Thursday, January 29, 2009

த‌லைகுனிகிறேன்

வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
குடிப்பதும் அரைகுறை ஆடைகளுடன் இரவு விடுதிகளில் நடனமாடுவதும் தான் நாகரிகமென்றும் இது தான் பெண் விடுத‌லை என்றும் ந‌ம்பி, பெண்களுக்கான தடைகள் எல்லாவற்றையும் மொத்தமாக வென்று விட்டதாக எண்ணி இறுமாந்திருந்த பெண்களை நினைத்தால் வேறு என்ன நினைப்பது?
அது க‌லாசார‌ப் பேர‌ழிவு என்றோ பார‌ம்ப‌ரியமாகப் பெண்களுக்குரிய லட்சணங்களை இவர்கள் துறந்து விட்டார்கள் என்றோ வருந்த வில்லை. எந்த நாட்டில் நாம் இருக்கிறோம், பெண்கள் பற்றிய பார்வை இங்கு எப்படி இருக்கிறது? பில்கிஸ் பானோவுக்கும், ப்ரியங்கா போட்மாங்கேவுக்கும், ஸ்மாலின் ஜெனிட்டாவுக்கும் இன்னும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நாள் தோறும் அநீதிகள் இழைக்கப்ப்ட்டு வருகிற சமுதாயத்தில் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் தங்கள் பாதுகாப்பையும் கௌரவத்தையும் எந்த நம்பிக்கையில் காற்றில் பறக்க விட்டனர் இப்பெண்கள்?
செருப்பால் அடிக்கத் தகுந்த அந்த அமைப்பைப் பற்றி நாம் பேசக்கூட வேண்டாம். அவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும். அவர்கள் எதிர்பார்ப்பது விளம்பரம் தான். அதை இந்த‌ச் சிறு வலைப்பூவின் மூலம் கூடக் கொடுக்க‌ நான் விரும்பவில்லை. ஆனால் அவ‌ர்க‌ளின் ந்ட‌த்தையை அவ்வ‌ள‌வு சாம‌ன்ய‌மாக‌ புற‌ந்த‌ள்ளி விட‌ முடியாது. இப்படிப்பட்ட அத்துமீறல்களால் இரு அநியாயங்கள் நடக்க வாய்ப்புண்டு: நியாய‌மான‌ சுத‌ந்திர‌த்தைக் கூடப் பெறப் போராடும் பெண்கள் மேலும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட அந்த வகைப் பெண்கள் (க்ளப் கலாசார வகை) தங்களுக்குக் கிடைத்த அநுதாபங்களை வைத்துத் தங்கள் ந‌டத்தைக்கு நியாயம் தேடப் பார்ப்பார்கள்.

Tuesday, January 13, 2009

சுவ‌டுக‌ள்




எதிர்கால‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌ன‌வுக‌ள் எவ்வ‌ள‌வு சுக‌மோ க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌த்தின் சுவ‌டுக‌ளும் அவ்வ‌ள‌வு இனிமை தான். தோல்வி, அவ‌மான‌ம், காய‌ங்க‌ள் எல்லாமே கால‌த்தின் எடைக்க‌ற்க‌ளில் பூக்களாக‌த்தான் நிறுக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் திரும்பிப்பார்க்க‌ என்றுமே கூச்ச‌ப்ப‌டுவ‌தில்லை நான்!
எனக்கு ஏன் இப்படி ஒரு மோகம் பழைய புத்தகங்கள் மீது? பழைய கடிதங்கள் மீது?ப‌டித்துப் ப‌டித்து ம‌ன‌ப்பாட‌ம் ஆன‌ க‌டித‌ங்களைக் கூட‌த் தூக்கிப் போட‌ ம‌ன‌மில்லை என‌க்கு. சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.
ஆம். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்? உங்க‌ள் பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத்மிரு முறையாவ‌து. அவ‌ர்க‌ளையும் எழுத‌ச் சொல்லுங்க‌ள்.
வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? செல்லில் ஓயாமல் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். (புதுமை கண்டு அஞ்ச வேண்டாம்!) பெற்றோருக்கு, அண்ண‌ன் த‌ங்கை, அக்கா, த‌ம்பிக‌ளுக்கு, ந‌ண்ப‌ர்க‌ளுக்கு என‌ எப்போதாவ‌து க‌டித‌மோ வாழ்த்தோ அனுப்புங்க‌ள். ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ள‌க‌த் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ந‌ம் ச‌ந்த‌திய‌ருக்கு அத‌ன் ம‌க‌த்துவ‌மே தெரியாம‌ல் போய்விட‌க் கூடாது.