Tuesday, July 27, 2010

மீண்டும் ஒரு சொ.க, சோ.க!

வெ.இராதாகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளின் அன்பான‌ அழைப்பைத் த‌ட்ட‌முடியாம‌ல் இந்த‌ இடர்... சாரி தொட‌ர்ப‌திவை எழுதுகிறேன். பொறுத்துக் கொள்ள‌வும்!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தீபா தான்.(ஆனால் ஆங்கிலத்திலும் ஒரு பதிவு வைத்திருப்பதால் Deepa என்றே வைத்திருக்கிறேன்.)

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது தான் உண்மையான பெயர்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இந்த‌க் கதையை ஏற்கெனவே இங்கே எழுதி இருக்கிறேன். விருப்பப்பட்டால் படித்துப் பார்க்கவும்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலம் என்ற வார்த்தை எனக்கு அலர்ஜி! அதனால் 'அதிகம் பேர் படிக்க வேண்டுமென்று' தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளில் இணைத்து வருகிறேன். இப்போது பஸ் மற்றும் ட்விட்டர்களிலும் சுட்டி வைக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நிறைய. அனுபவங்களை அசைபோடுவதே ஒரு அலாதியான அனுபவம் தானே!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்குக்காக, எழுத்துப் பயிற்சிக்காக, மனதில் தோன்றுவதைக் கொட்டித் தீர்ப்பதற்காக, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக என்று நிறைய காரணங்களைக் கூறலாம்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
காழ்ப்புணர்ச்சி, அகங்காரம், சுயமோகம், வக்கிரம் வெளிப்படும் எழுத்துக்கள், பெண்களைக் கேவலப்படுத்தும் (நகைச்சுவை என்ற பெயரில் கூட) எழுத்துக்கள், மனசாட்சியை அடகு வைத்து விட்டுச் சுயநலத்துக்காக எழுதப்படும் / ஆதரிக்கப்படும் எழுத்துக்கள் கண்மண் தெரியாமல் கோபம் ஏற்படுத்துகின்றன‌. ஆனால் இப்போது நிதான‌ம் ப‌ழ‌கிவ‌ருகிறேன்.(அதற்காக அத்தகைய எழுத்துக்களை ஏற்க மனம் ப‌ழ‌கிவிட்ட‌தாக‌ அர்த்த‌மில்லை!)

பொறாமை - இது நிறைய‌ பேர் மேல‌ உண்டு. அலட்டாமல் ஆர்ப்பாட்டமில்லாமல், எழுத்தில் செறிவோடும் கருத்தில் நேர்மையோடும் எழுதும் எல்லார் மீதும் மதிப்பு கலந்த பொறாமை உண்டு. அர்த்த‌ம் மிக்க‌ நையாண்டிக‌ள் செய்வோரின் ந‌கைச்சுவை உண‌ர்ச்சி மீதும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முத‌ல் பாராட்டு, குட்டு எல்லாமே மாதவராஜ் அங்கிள் தான். அவரைத் தவிர‌, என் முத‌ல் சில இடுகைக‌ளை எடுத்துப் பார்த்தால் ரேகா ராகவ‌ன், ம‌துமிதா, புதுகை அப்துல்லா, ஆயில்ய‌ன், தேவ‌ன்மாய‌ம் ஆகியோர் பின்னூட்ட‌மிட்டு உற்சாக‌ப் ப‌டுத்தி இருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்கு இந்த‌க் கேள்வியைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ன்றி சொல்லிக் கொள்கிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சாரி, இதுவே அவசியமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுக்கு மேல‌ என்னைப் ப‌த்தித் தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இவ்ளோ தாங்க!

ரொம்ப நன்றி.

பி.கு: இந்தத் தொடரில், என்னுடைய இந்த இடுகையைத் தான் மொக்கை என்று குறிப்பிட்டிருக்கிறேன். தொடரையே அல்ல. :)

Sunday, July 25, 2010

போபால் - மறக்கக் கூடாத துரோகம்


குழந்தையை அணைத்துக் கொண்டு படுக்கும் போதெல்லாம் மூடிய கண்களுக்குள் இந்தக் காட்சி வருகிறது.


போபால் - தாமதமாகும் நீதி அநீதி என்பார்கள்.

"நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ" என்று கேட்டான் பாரதி. நூறு கோடியைத் தாண்டிய பின்பும் இந்நிலை தான் தொடர்கிறதென்றால் நெஞ்சம் கொதிக்கிறது.

அதுவும் வெள்ளைக்காரர்களல்ல; நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகார வர்ககமே மக்களை வெள்ளை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறதென்றால் இது என்ன ஜனநாயகம்?

உணவில்லை, உடையில்லை, அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை; உயிர் வாழ அனுமதியும் பறிக்கப் படுகிறது இந்தச் சபிக்கப்பட்ட தேசத்தில். தொடர்ந்து பல சந்ததிகளுக்கு!

ஆம், போபால் கொடூரம் அன்று மடிந்த மக்களோடு முடிந்து விடவில்லை. நிலத்தடி நீரையும் காற்றையும் பெண்கள் கருப்பைகளையும் சந்ததி சந்ததியாய்த் தாக்கி வரும் அக்கிரமத்தை என்ன சொல்வது?

போர், ஆதிக்கம் என்று வந்த நாடுகள் கூட நம் நாட்டில் இத்தகைய கொடுமையை நிகழ்த்தியதாக நான் அறிந்ததில்லை. வாணிபம் செய்ய வந்த பேடி ஒருவன் நம் சொந்த சகோதரர்களின், அப்பாவி எளிய இன்னுயிர்களைக் கூறு போட்டுக் குதறிச் சென்றிருக்கிறான்.

அப்படுபாதகமான செயலைப் புரிந்தவனுக்குத் தங்கத் தட்டில் மரியாதை வைத்து உயிர்ப்பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இப்போது கவன்க்குறைவு என்ற ஒரே காரணத்தைக் காட்டி இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றளவும் சுகபோகமான வாழ்வு வாழ்ந்து வரும் வாய்ப்பையும் அவன் சிறிதும் இழக்கவில்லை. ஏன்? அவன் அமெரிக்காக்காரன். காசு போடும் முதலாளி.
சீ சீ, காசுக்காகப் பெண்டு பிள்ளைகளை விற்கும் புரோக்கர்கள் கூட இந்த அரசியல் வாதிகளை விட மேலானவர்களாகத் தெரிகிறார்களே.

அதுவும் இது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை என்பதை ஆதாரங்களுடன் அறியும் போது...ஐயோ!


உலகெங்கும் பல இயக்கங்கள் போபாலில் இறந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் சொந்த தேசத்தில் இப்படிப் பட்ட துரோகம் நிகழ்ந்திருக்கிறது. இம்மண்ணில் பிறந்ததற்காக அவமானப் படும் சூழல் கூட வருமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் போபால் விஷயத்தில் இது உண்மையாகிறது.

தயவு செய்து இந்த மின்னிதழைப் படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மால் குறைந்தபட்சம் செய்யக் கூடியது விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. அதைச் செய்யத் தவற வேண்டாம்.

மேலும் படிக்க:







Thursday, July 22, 2010

பேச்சாளர்

அன்று காலை வருமானவரி அதிகாரி கிரில் இவானோவிச்சுக்கு இறுதி ஊர்வலம். இரண்டு முக்கியமான நோய்களால் அவர் மரணம் எய்தியதாக ஊருக்குள் பேச்சு நிலவியது; ஒன்று குடிப்பழக்கம், மற்றொன்று மனைவியுடன் மனத்தாங்கல்.

சர்ச்சிலிருந்து இடுகாட்டை நோக்கி ஊர்வலம் புறப்படத் துவங்கியது; இறந்தவரின் சக ஊழியர்களில் ஒருவரான பாப்லாவ்ஸ்கி கோச் வண்டியொன்றில் ஏறித் தன் நண்பன் கிரிகரியை அழைத்து வர விரைந்தான்.

கிரிகரி என்பவன் இளம் வயதிலேயே தனது தனித்திறமையால் ஊருக்குள் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவ‌ன் எந்த நேரத்திலும், எவ்விடத்திலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் அநாயாசமாகப் பேசக் கூடியவன். தூங்கும் போதும், குடித்திருக்கும் போது, பசி வயற்றிக் கிள்ளும் போதும், ஏன் கடும் காய்ச்சலில் கூட அவ‌ன் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பான் என்பார்கள்.

பேச்சு என்றால் சும்மா சாதாரணமாக அல்ல. மடை திறந்த வெள்ளம் போல் தேர்ந்த வார்த்தைகளுடன், கேட்பவரைக் கவரும் வண்ணம் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுவான். டீக்கடையில் மொய்க்கும் ஈக்களை விட அதிகமான வார்த்தைகள் அவனது அகராதியில் இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள். ஒரு விழாவில் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போன அவனைப் பலாத்காரமாக மேடையிலிருந்து இறக்க வேண்டி வந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


"அப்பாடி, நல்ல வேளையா வீட்ல இருக்கே!" - என்றான் அவன் வீட்டுக்குள் நுழைந்த பாப்லாவ்ஸ்கி. "உடனே சட்டைய மாத்திட்டு என்னோட கிளம்பு. என் பாஸ் இறந்துட்டாரு. அவருக்கு இறுதி மரியாதை நடக்குது. கொஞ்சம் நீ வந்து அவரைப் பத்தி நாலு வார்த்தை புகழ்ந்து பேசினா நல்லாருக்கும். நீ தான்யா இதுக்கு சரியான ஆள். வேற யாராவதுன்னா பரவாயில்ல, இது எங்க பாஸ்; பெரிய ஆளு; கடைசியா அவரைப் பத்திப் பாராட்டி நாலு வார்த்தை கூட பேசாம அனுப்பி வெச்சா நல்லாவா இருக்கும்?"

"உங்க பாஸ் யாரு? ஓ! அந்தக் குடிகாரனா?"

"அவரே தான்; இங்க பாரு டீ, மதியானம் சாப்பாடு, எல்லாத்தோட நீ வந்து போன செலவையும் குடுக்க ஏற்பாடு பண்றேன். நல்ல பையனா என் கூட வா. உன் பாணியில அவர் இந்திரன், சந்திரன்னு ஏதாச்சும் அடிச்சு விடு. எல்லாருக்கும் திருப்தியாகிடும்."

" உன் பாஸ் தான? எனக்கு அந்தாளத் தெரியுமே. சரியான டுபாகூர். ஊரை வித்து உலையில போட்டவனாச்சே."

"அது உண்மைதான், ஆனா செத்தவனைப் பத்தித் தப்பாப் பேசாதப்பா."

"அது சரி தான், ஆனாலும் அந்த ஆள் ஒரு ராஸ்கல் தான்." ‍ முணுமுணுத்தான் கிரிகரி.


நண்பர்கள் இருவரும் சரியான நேரத்தில் போய் ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டனர். ஊர்வலம் போன வேகத்துக்கு, அது இடுகாட்டை அடைவதற்குள், இவர்கள் துக்கத்தை மறக்க இரண்டு மூன்று முறை பாருக்குச் சென்றும் திரும்பினர்.

ஒருவழியாக இடுகாட்டை அடைந்தனர். சவப்பெட்டிக்கு அருகே இறந்தவரின் மனைவி, மாமியார், மைத்துனி ஆகியோர் கடமை தவறாமல் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். பெட்டியைச் சவக்குழிக்குள் இறக்கும் போது அவர் மனைவி, "அய்யோ! என்னையும் அவரோட போக விடுங்களேன்!" என்று கூடக் கதறினாள். ஆனால் அவனது கணிசமான பென்ஷனை நினைத்தோ என்னவோ நிஜத்தில் அம்மாதிரி எதுவும் அவள் செய்துவிடவில்லை.

எல்லாரும் அமைதியானபின் கிரிகரி முன்னால் வந்தான். எல்லாரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்து விட்டுத் தன் உரையைத் துவக்கினான்.
"என்னால் நம்பவே முடியவில்லை. இந்தச் சவக்க்குழியும் கண்ணீர் தோய்ந்த இந்தக் கண்களும் ஓலங்களும் ஒரு மோசமான கனவாக இருந்து விடக்க் கூடாதா? அய்யோ! ஆனால் இது கனவல்லவே! நேற்று வரை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும், செயல்பட்ட ஒருவர், இந்தச் சமூகத்துக்காக ஒரு தேனியைப் போல அயராது உழைத்தவர் இன்று மண்ணுக்குள் போய்விட்டார்.

கொடிய மரணம் தனது இரும்புக் கைகளால் அவரைத் தழுவிக் கொண்டதே. நடுவயதைத் தாண்டி இருந்தாலும் உடலிலும் மனதிலும் இளமையாகவும், எண்ணற்ற கனவுகளும் கொண்டிருந்தவராயிற்றே!

அவரது இழப்பு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாதது. அவரைப் போல யார் உண்டு? ஆயிரமாயிரம் அரசுப் பணியாளர்கள் இருக்கலாம். ஆனால் ப்ரகாஃபி ஒசிபிச் அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனது கடைசி மூச்சு வரை தனது கடமையில் நேர்மையையும் கண்ணியத்தையும் கட்டிக் காத்தவர். அல்லும் பகலும் அயராது உழைத்தாலும் லஞ்சம், ஊழல் இவற்றின் காற்றுக் கூடப் படாதவர். லஞ்சம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் விஷம் போல் வெறுத்தவர்.


நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை; தன் சம்பளத்தில் பெரும்பகுதியை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது அவரது வழக்கம். அவர் உதவியால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனாதைகளும் அபலைப்பெண்களும் ஏராளம். கடமைக்கு முன் தன் சொந்த வாழ்க்கைக்குக் கூட முக்கியவம் தராமல் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அய்யோ! முடி முழுதும் மழித்த அவரது அந்த முகத்தையும், அன்பான‌ குரலையும் என்னால் மறக்கவே முடியாது. ப்ரகாஃபி ஒசிபிச், வாழ்க உன் புகழ்! வளர்க உன் பெருமை இப்பூமியில்! அவர்தம் ஆத்மா சாந்தி அடைய‌ வேண்டுவோம். "


கிரிகரி பேசி முடிப்பதற்குள் கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கினர். முதலாவது 'இறந்து போனது கிரில் இவானொவிச் ஆயிற்றே. இந்த ஆள் ஏன் பிரகாஃபி யைப் பத்திப் பேசினான்' என்று குழம்பினார்கள்.
மேலும், அவருக்கும் அவர் மனைவிகும் இருந்த ஏழாம் பொருத்தம் ஊருக்கே தெரியும். அப்படி இருக்க அவர் பிரம்மச்சாரி என்று சொன்னானே? என்றும், காட்டிலிருந்து தப்பி வந்த கரடி மாதிரி மூஞ்சி பூரா முடி இருக்கறவனுக்கு மழித்த‌ முகமா' என்று பலவாறாகப் பேசித் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டனர்.


கிரிகரி தொடர்ந்தான், "ப்ரகாஃபி ஒசிபிச்! உங்கள் உருவம் அவலட்சணமாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உள்ளத்தால் உயர்ந்தவர். அசிங்கமான சிப்பிக்குள் முத்து இருப்பது போல் உங்களுக்குள் இருந்த உள்ளம் பளிங்கு போன்றது."

இப்போது கிரிகரியின் முகத்திலேயே குழப்ப ரேகைகள் படிவதைப் பார்வையாளர்கள் கண்டனர். சட்டென்று பேச்சை நிறுத்தியவன், அதிர்ச்சியுடன் பாப்லாவ்ஸ்கியிடம் திரும்பினான்.


"டேய்! அவன் உயிரோட இருக்கான்டா" - என்றான் பீதியுடன்.
"எவன்?"

"அதோ அங்க நிக்கிறானே ப்ரகாஃபி"

"அவன் எங்கடா செத்தான்? செத்தது கிரில் தானே?" - அநியாயக் கடுப்புடன் பதிலளித்தான் பாப்லாவ்ஸ்கி.

"நீ தானேடா சொன்னே உன் பாஸ் இறந்துட்டான்னு"

"போடா லூசு. அவனுக்குப் பிரமோஷன் கெடைச்சுப் போய் ரெண்டு வருஷமாச்சேடா. அதுக்கப்பறம் கிரில் தானேடா இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ்ல‌ இருக்கான்."

"இந்த எழவெல்லாம் எனக்கெப்பிடிரா தெரியும்?"

"சரி நீ பாட்டுக்குப் பேசு. பாதியில நிறுத்தினா ஒரு மாதிரி இருக்கும்."

கிரிகரி தட்டுத் தடுமாறி உரையை முடித்தான். தூரத்தில் ப்ரகாஃபி கொலைவெறியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்ததும் இறந்தவனின் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கிரிகரியைச் சூழ்ந்து கொண்டனர். "அடப்பாவி! உயிரோட ஒருத்தனை மண்ணுக்குள்ள‌ போட்டுப் புதைச்சுட்டியே. சரியான ஆளுப்பா நீ" - கூச்சலும் சிரிப்புமாக அவன் முதுகில் அடித்துச் சென்றனர்.

ப்ரகாஃபி வந்தான்.

"யோவ்! செத்தவனுக்கு வேணா நீ பேசினதெல்லாம் பெருமையா இருந்திருக்கும்யா... எனக்கு? உன்னை யாருய்யா நான் லஞ்சம் வாங்க மாட்டேன் ஊழல் பண்ணமாட்டேன்னெல்லாம் பேசச் சொன்னது? என்ன, நக்கலா? ஊருக்கே தெரியும் என்னைப் பத்தி; இப்போ அவனவன் என்னைப் பாத்துக் கேவலமா சிரிக்கப் போறான். என் பொழப்புல ஏன்யா மண்ணள்ளிப் போட்டே? ஹூம்.. மூஞ்சிக்கு நேரயே என்னைக் கலாய்ச்சிட்டுப் போயிட்டே. போ! போ! நல்லா இரு" - புலம்பிக் கொண்டே போனான் ப்ரகாஃபி.

ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் எழுதிய The Orator என்ற சிறுகதையின் தமிழாக்கம். (ஆங்கிலத்திலிருந்து)

Tuesday, July 20, 2010

கலி

ஆவி, பேய், பிசாசு வைத்துப் படங்கள் வரும்;
வாய் பிளந்து ரசித்துப் பார்த்துக் கைதட்டுவோம்

பெயரில் எழுத்தை எசகுபிசகாய் புரட்டிப் போட்டுத் தான்,
பெரிய வழி பிறக்கப் போகுதென்று நம்புவோம்

கயிறு, கட்டை, கல் என்று கண்டதையெல்லாம்,
வெட்கமின்றி கழுத்தில் கையில் மாட்டித் திரியுவோம்

பிறந்த குழந்தை பெண்ணென்று தெரிந்த நிமிடமே,
வங்கிக் கணக்குக்கு வந்தது கேடென்று வருந்துவோம்

ஜாதி, ஜாதகம் கச்சிதமாய்ப் பொருந்துது என்றே
ஆசை மகளைக் கிணற்றில் தள்ளிக் கண்ணீர் சிந்துவோம்

காவியுடையும் கவர்ச்சிப் பேச்சும் கண்டமாத்திரம்
காலில் வீழ்ந்து மோட்சம் வேண்டுமென்று வேண்டுவோம்

நாலு நாளில் அவன் சாயம் நாறிப் போனபின்
நாளிதழைப் பிரித்தவுடன் ஃபோட்டோ தேடுவோம்

ஆனால்...

வயிறு வாடிப் பசியென்று வந்து நிற்பவர் - தம்மை
நூறு கேள்வி கேட்டுத் துளைத்துத் துப்பறிந்திடுவோம்!
("இந்தக் காலத்துல‌ யாரை நம்புறது?")

Monday, July 19, 2010

நேஹா நேரம்

"கொஞ்சாதே...விஷமம் பண்றேன்! போய் டீ போடு"
"சும்மா இரு, முத்த‌ம் குடுக்க‌ வேண்டாம்! புடிச்ச பாட்டு பாக்குறேன்!"
(டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது)
:(((
*******

"ஆ..அம்மா விடு, வ‌லிக்குது!"
"ச‌ட்டைய‌த் தான‌டி புடிச்சேன்?"
"ச‌ட்டை வ‌லிக்குது."
"???"
********

வெளியில் போய் விட்டுத் திரும்பும் போது வீட்டுக்குப் போய்ச் சாதம் வைக்கவா, தோசை சுடலாமா, என்று பேசிக் கொண்டிருந்தோம்.
"ஆனாம், ஆனாம், ஒட்டல்ல சாப்டலாம்!"
*********

Wednesday, July 14, 2010

கமலா தாஸின் கவிதை

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue.
Why not leave Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing Funeral pyre.
I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a Nympho.
Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.
- KAMALA DAS
*****
கமலாதாஸ் அவர்களின் இந்தக் கவிதையைச் சென்ற ஆண்டு தமிழ்ச்செல்வன் அவர்களின் தளத்தில் படித்த போது மிகவும் பாதித்தது.
இப்போதும்.
அதை மொழிபெயர்ப்பு செய்ததையும் பகிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன்.
*****

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள்

ஆங்கிலத்தில் எழுதாதே - அவர்கள் சொன்னார்கள்.
ஆங்கிலம் உன் தாய் மொழியன்று.என்னைத் தனியாக விடுங்களேன்! விமர்சகர்களே, நண்பர்களே, ஒன்று விட்ட உடன்பிறப்புக்களே, எல்லாரும் தான்? எனக்குப் பிடித்த மொழியில் என்னைப் பேச விடுங்களேன்?

நான் பேசும் மொழி எனதாகிறது, அதன் கோணல்களோடும், அதன் தனித்துவங்களோடும், எல்லாம் எனதே, எனது மட்டுமே.
என் மொழி கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் இந்தியன், நகைப்புக்குரியது தான், ஆனால் நேர்மையானது, உயிருள்ளது, என்னைப் போலவே, உங்களுக்குத் தெரியவில்லையா?என் சந்தோஷங்கள், எனது ஏக்கங்கள், என் நம்பிக்கைகள், அனைத்துக்கும் குரல் கொடுக்கிறது என் மொழி.

காகங்களுக்குக் கரைதலைப் போல், சிங்கங்களுக்குக் கர்ஜனை போல் எனக்கு என் மொழி. மனித மொழி, மனங்களின் மொழி - பார்க்கவும் கேட்கவும் உணரவும் வல்லது.
புயல்காற்றில் அசையும் மரங்களும், மழை மேகங்களும், இடுகாட்டில் எரியும் தீயின் முணுமுணுப்பும் பேசும் குருட்டு ஊமை மொழியல்ல அது;

நான் குழந்தையாக இருந்தேன். என்னைப் பெரியவளாய் நடந்துகொள்ளச் சொன்னார்கள்.
ஏனென்றால் நான் உயரமானேன். என் கை கால்கள் வளர்த்தி அடைந்தன. உடலில் ஆங்காங்கே முடி முளைத்தது.
பதினாறு வயதில், வேறு எதுவும் கேட்கத் தெரியாமல் அன்பைக் கேட்ட போது, அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தினார்கள்.
என்னை அடிக்கவில்லை. ஆனால் பாவப்பட்ட என் உடல் வலியால் துடித்தது. என் முலைகளின் கனமும் கருப்பையின் கனமும் என்னை நொறுக்கிப் போட்டன. பரிதாபகரமாக குறுகிப் போனேன் நான்.

பிறகு, என் சகோதரனின் பேண்ட் சட்டைகளை அணிந்து கொண்டேன். தலைமுடியை வெட்டிக் கொண்டு என் பெண்மையை அலட்சியம் செய்தேன்.
சேலை கட்டு, பொம்பளைப் பிள்ளையா அடக்கமா இரு என்றனர்.
பூப்பின்னல் போடு, வாய்க்கு ருசியாச் சமைச்சுப் போடு, வேலைக்காரர்களுடன் வாய்ச்சண்டை போடு என்றனர்.
ஒத்துப் போ. கோட்டுக்குள் நில் என்றனர் கட்டமைப்புக் காரர்கள்.
சுவர்களின் மேல் அமராதே, எங்கள் திரைச்சீலையிட்ட சாளரங்களுக்குள் எட்டிப் பார்க்காதே.

ஏமியாக இரு, இல்லாவிட்டால் கமலாவாக. இன்னும் சொன்னால், மாதவியாகவே இரு.
ஒரு பெயரைத் தேர்வு செய்; ஒரு பாத்திரத்தையும். பாவனைகள் காட்டாதே. மனநிலை பிறழ்ந்தவளாகவோ காமஇச்சை தீராதவளாகவோ இருக்காதே. காதலில் துரோகமிழைக்கப் பட்டால் கோவென்று அசிங்கமாக அழாதே.

நான் ஒரு ஆணைச் சந்தித்தேன், காதலித்தேன். அவனுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லா ஆண்களையும் போல் அவன் விரும்பியது ஒரு பெண். எல்லாப் பெண்களையும் போல் நான் விரும்பியது காதல்.
அவனுக்குள் நதிகளின் தீராத தாகம்.
எனக்குள் சமுத்திரங்களின் ஓயாத ஏக்கம்.

யார் நீ, நான் பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்.
விடை என்னவோ நான் என்ற தன்முனைப்புத் தான். எங்கு பார்த்தாலும், எல்லா இடங்களிலும் இருப்பது ”நான்” தான்.
இந்த நான் என்பது தான் நள்ளிரவு பனிரெண்டு மணிக்குக் குடிக்கிறது, தெரியாத ஊர்களில், ஓட்டல்களில்,
இந்த நான் தான் சிரிக்கிறது, உடலுறவு கொள்கிறது,
பின்பு வெட்கமும் அடைகிறது.
இந்த நான் தான் தொண்டையில் சிக்கிய முள்ளின் வேதனையோடு இறந்து போகிறது.
பாவியும் நானே, பரிசுத்தமானவளும் நானே.
காதலும் நானே, துரோகமும் நானே.
உன்னில் இல்லாத இன்பங்களும் என்னிடம் இல்லை, வலிகளும் இல்லை. எனக்குப் பெயரும் நான் தான்.

Tuesday, July 13, 2010

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்

வீடு
சின்ன வயதில் டிவியில் தான் முதலில் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படமென்றால் அது நல்ல படம் என்று ஒரு கருத்து உண்டு. (அதாவது எனக்குப் புரியாது, அல்லது போரடிக்கும்!)
அதனால் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் மிக எளிமையான வசனங்களும், அந்தத் தாத்தா மற்றும் அர்ச்சனாவின் தங்கையின் குறும்புகள், அர்ச்சனாவின் மிகையில்லாத நடிப்பும், மிக முக்கியமாக இளையராஜாவின் மனதை உருக்கும் பின்னணி இசை இவையெல்லாம், என்னை வெகு விரைவில் படத்தோடு ஒன்றச் செய்தன.

ஒரு வீடு கட்ட அந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் படும் பாட்டுக்கு இடையே வரும் சின்னச் சின்ன விஷயங்களும் நெகிழ்வாக மனதில் பதிந்தது. (பட்டுப் பாவாடை கேட்கும் தங்கையை முதலில் திட்டி விட்டுப் பின்பு வாங்கி வைத்திருப்பது, தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையே இருக்கும் பாசம், அர்ச்சனாவின் காதலராக வருபவரின் பண்பைக் காட்டும் காட்சிகள், கடன் கேட்க்ப் போன தோழி (கூட வேலை பார்க்கும்) வீட்டில் கணவனின் அதிகாரம்+அலட்சியப் பேச்சு).

நாயகியை முன்னிறுத்தி, (அதுவும் மிகக் கண்ணியமான முறையில்) நான் பார்த்த முதல் படம் அது தான். இப்படிப் பல முதல்களைச் சொல்லலாம்.
ஆபாசம், குத்துப்பாட்டு, போரடிக்கும் சண்டைக்காட்சிகள் மருந்துக்கும் இல்லாதது வெகு ஆறுதலாக இருந்தது. இது மாதிரியே படங்கள் வந்தாலென்ன? என்று கூடத் தோன்றியது. இறுதியில் அந்த‌ அதிர்ச்சியூட்டும் முடிவுக்குப் பிற‌கு அப்ப‌டி அழுகை வ‌ந்த‌து. வீடு மனதில் இன்றும் பார‌மாக‌ நிற்கிற‌து.

http://www.youtube.com/watch?v=0lb96KF5r58&feature=related

http://www.youtube.com/watch?v=w7SyVmEj4oA&feature=related

புஷ்பக்‍
இந்தப் படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. அவ்வளவு பிடிக்கும். கவிதையைப் போன்ற படம் இது. கமலின் அற்புதமான நடிப்புக்கு அமலாவும் அழகாக ஈடு கொடுத்திருப்பார். நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம் இருந்தாலும் மனதை உருக்கும் முடிவுடன் இதன் தாக்கம் நெடுநேரம் மனதில் இருக்கும். வசனங்களே தேவைப் படாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இதன் சிறப்பம்சம். உலக அரங்கில் புகழ்ந்து பேசப்பட்ட இந்தியத் திரைப் படங்களுள் இதுவும் முக்கியமான ஒன்று.

http://www.youtube.com/watch?v=PheG5DHgnps

http://www.youtube.com/watch?v=B-20x0tf9CQ&feature=related

இன்னும் இருக்கு; இப்போதைக்கு இது போதும்!. காட்சிகள் பிடித்திருந்ததா?

Thursday, July 8, 2010

காட்சிப்பிழை

வண்ணத்துப்பூச்சி ஒன்று என் தோளில் வந்த‌ம‌ர்ந்த‌து,

பூக்களைக் கவர்ந்து தேனெடுத்த‌ க‌தையையும்

வான‌வில்லிட‌ம் சென்று வ‌ர்ண‌ம் வாங்கி வ‌ந்த‌தையும்

சாக‌ச‌க் க‌தைக‌ளாய்ச் சொல்லிச் சொல்லி ம‌கிழ்ந்த‌து;

க‌ண்காணாத‌ அதிச‌ய‌மாய் மெய்மறந்து நின்றேன்!

பின்பு தான் தெரிந்த‌து, - த‌ன்

இதயத்தின் குருதியினை நிற‌ப்பிரிகை செய்து தான்

இற‌கின் வ‌ண்ண‌ங்களாய்ச் சும‌ந்து திரியுதென‌...

Wednesday, July 7, 2010

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்

சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் KRP Senthil பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.

ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:

http://sunithakrishnan.blogspot.com/

http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html

http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html - ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

பி.கு.

முதலில் இதைப் பகிர்ந்தவ‌ரை இடுகை எழுதும் போது குறிப்பிட நினைத்தும் பெயர் மறந்து விட்டது மறந்து விட்டேன். மன்னிக்கவும். சுனிதா கிருஷ்ணன் என்று தமிழ்மணத்தில் தேடியும் அவரது இடுகை கிடைக்கவில்லை.
கே. ஆர். பி. செந்தில் என்று நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி சரவணக்குமார். செந்தில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Monday, July 5, 2010

சிதறல்கள் - 07/05/10

மகள் மொழி

தாய்மொழியை மீண்டும் அரிச்சுவடி முதல் ப‌‌யில்கிறேன்.

உன் மழலையில் ஒவ்வொரு சொல்லும் புத்தம்புதிதாக...


தூக்குத் தூண்டில்

ப‌சியே இல்லாத‌ மீனைப் பிடிக்க,

ம‌ணிக்க‌ண‌க்காய்த் தூண்டிலிட்டார் - பின்

மீனுக்கு வைத்திருந்த‌ புழுக்க‌ளையே

ப‌சி தாங்காம‌ல் தின்று செத்தார்!


வ‌லைச்ச‌ர‌த்தில் என‌து இந்த‌க் க‌விதையையும் (கவிதை என்றே குறிப்பிட்டு!) அறிமுக‌ப்ப‌டுத்தி இருக்கிறார் பா.ராஜாராம். மகிழ்ச்சியையும் அவ‌ருக்கு என‌து ந‌ன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, July 2, 2010

Today's status - Life is beautiful!

என்ன சொல்வது. சில சமயம் வாழ்க்கை அதிசயங்களை அள்ளித் தருகிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து முகமறியாத யாரோ ஒருவரிடமிருந்து மிகப்பெரிய உதவியும் அக்கறையும் கிடைக்கும் போது அதற்கு எந்த வகையில் தகுதி பெற்றிருக்கிறோம் என்று மனம் நெகிழ்கிறது.
எதற்காக இந்தப் பீடிகை?

ஒரு மாதம் முன்பு தான் (அலையோ அலை என்று அலைந்து) எடுத்திருந்த என் ஒரிஜினல் ட்ரைவிங் லைசென்ஸைச் சில நாட்களுக்கு முன்பு தொலைத்து விட்டிருந்தேன்.

கைப்பையில் பக்கவாட்டுப் பாக்கெட்டில் அலட்சியமாக வைத்திருந்திருக்கிறேன். அதை ஜெராக்ஸ் எடுத்து ஒரிஜினலை வீட்டில் வைக்குமாறு நூறு முறையாவது ஜோ சொன்னதையும் அலட்சியப்படுத்தி இருந்தேன். ஒரு நாள், 'இவர் நச்சரிப்பு தாங்க முடியலையே. சரி ஜெராக்ஸ் எடுப்போம்' என்று பையைத் தேடினால் காணோம்!

வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. நேஹா எடுத்து எங்காவது போட்டிருப்பாள் என்று அவள் பாட்டி வீட்டிலும் தேடச் சொல்லி ட்ரில் வாங்கியாகி விட்டது. கிடைத்தபாடில்லை.

அப்படி இருக்க, நேற்று திடீரென்று ஜோ அதைக் கொண்டு வந்து கொடுத்தார். சந்தோஷக்கூக்குரலிட்டு அடங்கியதும் "எங்கே இருந்திச்சு? ஒளிச்சு வைச்சு விளையாடினியா" என்று கேட்டதற்குப் பதிலே பேசாமல் ஒரு கடிதத்தை நீட்டினார்.

"உங்கள் டிரைவிங் லைசன்ஸ் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் கிடந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் பெற்றிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். அதற்குள் தொலைத்து விட்டீர்களே. கவனமாக இருங்கள்." என்ற அறிவுரையுடன்; பெயர் கூடக் குறிப்பிடாமல் இருந்தது.

ஒரே ஒரு இமெயில் முகவரி மட்டும். அதில் அவர் பிறந்த ஆண்டு 87 என்று இருந்தது. ஆணோ பெண்ணோ, என்னை விட வயதில் ரொம்பவும் இளையவர்; எத்தனை பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்? வெகு நேர‌ம் அந்த‌க் க‌டித‌த்தைக் கையில் வைத்துக் க‌ண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தேன்.

அவரது முகவரிக்கு மெயில் அனுப்பி என் நன்றியையும் மகிழ்ச்சியையும் இயன்றவரை தெரிவித்துக் கொண்டேன். இத‌ன் ம‌திப்பு தெரியாத‌ எவ‌ர் கையிலாவ‌து, ஏன் பிராணிக‌ள் ஏதாவ‌து க‌வ்விக் கொண்டு போயிருந்தால்? இன்னொரு லைச‌ன்ஸ் எடுப்ப‌து மிக‌க் கொடுமையான‌ காரிய‌மாமே.

காலையில் இந்த‌ப் ப‌ர‌வ‌ச‌த்தோடே இருந்தேனா, மாலையில் இன்னொரு இன்ப அதிர்ச்சி! ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன் காணாம‌ல் போன மோதிர‌ம் (அது மிக‌வும் விசேஷ‌மானது!) படு யதார்த்தமாக ஏதோ அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கிடையே அகப்பட்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

ஆக, வழக்கமாகக் காலையில் தோன்றும் சிடுசிடுப்பும் பதட்டமும் இல்லாமல்
வாழ்க்கை என்னை எவ்வளவு அன்புடன் நடத்துகிறது என்ற‌ நன்றியுணர்ச்சியுடன் இன்று காலையில் பரிபூரண‌ சாந்தமான, மனநிலையுடன் எழுந்தேன். அந்த மனநிலையுடன் அடுப்படிக்குச் செல்ல இஷ்டமில்லை. இன்று மதிய உணவு சமைக்கவில்லை என்று முடிவெடுத்தாகி விட்டது. :)

நேஹா நேர‌ம்!
சுவ‌ரில் கிறுக்க‌க் கூடாது என்ப‌தாக‌ ஒரு க‌தையைச் சொல்லி இருந்தேன். அது முத‌ல் சுவரில் கிறுக்காத‌து ம‌ட்டும‌ல்ல‌, ஏற்கென‌வே கிறுக்கி வைத்த‌ சுவ‌ர்க‌ளைப் பார்த்து விட்டு, "செவ‌‌த்துல‌ கிறுக்க‌க் கோடாது. பேப்ப‌ர்ல‌ தான் கிற்க்க‌னும். ப‌க்கெட் த‌ண்ணி புட்ச்சுத் தொடக்கனும்‌..." என்று சுவ‌ரைக் காட்டுகிறாள்.
****
அம்மா...சாக்கீ, சாக்கீ, தாங்க...
"நோ நேஹா, ஒன்னு சாப்டேல்ல‌, அதிகமா சாப்டா வயத்துல பூச்சி வரும்."அடம் பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.
அப்போது முதல்நாள் இரவு சூப் செய்து த‌ர‌ச் சொல்லிக் கேட்ட‌து என் நினைவுக்கு வ‌ருகிற‌து.

"குட்டிம்மா, அம்மா சூப் செஞ்சு த‌ரேன் என்ன? அழ‌க்கூடாது" என்றேன். உட‌னே அழுகையை நிறுத்தி விட்டுக் க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு "சூப்" என்று சிரித்தாள்.

அப்பாடா, என்று சூப் வைக்க‌ப் போனேன்.

வ‌ந்து காலைக் க‌ட்டிக் கொண்டு, "அம்மா, ல‌வ் யூம்மா. சாக்க்கி சாப்ட‌க் கோடா‌து. வ‌ய்த்துல‌ பூச்சி வ‌ரும். இல்லம்மா?"
"?!!!!" - நான்.