Saturday, May 30, 2009

கண்ணாடிக் காலங்கள்!

மகளிர் கல்லூரி விடுதி. மாலை ஆறு மணி.
கடைசி மாதாந்திரத் தேர்வு முடிந்திருந்த வெள்ளிக்கிழமை.

அனைத்து அறைகளும் பெண்களின் அரட்டைக் கச்சேரியில் அமளிப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாளிரவு கண்விழித்துப் படித்திருந்த ஒரு சில ”படிப்ஸ்” மட்டும் அத்தனை அமளியிலும் போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்க முற்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஜோதியின் அறையில் வழக்கமான ஜமா சேர்ந்திருந்தது.
ஜோதி - மூன்றாம் ஆண்டு இஞ்சினியரிங் மாணவி. படிப்பு, பாட்டு, அரட்டை, இனிய சுபாவம் என்று கல்லூரியில் ஓரளவு, இல்லை நிறையவே பிரபலமானவள்.

”ஹேய்! ரோலிங் லோட்ஸ் ப்ராப்ளம் அட்டெண்ட் பண்ணிங்களாப்பா? எனக்கு ஆன்ஸர் 12 கிலோ நியூட்டன் வருது..” மூக்குக் கண்ணாடியை ஏற்றி விட்டுக்கொண்டபடி வந்தமர்ந்தாள் லதா.

“அய்யோ! இந்தப் பூச்சி தொல்லை தாங்கலப்பா! யூனிட் டெஸ்டுக்கே ஏண்டி இந்த பில்டப்பு? மேன்ஸ்... சாப்பிட ஏதாச்சும் இருக்கா? பசிக்குது."

”ஒண்னுமில்ல. கொஞ்ச நேரம் இரு, மெஸ்ஸுக்குப் போயிடலாம்”

"அய்யோ இன்னிக்கு வெள்ளிக்கிழமையா.. சப்பாத்தி மெஸ்ஸில.. உவ்வே!”

”ம்ம்கும் இப்டி தான் சொல்லுவ, ஆனா ஃபுல் கட்டு கட்டுவே. நீ வந்தாலே மெஸ்ல எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க. உனக்கு சாப்பாடு போட்டு மாள.....” சொல்லி முடிக்கவில்லை. ஜெயந்தி விட்ட எத்தில் கீழே விழுந்தும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ரம்யா.

ஜோதிக்கு எதிலும் மனம் லயிக்கவில்லை. அந்தக் கண்கள்....அந்தப்பார்வை.

இவர்கள் எல்லாரும் அவரவர் ரூமுக்கு ஒழிந்தால் என்ன என்று ஒரு நிமிடம் தோன்றியது.

”லதாக்குட்டி.. நீ எப்படியும் ராஜகோபால் சாரோட செல்லம். உனக்கு ஃபுல் மார்க்ஸ் தான் இண்டெர்னல்ல.. கடுப்பேத்தாம உக்காருடா, ஒரு கை குறையுது பார்” சொல்லிக் கொண்டே சீட்டுக்கட்டைக் கலைத்தாள் ஜெயந்தி.

“ஹேய் ஜோதி! என்னடி ட்ரீம் அங்க? சீட்டை எடும்மா கையில... ”

“அவ இன்னும் ஷாந்தனு விட்ட லுக்கையே நெனச்சிட்டு இருக்கா போல” சொல்லி விட்டு சேர்ந்தாற்போல் ஏதோ கிசு கிசுத்து விட்டுச் சிரித்தனர் கூடப் பிறக்காத இரட்டையர் அருணாவும் ஸ்மிதாவும்.

கோபத்துடன் அவர்களை அடிக்கக் கையை ஓங்கினாலும் உள்ளுக்குள் ஜில்லென்றிருந்தது ஜோதிக்கு.

“என்னடி? ஏதோ ராங் ரூட்ல போற மாதிரி இருக்கு?” ஜோதியின் அறைத்தோழியும் ஹாஸ்டலின் சுயம்பு மாமியார் பொற்ப்பேற்றுக் கொண்டவளுமான மேனகா தொண்டையைச் செருமினாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மேன்ஸ். இதுங்களுக்கு வேற வேலை இல்ல. ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ் நோட்ஸ் கேட்டான். கொடுத்துட்டு வந்தேன்”

“இன்னிக்குத் தான் டெஸ்டே முடிஞ்சுது, அதுக்குள்ள அவனுக்கு எதுக்கு நோட்ஸ்? ம்ஹும், எனக்கென்னவோ அவனுக்கு ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இருக்கற மாதிரி தெரியல ஜோதி.” தொடர்ந்து குபீரென்ற சிரிப்பு.

”ஆமாமாம், அவன் ரூம்மேட் கார்த்திக் கூட சொல்லிட்டு இருந்தான். உன் பேரக் கேட்டாலே உருகறானாமே பையன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது ஆளு செம ஸ்மார்ட்டா தான் இருக்கான்.” இது ரம்யா.

ஜோதிக்கு மறுபடியும் ஜிலீர்! “சீ! ஃபில்த்தி மைண்ட்ரி உனக்கு. அவன் பாவம் ரொம்ப இன்னசெண்ட். தமிழே தெரியாது அவனுக்கு. என் ஒருத்திக்குத் தான் எங்க க்ளாஸ்ல ஹிந்தி தெரியும். அதான்.”

“ஹேய்! சரியாப் போச்சு... கேர்ள்ஸ்! எல்லாரும் கேட்டுக்குங்க.. இங்க ஒரு விக்கெட் கூடிய சீக்கிரம் அவுட் ஆகப் போகுது. மேடம் என்னமா சப்போர்ட் பண்றா பாருங்க. மனசப் பாத்துக்கடீ!” என்று ரம்யா இழுக்க கிண்டலும் சிரிப்புகளும் ஆளாளுக்குத் தொடர்ந்தன.

அன்று மெஸ்ஸுக்குப் போகும் போதும், ஓளியும் ஒலியும் பார்க்கும் போதும், யார் கையிலோ பார்த்த ரமணிசந்திரன் நாவலை இரவல் வாங்கி ரூமுக்குத் திரும்பி வந்த போதும் அதே நினைவு தான். அந்தப் பார்வை, தோழிகளின் சீண்டல். நினைக்க நினைக்க இனித்தது. உலகப்பேரழகி போன்றதொரு கர்வம் வந்தது.

சில நாட்களுக்கு முன் யாரிடமோ கேட்டுக் கற்றுக் கொண்டு “நீ ரும்ப அழ்கா இர்க்கே” என்று அவன் கொஞ்சு தமிழில் சொன்னது நினைவுக்கு வந்தது. ரமணிசந்திரன் நாவலின் நாயகன் அவனாக நாயகி அவளாக, மனமெல்லாம் புல்லரித்தது.

திங்கட்கிழமை காலை. வழக்கமாக எட்டரை மணி வரை தூங்குபவள் ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து (ஸாரி அவளால் அதற்கு முன் என்றுமே முடியாது!) குளித்து, ’வாவ் ரோஸ் ஏஞ்சல் மாதிரி இருக்கேடி’ என்று தோழிகள் முன்பு பாராட்டிய ரோஸ் சுடிதார் அணிந்து, பூக்காரியிடம் பூ வேறு வாங்கி (மூன்று முழங்கள் வாங்கி இரண்டு முழங்களை ரூம்மேட்ஸுக்கு வெட்டி வைத்த பின்) வைத்துக் கொண்டாள்.

கண்ணாடியில் பல முறை பார்த்துக் கொண்ட பின், “என்னடி ரெடியா, போலாமா” என்றவளை அறைத் தோழிகள் வித்தியாசமாய்ப் பார்த்தனர்.

”ஜோதி!” குரல் கேட்டுத் திரும்பியவள், மேனகாவும் லதாவும் சீரியஸாக நின்றிருப்பதைப் பார்த்தாள். நெஞ்சில் ஒரு சின்ன திடுக். அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று யூகித்திருந்தாள். இரண்டு வருடங்களாக ஒரே அறையில் இருந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாயிற்றே.

“என்ன மேன்ஸ் ”

“சொல்றேனேன்னு தப்பா நெனச்சிக்காதே. அவளும் இவளும் ஏத்தி விடறாங்கன்னு கண்டபடி மனசை அலைய விடாதேடி. அந்த ஷாந்தனு நடந்துக்கறது சரி இல்ல. இது அடானமஸ் காலேஜ். நல்ல பேரோட படிச்சு முடிக்கணும்.”

“சீ..சீ.. நான் போய் அப்படி எல்லாம் விழுவேனா. சும்மா ஜாலிக்குத் தானே ஓட்டிட்டு இருந்தாங்க. அவன் சும்மா ஃப்ரெண்டு, அவ்ளோ தான். ”

உதட்டைப் பிதுக்கிய மேனகா அதற்கு மேல் பேசவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு வகுப்புக்குக் கிளம்பினார்கள்.

மூவரும் வெவ்வேறு டிபார்ட்மெண்ட். தன் வகுப்பில் நுழைந்ததுமே அவர்களை மறந்து போனாள். எங்கே அவன், ஓரக்கண்ணால் பாய்ஸ் பக்கத்தை மேய்ந்தாள். கடைசி பெஞ்சில் சாய்ந்து அமர்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நெஞ்சு படபடக்கத் திரும்பிக் கொண்டாள். உச்சி முதல் உள்ளங்கால் முழுதும் பரவிய இரத்தம் இப்போது அவள் கன்னத்தைச் சிவக்கச் செய்து சுடிதார் கலருக்கு மாற்றிக் கொண்டிருந்தது. அதற்குள் லெக்சரர் வரவே தற்காலிகமாக மனதை மூடினாள்.

பிரேக்கில் லேடிஸ் ரூம் சென்று வர அழைத்த தோழிகளை மறுத்து விட்டு இடத்திலேயே அமர்ந்திருந்தாள். பையன்கள் கூட்டமும் குறைந்தவுடன் அவன் மெதுவாக வந்து அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

“ஹாய்.. ஜோதி.. ”

”ஹாய்..."

“இன்னிக்கு என்ன உன் பிறந்த நாளா?” ஆங்கிலத்தில் கேட்டான்.

”இல்லையே ஏன்?” அவளும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னாள்.

“வெல்.. யு லுக் சிம்ப்லி ராவிஷிங்” (நீ சும்மா அசத்தலா இருக்க!)

”சும்மா இரு ஷாந்தனு, நீ இப்டி எல்லாம் பேறது எனக்குப் பிடிக்கல” - இது தான் அவள் சொல்லவேண்டும் என்று நினைத்தது. ஆனால் வந்ததென்னவோ... கொஞ்சலாக ஒரு “ஷட்டப்” தான்.

“நோ ரியலி. லிஸன். நான் உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். லஞ்ச் பிரேக்கில் போஸ்ட் ஆஃபிஸ்க்கு வர முடியுமா?”

நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, “அபௌட் வாட்? எதா இருந்தாலும் இங்கயே பேசு”

“நோ ஜோதி.. ப்ளீஸ்! ஜஸ்ட் டென் மினிட்ஸ்...” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும் அதற்கு மேல் அவளால் மேலோட்டமாகக் கூட மறுக்க முடியவில்லை.

‘அக்காக்குப் பிறந்த நாள். மறந்துட்டேன். ஃபோன் பண்ணி விட்டு வருகிறேன்’ என்று சாக்கு சொல்லித் தோழிகளை அனுப்பிவிட்டு வருவதற்குள் அவன் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

”ஸாரி... லேட்டாயிடுச்சு“ என்று சிரித்தாள்.

”இட்ஸ் ஆல்ரைட். நீ வரவே மாட்டியோன்னு நெனச்சேன்” என்று பதிலுக்குச் சிரித்தான். அவன் முகத்தில் ஒரு தனிப் பரவசம். தான் தனியே பேச அழைத்து அவள் வந்து விட்டதில் அதிகபட்ச குதூகலம் தெரிந்தது அவன் முகத்தில்.

அவளுக்கு அது நேரம் வரை இருந்த பரவசம் எல்லாம் காணாமல் போயிருந்தது. கல்லூரி தபால் அலுவலக்த்தை ஒட்டிய வெராந்தாவில் மரநிழலில் நின்றிருந்தனர். வெளிப் பார்வைக்குச் சற்றே ஒதுங்கித் தான் இருந்தது என்றாலும் குறுக்கும் நெடுக்கும் போகும் பேராசிரியர்களின் சந்தேகப் பார்வையும் மாணவர்களின் கிறீச்சொலியும் அவளுக்குப் பெரிய தர்மசங்கடமாக இருந்தது.

திக்கித் திக்கித் தன் காதலை அவன் படு சீரியஸாகச் சொல்லச் சொல்ல இவளுக்கு நாவுலர்ந்து போயிற்று. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனது குறும்புப் பார்வைக்கும் பேச்சுக்களுக்கும் பின் இத்தனை ஆழ்ந்த உணர்வுகள் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைச் சந்திக்கவே வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது.

”நான் எத்தனையோ ஊர்களில் தங்கி இருக்கிறேன். உன்னைப் போல் ஒரு பெண்ணை நான் இது வரை பார்த்ததேயில்லை”
கரகரப்பான குரலில் அவனது கெஞ்சல் மொழி காதுகளைச் சூடேற்றிக் கொண்டிருந்தன.

ஆனால் அதையும் மீறி ஒரு காட்சியில் மனம் பதிந்தது. தூரத்தில் மரத்தடியில் அனிதா. சுரேஷுக்காக அவள் வழக்கமாகக் காத்திருக்கும் இடம் அது தான். சற்று நேரத்தில் சுரேஷ் அவளைக் கடந்து மூன்றாவது கேட் வழியாக வெளியில் செல்வான். சற்றுப் பொறுத்து அவளும் செல்வாள். பக்கத்து காஃபி ஷாப்பில் பேசிவிட்டு லஞ்ச் முடியும் சமயம் அரக்கப் பரக்க வகுப்புக்கு ஓடி வருவார்கள். விடுமுறை நாட்களில் சினிமா, ஆழியாறு என்று எங்காவது சுற்றப் போய் விடுவார்கள். விடுதியில் பெரும்பாலும் தனியாகவே தான் இருப்பாள். எப்போதாவது அவளுடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிப்பிசாசு சசிப்ரியாவைத் தவிர்த்து.

டி.வி. ரூம் கலாட்டாக்கள், சீட்டுக்கச்சேரிகள், பிறந்தநாள் பார்ட்டி, டிப்பார்ட்மெண்ட் கல்ச்சுரல்கள், க்ளாஸ் டூர், கும்பலாகச் சேர்ந்து போகும் சினிமாக்கள் எதிலும் அவளைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் சுரேஷைச் சந்திக்கச் சென்று விடுவாள். ஏனோ அவளைப் பார்த்துப் பாவமாகத் தான் இருக்கும். கல்லூரி வாழ்வின் இயல்பான அத்தனை சந்தோஷங்களையும் தவற விடுகிறாளே.

தன்னால் அது முடியுமா? ஆர்க்கெஸ்ட்ரா ஒத்திகைகள், கல்லூரிப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், தனது தோழிகள், அவர்களுடன் மணிக்கணக்காய் அரட்டை, வார இறுதியில் டே ஸ்காலர்ஸ் வீடுகளுக்குச் செல்வது இவற்றை எல்லாம் தியாகம் செய்ய முடியுமா இவனது காதலுக்காக?

சுரேஷ் கடந்து சென்றான். அவன் தலை மறைந்ததும் அனிதா யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் நோக்கிவிட்டு, அந்த மொட்டை வெயிலில் தன்னந்தனியே கல்லூரி கேட்டைத் நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

சட்டென்று எல்லாம் தெளிந்ததைப் போல் உணர்ந்தாள் ஜோதி.
தன் மனதில் இருந்தது வெறும் மயக்கம், தன் அழகையும் சுபாவத்தையும் ஒருவன் ஆராதிக்கிறான் என்ற பூரிப்பு தவிர வேறில்லை என்று புரிந்தது.


தீர்க்கமான குரலில், “ஷாந்தனு. நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கல. வேண்டாம். லெட்ஸ் பீ ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஊரு விட்டு ஊரு படிக்க வந்திருக்கோம். அதுவும் ப்ரொஃபஷனல் கோர்ஸ். அந்த வேலையை மட்டும் பார்ப்போம்.” சிரிப்புடன் சொல்லிவிட்டு, ”உனக்கு கோபம் இருக்கலாம். ஆனா நல்லா யோசிச்சுப் பாரு. நீ ஒண்ணும் முட்டாள் இல்ல. க்ளாஸ் டாப்பர் லிஸ்ட்ல இருக்கறவன். இப்பக் கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு நீயே எனக்கு நன்றி சொல்லுவே. பை ஷாந்தனு. இனிமே தனியா சந்திக்கக் கூப்பிடாதே.”

அவன் முகத்தைத் திரும்பிப் பார்க்காமலே விடுவிடுவென்று விடுதி நோக்கி நடந்தாள்.

அன்று மாலை நடந்ததையெல்லாம் மேனகாவிடமும் லதாவிடமும் மட்டும் பகிர்ந்து கொண்டாள்.

”ஹூம், பரவால்லியே. பொறுப்போட தான் நடந்துட்டிருக்க.. ஆனா நான் சொன்னதுக்காகவா? உண்மையில் உனக்கு அவன் மேல ...” குற்ற உணர்ச்சியுடன் ஆரம்பித்த மேனகாவை இடைமறித்தாள் ஜோதி.

“இல்ல மேனகா, அவன் பேசற வரைக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. ஆனா சீரியஸா காதல் பண்ற அளவுக்கெல்லாம் அவனைப் பத்தி... இல்ல, இல்ல, என்னைப் பத்தியே எனக்கு இன்னும் சரியாத் தெரியாது.” சொல்லிவிட்டுச் சிரித்தாள் ஜோதி.

”ஹேய் ஜோதி, ஷாந்தனு ப்ரபோஸ் பண்ணானாமே.. வேண்டான்னு சொல்லிட்டியாமே... பாவண்டி.” ஜெயந்தி கவலை தோய்ந்த குரலுடன் வந்தாள்.

”ப்ச்.. ஸோ ஸேட். பாய்ஸ் ஹாஸ்டல் முழுக்க இப்போ இதான் பேச்சாம். ரொம்ப அப்செட்டா இருக்கானாம்; செந்தில் சொன்னான். ஏண்டி உனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்னு நெனச்சோமே” பின்னாடியே ரம்யா.

“பிடிக்காதுன்னு யாரு சொன்னா? அதுக்காக...? பை த வே.. ரொம்ப கவலைப்படாதீங்க. உங்கள மாதிரி ஏத்தி விடற ஃப்ரெண்ட்ஸ் இல்லாம இருந்தாலே போதும், அவன் சீக்கிரம் நார்மலாயிடுவான். ஒரு ரம்மி போடலாமா?” சொல்லிவிட்டு மேனகாவைப் பார்த்துக் கண்ணடிக்க, குறும்புச் சிரிப்புடன் அதை ரசித்தாள் மேனகா.

பி.கு. அன்பானவர்களே, என் முதல் சிறுகதை முயற்சி! பார்த்து, ரொம்ப வலிக்காம திட்டிட்டுப் போங்க! நன்றி.



Friday, May 29, 2009

உதிரிப்பூக்கள் - 2

சிக்கனம்!

எழுபதாயிரம் ரூபாய் வாஷிங் மெஷின்
முப்பதாயிரம் ரூபாய் வாக்குவம் க்ளீனர்
ஐம்பதாயிரம் ரூபாய் பாத்திரம் கழுவும் மெஷின்
துடைத்துத் துணி போர்த்தப் பட்டு அழகாக.
ஐந்நூறு ரூபாய் சம்பளத்துக்கு அத்தனை வேலைகளுக்கும் முனியம்மா

****************************************

விகடன் குட் ப்ளாக்!
ஒரு மனசாட்சியின் குரல் பதிவும் “குட் டச் பேட் டச்” கலந்துரையாடல் - ஆங்கில மொழியாக்கம் பதிவும் விகடன் குட் ப்ளாக் பகுதியில் இடம் பெற்றுள்ளன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! (ரொம்ப சீன் போடறேனோ?)

****************************************

அப்புறம் என் ப்ளாகுக்கும் ”குட் டச் பேட் டச்” சொல்லிக் கொடுத்து விட்டேன். (கமெண்ட் மாடரேஷன்) முடிந்த வரை உடனுக்குடன் பார்த்து வெளியிட முயல்கிறேன். பொறுத்தருளவும். என்ன செய்வது, மனித மனங்களின் வக்கிரங்கள் எந்த ரூபத்திலாவது நம்மைத் தொந்தரவு செய்து கொண்டு தானிருக்கும் போல.

Thursday, May 28, 2009

ஒரு மனசாட்சியின் குரல்

சிங்களர் ஒருவர் தனது வலைப்பூவில எழுதிய பதிவிது.

நன்றி: இதனைச் சுட்டிக்காட்டி மொழியாக்கம் செய்யுமாறு சொன்ன திரு. மாதவராஜ் அவர்களுக்கு நன்றி.

அத்திறந்த வெளியில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சிலர் சிரித்துக் கொண்டும் ஆரவாரமிட்டுக் கொண்டும் இருக்கின்றன. முக்கியமாக வெற்றிக் களிப்பில் உள்ளனர். அவர்கள் முன் புல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்கள் மீது காமிரா நகர்கிறது. இராணுவ அடையாள அட்டை ஒன்றை தங்களுக்குள் கைமாற்றியபடி
புகைப்படக்காரரை அதையும் படமெடுக்கும்படி கேட்கின்றனர். வெற்றிப் பூரிப்பு அந்த இடமெங்கும் தெறிக்கிறது.

இத்தகைய காட்சிகளை நான் முன்பு கண்டிருக்கிறேன். துப்பாக்கிகள் ஏந்தியபடி, வெற்றிக்களிப்பு முகத்தில் கூத்தாடக் காலனியாதிக்கவாதிகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வெற்றி கொண்டாடிய காட்சிகள் தாம் அவை. பெரும்பாலும் அந்த நிலத்தின் உண்மையான குடிமகன்கள் இருவர் அடிமைகளாக இருபுறமும் வெறித்த பார்வையுடன் நின்றிருப்பார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தின் ஆவணமாகக் கொண்டாடப்படும் அப்புகைப்படங்கள். மிகப்பெரியதொரு வேட்டையாடலின் வெற்றிப் பரிசுகள் அவை. சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டை அவை.

மே 19, 2009 தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் அப்படியொரு பெரும் வேட்டையைப் பற்றியது. மனித்ப் புலிகள் வேட்டை. உலகின் மிக பயங்கரத் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, வீழ்த்தப்பட்டுக் கிடந்தது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்படங்கள் காட்டப்பட்டன. சில நேரங்களில் மிகக் குரூரமாக, தேவையில்லாமல் மீண்டும் மீண்டும்...

வார இறுதியில், விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் என்று முற்றும்
அறிந்தபின் கொழும்பு மக்களும், தீவின் இன்னபிற மக்களும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். வாணங்கள் வெடித்து, பெரிய பெரிய லாரிகளிலும் ட்ரக்குகளிலும் சிங்களக் கொடியைப் பறக்க விட்டபடி, வீதிகளில் வலம் வந்தனர். ஆண்களும் பெண்களும் தெருக்களில் ஆடிப்பாடினர், இனிப்புகளும் பால்பாயசமும் விநியோகித்தனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தேசியக் கொடி பறந்தது. வீடுகளின் கூரையில், கடைகளில், வணிகக் கட்டடங்களில், தெருவோரங்களில்.. வாகனங்கள் கூட அணிந்து சென்றன. போர், கலகம், பயங்கரவாதம், தற்கொலைப் படை வெடிகுண்டுகள், கன்னிவெடிகள், சிறுவர் சிப்பாய்கள் இவற்றால் பெருஞ்சோர்வடைந்திருந்த சலிப்படைந்த சிங்களர்கள் தீவிரவாதம் வீழ்த்தப்பட்டதில் மிகப் பெருமிதம் கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூச்சல்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும்
வீழ்த்தப்பட்ட அந்த மக்களின் கனத்த மௌனத்தையும் கேட்கிறேன். கூரையைக் கிழித்துக் கொண்டு கேட்கும் இக்கூச்சல்களில் சொல்லப்படாத செய்தி அது தான். நாம் வெற்றி பெற்று விட்டோம். அதனால் என்ன? யாரோ தோற்று விட்டார்கள். யார் அது? என்னைக் கேட்டால் நாம் அனைவருமே என்று தான் சொல்வேன். இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் நான்.
அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அவர்கள் இப்போது? பீதியிலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்களா? அல்லது அவர்களுக்கும் இந்தப் போர் முடிவு சந்தோஷத்தைத் தருகிறதா?
அவர்களால் சிங்களக் கொடியைப் பறக்க விட்டு மகிழ முடியுமா? இந்தப் போர் முடிவை நாம் இவ்வாறு ”கொண்டாடக்” கூடாது என்றே எனக்குப் படுகிறது. யாரோ சொன்னார்கள். இதற்குப் பதில் கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.ஒவ்வொரு வெற்றிக் கூச்சலைக் கேட்டும் நான் கூனிக் குறுகுகிறேன்.
ஆடிப்பாடும் கூட்டங்களைக் கண்டு திரும்பிக் கொள்கிறேன். ஏன் எனக்கு
இப்படித் தோன்றுகிறது. எனக்கு என்ன போயிற்று? ஆனால் என் நண்பர்கள்
பலரும் இப்படித் தான் எண்ணமிடுவார்கள் என்றும் உணர்கிறேன். நாங்கள்
அனைவருமே சிந்திப்பது தவறாக முடியாது.


இப்போர் முடிவை இந்நாடு பார்க்கும் பார்வை எனக்கு மிகுந்த
வருத்தமளிக்கிறது என்றே நினைக்கிறேன். தத்தா காமினி கூட ஈழாராவின்
மரணத்தைக் கண்ணியத்துடன் கையாண்டான். எனக்கு அந்த அரசன் மீது பெரிய மதிப்பு இல்லாவிடினும் இன்றைய இலங்கைத்தலைமைக்கு இல்லாத
கண்ணியம் அவனிடம் இருந்தது. 2500 ஆண்டுகள் கூடுதல் நாகரிக வளர்ச்சி
அடைந்த மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது?


பிரபாகரன் ஒன்றும் திடீரென்று தீவிரவாதியாக முளைத்து விடவில்லை.
அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிடில் 26 ஆண்டுகால போருக்குப் பின் நாம் பாடம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை.


இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான். என் அறையில்
சிங்களக் கொடியொன்று மடித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை எழும்
போதும் இரவு தூங்கும் போதும் அதைப் பார்க்கிறேன். என்றைக்கு ”நான் ஒரு சிங்களன்” என்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேனோ அன்று அதைப் பறக்க விடுவேன். தற்போது அது மடித்துத் தான் வைக்கப் பட்டுள்ளது.




அற்புதங்களின் உறைவிடங்கள்!

என் நாத்தனார் மகள் சூர்யாவுக்கு நான்கு வயதாகிறது. பேச்சு என்றால் அப்படி ஒரு வயதுக்கு மீறிய பேச்சு. ஒன்றரை வயதிலேயே பேசத் தொடங்கி விட்டாள் அவள்.

சென்ற வாரம் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஒரு சின்ன சிக்கல் என்ன வென்றால் நாத்தனாரும் அவரது கணவரும் சில பிரச்னைகளின் காரணமாக சில காலமாகப் பிரிந்து இருக்கிறார்கள். இணைத்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது அந்தப் பிஞ்சு உள்ளம் தான்.
சூர்யாவும் போன வருடம் வரை தனது நறுக்கென்ற பேச்சினாலும் அதீத பிடிவாதத்தினாலும் “குணசாலி” என்று குடும்பத்தில் பெயரெடுத்திருந்தாள். நேஹா பிறந்த போது ஜோவை அவளைத் தூக்கவே விடவில்லை. யார் கொஞ்சினாலும் அழுவாள்.

அதனால் இம்முறை அவள் முன் நேஹாவை ரொம்பக் கொஞ்ச வேண்டாம் என்றும் இருவருக்கும் ஒரே மாதிரி கவனம் செலுத்துவோம் என்றும் ஜோவிடம் சொல்லி வைத்திருந்தேன்.
ஆனால் என்ன ஆச்சரியம் அவர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம். சூர்யாவைப் பார்த்த வுடன் “பாப்ப்ப்ப்ப்பா! என்ற கூச்சலுடன் நேஹா என் இடுப்பை விட்டு இறங்கி ஓடி விட்டாள்.” குழந்தைகளென்றால் அதீத பரவசம் கொள்கிறாள் நேஹா இப்போதெல்லாம். பெரியவர்களிடம் அப்படிப் போகவே மாட்டாள்.

சூர்யாவும் “நேஹாப் பாப்பா!” என்று ஆரத்தழுவிக் கொண்டு, ”வா வெளிய போய் விளையாடலாம்” என்று நேஹாவின் சிறு வண்டியையும் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.
அடுத்த இரண்டு மணி நேரம் இருவருமே பெரியவர்கள் யாரையுமே தேடவில்லை. கீச் மூச் சென்ற சத்ததுடன் நேஹா மழலை பேசுவதும் பெரியமனுஷி தோரணையில் சூர்யா அவளைக் கொஞ்சுவதும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தன.
ஜோ அலுவலகம் புறப்படத் தயாரான போது, நேஹா அழத் தொடங்கினாள். அவளை கேட்டினருகே அழைத்து வந்த சூர்யா, ”அப்பா சாயங்காலம் வந்துடுவார்டா செல்லம். அழாம டாட்டா சொல்லு” என்ற போது என்னால் கண்ணில் துளிர்த்த நீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அற்புதமானவர்கள் குழந்தைகள்.

பி.கு: வெளியில் போன போது சூர்யா கையிலிருந்த பிஸ்கட்டை அவளது தாத்தா கேட்டார். “ஊம்.. நேஹா பாப்பாக்குப் பசிக்கும்ல? சினேஹா சினேஹான்னு கொஞ்சுறீங்க.. அப்புறம் பாப்பா பிஸ்கட்டைக் கேக்குறீங்க..” என்றாளே பார்க்கலாம். தாத்தாவுக்கு ”நேஹா” என்று சரியாக உச்சரிக்க வருவதில்லை என்று எப்போதுமே கிண்டலடிப்பது அவள் வழக்கம்!

Wednesday, May 27, 2009

மே 10 கலந்துரையாடல் - ஆங்கில மொழியாக்கம்

திரு. S.K. இதை என்னிடம் கேட்டுக்கொண்டு பல நாட்களாகின்றன. இப்போது தான் அவகாசம் கிடைத்தது.

இதை நேற்றே எழுதி வெளியிட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த செய்தி மிகவும் மோசமாக பாதித்திருந்தது. இப்பிரச்னை குறித்த நமது பார்வையும், கலந்துரையாடல்களும் மிகக் குறுகிய வட்டத்தினுள்ளேயே சுழன்றதாகப் பட்டது. அந்த ஒலிக்கோப்புச் சுட்டி என்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது.

ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தானே ஆரம்பிக்க வேண்டும். அதனால் கஷ்டப்பட்டு மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டேன். ஆனால் அனைத்து வர்க்கக் குழந்தைகள் பாதுகாப்புக்காக, குறிப்பாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்காக (அவர்கள் தானே அதிக பாதிப்புக்கு, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாவது) நாம் முற்றிலும் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும் என்பது புரிந்தது. இந்த “குட் டச் பேட் டச்” எல்லாம் கான்வெண்ட் செல்லும் நமது குழந்தைகளுக்குத் தான் உதவும்.

சுட்டி இங்கே:http://deepajoe.blogspot.com/2009/05/good-touch-bad-touch-seminar-may-10.html
என்னால் இயன்றவரை செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட விரும்புவோர் ஆங்கிலப் பக்கத்திலும், தமிழில் இட விரும்புவோர் இங்கேயேயும் இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, May 24, 2009

ஐயோ... இதற்கு முடிவு எப்போது?

http://www.anniezaidi.com/2009/05/my-god.html
(என்னால் அதைத் தமிழில் எழுத முடியாது.. மன்னியுங்கள்..)

அழுகி நாறும் பிணங்களுக்குப் பட்டாடை போர்த்துங்கள்

பெருநோய் பீடித்த கைகளுக்குத் தங்கக்காப்பு போடுங்கள்

விதைகளை எரித்து விட்டு பழுத்த விஷ இலைகளை விதையுங்கள்


காயடிக்கப்பட்ட காவல் துறையும், மழுங்கடிக்கப்பட்ட ஊடகங்களும் நம்மைச் சகதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன...ஐயோ... நாம் என்ன எழுதி என்ன பேசி என்ன பயன்?


நாம் கைகளைப் பிசைவோம், பெருமூச்சு விடுவோம், ஒரு சில கண்ணீர்த் துளிகள் விடுவோம்... பின்பு மறந்து விடுவோம்..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம்... சீ.. சீ...


Thursday, May 21, 2009

சின்னஞ்சிறு உலகம்

கலை நயத்துடன் வேய்ந்த கீற்றுக் கொட்டகையினுள் கட்டப் பட்ட கொடிகளில் ஒரு சேலை, ஒரு கைலி, சின்னஞ்சிறு ஜட்டிகள் இரண்டு.

சுவரோரமாய் ஈச்சந்துடைப்பம் ஒன்று, அலுமினிய அன்னக் கூடையில் சமையல் பாத்திரங்கள் - சோற்றுப் பானை, கரண்டி, தோசை சட்டுவம் பள பளவென்று விளக்கப் பட்டு மின்னிக் கொண்டிருந்தன.


சிறு சிறு பாலிதின் பைகளில் உப்பு, புளி, மிளகாய்த்தூள், எண்ணெய், தேங்காய்ச் சில்லுகள்...

சாம்பல் நிறைந்த மூன்று செங்கல் அடுப்பில் கொதித்த அந்தக் குழம்பின் வாசனை! ஆஹா...

இருள் கவிகிற நேரம், சோப்பு மணமும் மது நெடியும், குழந்தைகளின் கும்மாளமும், பேச்சும் சிரிப்பும்...

சற்று நேரத்திலெல்லாம், வானமே கூரையாய், கொசுவலைகள் மட்டுமே ஆடம்பரப் பொருளாய் வாழ்க்கை அழகாய் அமைதியாய் ஓய்வெடுக்கத் தொடங்கியது.

பக்கத்து ஃப்ளாட்டுகளில் பைக்குள் வந்திறங்கும் சத்தமும் “கோலங்கள் கோலங்கள்...” சத்தமும் கலந்தடித்துக் கேட்கத் தொடங்கியது.
***********

“என்ன, நம்ம சைட்டுக்குப் போய் பார்த்தியே. வேலையெல்லாம் எப்படி நடந்துட்டிருக்கு? வீடு எப்படி இருக்கு?”


“எந்த வீடு???!!!!!”




Saturday, May 16, 2009

உதிரிப்பூக்கள் - 1

”ஏய்! குணா இங்க வா...”

”இன்னாய்யா?”

“இன்னாய்யாவா? டி.வி. வாங்கனே, துட்டு வாங்குனேல்ல? ஏன் ஓட்டுப் போட வர்ல?”

”ஹி..ஹி..என் பொண்ணுக்குப் பிரசவம்யா அன்னிக்கு..அதான் வர்ல...”

”சும்மா கத உடாத, அந்தக் கட்சிக்குப் போடனும்னா வந்திருப்ப...”

“அப்டிலாம் இல்லீங்க... அதான் எந்தப் பொத்தான அமுத்துனாலும்...”

”சரி சரி வாய மூடு... போ, அப்பால உன் ஊட்டுக்காரனாண்ட பேசிக்கிறேன்”

அந்தக் கரைவேட்டி நகர்ந்ததும் நிம்மதிப்பெருமூச்சுடன் எதிர்த்திசையில் ஓடுகிறாள், குணா.

*************

”கன்னிம்மா.. நீ எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடப்போறே? ”

”நான் எப்பவும் .... தாம்மா. ”

”சரி, அறுவாள் சுத்தியல் சின்னத்துல போடு. அது தான் மக்களோட கட்சி.”

”ஐய்ய! ஏதாவது ஒண்ணுத்துல தான குத்த முடியும். ரெண்டு மூணு சொல்ற.. ஆமா இன்னாது அது? எதுனா சுயேச்சையா? நம்ம சாரு நிக்கிறாரா?”

”?????????????”
************

”சுரேஷம்மா, இங்க வாங்களேன்...”

“சொல்லுங்கக்கா..”

”நீங்க வெளியூர் போயிருந்தப்போ ...கட்சிக் காரங்க வந்திருந்தாங்க. ஒவ்வொரு வீட்டுலயும் எவ்வளவு ஓட்டுன்னு கேட்டுத் தலைக்கு ஐந்நூறு குடுத்தாங்க.உங்க வீட்டு ஓட்டுச்சீட்டெல்லாம் என் கிட்டத் தான இருந்திச்சி. தங்கச்சின்னு சொல்லி வாங்கிட்டேன். இந்தாங்க.”

“ஹைய்யோ! ரொம்ப தாங்க்ஸ் கா”

“இதுல என்ன இருக்கு அக்கம்பக்கத்துல எதுக்கு இருக்கோம். இதெல்லாம் ஒரு சின்ன ஒத்தாசை தானே.”

மேலும் பல முறை நன்றி சொல்லி அவள் விடை பெற, பெரிய சாதனை புரிந்த மகிழ்ச்சியுடன் இவள் கல்லூரிக்குக் கிளம்பினாள். ஆம், பேராசிரியை தான்.

Wednesday, May 13, 2009

தூங்குடா செல்லம்!

அம்மாக்களின் வலைப்பூக்களில் என்னையும் முல்லை ஒரு பதிவராகச் சேர்த்துப் பல நாட்களாகின்றன. இன்னும் ஒரு பதிவு கூட இட முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன்.


ஆனால் தவறாமல் எல்லாப் பதிவுகளையும் வாசித்து வருகிறேன். இளம் தாய்மார்களுக்குப் பயனுள்ள எத்தனை குறிப்புகள்? குழந்தைகளுக்கு உணவுக்குறிப்புகள், கதைகள் என்று உண்மையில் தோட்டம் மிக அழகாகப் பூத்துக் குலுங்குகிறது. என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்த முல்லைக்கு நன்றிகள் பல!


என் மகள் நேஹாவுக்கு ஒரு வயது தான் ஆகிறது. 40 நாட்கள் முதல் நானே தான் அவளை முழு நேரமும் கவனித்து வருகிறேன். அவ்வப்போது அம்மாவும் எனது மாமியும் வந்து உதவுவது போக. ஆனாலும் எனக்கென்னவோ குழந்தை வளர்ப்பு பற்றி எதையும் எழுத ஒரு தன்னம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் நான் விளையாட்டுப் போக்கில், அவள் போக்கில் போய் அவளை வளர்த்துக் கொண்டு வருகிறேன். சில நாட்கள் பழகி கை கூடி வரும் உணவுப் பழக்கம் (routine) தீடீரென்று அவள் முரண்டு பிடிப்பதாலோ வேறு காரணங்களாலோ மாறி விடுகிறது. நான்கு நாட்கள் ஒழுங்காகச் சாப்பிடும் உணவை ஐந்தாம் நாள் கண்டாலே ஓடுகிறாள். இப்படி trial and error ஆக நாட்கள் ஓடுகின்றன!


அதே போல் தான் தூக்கமும். அவள் பிறந்தது முதல் பகலெல்லாம் நன்றாகத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்கு மேல் அப்படி ஒரு உற்சாகமாய் விளையாடத் தொடங்குவாள். நமக்குத் தூக்கம் சொக்கும் 12 மணியளவில் பசி எடுக்கத் தொடங்கி அழுவாள். முப்பது நாள் முதல் இவளுக்கு combination feed தான். (ஒரு வேளை தாய்ப்பால், ஒரு வேளை ஃபார்முலா) இரவு வேளை அதிகம் விழித்திருப்பதால் கண்டிப்பாக எழுந்து பால் கலக்க வேண்டி வரும். பல நாட்கள் இரவு முழுதும் விழித்திருந்தது கூட உண்டு. மாறி மாறி விழித்துப் பார்த்துக் கொள்வோம்.


அப்புறம் அவர் காலையில் வேலைக்குப் போக வேண்டுமே என்று அவளைத் தூக்கிகொண்டு ஹாலுக்கு வந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரே குஷியாகச் சிரித்தும் விளையாடிக் கொண்டுமிருப்பாள். அசதியில் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாது. குழந்தையைக் கண்டபடி திட்டுவேன். மறு நாள் காலை பட்டு போலத் தூங்கும் அவளைப் பார்த்து கஷ்டமாக இருக்கும்!
மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகி விடும் என்றார்கள். எங்கே! ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இரவு முழுதும் தூங்க ஆரம்பித்தாள்.


அதன் பிறகு நான் கடைப்பிடித்த சில டிப்ஸ்:

1. தினமும் இரவில் கண்டிப்பாகக் குழந்தைக்கு டிஸ்போஸபில் டையபர் கட்டித் தூங்க வையுங்கள். நான் ஐந்தாம் மாதம் முதல் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். Nappy rash வராமல் இருக்க, காலையில் அதை அவிழ்த்ததும் நன்றாகத் துடைத்து விட்டு Caladryl தடவி விட்டுத் துணி நேப்பியோ ஜட்டியோ போட்டு விடுங்கள். நேஹாவுக்கு இது வரை nappy rash வந்ததே இல்லை.

2. மாலை 5 மணிக்கு மேல் குழந்தையைத் தூங்க விட வேண்டாம். தூக்கம் வந்தாலும் ஏதாவது விளையாட்டுக் காட்டித் தூங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை 9 மணிக்குள் உணவூட்டித் தூங்க வைத்து விடுங்கள். இரவ் உணவுக்குச் சாதமோ பிற திட உணவுகளோ இல்லாமல் சத்து மாவுக் கஞ்சியோ ஸெரிலாக்கோ கொடுக்கலாம். பொதுவாக அவர்கள் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவாக இருப்பது நல்லது.

3. இரவு விழித்து எழுந்தால் சூடான தண்ணீர் கொடுங்கள். தாகத்தில் தான் பெரும்பாலும் குழந்தைகள் விழிப்பது.

4. நேஹா பெரும்பாலும் பாட்டுக்கு மயங்கித் தூங்கி விடுவாள். அவளுக்கென்று பாடுவதற்குச் சில பாட்டுக்கள் வைத்திருக்கிறேன். மெலிதாக ரேடியோவும் வைக்கலாம். பாட்டு கேட்டபடி தூங்குவது மிகவும் நல்லது.

5. பகலில் தூளியில் தூங்கினாலும் இரவில் உங்கள் அருகில் தூங்குவது தான் நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையானால் கண்டிப்பாக இரவில் பாலருந்திக் கொண்டே தூங்குவதைத் தான் விரும்பும். நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். ஆனால் இப்பழக்கத்தை நிறுத்துவது கடினம். (டிப்ஸ் ப்ளீஸ்!)

6. தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் முகம் கை கால்களைத் துடைத்துப் பௌடர் போட்டு உடை மாற்றி விடுவது அவசியம். ஆனால் சாப்பிட்டவுடன் குழந்தை கண்ணயர்ந்து விட்டால் எழுப்பி இதைச் செய்ய வேண்டாம்!

7. முக்கியமாக நீங்களும் இரவில் சீக்கிரமே தூங்கிப் பழகினால் குழந்தையும் அதே போல பழகி விடும். (இந்த விஷயத்தில் சாத்தான் வேதம் ஓதுகிறேன்! என்ன செய்வது அவள் அப்பா வீட்டுக்கு வரத் தாமதம் ஆவதால் இந்த நிலை.)

8. இன்னொரு விஷயம். கொஞ்சம் பெரிய குழந்தையானதும் வீட்டில் மற்றவர்களிடமும் கொடுத்துத் தூங்கப் பழக்குங்கள். உங்களிடம் இருந்தால் தான் குழந்தை தூங்கும் என்றால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ அல்லது வேறு சந்தர்ப்பத்திலோ ரொம்பக் கஷ்டம். IPL ஆரம்பித்ததிலிருந்து இரவில் அவள் அப்பா மேட்ச் பார்த்தபடி நேஹாவை மடியில் வைத்துக் கொண்டுத் தூங்க வைத்து விடுகிறார். எனக்கு நிம்மதி. ஆனால் அவளும் கிரிக்கெட் ரசிகையாகி விடக் கூடாதே என்று பயமாக இருக்கிறது.


இதெல்லாம் செய்தும் சில நாட்கள் எங்கள் வீட்டுத் தேவதை ”இரவினில் ஆட்டம்” என்று ஆடுவாள். வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து ஆடுவதைத் தவிர எனக்கு இப்போது வேறு வழியில்லை.

பி.கு: இவளது அப்பா, இதைப் படித்து விட்டு அம்மாமார்கள் இரவு 11, 12 வரை பதிவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தால் குழந்தை எப்படித் தூங்கும் என்று கேட்கிறார். :- நான் ஒன்றும் அப்படியெல்லாம் செய்வதில்லை. நம்புங்கள்!

Monday, May 11, 2009

நிகழ்ச்சி வெற்றி - நன்றியும் வாழ்த்துக்களும்!

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. வெற்றிகரமாக மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அழகிய மாலை நேரம். மே மாதத்தின் வெயில் கூட கிழக்குப் பதிப்பகத்தின் ரம்மியமான மொட்டை மாடியில் அன்று அடக்கி வாசித்தது.

கல்லூரி செல்லும் இளம் பெண் தோற்றத்தில் இருந்த இவரா டாக்டர் ஷாலினி? சற்றுத் தாமதமாக வந்த என்னால் முதலில் நம்ப முடியவில்லை. வந்திருந்த இளம் பதிவர்களில் யாரோ பேசுகிறார்கள் என்றே நினைத்தேன்!
ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட சிக்கலான விஷய்த்தையும் கூட எந்தவொரு தங்கு தடையுமின்றி கண்ணாடி போல் பேசி அவையோரை மொத்தமாகக் கட்டிப் போட்டு விட்டார். நன்றி டாக்டர் ஷாலினி!
டாக்டர் ருத்ரன் அவர்கள் ஷாலினியின் உரைக்கு மேலும் சில முக்கியமான தகவல்களைக் கூறியும், பார்வையாளர்களைக் கேள்விகள் கேட்டுப் பங்கு கொள்ளுமாறு அழைத்தும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினார். நன்றி டாக்டர் ருத்ரன்!
குறிப்பெடுக்க ஏதும் கொண்டு வரவில்லையே என்று நினைத்த போது முன் யோசனையுள்ள சிலர் எடுத்து வந்து அழகாகப் பதிவும் செய்துள்ளார்கள். அவர்களுக்கு மிக மிக நன்றி!
சுட்டிகள் இங்கே:

நர்சிம்: http://www.narsim.in/2009/05/blog-post_11.html
Hats off to you. நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆர்வமும் anxiety யும் உங்கள் முகத்தில் இறுதி வரை இருந்தது.

Dondu: http://dondu.blogspot.com/2009/05/good-touch-bad-touch.html
நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கியதுடன் மிகவும் உழைத்துப் பதிவிட்டுள்ளீர்கள். ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

சந்தனமுல்லை: பப்புவுக்குச் சொல்வது போல் அழகாகக் குறிப்பெடுத்து நறுக்கென்று பதிவிட்டுள்ளார். நன்றி முல்லை
http://sandanamullai.blogspot.com/2009/05/blog-post_11.html

இந்த நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்த்ததற்கு இன்னொரு காரணம் பதிவுலகம் மூலம் அறிமுகமாகி நெருங்கி விட்ட சகபதிவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்று தான்.
உமாஷக்தி, கிருத்திகா, அமித்து அம்மா, சந்தனமுல்லை, வித்யா, ”அகநாழிகை” வாசுதேவன், எம். எம். அப்துல்லா, ஆதிமூலகிருஷ்ணன், கேபிள் சங்கர் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் குழந்தையை விட்டு விட்டு வந்ததால், நேரமும் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக அறிமுகப் படுத்திக் கொண்டு விடைபெற்றுக் கொண்டு விட்டேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் நிதானமாகச் சந்திப்போம்.

மொத்ததில் மிகவும் பயனுள்ள மாலைப் பொழுதை வழங்கிய நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் அழகாக விருந்தோம்பல் செய்த கிழக்குப் பதிப்பகத்துக்கும் இதயப்பூர்வமான நன்றி, பாராட்டுக்கள்.

பி.கு 1: Sweet karam coffee.. இதுவும் நன்றாக இருந்தது :-)
பி.கு 2: முதலில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஜோவுடன் வருவதாக இருந்தது. பின்பு அது சௌகரியப்படாது என்பதால் குழந்தையைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி தோழியுடன் என்னை அனுப்பிவைத்த என் ஜோவுக்கும் நன்றி!

Saturday, May 9, 2009

குழந்தை வளர்ப்பு - டாக்டர் ருத்ரன்,டாக்டர் ஷாலினி - மே 10.

ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆம் வலையுலக நண்பர்களின் ஆர்வத்தையும் செயலாக்கத்தையும் கண்டு.


குட் டச் பேட் டச் என்று நான் எழுதிய பதிவைப் பார்த்து “ஆஹா இது சீரியஸான விஷயமாச்சே, இந்தப் பொண்ணு சின்னப்புள்ளத்தனமா ஏதோ எழுதி இருக்கே.. இதைப் பற்றி ஒழுங்கான ஒரு பார்வை ஏற்படணுமே..” என்று நினைத்தார்களோ என்னவோ, அதிரடியாகக் காரியத்தில் இறங்கி, டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரைத் தொடர்பு கொண்டு, இதோ நாளை கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.


டாக்டர் ருத்ரனுக்கும், டாக்டர் ஷாலினிக்கும் மற்றும் இதற்கு முக்கிய காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக, நர்சிம், SK, லக்கிலுக், அதிஷா, வித்யா, அமிர்தவர்ஷினி அம்மா, சந்தனமுல்லை ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி.

நாளை கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். இந்த ”குட் டச் பேட் டச்” பதிவை எழுதும் போதே தோன்றிய ஒரு விஷயம். பாலியல் வன்முறைக்கு அதிக அளவில் ஆளாவது நடைபாதை வாழ்மக்களின் குழந்தைகள், கட்டடத் தொழிலாளிகளின் குழந்தைகள், வீட்டு வேலை செய்யும் சிறுமிகள் போன்றோர் தாம். அவர்களைக் காப்பாற்றுவது, அந்த எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் நாம் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் நன்றி.


தொடர்புக்கு:
லக்கிலுக் : 9841354308

நர்சிம் : 9940666868 (இவரை அழைக்கும்போது விகடனில் வந்த இவரது கதைக்கு வாழ்த்துச் சொல்லிவிடுங்கள்)

அதிஷா : 9884881824

மெயில் அனுப்ப மறந்துவிடாதீர்கள் : weshoulddosomething@googlemail.com


பி.கு: எனது கணினி ஒரு நீண்ட துயிலிலிருந்து இப்போது தான் மீண்டு எழுந்தது. அதனால் தான் இவ்வளவு தாமதம். பொறுத்தருள வேண்டுகிறேன்!