Sunday, February 22, 2009

ஹாரி பாட்டர் - ஒரு சின்ன அறிமுகம்


குறிப்பு: நிச்சயம் இது விளம்பரம் அல்ல. எனக்கு இதற்காக யாரும் பணம் கொடுக்கவும் இல்லை!

அதீத விளம்பரமும் ஆரவாரமும் சில நல்ல விஷயங்களில் கூட நமக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. நிறைய புருவங்கள் உயர்வதை உணர முடிகிறது! ஆனால் ஹாரி பாட்டர் நாவல்கள் 1 முதல் ஏழு வரை எல்லாவற்றையும் பல முறை படித்து ரசித்து அனுபவித்த தகுதியுடன் இதை எழுத முற்படுகிறேன். ஹாரி பாட்டரும் அப்படித்தான். ஹாரிபாட்டர் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் கூறுபவர்கள் அனேகமாக (100% என்று சொல்லலாம்) அதைப் படித்திருக்க மாட்டார்கள். முழுதும் படித்து விட்டும் அதை வெறுப்பவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். (படம் மட்டும் பார்த்தவர்கள் அல்ல)
அப்படியென்ன இருக்கிறது இதில், மந்திரம், மாயாஜாலம், பேய், சூனியக்கரிகள், காரர்கள் இவர்கள் தானே என்று இளக்காரத்தோடு தான் நானும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மேற்கூறிய இவை அல்லாமல் ரசிக்கவும் சிலாகிக்கவும் ஏராளம் உண்டு. சுருக்கமாக:
குழந்தைகளைக் கவரும் மந்திரமும் மாய நிகழ்வுகளும் மட்டும் இல்லை. அழுத்தமான பாத்திரப் படைப்புக்கள் தான் ஹாரி பாட்டரின் வெற்றியின் ரகசியம் என்று கருதுகிறேன் நான்.
1. ஹாரியின் நண்பர்கள் ரான் மற்றும் ஹெர்மியோனி. ரானுக்கும் ஹாரிக்கும் குடும்பப் பின்னணியில் வேறுபாடுகள் இருந்தாலும் குணாதிசய்ங்களில் இருவரும் ஒரே மாதிரி. படிப்பில் இருவரும் வெகு சுமார். மற்றபடி பிரபுத்துவக் குடும்பத்தில்ல் பிறந்த மால்ஃபாய் என்ற சிறுவனுடன் ச்ண்டை போடுவதிலும், பள்ளியின் கட்டுப்படுகளை மீறி சாகசம் புரிந்து மாட்டிக் கொண்டு முழிப்பதிலும், அதிபுத்திசாலியான ஹெர்மியோனியை எப்போதும் கிண்டலடிப்பதிலும் இவர்கள‌து நட்பு அலாதியானது. ரானுக்குப் பாசமான அம்மா, அப்பா, ஐந்து அண்ணன்க‌ள், ஒரு தங்கை என்று பெரிய குடும்பம். ஏழைகளாக இருந்தாலும் இவர்கள் ஹாரியைச் சொந்த மகன் போல அரவணைத்து ஆபத்து நேரத்திலும் புகலிடம் தருகிறார்கள்.
2. ஹெர்மியோனி - அற்புதமான கதாபாத்திரம் இது. இவளது புத்தி சாதுரியமும், அரிய குணங்களும், வீரமும், ஹாடியய் விட அதிகப் புகழ் ஈட்டித் தருகிறது. ஆனாலும் பெண், அதிலும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவள் சந்திக்கும் சங்கடங்கள், அதை எல்லாம் மீறி அவள் சாதிக்கும் சாகசங்கள் அசர வைக்கின்றன.
4. ஹாரியுடன் பரஸ்பரம் எப்போதும் வெறுப்பு பாராட்டும் பேராசிரியர் ஸ்னேப். அலாதியான் பாத்திரம் இவ‌ர். எப்போதும் வெறுப்பும் நையாண்டியுமே சரளமாகக் கையாளும் இவர் ஹாரியின் நலம் விரும்பியா துரோகியா என்பது கடைசி அத்தியாயம் வரை மர்மமாகவே இருந்தது.
5. டம்பிள்டோர் - தலைமை ஆசிரியரும் மந்திர உலகமே வியந்து போற்றும் சக்திவாய்ந்த மந்திரவாதியும் ஆவார் இவர். எத்தனையோ உயர் பத‌விகள் காத்திருந்தும் அவ்ற்றை உதறித்தள்ளி விட்டுக் கல்விப்பணிக்குத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹாரிக்கு இவர் விளையாட்டாகக் கூறும் பல அறிவுரைகள் உண்மையில் இள நெஞ்சங்களைப் பண்படுத்தும்.
மேலும்...
1. கதை நாயகன் ஹாரி ஒரு இராஜகுமாரன் அல்ல. தீயவனை எதிர்த்துப் போரிட்டுக் கொல்லப்பட்ட இரு வீரர்களின் (கவனியுங்கள்அவன் அம்மாவும் போரிட்டிருக்கிறாள்) குழந்தை. அனாதையான அவன் தன் பணக்காரச்சித்தப்பா சித்தி வீட்டில் கஷ்டப்பட்டு வளர்கிறான். ஆனாலும் அங்கும் அவன் குறும்புத்தனமும் விவேகமும் உள்ளவனாகக் காட்டப்படுகிறான். அதுவும் முட்டாள் சித்தி தன் தத்தி மகனைச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதைப்பார்த்து மனதுக்குள் எள்ளி நகையாடுபவனாக்ச் சித்தரித்திருப்பது புதிது.

2. அதீத கற்பனையில் சிருஷ்டிக்கப் பட்ட கனவுலகம் தான் ஹாரி போகும் பந்திர உலகம் என்றாலும், நடைமுறைக்கு ஒத்த ஏராளமான‌ உருவகங்கள் சுவாரசியமானவை. உதாரணத்துக்கு,

அ. பரம்பரை மந்திரவாதிகளைப் பொறுத்தவரை சாதாரண‌ மனிதர்க்ளுக்குப் பிறக்கும் மந்திர சக்தி உடையவர்கள் தாழ்ந்த ஜாதியாம். ஆனால் சமத்துவச் சிந்தனை உள்ளவர்கள் இப்பிரிவினை வாதத்தை எதிர்ப்பதும் போராடுவதும்.
ஆ. "கு க்லக்ஸ் க்லான்" என்ற வெள்ளை நிறவெறி அமைப்புக்கு நிகரான தோற்றமும் பழக்கங்களும் கொண்ட தீயவர் கூட்டம்.
இ.மந்திர உலகின் அரசாங்கமும் அரசியலும்.
ஈ. எல்லாவற்றையும் விட ஹாரி ப்டிக்கும் பந்திரப் பள்ளியான "ஹாக்வார்ட்ஸ்". அங்கு ஹாரியும் அவன் நண்பர்களும் அடிக்கும் லூட்டிகள் அவ்ரகளின் வீர திரச் செயல்களை விட ரசமானவை.
3. ஹாரியின் உயிர்த் தோழி ஹெர்மியோனி பேரும் புகழும் கிடைத்த நாயகனான ஹாரியை விட்டு அவனுக்கு எப்போதும் உற்ற உயிர் நண்பனான ரானை நேசிப்பது. ஹாரியும் அவளை ஒரு சகோதரியாக‌ மட்டுமே பார்ப்பது.
நட்புக்கு இலக்கணம் கூறும் விதத்தில் நடக்கும் இவர்கள் கொஞ்சம் கூடச் சுயந‌லம் இல்லாம‌ல் எப்போதும் துன்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தங்கள் நண்பர்களின் நலனுக்காகவுமே சிந்திப்பது.
4. பேய் பிசாசுகள் எல்லாம் நடமாடினாலும் அவை பாவம் சமர்த்தாக முகமன் கூறி விட்டுச் செல்கின்றன. மேலும் மந்திர உலகில் மட்டுமே அவை இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் குழந்தைகளுக்குப் பேய் பயம் தோன்ற வாய்ப்பில்லை.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அதே போல் குறைகளும் இருக்கலாம், இருக்கின்றன. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் குழந்தை (பத்து வயதுக்கு மேற்பட்ட) ஹாரிபாட்டர் படிக்க விரும்பினால் தடுக்க ஒன்றும் இல்லை. பயப்பட ஒன்றுமில்லை. "ஸ்லாங்" எனப்படும் கெட்ட வார்த்தைகள் இல்லை. கலாசாரச் சீரழிவு இல்லை. போற்றத்தக்க குழந்தை இலக்கியமா என்று தெரியாது. ஆனால் உங்கள் குழந்தைக்குப் படிக்கும் ஆர்வத்தையும் பழக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும். முன்பின் தெரியாத ஏதோ பூதாகாரமான உலகத்துக்குக் கொண்டு சென்று விடும் என்று அஞ்சத் தேவையே இல்லை.

பி.கு. எல்லா குழந்தை இலக்கியம் போலவே இதை ரசிப்பதற்கும் ஒரு குழந்தையின் உள்ளம் வேண்டும். :-)

Saturday, February 14, 2009

ஜோவுக்கு! (ஜோக்கு இல்ல‌.. சீரிய‌ஸ்!)






காதலையும் ஊடலையும் தாண்டி நமக்குள் இருக்கும் நட்புக்கு...



சிந்தனைகளில் வேறுபாடு இருந்தாலும் சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் பஞ்சமில்லாத நம் ப‌கிர்தலுக்கு...



கோபமோ எரிச்சலோ வெறுப்பின் சாயலைக் கூட நெருங்காத நமது வார்த்தைகளுக்கு...



குழந்தையைத் தாய் கண்டிக்கும் அன்புடன் ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் பாங்குக்கு...



நான் வீசும் கோபக் கணைகளைப் புஸ்வாணமாய் அணைத்து விடும் உன் ஐஸ்க்ரீம் கிண்டல்களுக்கு...



அல‌ட்டாத, அல‌ங்கார‌மில்லாத‌,உண‌ர்ச்சிவ‌ச‌ப்படுவ‌து என்றால் என்ன‌வென்றே தெரியாத‌ (அது தான‌ என‌க்குக் க‌டுப்பு ) அன்று முத‌ல் இன்று வ‌ரை மாறாத‌ நிதான‌மான‌ உறுதியான‌ உண்மையான‌ உன் அன்புக்கு...



வாழ்த்துக்க‌ள்!

Friday, February 13, 2009

HAPPY VALENTINE'S DAY!!!


அனைவருக்கும்
இதயங்கனிந்த காதலர் தின
நல்வாழ்த்துக்கள்!




Thursday, February 12, 2009

ஒரு க‌தை


ஒரு ஊரில் ஒரு புலிக்குட்டி இருந்தது. அது சுதந்திரமாக காட்டு மேட்டில் விளையாடித் திரிந்த போது ஒரு அழகான கன்றுக்குட்டியைப் பார்த்தது. இரண்டும் நட்பாகிக் காதலாகித் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தன.


அப்போது க‌ன்றுக்குட்டி சொன்ன‌து. "நான் என் ம‌ந்தையை விட்டுப் பிரிந்து வ‌ந்தால் என் ம‌ந்தை மாடுக‌ள் துய‌ர‌ம் தாங்காம‌ல் நோய்வாய்ப்பட்டு விடும். என்ன‌ செய்வது"

இர‌ண்டும் வேத‌னையுட‌ன் சிந்த‌னையில் ஆழ்ந்த‌ன‌.
அப்போது க‌ன்றுக்குட்டி மிக‌வும் த‌ய‌ங்கிய‌வாறே, "ஒரு வ‌ழி இருக்கு.. சொல்ல‌ட்டுமா?" என்றது.

"என்ன‌?"

"நான் ஒரு அழ்கான‌ ப‌சுத்தோல் கொண்டு வ‌ந்து தரேன். அதைப் போர்த்திக்கிட்டு நீயும் என் ம‌ந்தையோட‌ சேர்ந்துடு. நீ புலிக் குட்டி தானு தெரிஞ்சாலும் அதைப்பெருசா க‌ண்டுக்க‌ மாட்டாங்க. திருமணத்துக்குப் பின் நீ தோலைக் கழட்டிடலாம். "

புலிக்குட்டிக்குப் பெற்றோரும் உற்றாரும் இருந்தாலும் அவை ம‌ந்தைக‌ளாக‌ இருக்க‌வில்லை. க‌ன்றுக்கு இருந்த‌ க‌ட்டுப்பாடுக‌ள் எதுவும் த‌ன‌க்கு இருப்ப‌தாகப் புலிக்குட்டி எண்ண‌வில்லை.
நீண்ட‌ யோச‌னைக்குப் பின் புலிக்குட்டி ச‌ம்ம‌தித்து. எந்த‌க் கார‌ண‌ம் கொண்டும் க‌ன்றுக்குட்டியை இழ‌க்க‌ அது விரும்ப‌வில்லை.


ப‌சுத்தோல் போர்த்திய‌ புலிக்குட்டிக்கும் க‌ன்றுக்குட்டிக்கும் விம‌ரிசையாக‌த் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. புலிக்கூட்டமும் மாட்டு ம‌ந்தையும் ஒன்றாக ஆரவாரத்துடன் க‌ல‌ந்து கொண்ட‌ன‌.

புலிக்குட்டியும் க‌ன்றுக்குட்டியும் ம‌கிழ்ச்சியுட‌ன் குடித்த‌ன‌ம் ந்ட‌த்த‌த் தொட‌ங்கின‌. புலிக்குட்டி ச‌ந்தோஷ‌மாக‌த் தான் இருந்த‌து. மந்தை‌யோடு சேர்ந்து புல் வேறு தின்ன‌ப் ப‌ழ‌கி இருந்த‌து. தோல் கொஞ்சம் க‌ன‌த்த‌து. ஆனால் க‌ன்றுக்குட்டியின் அன்புக்கு முன் எதுவும் பெரிதாக‌த் தெரிய‌வில்லை. அது த‌ன‌து அன்பின் சின்ன‌ம் என்று சுக‌மாக‌ அந்த‌ச் சுமையைச் சும‌ந்து திரிந்த‌து.

சிறிது காலத்துக்குப் பிறகு, மாட்டுத் தோல் ரொம்ப‌ க‌ன‌க்க‌ ஆர‌ம்பித்த‌து. மழையில் நனைந்தும் புழுதியில் அழுக்காகியும் அந்தத் தோல் அழுக ஆரம்பித்தது. அத‌னால் முன் போல‌ச் சுத‌ந்திர‌மாக‌ ஓடியாட‌ முடிய‌வில்லை. மாடுகள் முகம் சுளிக்கத் தொடங்கின. புலிகளோ "நீயாச்சு உன் மாட்டுத் தோலாச்சு, இனி நீ மாடாவே இருந்துடு" என்று சொல்லிவிட்டன. கன்றுக்குட்டி தோலைக் க‌ழ‌ற்றி எறிய‌ச் சொல்லுமா என்று உள்ளுக்குள் ஏங்கியது, புலிக்குட்டி. ஆனால் மாட்டு ம‌ந்தைக்குள் எப்போது சேர்ந்த‌தோ அப்போதே அத்ற்குப் புரிந்து விட்ட‌து இனி தோலைக் க‌ழ‌ற்றி எறிவ‌து வாழ்நாளுக்கும் சாத்திய‌மில்லை என்று.

க‌ன‌த்த‌ தோலை இழுத்துக் கொண்டு திரிந்த‌து. க‌ன்றுக்குட்டி எதையும் க‌ண்டு கொள்ள‌வில்லை. அது புலிக்குட்டியிட‌ம் மிகுந்த‌ அன்பாக‌வே இருந்த‌து. ஆனால் தோலைப் ப‌ற்றி ம‌ட்டும் பேச்சே இல்லை.

அந்த செத்த மாட்டுத் தோலில் தானா த‌ங்க‌ள் காத‌ல் ஊச‌லாடுகிற‌து என்று ம‌ன‌ம் வெம்பிய‌து புலிக்குட்டி. உட‌லும் ம‌ன்மும் சோர்ந்து வாயில் புல்லோடு ப‌ரிதாப‌மாக‌ ஊளையிட்ட‌து. தூர‌த்தில் ஓநாய்க‌ள் சிரித்துக் கொண்ட‌ன‌.
பி.கு. இந்த‌க் க‌தைக்கும் விடுத‌லைப் புலிக‌ளுக்கும் யாதொரு தொட‌ர்பும் இல்லை.

Monday, February 2, 2009

ப‌லியாடுக‌ள்




இந்த அரசியல் கட்சிகளின் சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகப் பாதிப்படைகிறார்கள். இவர்களுக்கு எது எதில் தான் அரசியல் பண்ணுவது என்ற வரைமுறை இல்லை?
பிஞ்சுக் குழ‌ந்தைக‌ளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு ம‌ருந்து அளிக்கும் ப‌ணி சில காலமாகவே ந‌ம் நாட்டில் நன்றாக‌ நட‌ந்து வ‌ருகிற‌து. எந்த‌ அர‌சு ஆட்சிக்கு வ‌ந்தாலும் இத்துறையில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு போலியோவை அற‌வே ஒழிக்க‌ச் சிற‌ந்த முறையில் பாடுப‌டுகிறார்க‌ள். இவ்வாறிருக்க‌ டிச‌ம்ப‌ர் 21 போலியோ தின‌த்த‌ன்று ஒரு பொறுப்பில்லாத‌ த‌னியார் தொலைக்காட்சி ப‌ர‌ப்பிய‌ பொய்ச் செய்தியால் (ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌தால் ஒரு குழ‌ந்தை இற‌ந்து போன‌தாக‌)பீதி கிள‌ம்பிய‌து. பின்ன‌ர் அதன் போட்டித் தொலைக்காட்சி (அர‌சு சார்ந்த‌)அது வெறும் வதந்தி என்று ப‌டாத‌ பாடுப‌ட்டு நிரூபித்த‌து. ஆனால் இவர்களின் இந்த குடுமிபிடிச் சண்டையோடு முடிய‌வில்லை.
நேற்று (பிப்ர‌வ‌ரி 1) மீண்டும் போலியோ த‌டுப்பு தின‌ம். என்ன‌ கொடுமை...யாருக்காக‌ இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் ப‌ய‌ந்து போய் முகாம்க‌ளைப் புற‌க்க‌ணித்துள்ள‌ன‌ர். த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்குப் போய் ஆயிர‌ம் ஆயிர‌மாக‌ச் செல‌வ‌ழித்து ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ முடியுமா அவ‌ர்க‌ளால்? அவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ச் செய்ய‌ப்படுகின்ற‌ ஒரு பணி, நம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, அவர்கள் வாழ்வில் இருள் சூழாதிருக்கும் பொருட்டு ஆற்றப்படும் ஒரு நல்ல செயல் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் பூச‌ல்க‌ளினால் க‌றைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
வதந்தி பர‌ப்பிய‌ அந்த‌த் தொலைக்காட்சி மீது வ‌ழ‌க்குத் தொட‌ர‌ முடியுமா? யாராவ‌து சொல்லுங்க‌ளேன்.