கள் விழா இறுதியில் பாடப்படும் சேர்ந்திசையில் சேர்க்கப்பட்டு அதற்கும் பயிற்சி நடக்கும். வெள்ளை உடையில் கையில் மெழுகு வர்த்தி வைத்துக் கொண்டு பாடும் அந்த நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது தான்.

விழாவை விட அதிகம் குதூகலம் தருவது அதற்கு முன் பயிற்சி நடக்கும் நாட்கள் தான். வகுப்புகள் பெரும்பாலும் நடக்காது. சில வகுப்புகளில் ஒத்திகைக்காக வேண்டி பெஞ்சுகளையெலாம் சுவரோரமாக நகர்த்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த வகுப்புகள் மரத்தடியில் நடக்கும். ஜாலி!

நம்முடைய நிகழ்ச்சிக்கான‌ பயிற்சி முடிந்தாலும் பெரிய க்ளாஸ் மாணவர்கள் போடும் நாடகம், நடனம் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது; "ஒதெல்லோ ட்ராமால‌ யாசீன் அண்ணா சூப்பரா நடிக்கிறார். அவருக்குத் தான் இந்த தடவை பெஸ்ட் ஆக்டர் ப்ரைஸ்..." "இல்லல்ல‌ எப்பவும் போல ப்ரின்ஸியோட ஃபேவரிட் அஜிதாவுக்குத் தான் குடுப்பாங்க பாரேன்!" அப்பொவே சிலருக்குப் பாலிடிக்ஸ் எல்லாம் புரிந்திருந்தது எப்படி?

பெரிய‌ க்ளாஸ் பிள்ளைக‌ளின் நாட‌க‌ங்க‌ளில் வ‌ரும் வ‌ச‌ன‌த்தை எல்லாம் நாமும் அதே போல் சொல்லிப் பார்த்து ம‌கிழ்வ‌து; ச‌ரியாக‌ ந‌டிக்காத‌வ‌ர்க‌ளை டீச்ச‌ர்க‌ள் திட்டும் போது வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்ப‌து; அந்த‌ அண்ணாக்களும் அக்காக்களும் ந்ம்மை, "வெளிய‌ வா வெச்சுக்க‌ரேன்" என்ப‌து போல் முறைப்ப‌து! ஆஹா!

எப்படியோ, எதற்குத் தான் அவ்வளவு உற்சாகமோ?வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. விழாவுக்கு முதல்நாள் தூக்கமே வராது!

நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும் போது சின்ட்ரெல்லா நாட‌க‌த்தில் சின்ட்ரெல்லாவைச் சுற்றி ஆடும் கூட்ட‌த்தில் ஒரு பெண்ணாக‌ இருந்தேன். என் தோழி தான் சின்ட்ரெல்லா. அவளுக்குத் தங்க நிறத்தில் முழு நீள‌ கவுன். எங்களுக்கெல்லாம் வயலட் நிறத்தில் ஃப்ரில் வைத்த ஃப்ராக்.
வேறுபாடெல்லாம் தெரியாமல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது! ஆனால் கூட‌ ஆடிய‌ பைய‌னுட‌ன் என‌க்கு ஆகாது என்ப‌தால் அவ‌னுட‌ன் கை கோத்து ஆடுவ‌து வெறுப்பாக‌ இருந்த‌து!

பின்பு இர‌ண்டாம் வ‌குப்பில் ஜப்பான் ந‌ட‌ன‌ம். 'ல‌வ் இன் டோக்யோ' இந்திப் ப‌ட‌த்தில் வ‌ரும் ச‌ய்னோரா பாட‌லுக்கு ஆடினோம். நான் ந‌ன்றாக‌ ஆடினாலும் த‌லையைக் குனிந்து கொண்டு, சிரிக்காம‌ல் உம்மென்று இருப்பேன். அத‌னால் முத‌ல்வ‌ரிசையில் நின்றிருந்த‌ என்னை இர‌ண்டாம் வ‌ரிசைக்கு அனுப்பி விட்டார்க‌ள். அப்பாடாவென்று அத‌ன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!

ஐந்தாம் வ‌குப்பில் தான் செம‌ காமெடி. ஆங்கில‌ ஆசிரிய‌ர், த‌மிழ் ஆசிரிய‌ர் இருவ‌ருமே அவ‌ர‌வ‌ர் நாடக‌த்தில் என்னைச் சேர்த்து விட்டார்க‌ள். த‌மிழ் நாடகத்தில் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற கதையில் வரும் புல‌வ‌ர்க‌ளில் ஒரு வேட‌ம்.

ஆங்கில‌ நாட‌க‌த்தில் சொத‌ப்பி விட்டேன். ஒரு விடுதியில் வேலைக்கார‌ன் வேட‌ம்; ராஜா வ‌ர‌ப்போகிறார்; விடுதியை ஒழுங்காக‌ச் சுத்த‌ம் செய்து வை என்று எஜ‌மான‌ர்க‌ள் மிர‌ட்டி விட்டுப் போவார்க‌ள். மாறுவேட‌த்தில் வ‌ந்த‌ ராஜாவையே வேலைக்கு அம‌ர்த்தி ஏவுவது, பின் எஜ‌மானார்க‌ள் வ‌ந்து அதிர்ச்சிய‌டைவது, ஆனால் ம‌ன்ன‌ரோ வேலை செய்வ‌து த‌ன‌க்கு மிக‌வும் பிடித்திருந்தது என்றும் அந்த‌ வேலைக்கார‌னைப் பாராட்டிப் ப‌ரிசு கொடுப்ப‌து என்றும் முடிய‌ வேண்டும். இதில் ம‌ன்ன‌ரை மேசைக்கு அடியில் சுத்த‌ம் செய்ய‌ விட்டு ம‌ற்ற‌ இட‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்வ‌து போல் நான் ந‌டிக்க‌ வேண்டும்.

நாட‌க‌ம் ந‌டைபெறும் நாள் வ‌ரை மேசை வைத்து ஒத்திகை ந‌ட‌க்க‌வில்லை. அத‌னால் என்ன‌ ஏதென்று புரியாம‌ல் நான் மேசைக்கு அடியில் சென்று புகுந்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து எழுந்து வ‌ந்து வ‌ச‌ன‌ம் பேசிக் கொண்டிருந்தேன். பார்வையாள‌ர்க‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

நாட‌க‌ம் முடிந்த‌தும் டீச்ச‌ரிட‌ம் செம‌ டோஸ். ஆனால் அவ‌ர் என்னை ரொம்ப‌த் திட்டாம‌ல் த‌மிழாசிரிய‌ர் ஆறுத‌ல் கூறி அணைத்துச் சென்று விட்டார். பின்னே, அவங்களோட த‌மிழ் நாட‌கமாவது சொத‌ப்பாம‌ இருக்க‌ணுமே! அதில் ஒழுங்காக‌ ந‌டித்தேன். ஆனாலும் அந்த‌ ஆங்கில‌ நாட‌க‌த்தைச் சொத‌ப்பிய‌தை நினைத்தால் இன்றும் வெட்க‌மாக‌ இருக்கிற‌து!

ஏழாவ‌து ப‌டிக்கும் போது க‌ர‌காட்ட‌க்கார‌ன் பட‌ப்பாட‌லுக்கு நான்கு பேர் க‌ர‌காட்ட‌ம் ஆடினோம். யாரோ ஒருவ‌ர் க‌ர‌க‌ங்க‌ள் கொண்டுவ‌ந்து தலையில் வைத்துக் க‌யிற்றினால் தாடைக்குக் கீழ் இறுக்க‌க் க‌ட்டிவிட்டார். ரொம்ப‌வே வ‌லித்த‌து. த‌லையை அப்ப‌டி இப்ப‌டி அசைக்க‌க் கூடாதென்று விட்டார். என் தோழி ஜோதி ம‌ற்றும் இருவ‌ரும் ச‌ம‌ர்த்தாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். ந‌ம‌க்குத் தான் அர்த்தமில்லாமல் எந்த‌ அசௌகரிய‌த்தையும் கொஞ்சநேரம் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதே. 'என்ன‌ இது விழாம‌ல் இருக்க‌ லேசாக் க‌ட்டினா போதாதா' என்று நைஸாக‌ முடிச்சைத் த‌ள‌ர்த்தி விட்டுக் கொண்டேன். அத‌ன் விளைவு நிக‌ழ்ச்சி முடிந்து ப‌ட‌ங்க‌ள் பார்க்கும் போது தெரிந்த‌து. என்னுடைய‌ க‌ர‌க‌ம் ம‌ட்டும் பைசா கோபுர‌ம் போல் ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டிருந்த‌து!

ப‌த்தாம் வ‌குப்பில் ஒரு பிராம‌ண‌க் குடும்ப‌த்தை ஒட்டி ந‌ட‌க்கும் நாட‌க‌த்தில் என்னைக் க‌தையின் நாய‌கியாக‌ (ம‌டிசார் கட்டி மாமியாக‌) ந‌டிக்க‌ வைத்தார் நாட‌க‌த்தின் ஆசிரியை. எனக்கு என்ன ஆச்ச‌ரிய‌மென்றால் அந்தப் பாஷையை இய‌ல்பாக‌வே நன்றாகப் பேச‌க் கூடிய‌ மாண‌விக‌ள் இருக்கையில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ப‌து தான். ஆனால் யாருமே, என்னுட‌ன் ப‌டித்த‌ பிராமண‌‌‌வ‌குப்பைச் சேர்ந்த‌ தோழிகள், ஆசிரியர்கள் உட்ப‌ட‌ இத‌ற்கு மாற்றுக் க‌ருத்தே தெரிவிக்காத‌துட‌ன் நான் ந‌ன்றாக‌ப் பேசி ந‌டித்த‌தாக‌வும் பாராட்டினார்க‌ள். என்னால் ம‌ற‌க்க‌ முடியாத‌ அனுப‌வ‌ம் அது.

ஆண்டு விழாவென்றால் அதிக‌ம் எதிர்பார்க்கிற‌ இன்னொரு விஷ‌ய‌ம் ப‌ரிச‌ளிப்பு. மேடையில் ந‌ம‌து பேர் வாசிக்க‌ப்ப‌டுவ‌தும் க‌ர‌கோஷ‌த்துக்கிடையில் மேடையேறிச் சென்று சிற‌ப்பு விருந்தின‌ரின் புன்ன‌கையோடு ப‌ரிசை (புத்த்கங்கள் தான்) வாங்குவ‌தும் ப‌ட‌ப‌ட‌ப்பான‌ த‌ருண‌ங்க‌ள்.

வாங்கி இருக்கைக்கு வ‌ந்த‌ பின் அம்மா ம‌ற்றும் அக்காவின் கொஞ்ச‌ல்க‌ளுக்கிடையில் அது என்ன‌ புத்த‌க‌ம் என்று பிரித்துப் பார்ப்ப‌து அதை விட‌ ஆன‌ந்த‌ம்!

ப‌ள்ளியில் பேச்சு, கட்டுரை (ஆங்கில‌ம், த‌மிழ், ஹிந்தி) பாட்டு, ந‌ட‌ன‌ம், ஓவிய‌ம், மாறுவேட‌ம், ம‌ற்றும் வினாடிவினா ஆகிய‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும்.இதில் பேச்சு, க‌ட்டுரை, பாட்டு, ஓவிய‌ம் இவ‌ற்றுள் எதிலாவ‌து இரண்டு மூன்று ப‌ரிசுக‌ள் கிடைத்து விடும். 'உன‌க்கு எத்த‌னை ப்ரைஸ் என‌க்கு எத்தனை' என்று என் தோழி ஜோதிக்கும் என‌க்கும் எண்ணிக்கையில் போட்டி துவ‌ங்கும். ஒரு முறை அவ‌ளை விட‌ என‌க்கு ஒரு ப‌ரிசு கூடுத‌லாகி நான் முன்ன‌ணியில் இருந்தேன். த‌லை கொள்ளாத‌ பெருமை தான். வேறென்ன‌ என‌க்கு ஒரு புத்த‌க‌ம் அதிக‌மாக‌க் கிடைக்குமே!

ஆனால் ஒரு விஷ‌ய‌த்தை நான் ம‌ற‌ந்து விட்டேன்! 'ஜென‌ர‌ல் ப்ரொஃபிஷியென்சி' என்ற‌ பிரிவில், அதாவ‌து ஆண்டு முழுதும் வ‌குப்பில் முத‌ல்மாண‌வியாக‌ வ‌ந்த‌த‌ற்குப் பெரிய‌ ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் அந்த‌ ஒரு பிரிவிலேயே அவ‌ளுக்கு நான்கைந்து புத்த‌க‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌. வ‌ந்து என்னிட‌ம் காட்டிச் சிரித்த‌போது ஆஹா, வ‌டை போச்சே என்றிருந்த‌து!

ஹூம்! அதெல்லாம் ஒரு கால‌ம். க‌ள்ள‌ம் க‌ப‌ட‌மில்லாம‌ல் சுற்றித் திரிந்த‌ அந்த‌க் கால‌ங்க‌ளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தாவ‌து அத்த‌கைய‌ இத‌ய‌த்தைத் த‌க்க‌ வைத்துக் கொள்ளும் முய‌ற்சி தான் இந்த‌க் கொசுவ‌த்திக‌ள். கொசுவத்தி அணையாமல் மீண்டும் ப‌ற்ற‌ வைக்க‌ இவ‌ர்க‌ளை அழைக்கிறேன்.

ஹுஸைன‌ம்மா - இவ‌ர‌து இய‌ல்பான‌ ந‌கைச்சுவை எழுத்தை வெகுவாக‌ ர‌சிக்கிறேன். இவ‌ர‌து 'ச‌ப்பாத்தி டேஸ்' ப‌டித்துவிட்டீர்க‌ளா?

அம்பிகா - இப்பவே இவ்ளோ சேட்டைக்காரியா இருக்க்ற‌ இவ‌ங்க‌ ப‌ள்ளிக் கால‌த்துல‌ எப்ப‌டி இருந்திருப்பாங்க? எழுதுங்க‌க்கா உங்க‌ள் ப‌ள்ளி ஆண்டு விழா அனுப‌வ‌ங்க‌ளை.

ஸ்ரீஅகிலா - பதிவுலகில் நம்பிக்கை தரும் புதுவரவு. இவரது பள்ளிக்கால நினைவுகளை அசைப்போடச் சொல்வோமா. வாம்மா மின்னல்!

ச‌ந்த‌ன‌முல்லை - அழுத்த‌மான‌ ச‌மூக விஷயங்களுக்கு ம‌ட்டும‌ல்ல, அழகான நினைவலைகளை எழுதுவதிலும் என் டாப் ஃபேவ‌ரிட் இவ‌ர்தான். வாங்க‌ மேட‌ம். வ‌ந்து சுத்துங்க‌!

வெறும்ப‌ய‌ - இப்போது தான் இவ‌ரைப் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறேன். இய‌க்குந‌ர் ட‌ங்க‌ன் ப‌ற்றி அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ளைப் ப‌கிர்ந்திருக்கிறார். புட்டு ச‌மைத்த‌ க‌தையை எழுதிய‌ வித‌ம் சுவார‌சிய‌ம். இப்ப‌திவினையும் அதே போல் சுவாரசியமாக‌த் தொட‌ர்வார் என்று ந‌ம்புகிறேன்.

ஜோ ஆனந்த் - ‍இவரையும் இப்போது தான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவர் எழுதும் விஷயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்ற இவரது இடுகை மிகவும் முக்கியமானது.

பி.கு. 1: விளையாட்டுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் என்பதால் விளையாட்டு விழாவைப் பற்றி எழுதவில்லை. விருப்பமுள்ளவர்கள் அதையும் எழுதலாம்.

பி.கு. 2: ப‌திவு கொஞ்ச‌ம் நீ....ள‌ம்; பொறுத்த‌ருள்க‌.

Wednesday, August 11, 2010

ராக தீபம் ஏற்றும் நேரம்...!




இசைப் பிரிய‌ர்க‌ளுக்கு, குறிப்பாக‌ இளையராஜா ரசிகர்களுக்கு (வெறியர்கள்!)ஒரு விளையாட்டு.


இந்த ராகம், ராகம்னு சொல்றாங்களே, அதை நமக்குப் பிடிச்ச பாட‌ல்க‌ளில் நாமளும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாமா? ஆனா இந்த விளையாட்டுக்கு ராகங்கள் பற்றித் தெரியவேண்டாம்; அதன் பேர்கள் கூடத் தெரியவேண்டாம்; நுட்பமான இசை ரசனை இருந்தாப் போதும். இது இளையராஜா ரசிகர்களுக்கு இல்லாம போகுமா?!


ஏன்னா அவ‌ர் ப‌ல‌ அழ‌கான‌ ராக‌ங்க‌ளைப் ப‌ல‌ பாட‌ல்க‌ளில் பல‌ வித‌மா ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்காராம்.


எடுத்துக்காட்டாக "அம்மா என்றழைக்காத..." பாட்டும் "ஜனனி ஜனனி" பாட்டும் ஒரே ராகம். கேட்டுப் பாருங்க புரியும்; ஒரே மாதிரி ஃபீல் கிடைக்கும்.
அதே மாதிரி இப்ப நான் கண்டுபிடிச்சது என்னன்னா, "சின்னா மணிக் குயிலே" பாட்டும் "சந்தைக்கு வந்த கிளியும்" ஒரே மாதிரி இருக்கு. ஹை!

அதே மாதிரி "சொர்க்க‌மே என்றாலும்" பாட்டும் "தென்ற‌ல் வ‌ந்து என்னைத் தொடும்" பாட்டும் ஒரே ராகம்.

சன்டிவி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் இந்த‌ மாதிரி பாட்ல்களைக் கோத்துப் பாடுவ‌து ஒரு சுற்றாக‌வே வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து நினைவிருக்க‌லாம்.

இப்போ நாம் இப்படி ஒரே மாதிரி தொனிக்கிற பாட்டுக்களை லிஸ்ட் பண்ணலாமா?

ஸ்டார்ட் ம்யூஸிக்!!! (Literally!)

ராகங்கள் பற்றிய பயிற்சியும் தெரிவும் உள்ளவர்கள் உள்ளவர்கள் கலந்து கொண்டு திருத்தங்கள் சொல்ல வேண்டுகிறேன். என்ன ராகம் என்று சொன்னால் அதையும் தெரிந்து கொள்ளலாம். ஒரே பாட்டில் கலவையான ராகங்கள் இருப்பின் அதையும் சொல்ல‌ வேண்டுகிறேன்! Volunteer judges are most welcome.

Sunday, August 8, 2010

உண்மைகளும் சில ஊனங்களும்

பொய்களுக்குத் தான் எத்தனை வாய்கள்?
கேட்கத்தான் எத்தனை காதுகள்?
பல நூறு ரசம் காட்டி, அழகழகாய் வேடம் புனைந்து
பவனி வரத்தான் எத்தனை பல்லக்குகள்?
ரசித்து வியக்கத் தான் எத்தனை கண்கள்?

குருடாய், செவிடாய், ஊமையாய் உறங்கினாலும்
உண்மையின் உள்ளே இல்லை ஊன‌ங்க‌ள் !

Friday, August 6, 2010

ஃபோட்டோ விளையாட்டு!

இந்தப் படத்தில் பல துறைகளை, காலங்களைச் சார்ந்த 100 பிரபலங்கள் இருக்கிறார்கள். குறைந்தத் 25 பேரைக் கண்டுபிடிக்க முடிந்தால் நமது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாமாம்!

ம்..ஸ்டார்ட் ம்யூஸிக்! (படத்தைப் பெரிதாக்க அதன் மீது சொடுக்கவும்)

(பி.கு. பரிசு எதுவும் அறிவிக்கவில்லை, ஏனெனில் என்னிடம் விடைத்தாள் இல்லை!)